Identity of Supreme Brahma! | Aswamedha-Parva-Section-35 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 20)
பதிவின் சுருக்கம் : பரப்பிரம்மத்தையும், அதனை அடையும் வழிமுறையையும் குறித்து ஓர் ஆசானுக்கும், சீடனுக்கும் இடையில் நடந்த உரையாடலையும், முனிவர்களுக்குப் பிரம்மன் சொன்னதையும் அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "உயர்ந்த அறிவுப்பொருளான பிரம்மத்தைக் குறித்து எனக்கு விளக்குவதே உனக்குத் தகும். உன் கருணையால் எனது மனம் நுட்பமானவையும், ஆய்வு சார்ந்தவையுமான இந்த விளக்கங்களில் திளைத்திருக்கிறது" என்று கேட்டான்.(1)
வாசுதேவன் {கிருஷ்ணன்}, "பிரம்மம் குறித்த காரியத்தில் ஓர் ஆசானுக்கும், அவரது சீடருக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழைய வரலாறு இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(2) ஓ! பகைவர்களை எரிப்பவனே, ஒரு காலத்தில் ஒரு புத்திசாலி சீடன், (சுகமாக) அமர்ந்திருந்தவரும், கடும் நோன்புகளைக் கொண்டவரும், தன் ஆசானுமான ஒரு குறிப்பிடத்தக்க பிராமணரிடம், "உண்மையில், உயர்ந்த நன்மை யாது?(3) ஓ! புனிதமானவரே, உயர்ந்த நன்மையை அடைய விரும்பி, என்னை நான் உம் பாதங்களில் கிடத்திக் கொள்கிறேன். ஓ! கல்விமானான பிராமணரே, நான் கேட்பதை எனக்கு விளக்கிச் சொல்லுமாறு தலைவணங்கி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்" என்றான்.(4)
ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனனே}, இவ்வாறு சொன்ன அந்தச் சீடனிடம் அந்த ஆசான், "ஓ! மறுபிறப்பாளனே, உன் ஐயங்கள் அனைத்திற்கும் நான் விளக்கம் சொல்வேன்" என்றார்.(5)
ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே {அர்ஜுனனே}, தன் ஆசானால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், தன் ஆசானிடம் பேரர்ப்பணிப்பு கொண்டவனுமான அந்தச் சீடன், கூப்பிய கரங்களுடன் பின்வருமாறு பேசினான். ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவனே, அவன் சொன்னதைக் கேட்பாயாக.(6)
அந்தச் சீடன், "நான் எங்கிருந்து வந்தேன்? நீர் எங்கிருந்து வந்தீர்? உயர்ந்த உண்மை எதுவோ அதை எனக்கு விளக்கிச் சொல்வீராக. அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் எந்த மூலத்திலிருந்து உண்டாகின?(7) உயிரினங்கள் எதைக் கொண்டு வாழ்கின்றன? அவற்றின் வாழ்வின் அளவு எவ்வளவு? உண்மை எது? ஓ! கல்விமானான பிராமணரே, தவம் எது? நல்லோரால் குணங்கள் என்றழைக்கப்படுவன எவை?(8) மங்கலப் பாதைகள் என்றழைக்கப்படுபவை எவை? மகிழ்ச்சி எது? பாவம் எது? ஓ! புனிதமானவரே, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே, ஓ! கல்விமானான முனிவரே, என்னுடைய இந்தக் கேள்விக்கு, சரியாகவும், உண்மையாகவும், துல்லியமாகவும் பதிலளிப்பதே உமக்குத் தகும். இவ்வுலகத்தில் {இம்மையில்} இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கவல்ல வேறு நபர் யார் இருக்கிறார்?(9,10) ஓ! மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, இவற்றுக்குப் பதிலளிப்பீராக. என் ஆவல் பெரிதாக இருக்கிறது. விடுதலை {முக்தி} குறித்த கடமைகளில் நன்கு திறம்பெற்றவராக உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்படுபவர் நீரே.(11) அனைத்து வகை ஐயங்களையும் களையவல்லவர் உம்மைத் தவிர வேறு எவரும் இல்லை. உலக வாழ்வுக்கு அஞ்சி, விடுதலையை அடைய நாம் விரும்புகிறோம்" என்றான்.(12)
