Knowledge of Brahma! | Aswamedha-Parva-Section-33 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 18)
பதிவின் சுருக்கம் : தம் மகிமையைத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்...
பிராமணர், "ஓ! மருண்டவளே, உன் புத்தியைக் கொண்டு நிந்திக்கும் வகையில் நான் இவ்வுலகில் திரியவில்லை. நான் வேத ஞானம் கொண்ட ஒரு பிராமணன் ஆவேன். நான் விடுதலை பெற்றவன் {முக்தன்}. நான் ஒரு காட்டுத் துறவி. நான் ஓர் இல்லறத்தானின் கடமைகளை நோற்பவன். நோன்புகளையும் நோற்கிறேன்.(1)
நல்ல மற்றும் தீய செயல்களைக் கொண்டு நீ பார்க்கும் வகையில் நானில்லை. இவ்வண்டத்தில் உள்ள அனைத்திலும் நான் படர்ந்தூடுருவி இருக்கிறேன் {வியாபித்திருக்கிறேன்}.(2)
இவ்வுலகில் அசைவனவாகவோ, அசையாதனவாகவோ இருக்கும் உயிரினம் எதுவும், அனைத்து மரங்களிலும் உள்ள நெருப்பைப் போல அனைத்தையும் எரிப்பவனாக {அக்னியாக} என்னை அறிகின்றன.(3)
(ஒரு கையில்) மொத்த உலகத்தின் ஆட்சியுரிமையோ, சொர்க்கத்தின் ஆட்சியுரிமையோ இருக்கிறது, அல்லது {மறுகையில்} (அண்டத்துடன் {பிரம்மத்துடன்} என்னை அடையாளம் காணும்) இந்த ஞானமும் {புத்தியும்} இருக்கிறது. ஞானமே {புத்தியே} என் செல்வமாகும்[1].(4)
[1] "மொத்த உலகத்தின் அல்லது சொர்க்கத்தின் ஆட்சுரிமையும், அண்டத்தோடு என்னை அடையாளம் கண்டு கொள்ளும் இந்த ஞானமும் இருக்கின்றன. இவ்விரு மாற்றுகளில், நான் பின்னதையே தேர்ந்தெடுப்பேன் என்ற பொருளில் சொல்லப்படுவதாக இது தோன்றுகிறது. எனவேதான் அவர், ‘ஞானமே என் செல்வம்’ என்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ராஜ்யத்திலும், எல்லாப் பூமியிலும், ஸுவர்க்கத்திலும் இந்தப் புத்தியானது அவ்விதம் அறிகிறது. எனக்குப் புத்தியே தனம்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "என் புத்தியானது பூமியில் உள்ள அனைத்தின் மீதும், சொர்க்கத்தின் மீதும் கொள்ளும் ஆட்சியுரிமையைக் காட்டிலும் மேன்மையானது என்பதை நான் அறிவேன். அந்தப் புத்தியே என் செல்வமாகும்" என்றிருக்கிறது. ஸம்ஸ்க்ருத மூலத்தில், "ததா புத்தி ரியம்வேத்தி புத்தி ரேவதனம் மம" என்றிருப்பதால் இங்கே ஞானம் என்று கொள்வதைவிடப் புத்தி என்று கொள்வதே தகும்.
இல்லறத்தாராகவோ, காட்டில் வசிப்பவராகவோ, ஆசான்களுடன் வசிப்பவராகவோ, சந்நியாசிகளின் மத்தியில் வசிப்பவராகவோ அதை {புத்தியைப்} புரிந்து கொள்பவதே பிராமணர்களுக்கான ஒற்றைப் பாதையாகும்[2].(5)
[2] "இது பல்வேறு வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைக்} குறிப்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பிரம்மசாரிகள், கிருஹஸ்தர்கள், வானப்பிரஸ்தர்கள், ஸந்யாஸிகள் இவர்களுள் பிரம்மஜ்ஞானிகளுக்கு (ஞானமென்னும்) மார்க்கம் ஒன்றே. பரம்மஜ்ஞானிகள் அந்த மார்க்கத்தினாலேயே (நற்கதியை) அடைகின்றனர்" என்றிருக்கிறது.
குழப்பமற்றவையான பல {வாழ்வுமுறை / ஆசிரம} அடையாளங்களின் மூலம் ஞானம் {புத்தி} ஒன்றே வழிபடப்படுகிறது. எந்த அடையாளங்களையும், வாழ்வுமுறைகளையும் பின்பற்றுவோர், அமைதியைத் தன் சாரமாகக் கொண்ட {அடக்கமுள்ள} புத்தியை அடைவதன் மூலம், பல்வேறு ஆறுகள் கடலில் கலப்பதைப் போல அந்த ஒன்றையே அடைகின்றனர்[3].(6)
[3] "அனைத்தும் ஒன்றே என்ற ஞானம் அடையப்பட வேண்டும். அதை அடைவதற்குப் பல்வேறு வழிகள் இருக்கின்றன. மேலும் அமைதியை அடைந்தவர்கள் அதை அடைந்திருக்கிறார்கள் என்பது இங்கே பொருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இந்தப் பாதையைப் புத்தியின் உதவியுடன் கடக்கலாமே அன்றி உடலால் முடியாது. செயல்களுக்குத் தொடக்கமும், முடிவும் உண்டு, உடலானது செயல்களையே தன் கட்டுகளாக {பந்தங்களாக்} கொண்டுள்ளது[4].(7)
[4] "அழியக்கூடியவையாக உள்ள செயல்களால் நீடித்த முடிவுக்கு வழிவகுக்க முடியாது. நிரந்தரமானதற்கு வழிவகுக்கும் ஞானமானது புத்தியாலேயே அடையப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
எனவே, ஓ! அருளப்பட்ட மங்கையே, மறுமையைக் குறித்த எந்த அச்ச உணர்வும் உனக்குத் தேவையில்லை. உண்மையான உட்பொருளில் {பிரம்ம ஞானத்தில்} உன் இதயத்தை {புத்தியைச்} செலுத்தினால் என் ஆன்மாவுக்குள் நீ வருவாய் {என்னுடைய ஆத்மாவை நீ அடைவாய்}" என்றார் {பிராமணர்}.(8)
அஸ்வமேதபர்வம் பகுதி – 33ல் உள்ள சுலோகங்கள் : 8
ஆங்கிலத்தில் | In English |