Kshetrajna is I myself! | Aswamedha-Parva-Section-33 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 15)
பதிவின் சுருக்கம் : பிராமணரும், அவரது மனைவியும், மனமும் புத்தியும் என்பதை அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...
பிராமணரின் மனைவி {பிராம்மணி}, "அற்பு புத்தி உள்ளவனும், தூய்மையற்ற ஆன்மா கொண்டவனுமான ஒரு மனிதனால் இதைப் புரிந்து கொள்ள முடியாது. என் புத்தியானது மிகச் சிறியதாகவும், சுருக்கமானதாகவும், குழம்பியதாகவும் இருக்கிறது.(1) (நீர் சொல்லும்) ஞானத்தை அடைவதற்குரிய வழிமுறைகளை எனக்குச் சொல்வீராக. ஞானம் பாயும் அந்த ஊற்றுக் கண்ணைக் குறித்து நான் உம்மிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்" என்றாள்.(2)
பிராமணர், "பிரம்மத்தில் அர்ப்பணிப்புள்ள புத்தியானது கீழ் அரணி என்றும்; ஆசான் மேல் அரணி என்றும், தவங்களும், சாத்திரங்களில் நல்ல அறிவும் {அந்த அரணிக்கட்டைகளுக்குள்} உராய்வை ஏற்படுத்தும் காரணிகள் என்றும் அறிவாயாக. அதனிலிருந்து ஞானமெனும் நெருப்பு உண்டாகும்.(3)" என்றார்.(3)
பிராமணரின் மனைவி, "இந்தப் பிரம்ம அடையாளத்தைப் பொறுத்தவரையில், எது க்ஷேத்ரஜ்ஞன் என்று பெயரிடப்படுகிறது? உண்மையில், அதை {அந்த அடையாளத்தைப்} பற்றக்கூடிய {அதைக் குறித்த} விளக்கம் எங்கே தோன்றுகிறது.?" என்று கேட்டாள்[1].(4)
[1] கும்பகோணம் பதிப்பில், "க்ஷேத்திரஜ்ஞனென்று பெயருள்ள பிரம்மத்தினுடைய எந்த ஸ்வரூபத்தை எந்த லக்ஷணத்தால் அறியலாமோ அந்தப் பிரம்ம ஸ்வரூபத்தின் அந்த லக்ஷணத்தைச் சொல்லும்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "’க்வநு’ என்னும் வேறுபாடம் கொண்டு, ‘க்ஷேத்ரஜ்ஞனென்று பெயருள்ள ஜீவன் பிரம்மத்தின் ஸ்வரூபமாவது எவ்விதம்? எதனால் எது அறிய முடியுமோ அஃது எவ்விதம் அதன் ஸ்வரூபமாகும்? (அதைச் சொல்லும்)’ என்பது பழையவுரை" என்றிருக்கிறது.
பிராமணர், "அவன் {க்ஷேத்திரஜ்ஞன்} அடையாளங்கள் அற்றவனாகவும், குணங்களற்றவனாகவும் இருக்கிறான். அவனே எனக் கருதப்படக்கூடிய எந்தக் காரணமும் இல்லை. எனினும், அவனைக் கைப்பற்றவோ, கைப்பாற்றாதிருக்கவோ உரிய வழிமுறைகளை உனக்குச் சொல்லப் போகிறேன்.(5)
நல்ல வழிமுறைகளைக் காணலாம்; வண்டுகளால் (உணரப்படும் மலர்களைப் போல) அவற்றை உணரலாம். அந்த வழிமுறைகள் செயல்களால் தூய்மையாக்கப்பட்ட புத்தியைக் கொண்டவையாகும். தூய்மையடையாத புத்தியைக் கொண்டோர், தங்கள் அறியாமையின் மூலம், அந்த உட்பொருள் ஞானம் மற்றும் பிறவற்றின் குணங்களோடு இருப்பதாகக் கருதுகிறார்கள்[2].(6) இது செய்யப்படவேண்டும், அல்லது இது செய்யப்படக்கூடாது என்று விடுதலையை {முக்தியை} அடைவதற்கான விதிகள் வகுக்கப்படவில்லை. எவரிடம் ஆன்ம அறிவு எழுகிறதோ அவனால் மட்டுமே காணவும், கேட்கவும் முடியும்[3].(7) புரிந்து கொள்ளும் திறன் கொண்ட ஒருவன், வெளிப்பட்டவற்றையும், வெளிப்படாதவற்றையும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பல பகுதிகளாகப் புரிந்து கொள்ள வேண்டும்.(8) உண்மையில் ஒருவன் வெவ்வேறு கருத்துகளைக் கொண்ட பல்வேறு பொருட்களையும், நேரடியாக உணரக்கூடிய அனைத்துப் பொருட்களையும் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது, எதற்கு மேல் எதுவும் இல்லையோ அது {பிரம்மஜ்ஞானம்}, (தியானம், தற்கட்டுப்பாடு முதலிய) பயிற்சிகளில் இருந்து உண்டாகும்" என்றார்[4]".(9)
