Quality of Darkness! | Aswamedha-Parva-Section-36 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 21)
பதிவின் சுருக்கம் : தமோ குணத்தைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்...
பிரம்மன், "புலப்படாததும், தெளிவில்லாததும், அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பதும் {நீக்கமற நிறைந்திருப்பதும்}, எப்போதும் நீடித்திருப்பதும், மாற்றமில்லாததுமாக எது இருக்கிறதோ, அதைக் குணங்கள் மூன்றைக் கொண்டதும், உட்பொருட்கள் {பூதங்கள்} ஐந்தைக் கொண்டதும், இணைவாசல்கள் ஒன்பதைக் கொண்டதுமான நகரமாக (அல்லது மாளிகையாக) அறிய வேண்டும்.(1) இது (பொருட்களை) வேறுபடுத்திப் பார்க்கும் மனம் உள்ளிட்ட பதினொன்றால் சூழப்பட்டதாகவும், புத்தியை ஆட்சியாளனாகக் கொண்டதாகவும், பதினொன்றின் தொகையாகவும் இருக்கிறது[1].(2) அதில் உள்ள மூன்று குழாய்கள் {நாளங்கள்} தொடர்ந்து அஃதை ஆதரிக்கின்றன. இவையே மூன்று நாடிகளாகும். தொடர்ந்து இயங்கும் இவை தங்கள் சாரமாக மூன்று குணங்களைக் கொண்டுள்ளன.(3) இருள் {தமஸ்}, ஆசை {ரஜஸ்} மற்றும் நல்லியல்பு {சத்வம்} ஆகிய இவை (மூன்றே) குணங்கள் என்றழைக்கப்படுகின்றன. இவை ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. இவை ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன.(4) இவை ஒன்றிலொன்று புகலிடத்தைக் கொள்கின்றன. இவை ஒன்றையொன்று பின்தொடர்கின்றன. மேலும் இவை ஒன்றோடொன்று கலந்து இருக்கின்றன. ஐந்து (அடிப்படை) பூதங்கள் (இந்த) முக்குணங்களால் வகைப்படுத்தப்படுகின்றன {தனிச்சிறப்படைகின்றன}.(5)
[1] "மூன்று குணங்கள், ஐந்து பூதங்கள், புலன்கள் மற்றும் உணர்வுகளின் கூட்டு, அகங்காரம் மற்றும் புத்தி ஆகியன மொத்தம் பதினொன்றாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நல்லியல்பு {நற்குணம்/சத்வம்} இருளுக்கு {கெட்ட குணத்திற்குப்/ தமஸுக்குப்} போட்டியாகும் {எதிராகும்}. நல்லியல்புக்குப் போட்டியாக இருப்பது ஆசை {ரஜஸ்} ஆகும். நல்லியல்பும் ஆசைக்குப் போட்டியாக இருக்கிறது. நல்லியல்புக்கு இருள் போட்டியாகவும் இருக்கிறது.(6) எங்கே இருள் {தமஸ்} கட்டுப்படுத்தப்படுகிறதோ, அங்கே ஆசை {ரஜஸ்} பாயக் காணலாம். எங்கே ஆசை {ரஜஸ்} கட்டுப்படுத்தப்படுகிறதோ, அங்கே நல்லியல்பு {சத்வம்} பாயக் காணலாம்.