King Alarka! | Aswamedha-Parva-Section-30 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 15)
பதிவின் சுருக்கம் : பரசுராமரின் பித்ருக்கள் அவருக்கு அலர்க்கனின் கதையைச் சொன்னது; க்ஷத்திரியக் கொலையை விட்டுக் கடுந்தவம் செய்த பரசுராமர்...
பித்ருக்கள் {பரசுராமரிடம்}, "இது தொடர்பாக ஒரு பழைய வரலாறு குறிப்பிடப்படுகிறது. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அதைக் கேட்டுவிட்டு அதன்படியே செயல்படுவாயாக.(1) கடும் தவங்களுடன் கூடியவனும், அலர்க்கன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஓர் அரச முனி இருந்தான். கடமைகள் அனைத்தையும் அறிந்தவனும், உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனுமான அவன், பேச்சில் வாய்மையுடனும், தன் நோன்பில் மிக உறுதியுடையவனுமாக இருந்தான்.(2) கடல்கள் வரை விரிந்திருக்கும் மொத்த உலகையும் வென்று கடுஞ்சாதனையைச் செய்த அவன், நுட்பமானதில் தன் மனத்தை நிறுவினான்.(3) ஓ பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, அந்தப் பெருஞ்சாதனைகள் அனைத்தையும் கைவிட்டு ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது, நுட்பமானதை நோக்கி தன் மனத்தைத் திருப்பினான்.(4)
அலர்க்கன், "என் மனம் வலுவாக இருக்கிறது. மனத்தை வென்ற பிறகு ஒருவனின் வெற்றி நிரந்தரமானதாகிறது. பகைவர்களால் சூழப்பட்டிருந்தாலும் நான் (இது முதல்) என் கணைகளைப் பிற பொருட்களின் மீது ஏவுவேன்.(5) நிலையின்மையின் விளைவால் மனிதர்கள் அனைவரையும் செயல்களை நிறைவேற்றுவதில் நிறுவும் மனத்தின் மீது நான் மிகக் கூரிய கணைகளை ஏவப்போகிறேன்" என்றான்.(6)
மனம், "ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும். உன் முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்ட நிலையில் நீ மரணமடைவாய்.(7) என்னை அழிப்பதற்குரிய வேறு கணைகளைத் தேடுவாயாக" என்றது. {மனத்தின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(8)
அலர்க்கன், "இது (மூக்கு) மணங்கள் பலவற்றை நுகர்ந்து அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கிறது. எனவே, கணைகளைக் கூராக்கி மூக்கின் மேல் ஏவப்போகிறேன்" என்றான்.(9)
மூக்கு, "ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(10) என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக" என்றது. {மூக்கின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(11)
அலர்க்கன், "இது (இந்த நாக்கு), சுவைமிக்கச் சுவைகளை அனுபவித்து அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கிறது. எனவே, கணைகளைக் கூராக்கி நாக்கின் மேல் ஏவப்போகிறேன்" என்றான்.(12)
நாக்கு, "ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(13) என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக" என்றது. {நாக்கின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(14)
அலர்க்கன், "தீண்டலுக்குரிய பல்வேறு பொருட்களைத் தொடும் தோலானது {துவக்கானது}, அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கிறது. எனவே, கங்க {கழுகின்} இறகுகளுடன் கூடிய பல்வேறு கணைகளால் அந்தத் தோலைப் பிளக்கப் போகிறேன்" என்றான்.(15)
தோலானது, "ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(16) என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக" என்றது. {தோலின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(17)
அலர்க்கன், "இவை (காதுகள்) பல்வேறு ஒலிகளைக் கேட்டு அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கின்றன. எனவே, கணைகளைக் கூராக்கிக் காதுகளின் மேல் ஏவப்போகிறேன்" என்றான்.(18)
காதுகள், "ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் எங்களைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(19) எங்களை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக" என்றன. {காதுகளின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(20)