வாசுதேவன் {கிருஷ்ணன்}, "ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனனே}, ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, ஓ! பகைவர் அனைவரையும் தண்டிப்பவனே, தன் ஆசானிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், அமைதியுடையவனும், (ஆசானுக்கு) ஏற்புடைய வகையில் எப்போதும் நடந்து கொள்பவனும், கிட்டத்தட்ட ஆசானின் நிழலாகவே அவரது பக்கத்தில் நிலையாக வாழ்ந்தவனும், தற்கட்டுப்பாடுடையவனும், யதியின் வாழ்வை வாழ்ந்தவனும், பிரம்மச்சாரியும், பணிவுடன் அவரது அறிவுரையை நாடியவனுமான அந்தச் சீடனிடம், நுண்ணறிவு மிக்கவரும், நோன்புகளை நோற்பவருமான அந்த ஆசான், அனைத்துக் கேள்விகளுக்கும் முறையான விளக்கங்களைச் சொன்னார்".(13,14)
ஆசான், "(பழங்காலத்தில்) இவை அனைத்தும் (உலகங்கள் அனைத்திற்கும் பெரும்பாட்டனான) பிரம்மன் மூலம் அறிவிக்கப்பட்டன. முனிவர்களில் முதன்மையானவர்களால் மெச்சப்படுவதும், பயிலப்படுவதும், வேத அறிவைச் சார்ந்ததுமான அஃது உண்மையான உட்பொருளின் கருத்தைக் கொண்டதாகும்.(15) நாம் ஞானத்தையே உயர்ந்த நோக்கமாகவும், துறவையே சிறந்த தவமாகவும் கருதுகிறோம். சூழ்நிலைகளால் மாற்றமடையாததும், அனைத்து உயிரினங்களுக்குள்ளும் இருப்பதுமான ஆன்ம {ஆன்மா} அறிவின் உண்மை நோக்கத்தை நிச்சயமாக அறிந்தவன், எங்குச் செல்ல விரும்பினாலும், அங்கே செல்வதில் வென்று உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான்.
கல்விமானும், அனைத்துப் பொருட்களின் வசிப்பிடத்தையும் ஒரே இடத்தில் காண்பவனும், அதன் கடுமையைக் காண்பவனும்,(16,17) பன்மையில் ஒருமையைக் காண்பவனுமான ஒருவன் பேரிடரில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதில் வெல்கிறான்[1]. எதையும் ஆசைப்படாதவனும், எந்தப் பொருளிலும் எனது என்ற கருத்தை வளர்க்காதவனுமான ஒருவன்,(18) இவ்வுலகில் வசித்தாலும், பிரம்மத்துடன் அடையாளங்காணப்படுபவனாகக் கருதப்படுவான். பிரதானத்தின் (அல்லது இயற்கையின்) குணங்களைக் குறித்த உண்மையை அறிந்தவனும், இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களின் படைப்பையும் அறிந்தவனும்,(19) எனது என்ற கருத்தை அமைத்துக் கொள்ளாதவனும், செருக்கற்றவனுமான ஒருவன், தன்னை விடுவித்துக் கொள்வதில் {முக்தி அடைவதில்} நிச்சயம் வெல்வான்.
[1] கும்பகோணம் பதிப்பில், "(எவன் சித்தும் ஜடமும்) சேர்ந்திருப்பதையும், பிரிந்திருப்பதையும் அவ்வாறே (ஜீவேஸ்வரர்களுடைய) அபேதத்தையும், பேதத்தையும் பார்க்கிறானோ அவன் துக்கத்திலிருந்து விடுபடுகிறான்" என்றிருக்கிறது.
