Udana, the nature of Brahma! | Aswamedha-Parva-Section-24 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 09)
பதிவின் சுருக்கம் : தேவமதரும், நாரதரும் படைப்பு முதலியவற்றைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்ததைத் தமது மனைவிக்குச் சொன்ன பிராமணர்...
பிராமணர் {தன் மனைவியிடம்}, "இது தொடர்பாக நாரதருக்கும், முனிவர் தேவமதருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1)
தேவமதர், "ஓர் உயிரினம் பிறக்கும்போது முதலில் இருப்புக்குள் வருவதெது? பிராணனா? அபானனா? சமானனா? வியானனா? அல்லது உதானனா?" என்று கேட்டார்.(2)
நாரதர், "அந்த உயிரினம் எதைக் கொண்டு படைக்கப்படுகிறதோ அதைவிட வேறொன்று அந்த உயிரனத்தை முதலில் அடைகிறது. உயிர்க்காற்றுகள் குறுக்குவெட்டாகவும், மேல்நோக்கியும், கீழ்நோக்கியும் செல்லும் இரட்டைகளாக {துவந்தவங்களாக} இருப்பனவென அறியப்படுகின்றன" என்றார் {நாரதர்}[1].(3)
[1] கும்பகோணம் பதிப்பில், "பிராணத் துவந்துவமும், திர்யக்கும் {மானிடர் முதலியவரும்}, உயர்ந்ததும் {தேவர் முதலியவர்களும்}, தாழ்ந்ததும் {பசு [விலங்குகள்] முதலியனவையும்} தெரிந்து கொள்ளத்தக்கன" என்றிருக்கிறது.
தேவமதர், "(உயிர் காற்றுகளில்) எவரால் ஓர் உயிரினம் உண்டாக்கப்படுகிறது? அவர்களில் முதலில் வருவது எவர்? குறுக்குவெட்டாகவும், மேல்நோக்கியும், கீழ்யோக்கியும் நகரும் இரட்டை உயர்க்காற்றுகள் எவை என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டார்.(4)
நாரதர், "சங்கல்பத்தில் (விருப்பத்தில்) இருந்து இன்பம் {ஆனந்தம்} எழுகிறது. அஃது ஒலியில் இருந்தும் எழுகிறது. அது சுவையில் இருந்தும் எழுகிறது; அது நிறத்தில் இருந்தும் எழுகிறது.(5) உயிர்நீரில் {சுக்கிலத்தில்} இருந்து குருதியில் {சோணிதத்தில்} கலந்து முதலில் பாய்வது பிராணனாகும். பிராணனால் உயிர் நீர் மாறுதலையடைந்ததும், அபானன் பாய்கிறது.(6) உயிர்நீரில் இருந்தும் இன்பம் எழுகிறது. சுவையில் இருந்தும் அஃது எழுகிறது. இதுவே உதானனின் வடிவமாகும் (விளைவாகும்). கலவியில் இருந்து இன்பம் உண்டாகிறது.(7) ஆசையில் இருந்து உயிர் நீர் {சுக்கிலம்} உண்டாகிறது. ஆசையில் இருந்து மாதவிடாய் சுழற்சியும் {ரஜஸும்} உண்டாகிறது. சமானன் மற்றும் வியானனால் உண்டாக்கப்பட்ட உயிர்நீர் மற்றும் குருதியின கலவிக்குள்,(8) பிராணன் மற்றும் அபானனைக் கொண்ட இரட்டை குறுக்குவெட்டாகவும், மேல்நோக்கியும் நகர்ந்து நுழைகிறது. வியானன், சமானன் ஆகிய இரண்டும் குறுக்குவெட்டாக நகரும் ஓர் இரட்டையாக அமைகின்றன.(9)
தேவர்கள் அனைவரும் அக்னியாக (நெருப்பாக) இருக்கின்றனர். இதுவே வேதத்தின் போதனையாகும். நுண்ணறிவுடன் கூடிய ஒரு பிராமணனிடம் அக்னியைக் குறித்த அறிவு எழுகிறது.(10) அந்த நெருப்பின் புகை இருளின் (இருள் {தமஸ்} என்றழைக்கப்படும் குணத்தின்) வடிவில் இருக்கிறது. ஆசை என்ற பெயரில் அறியப்படும் குணம் {ரஜஸ்} அதன் சாம்பலில் இருக்கிறது. நல்லியல்பின் குணம் {சத்வ குணம்} ஆகுதிகள் ஊற்றப்படும் நெருப்பின் பகுதியில் இருந்து எழுகிறது[2].(11) வேள்விகளைக் குறித்து அறிந்தவர்கள் சமானனும், வியானனும் நல்லியல்பின் குணத்தில் இருந்து வந்தன என்பதை அறிவார்கள். பிராணனும், அபானனும் (தெளிந்த நெய்யாலான) ஆகுதிகளின் பகுதிகளாகும். அவற்றுக்கு நடுவே நெருப்பிருக்கிறது.(12) பிராமணர்கள் அறிவதைப் போல அதுவே உதானனின் சிறந்த வடிவம் (அல்லது இருக்கை) ஆகும். இரட்டைகளில் தனித்துவமானதெது என்பதைச் சொல்கிறேன் கேட்பீராக.(13) பகலும், இரவும் இரட்டையாக அமைகின்றன. அவற்றுக்கு நடுவே நெருப்பிருக்கிறது. பிராமணர்கள் அறிவதைப் போல அதுவே உதானனின் சிறந்த இருக்கையாகும்[3].(14)
[2] "இரண்டாவது வரியில் உள்ள சர்வம் என்ற சொல்லை நீலகண்டர் எடுத்தாண்டாலும் அது பிழையானதாகும். இங்கே, நெருப்பின் பல்வேறு பகுதிகள் பல்வேறு குணங்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. புகையானது இருளின் (தமஸின்) வடிவமாகும்; சாம்பலானது ஆசை {ரஜஸ்} குணமாகும்; அதே வேளையில் ஆகுதிகள் ஊற்றப்படும் சுடர்மிக்கத் தழலானது நல்லியல்பின் {சத்வ} குணமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அக்னிக்குத் தமோரூபம் புகையாகவும், ரஜஸ் பஸ்மமாகவும் இருக்கின்றன. எந்தப் பரமாத்மாவாகிற அக்னியில் ஹவிஸ் ஹோமம் பண்ணப்படுகிறதோ அதிலிருந்து எல்லாம் உண்டாகின்றன" என்றிருக்கிறது.[3] கும்பகோணம் பதிப்பில், "நிர்த்வந்த்வமென்பதை நான் சொல்லுகிறேன்; கேள். அஹஸும், ராத்ரியுமாகிய இவை துவந்துவமாகும். அவைகளின் நடுவில் பரமாத்மாவென்னும் அக்னி இருக்கிறது. உதானனென்னும் பிரம்மத்தினுடைய சிறந்ததான இந்த ரூபத்தைப் பிராம்மணர்கள் அறிகிறார்கள்" என்றிருக்கிறது. அஹஸ், ராத்ரி என்பதன் அடிக்குறிப்பில், "வித்யை, அவித்யை என்றாவது, ஸுஷுப்தி, ஜாகரணம் என்றாவது, உத்பத்தி, பிரளயம் என்றாவது கொள்ளலாம் என்பது பழைய உரை" என்றிருக்கிறது.
இருப்பு, இல்லாமை என்பன இரட்டையாக அமைகின்றன. அவற்றுக்கு நடுவே நெருப்பிருக்கிறது. பிராமணர்கள் அறிவதைப் போல அதுவே உதானனின் சிறந்த இருக்கையாகும்.(15) முதலில் இருப்பது சமானன். பின்னிருப்பது வியானன். பின்னதின் {வியானனின்} இயக்கம் அதன் {சமானனின்} மூலமே நடைபெறுகிறது. இரண்டாவதாக, மீண்டும் சமானன் இயங்கத் தொடங்குகிறது.(16) வியானன் மட்டுமே அமைதியாக இருக்கிறது. அமைதியே நித்திய பிரம்மமாகும். பிராமணர்கள் அறிவதைப் போல அதுவே உதானனின் சிறந்த இருக்கையாகும்[4].(17)
[4] "உரையாசிரியர்களின் விளக்கங்களை வெளிக்கொணர முயலாமல் நான் இந்தச் சுலோகங்களை வரிக்கு வரியே மொழிபெயர்த்திருக்கிறேன். அச்சடித்த உரைகள் சரியாக இல்லை. நீலகண்டரால் பின்பற்றப்பட்ட உரை அர்ஜுன் மிஸ்ராவின் உரையில் இருந்து வேறுபடுகிறது. சுலோகங்களின் வரிசையே கூட அனைத்து உரைகளிலும் சரியாக இல்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் இதற்குப் பின்பும், மெய் பொய் ஸத் அஸத், சுபம் அசுபம், ஆகிய இரட்டைகள் {துவந்துவங்கள்} பேசப்படுகின்றன. மேலும் அவற்றின் தொடர்ச்சியாக, "மேலான அந்தப் பிரம்மமானது (எந்த ஸங்கல்பத்தால்) ஸமானனாகவும், வியானனாகவும் ஆகிறதோ அந்த ஸங்கல்பத்தினால் கர்மமானது விஸ்தரிக்கப்படுகிறது. இரண்டாவதோ ஸமானனால் மறுபடியுமே நிச்சயிக்கப்படுகிறது. வாமதேவருடைய ஞானமானது சாந்தியைப் பிரயோஜனமாகக் கொண்டது. சாந்தியானது ஸனாதனமான பிரம்மம். உதானனென்னும் பிரம்மத்தினுடைய இந்தச் சிறந்த ரூபத்தைப் பிராமணர்கள் அறிகிறார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "சமானன் முதலில் வருகிறது. ஊடுருவும் வியானன் தன் பணியைச் செய்கிறது. மூன்றாவதாக வருவது ஊடுருவும் சமானனாகும். வாமதேவன் அமைதியின் நிமித்தமாக இருக்கிறான். அமைதியே நித்திய பிரம்மமாகும். கல்விமான்களான பிராமணர்கள் இஃதை உதானனின் பரவடிவமாக அறிகிறார்கள்" என்றிருக்கிறது. வாமதேவன் என்பதன் அடிக்குறிப்பில், "இஃது என்ன என்பது தெளிவாகப் புரியவில்லை. வாமதேவர் என்ற பெயரில் ஒரு முனிவர் இருந்தார். எனினும், வாமதேவன் என்பது ருத்திரர்களுக்குச் சமமாகவும், சிவனின் தன்மையாகவும் கருதப்படுகிறது" என்றிருக்கிறது.
அஸ்வமேதபர்வம் பகுதி – 24ல் உள்ள சுலோகங்கள் : 17
ஆங்கிலத்தில் | In English |