Wheel of Dharma! | Aswamedha-Parva-Section-32 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 17)
பதிவின் சுருக்கம் : மமதை விலக்கல் குறித்து ஒரு பிராமணனுக்கும் மன்னன் ஜனகனுக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்...
பிராமணர், "ஓ! பெண்ணே, இது தொடர்பாக ஒரு பிராமணருக்கும், (மன்னன்) ஜனகனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(1) மன்னன் ஜனகன், (ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில்) குற்றம் புரிந்த ஒரு பிராமணனைத் தண்டிக்க விரும்பி, அவனிடம், "நீ என் ஆட்சிப்பகுதிகளில் வசிக்கலாகாது" என்றான்.(2)
இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பிராமணன், மன்னர்களில் சிறந்தவனான அவனிடம் {ஜனகனிடம்}, "ஓ! மன்னா, உன் ஆளுகைக்குள் உள்ள ஆட்சிப்பகுதிகளின் எல்லைகளை எனக்குச் சொல்வாயாக.(3) ஓ! தலைவா, நான் மற்றொரு மன்னனின் ஆட்சிப்பகுதிக்குள் வசிக்க விரும்புகிறேன். ஓ! பூமியின் தலைவா, சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் உன் ஆணைக்குக் கீழ்ப்படிய நான் விரும்புகிறேன்" என்றான்.(4)
புகழ்பெற்ற பிராமணனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மன்னன், மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டும், வெப்பப் பெருமூச்சுகளை விட்டபடியே ஒரு சொல்லையும் மறுமொழியாகச் சொல்லாதிருந்தான்.(5) சூரியனை விழுங்கும் கோளை {ராஹுவைப்} போல, அளவிலா சக்தி கொண்ட அந்த மன்னனின் புத்தித் திடீரென மயங்கியதால், அவன் சிந்தனையில் மூழ்கியவாறு அமர்ந்தான்.(6) அந்தப் புத்தி மயக்கம் தெளிந்ததும், ஆறுதலடைந்த அந்த மன்னன், ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு அந்தப் பிராமணனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(7)
ஜனகன், "மூதாதையர் வழியாக எனதாக இருக்கும் இந்த நாட்டுக்குள் வசிப்பதற்குரிய ஒரு (பெரிய) நிலப்பரப்பு இருந்தாலும், மொத்த பூமியில் தேடினாலும் என் ஆட்சிப்பகுதியை நான் காணத் தவறுகிறேன்.(8) பூமியில் அதைக் காண நான் தவறியபோது, (அதை) மிதிலையில் தேடினேன். மதிலையில் நான் அதைக் காணத் தவறியபோது, என் பிள்ளைகளுக்கு மத்தியில் அதைத் தேடினேன்.(9) அங்கேயும் நான் அதைக் காணத் தவறியபோது, எனக்குப் புத்தி மயக்கம் ஏற்பட்டது. அந்தப் புத்தி மயக்கம் தெளிந்ததும், நுண்ணறிவு எனக்குத் திரும்பக் கிடைத்தது.(10) அப்போது எனக்கென ஆட்சிப்பகுதி ஏதுமில்லை, அல்லது அனைத்தும் என் ஆட்சிப்பகுதியே என நினைத்தேன். இந்த உடலும் எனதில்லை, அல்லது மொத்த பூமியும் எனதே.(11) அதே நேரத்தில், ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, அது பிறருக்குச் சொந்தமான அளவுக்கு எனக்கும் சொந்தம் என நினைக்கிறேன். எனவே, விரும்பியவரை நீ (இங்கேயே) வசிப்பாயாக. விரும்பிய வரையில் அனுபவிப்பாயாக" என்றான்.(12)