(7) இருளானது {கெட்ட குணமானது/ தமஸ் குணமானது}, இரவை (அல்லது தெளிவின்மையைத்) தன் சாரமாகக் கொண்டிருப்பதை அறிய வேண்டும். {மற்ற இரண்டு குணங்களுடன் சேர்ந்து} மூன்று தன்மைகளைக் கொண்டிருக்கும் இது {தமஸ் குணம்} மாயை {மோஹம்} என்று(ம்) அழைக்கப்படுகிறது. இஃது அநீதியை (அல்லது பாவத்தைத்) தன் குறியீடாகக் கொண்டு எப்போதும் பாவம் நிறைந்த செயல்களிலேயே இருக்கிறது. இதுவே இருளின் இயல்பாக இருக்கிறது, மேலும் இது {கெட்ட குணம்} மற்றவற்றில் {மற்ற இரண்டு குணங்களிலும்} அடைபட்டிருப்பதாகவும் காணப்படுகிறது.(8) ஆசையானது {ரஜஸ் குணமானது} செயல்பாட்டையே தன் சாரமாகக் கொண்டிருக்கிறது. இது வெற்றிகரமான செயல்களுக்குக் காரணமாக அமைகிறது. இது மேலோங்கியிருக்கும்போது உற்பத்தியையே தன் குறியீடாக அனைத்து உயிரினங்களின் மத்தியிலும் கொண்டிருக்கிறது.(9) காந்தி, எளிமை மற்றும் நம்பிக்கை ஆகியன அனைத்து உயிரினங்களின் மத்தியிலும் நல்லியல்பின் {சத்வ குணத்தின்} வடிவங்களாக, அஃதாவது ஒளியாக இருப்பதாக நல்லோர் அனைவரும் கருதுகின்றனர்.(10)
அவற்றின் {தமஸ் குணத்தின்} தன்மைகளுடைய உண்மையான இயல்பை நான் காரணங்களுடன் இப்போது அறிவிக்கப் போகிறேன். இவற்றைத் திரட்டாகவும், தனித்தனியாகவும் கூறலாம். நீங்கள் அவற்றைப் புரிந்து கொள்வீர்களாக.(11) முற்றான மாயை {மோஹம்}, அறியாமை {அஞ்ஞானம்}, ஈகையின்மை {ஈயாமை}, செயலில் தீர்மானமின்மை {கர்மங்களை நிச்சயிக்காமை}, உறக்கம் {நித்திரை}, அகந்தை {கர்வம்}, அச்சம் {பயம்}, பேராசை, துயரம் {சோகம்}, நற்செயல்களை நிந்தித்தல் {புண்ணியத்தைத் தூஷிப்பது},(12) நினைவிழப்பு {மறதி}, தீர்மானத்தை எட்டுவதில் முதிர்ச்சியின்மை {நல்ல புத்தியின்மை}, நம்பிக்கையின்மை {நாஸ்திகனாக இருப்பது}, ஒழுக்க விதிகள் அனைத்தையும் மீறுதல் {கெட்ட நடை}, பாகுபாட்டை விரும்புதல் {யுக்தாயுக்தங்களை [தகுதி மற்றும் தகுதியின்மைகளைத்] தெரிந்து கொள்ளாமை}, குருட்டுத்தன்மை {எல்லா இந்திரியங்களையும் உள்ளபடி அறியாமை}, தீய நடத்தை {தாழ்ந்த ஜாதியின் தொழில்களைச் செய்வது},(13) செயற்திறன் இல்லாத போதே பெருமையடித்தல் {செய்யப்படாததைச் செய்யப்பட்டதாக நினைப்பது}, அறியாமையில் அறிவின் அனுமானம் {அஜ்ஞானத்தை ஞானமாக நினைப்பது}, நட்பின்மை (அல்லது பகைமை), தீய மனோநிலை {கெட்ட அபிப்பிராயம்}, நம்பிக்கையின்மை {அஸ்ரத்தை}, மூடப்புத்தி,(14) கோணல்புத்தி {நேர்மையில்லாமை}, சேர்ந்திருக்க இயலாமை {நல்லறிவின்மை}, பாவம் நிறைந்த செயல்பாடு {பாபகார்யம்}, புத்தியில்லாமை {அறியாமை}, எழுச்சியின்மை {(சோம்பல் முதலியவற்றால்) ஒன்றும் செய்யாமலிருப்பது}, தளர்ச்சி {பக்தியில்லாமை}, தற்கட்டுப்பாட்டின்மை {இந்திரியங்களை ஜயிக்காமலிருப்பது}, சிறுமையடைதல் {தரமிழத்தல் / இழிவான காரியத்தில் ஆசை}(15) ஆகிய இந்தக் குணங்கள் இருளுக்கு {தமஸ் குணத்திற்குச்} சொந்தமானவையாக அறியப்படுகின்றன.
