Killing in Sacrifices! | Aswamedha-Parva-Section-28 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 13)
பதிவின் சுருக்கம் : வேள்விகளில் நேரும் தீங்கு குற்றமாகாது என்று ஓர் அத்வர்யுவுக்கும் யதிக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்...
பிராமணர், "நான் மணங்களை நுகர்வதில்லை. நான் சுவைகளை உணர்வதில்லை. நான் நிறங்களைக் காண்பதில்லை. நான் தீண்டுவதில்லை. (எழும்) பல்வேறு ஒலிகளையும் நான் கேட்பதில்லை. எவ்வகைக் காரியத்தையும் {தீர்மானத்தையும்} நான் செய்வதில்லை.(1) விரும்பப்படும் பொருட்களை விருப்பம் கொள்வது இயற்கையே; விரும்பப்படாத பொருட்களை வெறுப்புக் கொள்வதும் இயற்கையே. அசைவூட்டமுள்ள உடல்களுக்குள் ஆன்மா நுழையும்போது, மேல் நோக்கியும், கீழ் நோக்கியும் செல்லும் உயிர் காற்றுகளின் {பிராண வாயு மற்றும் அபான வாயுவின்} மூலம் இயற்கையில் இருந்தே விருப்பும், வெறுப்பும் எழுகின்றன[1].(2) அவற்றில் இருந்து பிரிந்த நிலையிலேயே மற்றவை இருக்கின்றன; அவற்றில் நித்திய இயல்புகள் இருக்கின்றன; (இவற்றையும்) அனைத்து உயிரினங்களின் ஆன்மாக்களையும், யோகிகள் உடலில் காண்கின்றனர். அதில் வசிக்கும் நான், ஒரு போதும் ஆசை, கோபம், முதுமை மற்றும் மரணத்தின் மூலம் எழும் எதனிலும் பற்று கொள்வதில்லை.(3)
[1] கும்பகோணம் பதிப்பில், "விருப்பும் வெறுப்பும் உண்டாகாமலிருக்கும் பொழுதும் பிராணனும் அபானனும் இயற்கையாகப் பிராணிகளின் சரீரங்களில் பிரவேசித்து (ஆகாதரத்தைப் பாகம் செய்வது முதலான காரியங்களைச் செய்வது போலப் புத்தி முதலானவைகளின்) இயற்கையே இஷ்டமான பொருட்களை விரும்புகிறது. இயற்கையே பகைக்கத்தக்கவைகளெயெல்லாம் பகைக்கிறது" என்றிருக்கிறது.
தாமரையின் {தாமரை இலையில் உள்ள} நீர்த்துளியில் எந்தக் களங்கமும் இல்லாததைப் போலவே, விரும்பத்தக்க பொருள் எதனிலும் விருப்பமின்மை, தீமை எதனிலும் வெறுப்பின்மை ஆகிய என் இயல்புகளிலும் எந்தக் களங்கமுமில்லை[2].(4) மாறுபட்ட இயல்புகளைக் காணும் நிலையான ஒருவனுக்கு (கொள்கைக்கு) இவை நிலையற்ற உடைமைகளாகின்றன. செயல்பாடுகள் நிகழ்த்தப்பட்டாலும், சூரியக் கதிர்களின் திரள் வானத்தைப் பற்றாததைப் போல {அவன் அனுபவிக்கும்} இன்பங்களின் திரளும் அவற்றுடன் அவனைப் பற்றுகொள்ளச் செய்யாது. இது தொடர்பாக ஓர் அத்வர்யுவுக்கும், ஒரு யதிக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது. ஓ! புகழ்பெற்ற பெண்மணியே, அதைக் கேட்பாயாக.(5,6)
[2] கும்பகோணம் பதிப்பில், "விரும்பத்தக்கவைகளையெல்லாம் விரும்பாதவனும், தோஷங்களையெல்லாம் பகைக்காதவனுமான எனக்கு ஜலத்திவலைக்குத் தாமரையிலைகளில் பற்றுதலுண்டாகாதது போல ஸ்வபாவங்களில் பற்றுதலுண்டாகிறதில்லை" என்றிருக்கிறது.