பிராமணன், "மூதாதையர் வழியாக உனதாக இருக்கும் இந்த நாட்டுக்குள் வசிப்பதற்குரிய ஒரு (பெரிய) நிலப்பரப்பு இருக்கும்போது, எந்தப் புத்தியைச் சார்ந்து, {எனதென்ற} அந்த மமதையை விட்டாய் என்பதை எனக்குச் சொல்வாயாக.(13) அனைத்தும் உன் ஆட்சிப்பகுதியாக அமைகிறது என்ற தீர்மானத்திற்கு எந்தப் புத்தியைச் சார்ந்து நீ வந்தாய்? உண்மையில், எந்தக் கருத்தின் மூலம் உனக்கு ஆட்சிப்பகுதி ஏதுமில்லை, அல்லது {எந்தக் கருத்தின் மூலம்} அனைத்தும் உனது ஆட்சிப்பகுதியாகிறது?" என்று கேட்டான்.(14)
ஜனகன், "அனைத்துக் காரியங்களிலும் இங்கே உள்ள {செழுமை மற்றும் வறுமை என்ற} கட்டுவரம்புகள் அனைத்தும் முடிவுள்ளவை என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே, எனதென்று அழைக்கப்படக்கூடிய எதையும் என்னால் காண முடியவில்லை.(15) இது யாருடையது என்று (கருதி), எவருடைய உடைமையையும் குறித்த வேத உரையை நினைத்தேன். எனவே, எனது என்ற (என்று அழைக்கக்கூடிய) எதையும் என் புத்தியைக் கொண்டு என்னால் காண முடியவில்லை[1].(16) இந்தக் கருத்தைச் சார்ந்தே நான் மமதையைக் கைவிட்டேன். நான் எங்கும் ஆட்சிப் பகுதியைக் கொண்டுள்ளேன் என்ற தீர்மானத்திற்கு வர நான் சார்ந்திருக்கும் கருத்தென்ன என்பதை இப்போது கேட்பாயாக.(17) என் மூக்கில் உள்ள மணங்களையும் எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட பூமியானது எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(18) என் நாவுடன் தொடர்புடைய சுவைகளை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட நீர் எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(19)
[1] "இது தெளிவற்றதாக இருக்கிறது. இங்கே குறிப்பிடப்படும் வேத உரையானது, "எவனுடைய உடைமையிலும் விருப்பம் கொள்ளாதே" என்பதாகும் என நீலகண்டர் கருதுகிறார். அடுத்தவரின் உடைமையை விரும்புவதைத் தவிர்க்க நினைக்கும் நான் எது பிறருக்குரியது என்பதில் உறுதியடைய நினைத்தேன் என ஜனகன் சொல்ல வருவதாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
என் கண்களுக்குத் தொடர்புடைய நிறம் அல்லது ஒளியை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட ஒளி எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(20) என் தோலுடன் தொடர்புடைய தீண்டல் உணர்வுகளை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட காற்று, எப்போதும் என் ஆளுகைக்கு உட்பட்டதே.(21) என் காதுகளுடன் தொடர்புடைய ஒலிகளை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட ஒலிகள் எப்போதும் என் ஆளுகைக்குட்பட்டவையே.(22) என் மத்தில் எப்போதும் உள்ள மனத்தை எனக்கென நான் விரும்பவில்லை. எனவே, என்னால் வெல்லப்பட்ட மனமானது எப்போதும் என் ஆளுகைக்குட்பட்டதே.(23) நான் செய்யும் இந்தச் செயல்கள் அனைத்தும், தேவர்கள், பித்ருக்கள், பூதங்கள் மற்றும் விருந்தினர்களுக்கானவையே" என்றான் {ஜனகன்}.(24)
அப்போது புன்னகைத்த அந்தப் பிராமணன் மீண்டும் ஜனகனிடம், "நான் தர்மன், உன்னைச் சோதிக்கவே இன்று இங்கே வந்தேன்.(25) பிரம்மத்தை உந்தியாகக் கொண்டதும், புத்தியை ஆரங்களாகக் கொண்டதும், ஒழிவடையாததும், நல்லியல்பின் குணத்தை {சத்வ குணத்தைச்} சுற்றளவாகக் கொண்டதுமான இந்தச் சக்கரத்தை {தர்மச்சக்கரத்தை} இயக்கத்தில் நிறவக்கூடியவன் நீயே" என்றான்.(26)
அஸ்வமேதபர்வம் பகுதி – 32ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |