Narayana! | Aswamedha-Parva-Section-25 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 10)
பதிவின் சுருக்கம் : செயல்பாடு மற்றும் செய்பவன் ஆகியவை குறித்தும், நாராயணனே அனைத்தின் ஆன்மா என்பது குறித்தும் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்...
பிராமணர், "இது தொடர்பாகச் சாதுர்ஹோத்ரத்தின் ({சாதுர்ஹோத்ர} வேள்வியின்) அமைப்பு {விதி} என்ன என்பது குறித்த இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) அது குறித்த விதிகளை இப்போது முழுமையாகச் சொல்லப் போகிறேன். ஓ! இனிய பெண்ணே, இந்த அற்புதம் நிறைந்த புதிரை {ரகசியத்தை} அறிவிக்கப் போகிறேன் கேட்பாயாக.(2) கருவி {கரணம்}, இயக்கம் {கர்மா}, இயக்கி {செயல்படுத்துபவன் / கர்த்தா}, விடுதலை {முக்தி / மோக்ஷம்} ஆகிய இவையே அண்டத்தைச் சூழ்ந்திருக்கும் நான்கு வேள்விப் புரோகிதர்களாகும். (இது தொடர்பாக) {அதனதனுக்கு} ஒப்படைக்கப்பட்டிருக்கும் காரணங்களை முழுமையாகக் கேட்பாயாக. (3,4)
மூக்கு, நாக்கு, கண்கள், தோல், ஐந்தாவதாகக் காதுகள், மனம் மற்றும் புத்தி ஆகிய இவை ஏழும் குணங்களின் (குணங்கள் குறித்த அறிவின்) காரணங்கள் {கரணத்தைக் காரணங்களாகக் கொண்டவை} என அறிய வேண்டும். மணம், சுவை, நிறம், ஒலி, எண்ணிக்கையில் ஐந்தாவதாகத் தீண்டல்,(5) {நினைக்கத்தக்க} மனத்தின் நோக்கங்கள், {அறியத்தக்க} புத்தியின் நோக்கங்கள் ஆகிய இவை ஏழும் செயற்காரணங்கள் {கர்மாவைக் காரணங்களாகக் கொண்டவை} ஆகும். நுகர்பவன், உண்பவன், காண்பவன், பேசுபவன், எண்ணிக்கையில் ஐந்தாவதாகக் கேட்பவன்,(6) நினைப்பவன், அறிபவன் ஆகிய இவர்கள் எழுவரும் செயற்பாட்டுக் காரணங்களாக {கர்த்தாவைக் காரணமாகக் கொண்டவர்களாக} அறியப்பட வேண்டும். குணங்களைக் கொண்ட இவை, ஏற்புடையதாகவோ, ஏற்பில்லாததாகவோ உள்ள தங்கள் குணங்களையே அனுபவிக்கின்றன[1].(7)
[1] "இங்கே இவை என்பது இயக்கம், இயக்கி மற்றும் கருவி ஆகியவற்றைக் குறிக்கிறது. இவற்றின் குணங்கள் நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்கள் ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஆத்மாவைப் பொறுத்தவரையில் அது குணங்களற்றதாகும். இவை ஏழும்தான் விடுதலைக்கான காரணங்களாகும். கல்விமான்கள் மற்றும் போதுமான புத்தியைக் கொண்டவர்களிடம் தேவர்களின் நிலையில் உள்ள குணங்கள் உரிய இடத்தில் உள்ளவையும், விதிக்கப்பட்டதற்கு ஏற்புடையவையுமான ஆகுதிகளை உண்கின்றன. கல்வியற்ற ஒருவன், பல்வேறு வகை உணவுகளை உண்டு, அகந்தை புத்தியால் {மமதையால்} பீடிக்கப்படுகிறான்[2].(8,9) தனக்கான உணவை மட்டுமே செரிப்பவன் அகந்தை புத்தியால் அழிவடைகிறான். உண்ணத்தகாத உணவை உண்பதும், மதுவைப் பருகுவதும் அவனை அழிவடையச் செய்கிறது.(10) அவன் (தான் உண்ட) உணவை அழிக்கிறான், அந்த உணவை அழித்து, தன்னையும் அவன் அழித்துக் கொள்கிறான். எனினும், கல்வி கற்றவனும், பலம்பொருந்தியவனுமான மனிதன், தன் உணவை மீண்டும் உற்பத்தி செய்வதற்காக அஃதை அழிக்கிறான்.(11) அவன் உண்ணும் உணவில் இருந்து மிகச் சிறு அத்துமீறலும் நிகழாது.
[2] "இவ்விரு ஸ்லோகங்களில் சொல்லப்படுவதென்னவென்றால்: புலன்களே அனுபவிக்கின்றன; ஆன்மா அனுபவிப்பதில்லை. இது கல்விமான்களால் நன்கு அறியப்பட்டது. மறுபுறம், கல்லாதவர்கள், இதுவும், அதுவும் உண்மையில் தங்களில் இருந்து வேறுபட்ட ஒன்றாக இருந்தாலும் இதுவும் அதுவும் தங்களுடையவை என்று எண்ணுகின்றனர். அறியாமையால் அவர்கள் தங்களைத் தங்கள் புலன்களுடன் அடையாளம் கொண்டாலும் கூட, அவர்கள் தங்கள் சுயமேயன்றி தங்கள் புலன்களில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தம் தம் ஸ்தானத்தை விதிப்படி அறிந்த வித்வான்களுக்கு அந்த (இதிரியங்களென்னும்) குணங்கள் தேவதைகளாகி எப்பொழுத்ம ஹவிஸை அனுபவிக்கின்றன. ஹவிஸுகளையும், அன்னங்களையும் புஜிப்பவன் மமதையால் கெடுக்கப்படுகிறான்" என்றிருக்கிறது.