இவ்வுலக மாயையுடன் தொடர்புடைய பிற மனநிலைகள் அனைத்தும் இருளின் {தமஸ் குணத்தின்} தொடர்புடையவையே. எப்போதும் பிறரைத் தவறாகப் பேசுவது, தேவர்களையும், பிராமணர்களையும் நிந்திப்பது,(16,17) ஈகையின்மை, பகட்டு, எண்ணமயக்கம், கோபம், மன்னிக்கும் தன்மை இல்லாமை, அனைத்து உயிரினங்களிடமும் பகைமை ஆகியன இருளின் {தமஸ் குணத்தின்} இயல்புகளாகக் கருதப்படுகின்றன.(18) (வீணான தன்மை அல்லது பயனற்ற தன்மையின் விளைவால்) செய்யப்படும் தகுதியற்ற செயல்கள் எவையும், (கொடையாளியின் தகுதியின்மை, அகாலம், பொருளில் உரிமையின்மை ஆகியவற்றின் விளைவால்) கொடுக்கப்படும் கொடைகள் எவையும், வீணாக உண்பதும் இருள் {தமஸ் குணத்தின்} தொடர்புடையவையே.(19) அவதூறு செய்வதில் ஈடுபடுதல், மன்னிக்கும் தன்மையின்மை, பகைமை, பகட்டு, நம்பிக்கையின்மை ஆகியவையும் இருளின் {தமஸ் குணத்தின்} இயல்புகளாகச் சொல்லப்படுகின்றன.(20) இவ்வுலக மனிதர்களில், இவை மற்றும் இவை போன்ற குற்றங்களை இயல்பாகக் கொண்டவர்களும், (சாத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும்) தடைகளை உடைப்பவர்களுமாக இருப்பவர்கள் அனைவரும் இருள் குணம் {தமஸ் குணத்தின்} தொடர்புடையவர்களாக {தாமஸர்களாகக்} கருதப்படுகிறார்கள்.(21)
எப்போதும் பாவம் நிறைந்த செயல்களையே செய்யும் இம்மனிதர்கள் பிறக்கும் கருவறைகளை இப்போது நான் அறிவிக்கப் போகிறேன். {திர்யக் என்னும்} நரகத்திற்குச் செல்ல விதிக்கப்பட்ட அவர்கள் அந்த வகையிலேயே மூழ்குகிறார்கள். உண்மையில் அவர்கள் காட்டுமிராண்டி படைப்புகளாகப் (பிறக்கும்) நரகத்தில் மூழ்குகிறார்கள்.(22) அவர்கள் அசைவற்ற {உயிரூட்டமற்ற} பொருட்களாகவோ, விலங்குகளாகவோ, சுமை சுமக்கும் விலங்குகளாகவோ, ஊனுண்ணும் உயிரனங்களாகவோ, பாம்புகளாகவோ, புழுக்கள், பூச்சிகள் மற்றும் பறவைகளாகவோ;(23) முட்டையிடும் வகையைச் சேர்ந்த உயிரினங்களாகவோ, நான்கு கால்களைக் கொண்ட பல்வேறு உயிரினங்களாகவோ, மனிதர்களில் கிறுக்கர்களாகவோ, செவிடர்களாகவோ, ஊமைகளாகவோ, பயங்க நோய்களால் பீடிக்கப்பட்ட மனிதர்களாகவோ, தூய்மையற்றவர்களாகவோ ஆகிறார்கள்.(24) தீய நடத்தை கொண்ட இம்மனிதர்கள் எப்போதும் தங்கள் செயல்களின் குறியீடுகளை வெளிப்படுத்திக் கொண்டே இருளில் மூழ்குகிறார்கள். அவர்கள் எப்போதும் கீழ்நோக்கிய போக்கு கொண்டவர்களாக (கீழ்நோக்கி இடம் பெயர்பவர்களாக) இருக்கிறார்கள். இருளின் குணம் {தமஸ் குணம்} தொடர்புடைய இவர்கள் இருளில் மூழ்குகிறார்கள் {இவர்கள் அவாக்ஸ்ரோதஸுகள் [இழிவான கதியை அடைவதற்கேற்ற சித்த விருத்தியுள்ளவர்கள்] என்று சொல்லப்படுகின்றனர்}.(25)
