Subduing cupidity! | Aswamedha-Parva-Section-31 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 16)
பதிவின் சுருக்கம் : மன்னன் அம்பரீஷ்ன் சொன்ன மோக்ஷஸாதன வழிமுறையைத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்...
பிராமணர், "இவ்வுலகில் {குணங்கள் என்ற} மூன்று பகைவர்கள் இருக்கின்றன. குணங்களுக்கு ஏற்புடைய வகையில் அவை ஒன்பது வகையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உவகை {ப்ரஹர்ஷம்}, மனநிறைவு {பிரீதி}, மகிழ்ச்சி {ஆநந்தம்} ஆகிய மூன்று குணங்களும் நல்லியல்பின் {சத்வத்தின்} தொடர்புடையவை ஆகும்[1].(1) பேராசை {சோகம்}, கோபம் மற்றும் வெறுப்பு {துவேஷம்} ஆகிய மூன்று குணங்களும் ஆசையின் {ரஜஸின்} தொடர்புடையவை ஆகும். தளர்ச்சி {ஸ்வப்நம்}, சோம்பல், திரிபுணர்வு {மோஹம்} ஆகிய மூன்று குணங்களும் இருளின் {தமஸின்} தொடர்புடையவை ஆகும்.(2) புத்தியுள்ள மனிதன் கணைமாரிகளால் இவற்றை வெட்டி, அமைதியான ஆன்மாவுடன் புலன்களைக் கட்டுப்படுத்தி, சோம்பலில் இருந்து விடுபட்டு, மற்றவற்றை வெல்லத் துணிய வேண்டும்[2].(3)
[1] "’ப்ரஹர்ஷம்’ என்பது விரும்பியது நிச்சயம் கிடைக்கும் என்று உணரப்படும் இன்பம் என்ற நீலகண்டரின் விளக்கத்தின்படி உவகை என்று பெயர்க்கப்பட்டுள்ளது. ‘பிரீதி’ என்பது விரும்பிய பொருளை அடைந்ததும் கிட்டும் மன நிறைவாகும். ‘ஆநந்தம்’ என்பது கிட்டிய பொருளை அனுபவிக்கும்போதும் எழும் மகிழ்ச்சியாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில் "ப்ரஹர்ஷம்" என்பது விரும்பியது கிடைக்கும் என்ற நிச்சயம் உண்டான பொழுது உண்டான ஸுகம் என்றும், "பிரீதி" என்பது விரும்பியது கிடைத்த பொழுது உண்டான ஸுகம் என்றும், "ஆநந்தம்" என்பது விரும்பியதை அனுபவிக்கும்பொழுது உண்டான ஸுகம் என்றும் விளக்கப்படுகிறது.[2] "தன் விடுதலை அடைய விரும்பும் புத்தியுள்ள மனிதன், குறிப்பிடப்படும் அகப் பகைவர்களை முதலில் வென்று, அதன் பின் தன் வழியில் நிற்கும் புறப் பகைவர்கள் அனைத்தையும் வெல்ல முயல வேண்டும் என்பதே இங்கே சொல்ல வரும் பொருளாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பழைய யுகங்களை {கல்பங்களைக் குறித்து} நன்கறிந்தவர்கள், அமைதியான ஆன்மாவை அடைந்த மன்னன் அம்பரீஷனால் இது தொடர்பாகப் பழங்காலத்தில் பாடப்பட்ட ஸ்லோகங்களைச் சொல்கின்றனர்.(4) {பற்று, பேராசை முதலிய} பல்வேறு வகைக் குற்றங்கள் {தோஷங்கள்} பெருகி, நீதிமான்கள் {ஸாதுக்கள்} பீடிக்கப்பட்டபோது, பெரும் புகழைக் கொண்டவனான அம்பரீஷன், அரசுரிமையை ஏற்பதற்காகத் தன் பலத்தைப் பயன்படுத்தினான்[3].(5) தன் குற்றங்களை அடக்கி, நீதிமான்களை வழிபட்ட அவன், பெரும் வெற்றியை அடைந்து இந்த ஸ்லோகங்களைப் பாடினான்.(6)
[3] "’தோஷம்’ என்பது பற்று, பேராசை முதலியவற்றைக் குறிக்கும் என்றும், ‘ஸாது’ என்பது மனிதர்களையல்லாமல் அமைதி, நல்லொழுக்கங்கள் முதலியவற்றைக் குறிக்கும் என்றும் நீல கண்டர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே சொல்கிறார்.
{அம்பரீஷன்}, "என் குற்றங்கள் பலவற்றை நான் வென்றேன். பகைவர்கள் அனைவரையும் நான் கொன்றேன். ஆனால், அழிக்கப்படுத்தகுந்த ஒரு பெரிய தீமை என்னால் அழிக்கப்படாமல் இருக்கிறது.(7) அந்தக் குற்றத்தால் தூண்டப்படும் இந்த ஜீவன், ஆசையில் இருந்து விடுதலை அடையத் தவறுகிறது. ஆசையால் பீடிக்கப்படும் ஒருவன் அறிந்து கொள்ளாமலேயே அகழிகளுக்குள் {பள்ளங்களுக்குள்} ஓடுகிறான்.(8) அந்தக் குற்றத்தால் {தோஷத்தால்} தூண்டப்படும் அவன், தடை செய்யப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறான். கூர்முனை வாளால் நீ அந்தப் பேராசையை {லோபத்தை} வெட்டுவாயாக.(9)
பேராசையில் இருந்து விருப்பம் எழுகிறது. விருப்பத்தில் இருந்தே கவலையும் பாய்கிறது. விருப்பத்தின் வசப்படும் மனிதன் ஆசை {ரஜோ குணம்} தொடர்புடைய குணங்கள் பலவற்றை அடைகிறான்.(10) இவை அனைத்தையும் அடைந்த பிறகு அவன் இருளின் {தமோ குணத்தின்} தொடர்புடைய பல குணங்களை அடைகிறான்.(11) அந்தக் குணங்களின் விளைவால் அவன் உடலோடு கலந்த பற்றுகளுடன் மீண்டும் மீண்டும் பிறவிகளை அடைந்து செயல்படத் தூண்டப்படுகிறான். உயிர்வாழும் காலம் தீர்ந்ததும், பிளந்து சிதறிய உடலைக் கொண்ட அவன் மீண்டும் பிறவிக்குக் காரணமான மரணத்தை அடைகிறான்.(12) எனவே, இதை முறையாகப் புரிந்து கொண்டு, புத்தியால் பேராசையை வெல்லும் ஒருவன் தன் ஆன்மாவுக்குள் ஓர் அரசை விரும்ப வேண்டும். இதுவே (உண்மையான) அரசாகும் {ராஜ்யமாகும்}. வேறு அரசேதும் இங்கே இல்லை. முறையாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஆன்மாவே மன்னனாவான்" {என்றான் அம்பரீஷன்}.(13)
பெரும்புகழைக் கொண்டவனும், முதன்மைக் குற்றமான பேராசையை வெட்டியவனுமான மன்னன் அம்பரீஷன், அரசு குறித்துப் பாடி தன் முன்னேயே வைத்துக் கொண்ட ஸ்லோகங்கள் இவையே ஆகும்" என்றார் {பிராமணர்}.(14)
அஸ்வமேதபர்வம் பகுதி – 31ல் உள்ள சுலோகங்கள் : 14
ஆங்கிலத்தில் | In English |