அலர்க்கன், "கண்கள், பல்வேறு நிறங்களைக் கண்டு அவற்றில் மட்டுமே ஆவல் கொள்கின்றன. எனவே, கூரிய கணைககைக் கொண்டு கண்களை அழிக்கப்போகிறேன்" என்றான்.(21)
கண்கள், "ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் எங்களைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய்.(22) எங்களை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக" என்றது. {நாக்கின்} இந்தச் சொற்களைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்த அவன் பின்வருமாறு சொன்னான்.(23)
அலர்க்கன், "இது (இந்தப் புத்தி), ஆராயும் முறையின் {பிரஜ்ஞையினால்} துணை கொண்டு பல தீர்மானங்களை {பலவித நிச்சயங்களை} எட்டுகிறது. எனவே, கணைகளைக் கூராக்கி இந்தப் புத்தியின் மேல் ஏவப்போகிறேன்" என்றான்.(24)
புத்தி, "ஓ! அலர்க்கா, இந்தக் கணைகள் என்னைத் துளைக்காது. அவை உன் முக்கிய அங்கங்களை மட்டுமே துளைக்கும், முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு நீ மரணமடையப் போகிறாய். என்னை அழிப்பதற்கு வேறு கணைகளைத் தேடுவாயாக" என்றது {என்றனர் பித்ருக்கள்}".(25)
{பித்ருக்குள் சொன்னதாகப்} பிராமணர் தொடர்ந்தார், "அப்போது, செய்வதற்கரிய கடுந்தவங்களை அங்கேயே செய்த அலர்க்கன், (தன் தவங்களின்) உயர்ந்த சக்தியின் மூலமும், இந்த ஏழையும் அழிப்பதற்குரிய கணைகளை அடையத் தவறினான்.(26) பலம் கொண்ட அவன், அப்போது குவிந்த மனத்துடன் சிந்திக்கத் தொடங்கினான். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே {பரசுராமா}, நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையான அலர்க்கன், நீண்ட காலம் சிந்தித்தும் யோகத்தைவிடச் சிறந்த வேறெதையும் அடையத் தவறினான். ஒரே நோக்கத்தில் தன் மனத்தை நிறுவிய அவன், யோகத்தில் ஈடுபட்டவாறே முற்றிலும் அசையாதிருந்தான்[1].(27,28) சக்தியுடன் கூடிய அவன், யோகத்தின் மூலமாகத் தன் ஆன்மாவுக்குள் நுழைந்து, ஒரே கணையால் தன் புலன்கள் அனைத்தையும் கொன்று, அதன் மூலம் உயர்ந்த வெற்றியை அடைந்தான்.(29)
[1] "’ஓ மறுப்பிறப்பாளர்களில் முதன்மையானவரே’ என்ற விளி ஜமதக்னியின் மகனுக்கானதாகும். இவ்வுரையோ பித்ருக்களுடையது. எனினும், அனைத்துப் பதிப்புகளிலும் இது பிராமணர் தம் மனைவியிடம் பேசும் உரையாகவே இருக்கிறது. உண்மையில் பித்ருக்கள் ராமரிடம் சொன்னதையே பிராமணர் தம் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இங்கே பேசப்படும் யோகம் ராஜயோகம் என்று நீலகண்டர் விளக்குகிறார். முன்னர் அலர்க்கன் ஈடுபட்டுக்கொண்டிருந்தது ஹடயோகமானது அதைப் பயிலும் மனிதர் லயமடைந்ததும் முடிந்துவிடும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஆச்சரியத்தால் நிறைந்த அந்த அரசமுனி அப்போது இந்த ஸ்லோகத்தைப் பாடினான்: {அலர்க்கன்}, "ஐயோ, புறச்செயல்கள் அனைத்தையும் நாம் நிறைவேற்ற வேண்டும் என்பது பரிதாபத்திற்குரியது.(30) ஐயோ, இதற்கு முன்பு இன்பங்களில் தாகத்துடன் ஆசையுள்ள நாம் அரசுரிமையை (அரசுரிமையின் இன்பங்களை) விரும்பினோம். அதன்பிறகு நான் இதைக் கற்றிருக்கிறேன். யோகத்தைவிட உயர்ந்த மகிழ்ச்சி வேறேதும் இல்லை" {என்றான் அலர்க்கன்}.(31) ஓ! ராமா, இஃதை அறிவாயாக. க்ஷத்திரியர்களைக் கொல்வதை நிறுத்துவாயாக. கடுந்தவங்களைப் பயில்வாயாக. அப்போது நீ நன்மையை அடைவாய்" என்றனர் {பித்ருக்கள்}.(32)
இவ்வாறு தமது பாட்டன்மாரால் சொல்லப்பட்ட ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, கடுந்தவங்களைப் பயின்றார். அவற்றைப் பயின்ற அந்த உயர்ந்த அருளைக் கொண்டவர் {பரசுராமர்}, அடைவதற்கரிதான வெற்றியை அடைந்தார்" {என்றார் பிராமணர்}.(33)
அஸ்வமேதபர்வம் பகுதி – 30ல் உள்ள சுலோகங்கள் : 33
ஆங்கிலத்தில் | In English |