Abstention from killing! | Aswamedha-Parva-Section-29 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 14)
பதிவின் சுருக்கம் : கார்த்தவீரியனுக்கும் பெருங்கடலுக்கும் இடையில் நடந்த உரையாடலையும், பரசுராமரின் கதையையும் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்...
பிராமணர், "இது தொடர்பாகக் கார்த்தவீரியனுக்கும், பெருங்கடலுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட ஒரு பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) ஆயிரங்கரங்களையும், கார்த்தவீரியார்ஜுனன் என்ற பெயரையும் கொண்ட மன்னன் ஒருவன் இருந்தான். அவன் தனது வில்லைக் கொண்டு, பெருங்கடலின் கரைகள் வரை விரிந்திருக்கும் பூமியை வென்றான்.(2) ஒரு காலத்தில், தன் வலிமையில் செருக்குடன் இருந்த அவன் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோது, நீரின் அந்தப் பெருங்கொள்ளிடத்தின் {பெருங்கடலின்} மேல் நூற்றுக்கணக்கான கணைகளை மழையாகப் பொழிந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3)
கூப்பிய கரங்களுடன் அவனை வணங்கிய அந்தப் பெருங்கடல் {ஸமுத்திரம்}, "ஓ! வீரா, (என் மீது) உன் கணைகளை ஏவாதே. நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக.(4) ஓ! மன்னர்களில் புலியே, என்னிடம் உறைவிடத்தை அடைந்திருக்கும் உயிரினங்கள், உன்னால் ஏவப்பட்டும் இந்த வலிமைமிக்கக் கணைகளால் கொல்லப்படுகின்றன. ஓ! தலைவா, அவற்றுக்குப் பாதுகாப்பை நல்குவாயாக" என்றது.(5)
அர்ஜுனன் {கார்த்தவீரியார்ஜுனன்}, "போரில் எனக்கு இணையாகக் களத்தில் என்னை எதிர்த்தது நிற்கக் கூடிய வில்லாளி வேறு எவனும் இருந்தால் அவனது பெயரை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(6)
பெருங்கடல், "ஓ! மன்னா, பெரும் முனிவர் ஜமதக்னியைக் குறித்து நீ கேள்விப்பட்டிருப்பாய், அவருடைய மகன் {பரசுராமர்} உன்னை விருந்தினராக முறையாக வரவேற்கத் தகுந்தவராவார்" என்றது.(7)
அப்போது பெருங்கோபத்தில் நிறைந்த அந்த மன்னன் அங்கிருந்து புறப்பட்டான். அந்த ஆசிரமத்தை அடைந்து, ராமரை {பரசுராமரை} அவன் கண்டான்.(8) ராமருக்குப் பகையான செயல்கள் பலவற்றை அவன் தன் உறவினர்களைக் கொண்டு செய்து, மேலும் மேலும் அந்த உயர் ஆன்ம வீரருக்குத் தொல்லைகளைக் கொடுத்து வந்தான்.(9) ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவளே, அந்த ராமரின் அளவிடமுடியாத சக்தி, சுடர்விட்டெரிந்து பகைவனின் துருப்புகளை எரித்தது.(10) போர்க்கோடரியை எடுத்துக் கொண்டு தன் சக்தியைத் திடீரென வெளிப்படுத்திய ராமர், பல கிளைகளைக் கொண்ட மரம் போல இருந்தவனும், ஆயிரம் கரங்களைக் கொண்டவனுமான அந்த வீரனை வெட்டினார்.(11) கொல்லப்பட்டுப் பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் அவனைக் கண்ட அவனது உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி, தங்கள் ஈட்டிகளை {சக்தி ஆயுதங்களை} எடுத்துக் கொண்டு, அங்கே அமர்ந்திருந்த ராமரை நோக்கி அனைத்துப் புறங்களில் இருந்தும் விரைந்தனர்.(12)