மனத்தால் எண்ணப்படும் எதுவும், வாக்கால் சொல்லப்படும் எதவும்,(12) காதால் கேட்கப்படும் எதுவும், கண்ணால் காணப்படும் எதுவும், தீண்டல் (புலனால் {தோலால்}) தீண்டப்படும் எதுவும், மூக்கால் நுகரப்படும் எதுவும்,(13) புலன்கள் அனைத்தையும், ஆறாவதாக மனத்தையும் கட்டுப்படுத்திய பிறகு, உடலுக்குள் எரிந்து கொண்டிருக்கும் உயர்ந்த தகுதிகளைக் கொண்ட நெருப்பான ஆத்மாவுக்குள் ஊற்றப்பட வேண்டிய தெளிந்த நெய்யாலான ஆகுதியாக அமைகிறது[3].(14) என்னைப் பொறுத்தவரையில், யோகத்தால் அமையும் வேள்வியானது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அந்த வேள்வி தொடர்கிற இடத்தில் அறிவு நெருப்பை விளைவிக்கும் ஊற்று உதிக்கிறது. மேல்நோக்கிய உயிர் காற்றான பிராணனே அவ்வேள்வியின் ஸ்தோத்திரமாகும். கீழ்நோக்கிய உயிர் காற்றான அபானனே அதன் சஸ்திரமாகும். அனைத்தையும் துறப்பதே, அந்த வேள்வியின் சிறந்த தக்ஷிணையாகும்.(15)
[3] "இங்கே சொல்லப்படுவது என்னவென்றால்: புலன்களையும், மனத்தையும் கட்டுப்படுத்திய பிறகு, அந்தப் புலன்களுக்குரிய பொருட்களையும், மனத்தையும், உடலுக்குள் ஆத்மாவாக உள்ள புனித நெருப்புக்குள் ஆகுதிகளாக ஊற்ற வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பிரம்மமாக உள்ள நனவு {அகங்காரம்}, மனம் மற்றும் புத்தி ஆகிய ஒவ்வொன்றும், ஹோத்ரியும், அத்வர்யு, உத்காத்ரி ஆகியவையாகும். பிரஸாஸ்திரியும், அவரது சாஸ்திரமும் உண்மையாகும். தனி இருப்பை நிறுத்தல் (அல்லது விடுதலையே {முக்தியே}) தக்ஷிணையாகும்[4].(16) இது தொடர்பாக, நாராயணனை அறிந்த மக்கள் சில ரிக்குகளை உரைக்கின்றனர. பழங்காலத்தில் தெய்வீகமான நாராயணனுக்கு விலங்குகள் காணிக்கயளிக்கப்பட்டன[5].(17) அப்போது சில சாமங்களும் பாடப்படுகின்றன. இதில் ஓர் உரிமை ஏற்படுகிறது. ஓ! மருண்டவளே, தெய்வீக நாராயணனே அனைத்தின் ஆன்மா என்பதை அறிவாயாக" என்றார் {பிராமணர்}.(18)
[4] கும்பகோணம் பதிப்பில், "ஸத்யமானது ப்ரஸாஸ்தாவாகவும் அவருடைய சஸ்த்ரமாகவும், மோக்ஷமானது தக்ஷிணையாகவும் இருக்கின்றன" என்றிருக்கிறது.[5] "நாராயணன் என்பது வேதம் அல்லது ஆன்மா என நீலகண்டரால் பொருள் கொள்ளப்படுகிறது. பழங்காலத்தில் நாராயணனுக்குக் காணிக்கை அளிக்கப்படும் விலங்குகள் என்பன வேள்விகளில் காணிக்கை அளிக்கப்படும் புலன்களாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நாராயணரை அறிந்தவர்களான ஜனங்கள் இந்த விஷயத்தில் ருக்குகளையும் (பிரமாணமாகச்) சொல்லுகின்றனர். தேவரான நாராயணரை அடைவதற்காக முற்காலத்தில் இந்திரியங்களை வசப்படுத்திக் கொண்டவர்கள் அவர் விஷயத்தில் ஸாமங்களைக் கானம் செய்கிறார்கள்" என்றிருக்கிறது. அதில் நாராயணரை அறிந்தவர்கள் என்பதன் அடிக்குறிப்பில், "வேதத்தை அறிந்தவர்கள், அல்லது ஆத்மாவை அறிந்தவர்கள் என்பது பழைய உரை" என்றிருக்கிறது.
அஸ்வமேதபர்வம் பகுதி – 25ல் உள்ள சுலோகங்கள் : 18
ஆங்கிலத்தில் | In English |