வெளிப்படாததைத் தன் முளைப்பயிராகக் கொண்டதும், புத்தியைத் தன் தண்டாகக் கொண்டதும், உயர்ந்த சுய நினைவை {பெரிய அகங்காரத்தைத்} தன் கிளைகளாகக் கொண்டதும், உயிரணுவின் உணர்வுகளைத் தன் தளிர்களாகக் கொண்டதும், (ஐம்)பெரும்பூதங்களைத் தன் மலர் மொட்டுகளாகக் கொண்டதும், இலைகளுடன் கூடியவையும், மலர்களை எப்போதும் கொண்டவையுமான கொம்புகளாகத் திரள்கூறுகளைக் கொண்டதும், இருப்பில் உள்ள பொருட்கள் அனைத்தும் சார்ந்திருப்பதும், பிரம்மத்தையே வித்தாகக் கொண்டதும், நித்தியமானதுமான பெரும் மரத்தை முறையாகப் புரிந்து கொண்டு அறிவெனும் கூரிய வாளால் அனைத்து தத்துவங்களையும் வெட்டுபவன், பிறப்பிறப்பைக் கைவிட்டு இறவாமையை அடைகிறான் {அமரனாகிறான்}.(20-23) சித்தர் கூட்டங்களால் நன்கறியப்பட்டவையும், தொலை சுழல்கள் {முந்திய கல்பத்தில் உள்ளவையும்}, உண்மையில் நித்தியமானவையும், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் முதலியவை தொடர்பானவையுமான தீர்மானங்கள், அறம், இன்பம் மற்றும் பொருள் ஆகியவற்றை,(24) ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, நான் உனக்கு அறிவிக்கப் போகிறேன். இவை நல்லவை என்றழைக்கப்படுபவையாக அமைந்திருக்கின்றன. ஞானம் கொண்ட மனிதர்கள், இவ்வுலகில் அவற்றைப் புரிந்து கொண்டு வெற்றியை அடைகிறார்கள்.(25)
பழங்காலத்தில், பிருஹஸ்பதி, பரத்வாஜர், கௌதமர், பார்க்கவர், வசிஷ்டர், கசியபர், விஷ்வாமித்திரர் ஆகியோர் ஒருவரையொருவர் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக ஒன்றுகூடினர். அனைத்துப் பாதைகளிலும் பயணித்து, தாங்கள் செய்த செயல்களால் களைப்படைந்த பிறகு அவர்கள் ஒவ்வொருவரும் இவ்வாறு ஒன்றுகூடினார்கள்.(26,27) அந்த மறுபிறப்பாளர்கள், தவசியின் மகனான அங்கிரஸைத் தங்கள் தலைமையில் கொண்டு பெரும்பாட்டனின் {பிரம்மனின்} உலகத்திற்குச் சென்றனர். அங்கே அவர்கள் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்திருந்த பிரம்மனைக் கண்டார்கள்.(28) சுகமாக வீற்றிருந்து அந்த உயர் ஆன்மாவிடம் தலைவணங்கிய அந்தப் பெரும் முனிவர்கள், பணிவுள்ளவர்களாக உயர்ந்த நன்மையெனக் கருதப்படக்கூடிய இந்த முக்கியமான கேள்விகளை அவனிடம் கேட்டார்கள்.(29)
{அவர்கள்}, "ஒரு நல்ல மனிதன் எவ்வாறு செயல்பட வேண்டும்? பாவத்தில் இருந்து ஒருவன் எவ்வாறு விடுதலை அடைவான்? எங்களுக்கு மங்கலமான பாதைகள் எவை? வாய்மை எது? பாவம் எது?(30) எந்தச் செயல்பாட்டின் மூலம் வடக்கு {உத்தரம்}, தெற்கு {தக்ஷிணம்} எனும் இரு பாதைகள் {கர்மமார்க்கங்கள்} அடையப்படுகின்றன? அழிவு என்றால் என்ன? விடுதலை {முக்தி} என்றால் என்ன? இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களின் பிறப்பும், இறப்பும் என்னென்ன?" {என்று கேட்டனர்}.(31)
ஓ! சீடா, இவ்வாறு கேட்கப்பட்ட பெரும்பாட்டன் {பிரம்மன்} சாத்திரங்களுக்கு இணக்கமான வகையில் அவர்களிடம் என்ன சொன்னான் என்பதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன். நீ கேட்பாயாக.(32)