ஒரு வேள்விச் சடங்கில் நீர் தெளிக்கப்படும் {புரோக்ஷிக்கப்படும்} விலங்கைக் கண்ட ஒரு யதி {சந்நியாஸி}, அத்வர்யுவிடம் "இஃது உயிர்க்கொலை" என்றார்.(7)
அத்வர்யு {சந்நியாசியிடம்}, "இந்த ஆடு அழிவையடையாது. இக்காரியத்தில் வேத அறிவிப்பு உண்மையானால், (இந்த வேள்வியினால்) இவ்விலங்கு பெரும் நன்மையை அடையும்.(8) பூமியாலான இந்த விலங்கின் பகுதி பூமிக்குச் செல்லும். நீரில் பிறந்த இதன் பகுதி நீருக்குள் நுழையும்.(9) இதன் கண்கள் சூரியனுக்குள்ளும்; இதன் காதுகள் பல்வேறு திசைப்புள்ளிகளிலும், இதன் உயிர் காற்றுகள் ஆகாயத்துக்குள்ளும் நுழையும். சாத்திரங்களைப் பின்பற்றும் நான் (இந்த விலங்கைக் கொல்வதற்குத் துணைபுரிவதால்) எத்தீங்கையும் இழைக்கவில்லை" என்றார்.(10)
யதி {சந்நியாசி அத்வர்யுவிடம்}, "இந்த ஆட்டின் உயிர் காற்றுகளை இவ்வாறு பிரிப்பதில் இத்தகைய நன்மையைக் கண்டால், இந்த வேள்வி ஆட்டுக்கானதாகிறது. இதை நீர் செய்ய வேண்டிய அவசியமென்ன {இதனால் உமக்கென்ன பயன்}?(11) (இந்த ஆட்டின்) சகோதரன், தந்தை, தாய் மற்றும் நண்பன் ஆகியோர் இதில் தங்கள் அனுமதியை உமக்கு அளிக்க வேண்டும். (அவற்றிடம்) இஃதை {இந்த ஆட்டை} அழைத்துச் சென்று அவற்றுடன் {அந்த ஆடுகளுடன்} ஆலோசிப்பீராக. இந்த ஆடானது குறிப்பாகச் சுதந்திரமற்றதாகும் {அவற்றை [அந்த ஆடுகளைச்] சார்ந்திருப்பதாகும்}.(12) இதில் தங்கள் ஒப்புதலை அளிக்கக்கூடியவர்களைப் பார்ப்பதே உமக்குத் தகும். அவற்றின் ஒப்புதலைக் கேட்ட பிறகே, இக்காரியம் கருத்தில் கொள்ளத் தகுந்ததாகும்.(13) இந்த ஆட்டின் உயிர்க்காற்றுகள் தங்கள் தங்களுக்குரிய மூலங்களிடம் திரும்பிச் செல்கின்றன. உயிரற்ற உடல் மட்டுமே எஞ்சுகிறது. இதையே நான் நினைக்கிறேன்.(14)
விறகுடன் ஒப்பிடக்கூடிய (ஒரு விலங்கின்) உயிரற்ற உடலின் மூலம் இன்பமடைய விரும்புவோருக்கு (வேள்விக்கான) விறகே அந்த விலங்குதான்.(15) தீங்கிழையாமையே {கொல்லாமையே} கடமைகள் அனைத்திலும் முதன்மையானதாகும். இதுவே நம் பெரியோர் சொல்லிக் கொடுத்ததாகும். கொடுமையற்ற செயலே செய்யப்பட வேண்டும் என்பதே நாம் அறிவதாகும். அதில் (உயிரினங்களைக்) கொல்லாமை என்பதே கருத்தாகும். நான் மேலும் ஏதாவது சொன்னால், பல்வேறு வகையான குற்றச் செயல்களை உம்மால் செய்ய முடியும் (என்று அப்போது தோன்றும்).(17) அனைத்து உயிரினங்களிடமும் எப்போதும் கொடுமை தவிர்த்தலே நமக்கு ஏற்புடையதாகும். நேரடியாக உணக்கூடியவற்றிலிருந்து நாம் இதை நிறுவுகிறோம். நேரடியான அகப்பார்வையை {கருத்தைக்} கடந்திருப்பதை நாம் சார்ந்திருக்கவில்லை[3]" என்றார் {யதி}.(18)
[3] கும்பகோணம் பதிப்பில், "எல்லாத் தர்மங்களுள்ளும் அஹிம்ஸை (சிறந்தது) என்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள். எந்தக் கர்மமானது ஹிம்ஸையற்றதாகுமோ அதுவே செய்யத்தக்கது என்று அறிகிறோம். இது அஹிம்ஸைதான் என்று பிரதிஜ்ஞை செய்வதானால், அதற்கு மேல் சொல்வேன். உம்மால் கார்யங்களைப் பலவிதமாகத் தூஷித்துக் கூற முடியும். எக்காலத்திலும் எந்தப்பிராணிகளுக்கும் ஹிம்ஸை செய்யாமலிருப்பதே எங்கள் விருப்பம். பிரத்யக்ஷமாக (உண்டாகும் ஹிம்ஸையை ஹிம்ஸையாகக்) கூறுகிறோம். கண்ணுக்குப்புலப்படாததை (ஹிம்ஸையாகக்) கருதுகிறோமில்லை" என்றிருக்கிறது.
அத்யர்யு, "பூமிக்குச் சொந்தமான மணத்தின் குணங்களை நீர் அனுபவிக்கிறீர். நீர் தொடர்புடைய சுவைகளைப் பருகுகிறீர். ஒளியுடல்களுக்குச் சொந்தமான நிறங்களைக் காண்கிறீர். காற்றைத் தோற்றுவாயாகக் கொண்ட குணங்களைத் தீண்டுகிறீர்.(19) வெளி (அல்லது ஆகாயத்தைத்) தோற்றுவாயாகக் கொண்ட ஒலிகளைக் கேட்கிறீர். மனத்தால் எண்ணங்களைச் சிந்திக்கிறீர். இந்த உட்பொருட்கள் (பூதங்கள்) அனைத்தும் உயிருள்ளவை என்பதே உமது கருத்தாகும்.(20) அப்போது அந்த உயிர்களை எடுக்காமல் நீர் தவிர்ப்பதில்லை. உண்மையில் நீர் கொலையிலேயே ஈடுபடுகிறீர். கொலையில்லாமல் எந்த இயக்கமும் நடைபெறாது {ஹிம்ஸை இன்றி ஒரு காரியமுமில்லை}. அல்லது, ஓ! மறுபிறப்பாளரே, வேறென்ன நீர் நினைக்கிறீர்?" என்று கேட்டார்.(21)
யதி, "அழிவற்றது {அக்ஷரம்} மற்றும் அழியக்கூடியது {க்ஷரம்} என்பன ஆன்மாவின் இரட்டை வெளிப்பாடாக அமைகின்றன. இவற்றில் அழிவற்றதே இருப்பில் உள்ளது. அழியக்கூடியது அதிக அளவில் இருப்பில் இல்லாததெனச் சொல்லப்படுகிறது.(22) உயிர்க்காற்று, நாக்கு, மனம், நல்லியல்பின் {சத்வ} குணம், ஆசை {ரஜோ} குணம் ஆகிய அனைத்தும் இருப்பில் உள்ளவை. இருப்பிலுள்ள இவற்றில் இருந்து விடுபட்டவனும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்தவனும், எந்த எதிர்பார்ப்பையும் வளர்க்காதவனும்,(23) அனைத்து உயிரினங்களிடமும் ஒரே வகையில் {சமமாக} நடந்து கொள்பவனும், மமதையில் இருந்து விடுபட்டவனும், தற்கட்டுப்பாடுடையவனும், தன் சுற்றுச்சூழலில் இருந்து விடுபட்டவனுமான ஒருவனுக்கு எதனிடமும் அச்சம் ஏற்படுவதில்லை[4]" என்றார்.(24)