அவர்கள் முன்னேற்றத்திற்கும், மேன்மையடைவதற்கும் உரிய வழிமுறைகளையும், உண்மையில் அவர்கள் அவர்கள் அடையும் வழிமுறைகளையும் இப்போது நான் சொல்லப் போகிறேன்.(26) மனித வகையன்றி வேறு வகையில் பிறவி எடுக்கும் மனிதர்கள், கடமைகளில் அர்ப்பணிப்புள்ள பிராமணர்களின் அறச் சடங்களை நோக்கமாகக் கொண்டு வளர்ந்து, அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்ய விரும்பி,(27) அத்தகைய தூய்மைச் சடங்குகளின் துணை மூலம் மேல்நோக்கி உயர்வதில் வெல்கிறார்கள். உண்மையில், (தங்களை மேம்படுத்திக் கொள்ளப்) போராடும் அவர்கள் இறுதியாகப் பக்திமான்களான இந்தப் பிராமணர்கள் அடையும் அதே உலகங்களை அடைகிறார்கள். உண்மையில், அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்கிறார்கள். இதுவே வேதத்தில் உள்ள திறனாய்வாகும்.(28) மனித வகையன்றி வேறு வகையில் பிறவி எடுப்பவர்கள், தங்கள் தங்கள் செயல்களுக்கேற்ப வளர்ந்து முதிர்ந்து, இறுதியில் அவ்வாறே மனிதப் பிறவியையும் அடைகிறார்கள்.(29) பாவம் நிறைந்த பிறவிகளாகச் சண்டாளர்களாகவோ, செவிடர்களாகவோ, குருடர்களாகவோ பிறக்கும் அவர்கள், இவ்வுலகின் போக்கில் இடம்பெயர்ந்து, சரியான முறையில் அடுத்தடுத்து உயர்ந்த சாதிகளை அடைந்து, சூத்திர வகையைக் கடந்து, இருள் {தமஸ் குணம்} தொடர்பான குணங்களின் விளைவுகளைக் கடக்கிறார்கள்.(30,31)
ஆசைக்குரிய பொருட்களில் பற்றுக் கொள்வது பெரும் மாயையெனக் கருதப்படுகிறது. தவசிகள் {வேத மந்திரங்களைக் கண்டவர்கள்; சிறந்த ஞானமுள்ளவர்கள்}, முனிவர்கள் {மனனம் செய்பவர்கள், இன்பதுன்பங்களில் கலக்கமடையாதவர்கள்}, தேவர்கள் ஆகியோரும் இம்மையில் இன்பத்தை விரும்பி மயக்கமடைகின்றனர்.(32) இருள், மாயை, பெரும் மாயை, கோபம் மற்றும் மரணம் என்றழைக்கப்படும் பெருங்குழப்பமான {தாமிஸ்ரம் மற்றும் அந்ததாமிஸ்ரம்} குருடாக்கும் தெளிவின்மை (ஆகிய இவையே ஐந்து பெருந்துன்பங்களாகும்). கோபமே பெரும் தெளிவின்மையாகும் (சில வேளைகளில் இந்தப் பட்டியலில் சேரும் பகைமையோ, வெற்றோ அல்ல).(33) கல்விமான்களான பிராமணர்களே, இருளின் (தமஸ் குணத்தின்) நிறம் (இயல்பு), தன்மை, தோற்றம் ஆகியவற்றைப் பொருத்தவரையில், அனைத்தையும் முறையான வரிசையில் மிகச் சரியாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.(34) இஃதை உண்மையில் புரிந்து கொள்பவன் யார்? இஃதை உண்மையில் காண்பவன் யார்? உண்மையில் இல்லாததை உண்மையாகக் காண்பதே, இருளின் {தமஸ் குணத்தின்} உண்மையான தன்மையாகும்.(35) இருளின் குணங்கள் பல்வேறு வகைகளில் உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இருளின் உயர்ந்த மற்றும் இழிந்த வடிவங்களை முறையாக என்னால் உங்களுக்கு விளக்கப்பட்டது. இங்கே குறிப்பிடப்பட்ட குணங்களை எப்போதும் மனத்தில் தாங்கும் மனிதன், இருள் தொடர்புடைய தன்மைகள் அனைத்தில் இருந்தும் நிச்சயம் விடுபடுவதில் வெல்வான்" என்றான் {பிரம்மன்}.(36)
அஸ்வமேதபர்வம் பகுதி – 36ல் உள்ள சுலோகங்கள் : 36
அஸ்வமேதபர்வம் பகுதி – 36ல் உள்ள சுலோகங்கள் : 36
ஆங்கிலத்தில் | In English |