[2] "தெளிவாகப் புரிந்து கொள்வதற்கான நான் இந்தச் சுலோகத்தைச் சற்றே விரிவாக்கியிருக்கிறேன். சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தால் பின்வருமாறு இஃது அமையக்கூடும். "வண்டுகள் உணர்வதைப் போல நல்ல வழிமுறைகளைக் கண்டடையலாம். செயல்களால் (தூய்மையாக்கப்பட்ட) புத்தி; மடமையின் மூலம் ஞானத்தின் அடையாளங்களுடன் கூடியது என்றறியும்". தெலங்க் அவர்கள் சொல்வதைப் போலக் கர்ம புத்தி என்பது ஒருபோதும் செயலும், ஞானமும் என்ற பொருளைத் தராது. அபுத்திவாத் எனபது "அறியாமையின் மூலம்" என்ற பொருளைத் தரும். செயல்களால் தூய்மையாக்கப்படாத புத்தியைக் கொண்டோரிடம் இந்த அறியாமை இருக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "கர்மங்களில் பற்றின புத்தியுள்ளவன் (பிரம்மத்தைப் பற்றிய) புத்தியில்லாததினால் ஞானஸ்வரூபியான பிரம்மத்தினிடமிருந்து விலக்கப்பட்டவனாவான்" என்றிருக்கிறது.[3] "வேறு காரியங்களில் உள்ளதைப் போல விடுதலையை அடையும் காரியத்தில், நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை. ஒருவன் சொர்க்கத்தை அடைய விரும்பினால் அவன் இது செய்யப்பட வேண்டும், இது தவிர்க்கப்பட வேண்டும் என்று இருக்கிறது. எனினும், விடுதலை அடைவதற்கோ காண்பதும், கேட்பதும் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. காண்பது தியானத்தையும், கேட்பது ஆசான்களின் அறிவுரைகளையும் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "நேரடியாக உணரக்கூடிய பூமி முதலிய பொருட்களை முதலில் ஒருவன் ஆழ்ந்து சிந்திக்க {தியானிக்க} வேண்டும் எனவும், அதன் பிறகே, புலப்படாத பொருட்களை மனத்தின் இயக்கமாகத் தியானிக்க வேண்டும் எனவும் இங்கே பேசிக் கொண்டிருப்பவர் சொல்ல விரும்புகிறார். அத்தகைய தியானம் படிப்படியாகப் பரமனிடம் செல்ல வழிவகுக்கும். தெலங் அவர்களின் பதிப்பில் உள்ள இந்த 8 மற்றும் 9ம் ஸ்லோகங்கள் எந்தப் பொருளையும் தெளிவாக அமைக்கவில்லை என்று நான் கருதுகிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "இது விஷயத்தில் எல்லா அனுமானங்களோடுங் கூடினவைகளும் பிரத்யக்ஷத்தைக் காரணமாகக் கொண்டவைகளுமான அவ்யக்தமாக இருப்பவைகளையும், வ்யக்தமான ஸ்வரூபமுள்ளவைகளையும் எல்லாவற்றையும் எவ்வளவு அம்சங்களாப் பிரிக்க முடியுமோ அவ்வளவு அம்சங்களாக நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும் பிரிக்க வேண்டும். எதற்கு மேலானது இல்லையோ அந்தப் பிரம்மஜ்ஞானமானது (சமமுதலியவைகளை) அப்யஸித்தால் உண்டாகும்" என்றிருக்கிறது.
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், "அப்போது, க்ஷேத்திரஜ்ஞன் அழிந்ததும் அந்தப் பிராமணரின் மனைவியுடைய மனமானது, க்ஷேத்திர ஞானத்தின் விளைவால் க்ஷேத்திரஜ்ஞனைக் கடந்த ஒன்றானது" என்றான்[5].(10)
[5] "அவளுடைய தனிப்பட்ட ஆன்மாவானது பரமாத்மாவுக்குள் கலந்தபோது, அவள் பிரம்மத்தோடு அடையாளம் காணப்பட்டாள். இது க்ஷேத்திரஜ்னிலிருந்து தனிப்பட்ட க்ஷேத்திர அறிவின் மூலம் நடந்தது என்பது இங்கே பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அந்தப் பிராம்மண ஸ்திரீயினுடைய புத்தியானது ஜீவாத்மாவைப் பரமாத்மாவினிடம் லயிக்கச் செய்வதற்காக க்ஷேத்ர (மென்னும் சரீர)த்தை அறிந்து கொண்டு ஜீவர்களைவிட மேலான பரமாத்மாவிடம் சென்றது" என்றிருக்கிறது.
அர்ஜுனன், "உண்மையில், ஓ! கிருஷ்ணா, இத்தகைய வெற்றியை அடைந்தவர்களான அந்தப் பிராமணனின் மனைவியும், அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரும் எங்கே இருக்கின்றனர். ஓ! மங்கா மகிமை கொண்டவனே, இது குறித்து எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(11)
அருள்நிறைந்த அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன}, "என் மனமே அந்தப் பிராமணன் என்றும், என் புத்தியே அந்தப் பிராமணனின் மனைவி என்றும் அறிவாயாக. ஓ! தனஞ்சயா, க்ஷேத்ரஜ்ஞன் என்று சொல்லப்படுபவன் நானே" என்றான்.(12)
அஸ்வமேதபர்வம் பகுதி – 34ல் உள்ள சுலோகங்கள் : 12
ஆங்கிலத்தில் | In English |