[4] "உயிர்க்காற்றானது பல்வேறு புலன்களின் செயல்பாடுகளைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. உணர்வுப் புலன்கள் மற்றும் உணர்வுக்கருத்துக்கள் அனைத்திற்காகவும் நிற்கும் நாவு, அக இயக்கங்கள் அனைத்திற்கான மனம், இன்பங்கள் அனைத்திற்கான நல்லியல்பின் குணம், துன்பங்கள் அனைத்திற்கான ஆசை குணம் ஆகியவற்றின் செயல்பாடுகளை உயிர்க்காற்றுக் குறிப்பிடுகிறது. எனவே, இவை அக மற்றும் புற உலகங்கள் முழுவதையும் சேர்ந்தவையாகும். இவற்றில் இருந்து விடுபட்டால் பாவங்கள் அழிகின்றன என்பதாலும், அந்த விடுதலையை அடைவதற்கான வழிமுறையாக இருப்பது ஞானம் என்பதாலும் இவற்றில் இருந்து விடுபட்டவன் பாவத்தைக் கடந்தவனாகிறான் என்பதே இங்கே சொல்லப்படும் கருத்தாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
கும்பகோணம் பதிப்பில், "பிராணனும், நாக்கும், மனமும், புத்தியும், மாயையினால் இருப்பவைகளாகின்றன. இந்தப் பதார்த்தங்களால் விடப்பட்டவனும், துவந்துவமற்றவனும், விருப்பமற்றவனும், எல்லாப் பிராணிகளிடத்திலும் ஸமமாக இருப்பவனும், மமதையற்றவனும், மனத்தை ஜயித்தவனும் எல்லா விஷயங்களினாலும் விடப்பட்டவனுமான மனினுக்கு ஓரிடத்திலும் பயமில்லை என்றிருக்கிறது.
அத்யர்யு, "ஓ! நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, ஒருவன் நல்லோருடன் வசிக்க வேண்டும். உமது கருத்துகளைக் கேட்பதால் என் புத்தி ஒளியுடன் ஒளிர்கிறது.(25) ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! மறுபிறப்பாளரே, உம்மை ஒரு தேவனாக நம்பும் நான், மந்திரங்களின் உதவியால் இந்தச் சடங்குகளைச் செய்வதன் மூலம் என்னிடம் குற்றமுண்டாவதில்லை என்று சொல்கிறேன்" என்றார்".(26)
பிராமணர் தொடர்ந்தார், "இந்தத் தீர்மானத்திற்குப் பிறகு யதி அமைதியாக இருந்தார். அத்யர்யுவும் மாயையில் இருந்து விடுபட்டு அந்தப் பெரும் வேள்வியைச் செய்தார்.(27) பிராமணர்கள், மிக நுட்பமான விடுதலையை {முக்தியை} இவ்வகையிலேயே புரிந்து கொள்கிறார்கள்; அதைப் புரிந்து கொண்டு, அதற்கு இணக்கமாகவும், அனைத்தையும் காணும் க்ஷேத்ரஜ்ஞனால் வழிநடத்தப்பட்டும் வாழ்கிறார்கள்" {என்றார் பிராமணர்}.(28)
அஸ்வமேதபர்வம் பகுதி – 28ல் உள்ள சுலோகங்கள் : 28
ஆங்கிலத்தில் | In English |