Sacred forest! | Aswamedha-Parva-Section-27 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 12)
பதிவின் சுருக்கம் : ஞானம் மற்றும் பிரம்மம் ஆகியவற்றைக் காடாகச் சித்தரித்துத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்...
பிராமணர், "குறிக்கோள்களையே ஈக்களாகவும், கொசுக்களாகவும், இன்ப துன்பங்களை வெப்பம் மற்றும் குளிராகவும், கவனமின்மையையே {மோஹத்தையே} காரிருளாகவும், பேராசை மற்றும் நோய்களை ஊர்வனவாகவும் {பாம்புகளாகவும்}, செல்வத்தை ஒற்றை ஆபத்து நிறைந்த சாலையாகவும், கோபம் மற்றும் காமத்தைக் கள்வர்களாகவும் கொண்டவையும், கடக்க முடியாதவையுமான நிலப்பரப்புகளை {உலகத்தைக்) கடந்து பிரம்மமெனும் இந்தப் பெருங்காட்டுக்குள் நான் நுழைந்துவிட்டேன்" என்றார்.(1,2)
அதற்கு அந்தப் பிராமணரின் மனைவி, "ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, அந்தக் காடு எங்கே இருக்கிறது? அதன் மரங்கள் யாவை? ஆறுகள் யாவை? மலைகளும், குன்றுகளும் யாவை? அந்தக் காடு எவ்வளவு தொலைவில் இருக்கிறது?" என்று கேட்டாள்.(3)
பிராமணர், "அதனில் {பிரம்மத்தில்} இருந்து வேறுபட்டது ஏதுமில்லை. அதைவிட மிக இனிமைமிக்க வேறு எதுவுமில்லை. அதில் இருந்து பிரியாமல் இருப்பது வேறேதும் இல்லை. அதைவிடப் பீடிக்கக்கூடியது வேறேதுமில்லை.(4) அதைவிடச் சிறியது வேறேதும் இல்லை. அதைவிடப் பெரியது வேறேதும் இல்லை. அதைவிட நுட்பமானது வேறேதும் இல்லை. அதற்கு ஒப்பான மகிழ்ச்சி வேறேதும் இல்லை.(5) அதற்குள் நுழையும் மறுபிறப்பாளர்கள் இன்ப துன்பங்களை உடனே கடந்து விடுகிறார்கள். (அதன் பிறகு) அவர்கள் வேறு எந்த உயிரினத்தின் முன்பும் அச்சத்துடன் ஒருபோதும் நிற்பதில்லை, அதே போல வேறு எந்த உயிரினமும் அவர்களைக் கண்டு அஞ்சுவதில்லை.(6) அந்தக் காட்டில் {பிரம்மத்தில்} பெரு மரங்கள் ஏழும், கனிகள் ஏழும் இருக்கின்றன, விருந்தினர்கள் எழுவரும் இருக்கின்றனர். அங்கே ஏழு ஆசிரமங்களும், ஏழு தியான யோகங்களும் (யோக வடிவங்களும்) {சமாதிகளும்}, ஏழு தொடக்க நிலைகளும் (வடிவங்களும்) {தீக்ஷைகளும்} இருக்கின்றன. இதுவே அந்தக் காட்டைக் குறித்த விளக்கமாகும்[1].(7)
[1] "ஏழு பெருமரங்கள் என்பன ஐம்புலன்களையும், மனத்தையும், புத்தியையும் குறிக்கும். கனிகள் என்பன அவற்றின் மூலம் பெறப்படும் இன்ப துன்பங்கள் ஆகும். அந்த இன்ப துன்பங்களை அனுபவிப்பதால் ஒவ்வொரு புலனின் சக்தியும் விருந்தினர்கள். ஆசிரமங்கள் என்பன அந்த விருந்தினர்கள் உறைவிடம் கொள்ளும் அந்த மரங்களே ஆகும். யோகத்தின் ஏழு வடிவங்கள் என்பன ஏழு புலன்களின் அழிவாகும். ஏழு தொடக்க நிலைகள் என்பன ஏழு புலன்களின் செயற்பாட்டால் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும் மறுப்பாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அந்த வனத்தில் ஏழு பெரிய மரங்களும், ஏழு கனிகளும், ஏழு அதிதிகளும், ஏழு ஆசிரமங்களும், ஏழு ஸமாதிகளும், ஏழு தீக்ஷைகளும் இருக்கின்றன" என்றிருக்கிறது.
அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் {மனமாகிய} மரங்கள் {ஒலி முதலிய புலன் நுகர் பொருட்களாலான} ஐந்து நிறங்களிலான சிறந்த மலர்களையும், கனிகளையும் உண்டாக்குகின்றன.(8) அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் மரங்கள் இரு வகைகளைச் சார்ந்தவையும், சிறந்த நிறங்களைக் கொண்டவையுமான {புலன் நுகர் பொருட்களின் அனுபவம் என்ற} மலர்களையும், {ஆசை முதலிய} கனிகளையும் உண்டாக்குகின்றன.(9) அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் {கண்கள் எனும்} மரங்கள் {இன்பம் துன்பம் என்ற} இரு நிறங்களைச் சார்ந்தவையும், நறுமணம் மிக்கவையுமான {சொர்க்கம் முதலான} மலர்களையும், {ஆசை முதலிய} கனிகளையும் உண்டாக்குகின்றன.(10) அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் மரங்கள், {சுகம் என்ற} ஒரு நிறத்தைச் சார்ந்தவையும், நறுமணமிக்கவையுமான {பிரம்மானுபவமென்கிற} மலர்களையும், {ஆனந்தம் எனும்} கனிகளையும் உண்டாக்குகின்றன.(11) அந்தக் காட்டில் நிறைந்து நிற்கும் {புத்தி மற்றும் மனம் என்ற} இரு மரங்கள், வெளிப்படாத வண்ணங்களிலான பல மலர்களையும் {மனோநிலைகளையும்}, {ஆசை முதலிய} கனிகளையும் உண்டாக்குகின்றன.(12) அங்கே நல்ல மனம் {ஞானம்} கொண்ட ஒரு நெருப்பு {ஆத்மா} இருக்கிறது. அது பிரம்மனுடன் தொடர்பில் இருக்கிறது. அங்கே ஐம்புலன்களும் விறகுகளாகின்றன. (மனம் முதலானவற்றை அதைக் கொண்டு ஹோமம் செய்தால்} அவற்றில் இருந்து விடுதலையின் ஏழு வடிவங்களும் {மோக்ஷங்களும்} ஏழு தொடக்க நிலை வடிவங்களை {தீக்ஷைகளும்} உண்டாக்குகின்றன. குணங்களே கனிகளாக இருக்கின்றன, அந்தக் கனிகளை உண்பவர்களே {தேவர்களென்னும்} விருந்தினர்களாக இருக்கின்றனர்.(13)
அங்கே பல்வேறு இடங்களில் பெரும் முனிவர்கள் {புலன்களுக்குரிய தேவர்கள்} அந்த விருந்தோம்பலை ஏற்றுக் கொள்கின்றனர். அவ்வாறு வழிபடப்படும் அவர்கள் அழிவடையும்போது {லயமடையும்போது [இல்லாது போகும்போது]} மற்றொரு காடு பிரகாசிக்கிறது.(14) அந்தக் காட்டில், புத்தியே மரம்; விடுதலையே {முக்தியே} கனி; அமைதியே {சாந்தியே} அது கொண்ட நிழல் ஆகும். அது ஞானத்தையே தன் ஓய்வில்லமாகவும், மனநிறைவை நீராகவும், க்ஷேத்ரஜ்ஞனை சூரியனாகவும் கொண்டுள்ளது.(15) மேல்நோக்கியோ, கீழ்நோக்கியோ, கிடைமட்டத்திலோ அதன் எல்லையை உறுதி செய்ய முடியாது.(16) கீழ்நோக்கி முகங்களைக் கொண்டவர்களும் {தலை குனிந்திருப்பவர்களும்}, பிரகாசத்துடன் கூடியவர்களும், தலைமுறைகளை உண்டாக்கக்கூடியவர்களுமான ஏழு பெண்கள் எப்போதும் அங்கே வசித்து வருகின்றனர். உண்மையை உறிஞ்சும் முரண்பாட்டைப் போல அனைத்து உயிரினங்களிடம் இருந்தும் அவர்கள் பல்வேறு சுவைகளைப் பெறுகின்றனர். வசிஷ்டரைத் தங்களில் முதன்மையானவராகக் கொண்டவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களுமான முனிவரெழுவர் {சப்தரிஷிகளும்} அதிலேயே உண்டாகி அங்கேயே வசிக்கின்றனர்.(18)
சூரியனைப் பின்தொடரும் கதிர்களைப் போலவே, புகழ் {கீர்த்தி}, ஒளி {பிரகாசம்}, மேன்மை, அகவொளி {தெளிவு}, வெற்றி, ஒழுங்கு {கச்சிதத்தன்மை}, சக்தி ஆகிய ஏழும் அதைப் பின்தொடர்ந்து செல்கின்றன.(19) அங்கே மலைகளும், குன்றுகளும் ஒன்று திரண்டிருக்கின்றன. பிரம்மத்தில் பிறந்த நீரைக் கொண்ட ஆறுகளும் ஓடைகளும் அங்கே ஓடிக் கொண்டிருக்கின்றன.(20) அங்கே வேள்வி செய்வதற்கான ஒதுக்குப்புறமான ஓரிடத்தில் அவை சங்கமுமாகின்றன. தங்கள் ஆன்மாக்களில் நிறைவடைவோர் அங்கே பெரும்பாட்டனை {பிரம்மனை} நோக்கிச் செல்கின்றனர்.(21) ஆசைகளைக் குறைத்துக் கொண்டவர்களும், சிறந்த நோன்புகளைச் செய்வதில் ஆசை கொண்டவர்களும், தவங்களின் மூலம் பாவங்களை எரித்தவர்களுமான மனிதர்கள் தங்கள் ஆன்மாக்களிலேயே கலந்து பிரம்மத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(22) ஞானக்காடு குறித்து அறிந்தவர்கள் அமைதியைப் புகழ்கிறார்கள். பிறவியை அடைந்தவர்கள், அந்தக் காட்டை நோக்கத்தில் கொண்டு தங்கள் துணிவை இழக்காதிருக்க வேண்டும்.(23) பிராமணர்களால் புரிந்து கொள்ளப்பட்டும் அந்தப் புனிதக்காடு இத்தகையதே. அதைப் புரிந்து கொண்ட அவர்கள், க்ஷேத்ரஜ்ஞனால் செலுத்தப்பட்டு (விதிக்கு இணக்கமாக) வாழ்கின்றனர்" என்றார் {பிராமணர்}.(24)
அஸ்வமேதபர்வம் பகுதி – 27ல் உள்ள சுலோகங்கள் : 24
ஆங்கிலத்தில் | In English |