ராமரும் தமது வில்லை எடுத்துக் கொண்டு, விரைவாகத் தமது தேரிலேறி கணைமாரியைப் பொழிந்து அந்த மன்னனின் படையைத் தண்டித்தார்.(13) அப்போது, ஜமதக்னி மகனிடம் {பரசுராமரிடம்} கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்ட க்ஷத்திரியர்கள் சிலர் சிங்கத்தால் பீடிக்கப்பட்ட மான்களைப் போல மலைக்காடுகளுக்குள் நுழைந்தனர்.(14) ராமரிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகத் தங்கள் வகைக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் சரியாக வெளிப்படுத்த இயலாத அவர்களின் சந்ததியினர், பிராமணர்களைக் காண இயலாததால் {சூத்திரத்தன்மையைக் கொண்ட} விருஷலர்களானார்கள்[1].(15) இவ்வகையில் க்ஷத்திரியர்களான திரவிடர்கள், ஆபீரர்கள், புண்ட்ரர்கள், சபரர்கள் ஆகியோர், (பிறப்பின் மூலம்) க்ஷத்திரியர்களுக்கான கடமைகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் (தங்கள் வகைக்கான கடமைகளைச் செய்யாமல்) வீழ்ச்சியையடைந்து விருஷலர்களானார்கள்.(16) வீரப்பிள்ளைகளை இழந்திருந்த க்ஷத்திரியப் பெண்கள் பிராமணர்களின் மூலம் ஈன்றெடுத்த க்ஷத்திரியர்களும் மீண்டும் மீண்டும் அந்த ஜமதக்னியின் மகனால் {பரசுராமரால்} கொல்லப்பட்டனர்.(17) இவ்வகையில் இருபத்தோரு முறை படுகொலைகள் நடந்தேறின.
[1] "க்ஷத்திரியர்களின் செயல்களில் துணைபுரிவதற்கு எப்போதும் பிராமணர்கள் அவசியம் தேவை. இந்தக் குறிப்பிட்ட க்ஷத்திரியர்கள், ராமரிடம் கொண்ட அச்சத்தால் காடுகளுக்கும், மலைகளுக்கும் தப்பி ஓடின். அதன் காரணமாக அவர்களுக்குப் துணைபுரிவதற்குரிய பிராமணர்களை அவர்களால் காண இயலவில்லை. எனவே, அவர்களின் பிள்ளைகள் க்ஷத்திரிய நிலையில் இருந்து விழுந்து விருஷலர்கள், அல்லது சூத்திரர்களானார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அதன் இறுதியில், உடலற்ற ஒரு குரல் சொர்க்கத்தில் இருந்து எழுந்து, மக்கள் அனைவரும் கேட்கும் வகையில் ராமரிடம் இனிமையாக,(18) "ஓ! ராமா, ஓ! ராமா, இதைத் தவிர்ப்பாயாக. ஓ! மகனே, தாழ்ந்தவர்களாக இருக்கும் க்ஷத்திரியர்களை இவ்வாறு மீண்டும் மீண்டும் அழிப்பதில் என்ன தகுதியை {பயனை} நீ காண்கிறாய்?" என்றது[2].(19)
[2] "பிரம்ம பந்து என்பது பிராமணர்களில் இழிவானவர்களைக் குறிப்பதைப் போல இங்கே குறிப்பிடப்படும் க்ஷத்திரிய பந்து என்பது இழிந்த க்ஷத்திரியர்களைக் குறிக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இவ்வழியிலேயே, ஓ! அருளப்பட்ட மங்கையே, ரிசீகரின் தலைமையிலான அவரது பாட்டன்கள் அந்த உயர்ஆன்மாவிடம், "இதைத் தவிர்ப்பாயாக" என்றனர்.(20)
எனினும், தமது தந்தை கொலை செய்யப்பட்டதை மன்னிக்க முடியாத ராமர் {பரசுராமர்}, அந்த முனிவர்களிடம், "என்னைத் தடுப்பது உங்களுக்குத் தகாது" என்றார்.(21)
அப்போது, பித்ருக்கள், "ஓ! வெற்றியாளர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, க்ஷத்திரியர்களில் இழிவான இவர்களைக் கொல்வது உனக்குத் தகாது. ஒரு பிராமணனாக இருக்கும் நீ இந்த மன்னர்களைக் கொல்வது முறையாகாது" என்றனர்.(22)
அஸ்வமேதபர்வம் பகுதி – 29ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English |