Kamacharin, Brahmacharin! | Aswamedha-Parva-Section-26 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 11)
பதிவின் சுருக்கம் : : பிரம்மன் ஒரே சொல்லால் பிரம்மத்தை உபதேசித்தது; தேவர்கள் முதலியோர் தத்தமது அறிவுக்குத்தக்கபடி அதைப் புரிந்து கொண்டது ஆகியவற்றைக் குறித்துத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்...
பிராமணர், "ஆட்சியாளன் ஒருவனே. அவனைத் தவிர இரண்டாமவன் வேறொருவனுமில்லை. அந்த ஆட்சியாளன் இதயத்தில் வசிக்கிறான். அவனைக் குறித்து இப்போது சொல்லப்போகிறேன். சாய்தளத்தில் ஓடும் நீரைப் போல அவனால் உந்தப்பட்டும் நான், அவனது வழிநடத்தலின்படியே நகர்கிறேன் {காரியங்களைச் செய்கிறேன்}.(1) ஆசான் {குரு} ஒருவரே. அவரைத் தவிர இரண்டாமவர் வேறொருவருமில்லை. அவரைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன். உலகில் உள்ள பாம்புகள் அனைத்தும் அந்த ஆசானால் போதிக்கப்பட்டே எப்போதும் பகை உணர்வுடன் இருக்கின்றன[1].(2) உற்றவன் {உறவினன்} ஒருவனே. அவனைத் தவிர இரண்டாமவன் வேறு ஒருவனுமில்லை. இதயத்தில் வசிக்கும் அவனைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன். அவரால் போதிக்கப்படும் உறவினர்கள் உறவினர்களைக் கொண்டவர்களாகிறார்கள்" {என்றார் பிராமணர்}. {கிருஷ்ணன் தொடர்ந்தான்}, "மேலும், ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}[2], {அந்தப் பிரமாணர் தம் மனைவியிடம்}, "முனிவரெழுவரும் {சப்தரிஷிகளும்} ஆகாயத்தில் ஒளிர்கிறார்கள்.(3)
[1] கும்பகோணம் பதிப்பில், "அந்தக் குருவினால் எப்பொழுதும் உத்தரவு செய்யப்பட்ட தானவர்கள் எல்லோரும் முற்காலத்தில் கொல்லப்பட்டார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நான் அந்த ஆசானாலேயே போதிக்கப்படுகிறேன். அதன் காரணமாகவே தானவர்கள் அனைவரும் வீழ்த்தப்பட்டனர்" என்றிருக்கிறது.
[2] பிராமணர் உரையைச் சொல்லும் கிருஷ்ணன், இடையில் அர்ஜுனனை அழைத்து, மேலும் பிராமணர் சொன்னதையே தொடர்ந்து சொல்கிறான். அதாவது பிராமணர் தம் மனைவியிடம் பேசியதைக் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
{ஐயங்களை} அகற்றுபவர் ஒருவரே. அவரைத் தவிர இரண்டாமவர் வேறு ஒருவருமில்லை. அவர் இதயத்தில் வசிக்கிறார். அவரைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன். குருவுடன் வாழ்வதற்கு உரிய வாழ்வுமுறையில் {பிரம்மச்சரிய ஆசிரமத்தில்} அந்தக் குருவுடன் வாழ்ந்த சக்ரன் {இந்திரன்}, உலகங்கள் அனைத்தின் ஆட்சியுரிமையை அடைந்தான்[3].(4) பகைவன் ஒருவனே. அவனைத்தவிர இரண்டாமவன் வேறு ஒருவனுமில்லை. அவன் இதயத்தில் வசிக்கிறான். நான் இப்போது அவனைக் குறித்துச் சொல்லப் போகிறேன். உலகில் உள்ள பாம்புகள் அனைத்தும் அந்த ஆசானால் போதிக்கப்பட்டே எப்போதும் பகையுணர்வு உள்ளவையாக இருக்கின்றன.(5)
[3] "இங்கே சொல்லப்படும் ஸ்ரோதம் என்பது ஆசான் அல்லது ஐயங்களை அகற்றுபவர் என்ற பொருளைத் தரும். அமரத்வம் என்பது தேவர்கள் அனைவருக்கும் தலைமையான நிலை என்பதைக் குறிக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "(அவர்) ஒருவரே கேட்பவர். அவரைக் காட்டிலும் இரண்டாமவர் இல்லை. எவர் ஹிருதயத்தில் இருக்கிறாரோ அவரைக் குறித்து நான் சொல்லுகிறேன். குருவான அவரிடத்தில் இந்திரன் குருவினத்தில் வஸிப்பதுபோல வாஸம் செய்து எல்லா உலகங்களுக்கும் தேவனாக இருக்கும் தன்மையை அடைந்தான்" என்றிருக்கிறது.
இது தொடர்பாக உயிரினங்கள் அனைத்தின் தலைவனிடம் {பிரம்மனிடம்} இருந்து பாம்புகள் {பன்னகர்கள்}, தேவர்கள் மற்றும் முனிவர்கள் பெற்ற போதனை குறித்த பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(6) உயிரினங்கள் அனைத்தின் தலைவனைச் சுற்றி அமர்ந்திருந்த தேவர்கள், முனிவர்கள், பாம்புகள் மற்றும் அசுரர்கள் ஆகியோர் அவனிடம், "எங்களுக்கான உயர்ந்த நன்மை அறிவிக்கப்படட்டும்" என்றனர்.(7)
அந்தப் புனிதமானவன் {பிரம்மன்}. உயர்ந்த நன்மையைக் குறித்துக் கேட்ட அவர்களிடம் ஓரசை {ஓரெழுத்துப்} பிரம்மமான ஓம் என்ற சொல்லை மட்டுமே சொன்னான். இதைக் கேட்ட அவர்கள் பல்வேறு திசைகளில் ஓடிச் சென்றனர்.(8) இவ்வாறு அனைத்துத் திசைகளிலும் ஓடிச் சென்றவர்களுக்கு மத்தியில் ஆசையில் இருந்து எழுந்த தற்போதனையில் இருந்து, முதலில் பாம்புகளிடம் கடிக்கும் மனோநிலை {தன்மை} உண்டானது.(9) அசுரர்களிடம், தங்கள் இயல்பிலேயே பிறந்த பகட்டும், செருக்கும் கூடிய மனோநிலை எழுந்தது. தேவர்கள் கொடைகள் அளிக்கும் தன்மையையும், பெரும் முனிவர்கள் தற்கட்டுப்பாட்டையும் அடைந்தனர்.(10) ஓர் ஆசானிடம் சென்று, ஒரு சொல்லால் போதிக்கப்பட்ட (தூய்மையாக்கப்பட்ட) பாம்புகளும், தேவர்களும், முனிவர்களும், தானவர்களும் பல்வேறு மனநிலைகளை {தன்மைகளை} அடைந்தனர்.(11) தான் பேசுவதைத் தானே கேட்டு, அதை முறையாக ஒருவன் புரிந்து கொள்கிறான். மீண்டும் அவன் பேசும்போது மேலும் கேட்கிறான். {தன்னைத் தவிர அவனுக்கு} இரண்டாவதாக வேறோர் ஆசான் இல்லை[4].(12)
[4] "ஆசானும், சீடனும் ஒருவனே என்று குறிப்பிடப்படுவதை இங்குத் தெளிவாக உணரலாம். தெலங்க் அவர்கள் இந்த ஸ்லோஹத்திற்குத் தவறாகப் பொருள் கொண்டிருக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எல்லா ஸர்ப்பங்களும், அஸுரர்களும், தேவர்களும், ரிஷிகளும் ஒரு குருவை அடைந்து, ஒரு சப்தத்தால் உபதேசிக்கப்பட்டுப் பலவித நிச்சயத்தை அடைந்தனர். இந்த நாராயணரோ சொல்லப்படுவதைக் கேட்கிறார்; உள்ளபடி அறிகிறார்; கேட்பவர்களுக்கு அவற்றை மறுபடியும் உபதேசிக்கிறார். (ஆகையால்) இவரைக் காட்டிலும் வேறான குரு இல்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவர்கள் ஒரே வகைப் போதனையையும், தூய்மையாக்கப்பட்ட ஒரே சொல்லையும்தான் பெற்றனர். எனினும், பாம்புகள், தேவர்கள், முனிவர்கள் மற்றும் தானவர்கள் ஆகியோர் அனைவரும் பல்வேறு மனநிலைகளை அடைந்தனர். சொல்லப்படுவதை ஒருவன் முறையான வழியில் பெறும்போது மட்டுமே அவன் அதைக் கேட்கிறான். அவன் மீண்டும் கேட்டாலும் அஃது உண்மையே ஆகும். வேறு ஓர் ஆசான் நினைக்கப்படுவதில்லை" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "ஓர் ஆசானின் சொற்களைப் புரிந்து கொள்வதில் சுயமே உண்மையான ஆசானாக இருக்கிறது" என்றிருக்கிறது.
அவனது ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்தே பின்னர்ச் செயல்பாடு தோன்றுகிறது. சொல்பவன், புரிந்து கொள்பவன், கேட்பவன், பகைவன் ஆகியோர் இதயத்தில் நிறுத்தப்படுகின்றனர்.(13) உலகில் பாவகரமாகச் செயல்படுவதன் மூலம் ஒரு மனிதன் பாவம் நிறைந்த செயல்களைச் செய்தவனாகிறான். இவ்வுலகில் மங்கலமாகச் செயல்படுவதன் மூலம் ஒரு மனிதன் மங்கலச் செயல்களைச் செய்தவனாகிறான்.(14) ஆசையால் தூண்டப்பட்டுப் புலனின்பங்களுக்கு அடிமையாவதன் மூலம் ஒரு மனிதன் கட்டுப்பாடில்லா ஒழுக்கம் கொண்டவனாகிறான் {காமசாரியாகிறான்}. தன் புலன்களை அடக்குவதிலேயே எப்போதும் அர்ப்பணிப்புடன் உள்ள ஒருவன் பிரம்மச்சாரியாகிறான்.(15) நோன்புகள் மற்றும் செயல்பாடுகளைக் கைவிடும் அவன் பிரம்மத்தை மட்டுமே அடைக்கலமாகக் கொள்கிறான். எப்போதும் தன்னைப் பிரம்மத்துடன் அடையாளக் கண்டு, இவ்வுலகில் திரிபவன் பிரம்மச்சாரியாகிறான்.(16)
பிரம்மமே அவனது விறகாகும்; பிரம்மமே அவனது நெருப்பாகும்; பிரம்மமே அவனது தோற்றமாகும்; பிரம்மமே அவனது நீராகும்; பிரம்மமே அவனது ஆசான் ஆகும்; பிரம்மத்திலேயே அவன் மூழ்கியிருக்கிறான்.(17) ஞானிகளால் புரிந்து கொள்ளப்படும் வகையில் உள்ள பிரம்மச்சரியம் இவ்வளவு நுட்பமானதே. அதைப் புரிந்து கொண்டு, க்ஷேத்ரஜ்ஞனால் போதிக்கப்படும் அவர்கள் அதையே பின்பற்றுகிறார்கள்" என்றார் {பிராமணர்}.(18)
அஸ்வமேதபர்வம் பகுதி – 26ல் உள்ள சுலோகங்கள் : 18
ஆங்கிலத்தில் | In English |