பிரம்மன், "அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் வாய்மையில் இருந்து பிறக்கின்றன. அவை தவத்தின் (அல்லது செயல்பாட்டின்) மூலமே வாழ்கின்றன. ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவர்களே, இதைப் புரிந்து கொள்வீராக. அவற்றினுடைய செயல்பாடுகளின் விளைவால், தங்கள் சொந்த மூலத்தைக் கடந்து அவை வாழ்கின்றன[2].(33) வாய்மையானது, குணங்களுடன் கலக்கும்போது, எப்போதும் ஐந்து குறியீடுகளுடன் கொண்டதாகிறது. வாய்மையே பிரம்மன், வாய்மையே தவம், வாய்மையே பிரஜாபதி.(34) வாய்மையிலிருந்தே அனைத்து உயிரினங்களும் உண்டாகின. வாய்மையே இருப்பிலுள்ள அண்டமாகும். இதன்காரணமாகவே, யோகத்தில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களும், கோபம் மற்றும் கவலையைக் கடந்தவர்களும், (ஒவ்வொருவரும் கடக்க வேண்டியதும், கீழே உள்ளதுமான சதுப்புநிலத்தைத் தவிர்த்து அனைவரும் செல்ல வேண்டிய) பாலமாக அறத்தைக் கருதுபவர்களுமான பிராமணர்கள் வாய்மையைப் புகலிடமாக அடைகின்றனர். ஒருவரையொருவர் தடுப்பவர்களும், ஞானம் கொண்டவர்களுமான பிராமணர்களையும், வகைகளையும் {வர்ணங்களையும்}, நான்கு வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைச்} சார்ந்தவர்களையும் குறித்து நான் இப்போது சொல்லப் போகிறேன்.(35-37) அறம் அல்லது கடமை என்பது நான்கு கால்களைக் கொண்டிருந்தாலும் ஒன்றேயாகும். மறுபிறப்பாளர்களே, மங்கலமானதும், நன்மையை விளைவிக்கக்கூடியதுமான பாதையைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன்.(38)
[2] "அவற்றின் தோற்றம் பிரம்மம் அல்லது வாய்மையாகும். அவை தங்கள் செயல்களின் விளைவால் தங்கள் தோற்றத்தில் இருந்து தொடர்பறுந்து வாழ்கின்றன. அவற்றின் செயல்கள் தீர்ந்து போகும்போது, அவை மீண்டும் திரும்பி பிரம்மத்தில் கலக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "(அவ்யக்த முதலான) பூதங்களும், ஸ்தாவரங்களும், ஜங்கமங்களும், ஸத்தியமான பிரம்மத்தினிடமிருந்து உண்டாயின. அவைகள் கர்மத்தால் ஜீவிக்கின்றன. அப்படி ஜீவிப்பதே நல்ல விரதமாகிறது" என்றிருக்கிறது.
ஞானம் கொண்ட மனிதர்கள், பிரம்மத்தோடு அடையாளங் காணப்படும் நிலையை அடைவதற்காக இந்தப் பாதையிலேயே தொடர்ந்து நடக்கிறார்கள். உயர்ந்ததும், புரிந்து கொள்வதற்கு மிகக் கடினமானதுமான அந்தப் பாதையைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன்.(39) உயர்வாக அருளப்பட்டவர்களே, எது உயர்ந்த இருக்கையோ அதை முழுமையாகவும் விரிவாகவும் புரிந்து கொள்வீராக. பிரம்மச்சாரிகளின் தொடர்புடைய வாழ்வுமுறையே {ஆசிரமமே} முதற்படியாகச் சொல்லப்படுகிறது.(40) இல்லறம் இரண்டாம் படியாகும். அதன் பிறகு காட்டுவாசமாகும். அதன் பிறகு வருவது, அத்யாத்மா தொடர்பான உயர்ந்த படி என்று அறியப்பட வேண்டும்[3].(41) அத்யாத்மாவை அடையாதவரை {சந்நியாசம் பெற்று ஆத்மதரிசனம் உண்டாகாதவரை} ஒருவன் ஒளி, வெளி (அல்லது ஆகாயம்), சூரியன், காற்று {வாயு} ஆகியவற்றையும் இந்திரன் மற்றும் பிரஜாபதி ஆகியோரையும் பார்க்க முடியாது.(42)
[3] "அஃதாவது, ஆன்மா தொடர்புடைய அறிவை அடைவதையே நோக்கமாகக் கொண்ட வாழ்வுமுறையாகும். பரமாத்மா, அல்லது பிரம்மத்துடன் அடையாளம் காணப்படும் நிலையை அடைவதற்குத் தேவையான அறிவும் இந்த வாழ்வுமுறையில் உள்ளடங்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
(அத்யாத்மாவை அடைவதற்குரிய) வழிமுறைகளை நான் அறிவிக்கப் போகிறேன். அவற்றை நீங்கள் முதலில் புரிந்து கொள்வீராக. கனிகள், கிழங்குகள் மற்றும் காற்றை உண்டு, காடுகளில் வசிக்கும் தவசிகளால் பின்பற்றப்படும் காட்டு வாழ்வுமுறையானது {வானப்ரஸ்தாஸ்ரமமானது}, மூன்று மறுபிறப்பாள வகைகளுக்கும் {வர்ணங்களுக்கும்} விதிக்கப்பட்டிருக்கிறது. இல்லற வாழ்வுமுறை {கிருஹஸ்தாஸ்ரமம்} அனைத்து வகைகளுக்கும் {வர்ணங்களுக்கும்} விதிக்கப்பட்டிருக்கிறது.(43,44) ஞானம் கொண்டவர்கள், அறம் அல்லது கடமையானது நம்பிக்கையையே {சிரத்தையையே} தன் (முக்கியக்) குறியீடாகக் கொண்டுள்ளது என்று சொல்கின்றனர். இவ்வாறே தேவர்களிடம் செல்ல வழிவகுக்கும் பாதைகளை நான் உங்களுக்கு அறிவித்துவிட்டேன். இந்தப் பாதைகள் பக்திக்கான பாலங்களாகும்.(45) இவற்றில் ஒரு வாழ்வுமுறையைத் தனியாகப் பின்பற்றுபவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனுமான மனிதன், உயிரினங்கள் அனைத்தின் உற்பத்தி மற்றும் அழிவை காலத்தில் புரிந்து கொள்வதில் எப்போதும் வெல்கிறான்.(46)
நான் இப்போது, அனைத்துப் பொருட்களிலும் பகுதிகளாக வசிக்கும் பூதங்களைக் காரணங்களுடனும், துல்லியமாகவும் அறிவிக்கப் போகிறேன்.(47) பேரான்மா {மஹத்தத்வம்}, புலப்படாதது {அவ்யக்தம்}, அஹங்காரம் (அடையாள உணர்வு), (அறிவு மற்றும் செயல்) புலன்கள் {இந்திரியங்கள்} பதினொன்று, ஐம்பெரும்பூதங்கள்,(48) ஐம்பூதங்களின் {ஒலி முதலிய} குறிப்பிடத்தக்க பண்புகள் ஆகியவை நித்திய படைப்பாக அமைகின்றன. இந்த இருபத்துநான்கு தத்துவங்களும் (இன்னும்) ஒன்றும் சொல்லப்பட்டன.(49) இந்தத் தத்துவங்கள் அனைத்தின் உற்பத்தியையும், அழிவையும் புரிந்து கொள்ளும் ஞானம் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் மத்தியில் மனிதனாக இருப்பவனுமான அந்த மனிதன், ஒருபோதும் மாயை அடையமாட்டான்.(50) தத்துவங்களையும், குணங்கள் அனைத்தையும், தேவர்கள் அனைவரையும் துல்லியமாகப் புரிந்து கொள்பவன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மை அடைவதில் வெல்கிறான். கட்டுகள் {பந்தங்கள்} அனைத்தில் இருந்தும் விடுபடும் அத்தகைய மனிதன், களங்கமற்ற தூய்மை கொண்ட உலகங்கள் அனைத்தையும் அனுபவிப்பதில் வெல்கிறான்" என்றான் {பிரம்மன்}.(51)
அஸ்வமேதபர்வம் பகுதி – 35ல் உள்ள சுலோகங்கள் : 51
ஆங்கிலத்தில் | In English |