Quality of Passion! | Aswamedha-Parva-Section-37 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 22)
பதிவின் சுருக்கம் : ரஜோ குணத்தைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்...
பிரம்மன், "இருப்பவற்றுள் சிறந்தவர்களே {பிராமணர்களே}, இப்போது ஆசை (குணம்) குறித்து {ரஜோ குணத்தை} உங்களுக்கு மிகச் சரியாக அறிவிக்கப் போகிறேன். உயர்வாக அருளப்பட்டவர்களே, ஆசை தொடர்புடைய குணங்கள் எவை என்பதைப் புரிந்து கொள்வீராக.(1)
(பிறருக்குத்) தீங்கிழைத்தல் {ஸந்தாபம்}, அழகு {ரூபம்}, உழைப்பு {ஸ்ரமம்}, இன்பம் {ஸுகம்} மற்றும் துன்பம் {துக்கம்}, குளிர் மற்றும் வெப்பம், தலைமை (அல்லது அதிகாரம்) {ஐஸ்வர்யம்}, போர் {சண்டை}, அமைதி, வாதம், நிறைவின்மை {வெறுப்பு}, நீடிக்குந்திறன் {பொறுமை},(2) வலிமை {பலம்}, வீரம் {சௌர்யம்}, செருக்கு {மதம்}, கோபம், முயற்சி {அலைதல்}, சச்சரவு (அல்லது மோதல்) {கலகம்}, பொறாமை, ஆசை, வன்மம் {கோள் சொல்வது}, போர் {யுத்தம்}, எனதென்ற உணர்வு அல்லது மமதை, (பிறரைப்) பாதுகாப்பது {ரக்ஷிப்பது},(3) கொலை, கட்டுதல், பீடித்தல், வாங்கல் மற்றும் விற்றல், வெட்டுதல், மற்றொருவன் அணிந்திருக்கும் கவசத்தைப் பிளத்தல்,(4) கடுமை {உக்ரம்}, கொடூரம் {பயங்கரம்}, நிந்தித்தல் {உரக்கப் பேசுதல்}, பிறர் குற்றங்களைச் சுட்டிக் காட்டல் {பிறனுடைய தனத்தில் ஆசைப்படுவது}, உலகம் சார்ந்த காரியங்களில் முற்றான அர்ப்பணிப்புள்ள எண்ணங்கள் {லோகத்தைப் பற்றின கவலை}, கவலை {தொடர்ச்சியான கவலை}, பகைமை {மாத்ஸர்யம்}, பிறரை நிந்தித்தல் {அவமதித்துப் பேசுவது}, போலிப் பேச்சு {பொய் சொல்வது}, போலியான அல்லது வீணான கொடைகள் {பொய்யான கொடை}, தயக்கம் மற்றும் ஐயம், பேச்சில் தற்பெருமை {விபரீதப் பேச்சு}, புகழ் {ஸ்தோத்திரம் செய்வது} மற்றும் இகழ் {நிந்திப்பது}, போற்றுதல் {கொண்டாதுவது}, ஆற்றல் {ப்ரதாபம்}, எதிர்ப்பு {பரிசர்யை},(5,6) (நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் பலவீனமானவர்களைக்) கவனித்தல் {சுஸ்ரூஷை, அதட்டல்}, (ஆசான்கள் மற்றும் பெற்றோரின் ஆணைகளுக்குக்) கீழ்ப்படிதல் {அடுப்பது}, தொண்டு {ஸேவை} அல்லது இக்கட்டில் உதவி, ஆசை அல்லது தாகத்தை வளர்த்தல், புத்திசாலித்தனம் அல்லது திறமையான நடத்தை {வியவஹாரத்தில் திறமை}, கொள்கை {நீதி பேசுவது}, கவனமின்மை {தவறுதல்}, தரக்குறைவாக நடத்தல் {அபவாதம் சொல்வது}, உடைமைகள் {எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வது},(7) மனிதர்கள், பெண்கள், விலங்குகள், உயிரற்ற பொருட்கள் மற்றும் வீடுகளுக்கு மத்தியில் நீடித்திருக்கும் பல்வேறு வகையான அலங்காரங்கள்,(8) துயரம் {மனவருத்தம்}, நம்பிக்கையின்மை, நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் {நியமங்கள்}, (நல்விளைவுகளை) எதிர்பார்க்கும் செயல்பாடுகள், பொதுத் தொண்டுக்குரிய பல்வேறு செயல்கள்,(9) ஸ்வாஹாவைப் பொறுத்தவரையில் உள்ள சடங்குகள் {ஸ்வாஹாகாரம்}, வணக்கம் {நமஸ்காரம்}, ஸ்வதா மற்றும் வஷட் சடங்குகள் {ஸ்வதாகாரம், வஷட்காரம்}, பிறரின் வேள்விகளை நடத்தித் தருதல் {யாகம் செய்விப்பது}, கல்வி போதித்தல் {ஓதுவித்தல்}, வேள்விகளைச் செய்தல் {யாகம் செய்தல்}, கல்வி {அத்யயனம் செய்வது},(10) கொடையளித்தல் {கொடுப்பது}, கொடையேற்றல் {வாங்குவது}, பரிகாரச் சடங்குகள் {பிராயச்சித்தங்கள்}, மங்கலச் செயல்கள் {மங்களமான காரியம்}, இதையும், அதையும் வேண்டி விரும்புதல், எதற்காகவோ, யாருக்காகவோ உணரப்படும் நோக்கத்தின் தகுதிகளில் உண்டாகும் அன்பு {ஸ்நேகம்},(11) துரோகம் ,வஞ்சனை {கபடம்}, மதிப்பு மற்றும் மதிப்பின்மை, களவு {திருட்டு}, கொலை {ஹிம்ஸை}, மறைக்கும் ஆசை {அருவருப்பு}, சோர்வு {மனவருத்தம்}, விழிப்புணர்வு,(12) பகட்டுத்தோற்றம் {டம்பம்}, அகந்தை {கர்வம்}, பற்று {ஆசை}, அர்ப்பணிப்பு {பக்தி}, மனநிறைவு {திருப்தி}, மகிழ்ச்சி {மிகுந்தஸந்தோஷம்}, சூதாட்டம், மரபுநயக்கேடு {ஜனங்களைப் பற்றிய பேச்சு}, பெண்களில் இருந்து எழும் உறவுகள் {ஸம்பந்தங்கள்}அனைத்தும், ஆடல் {நர்த்தனம்}, கருவியிசை {வாத்தியம்} மற்றும் பாடல்களில் {கானம்} பற்று {அனுபவித்தல்} ஆகிய இந்தக் குணங்கள் அனைத்தும் ஆசைக்குரியவை {ரஜோகுணத்திற்குரியவை} என்று சொல்லப்படுகின்றன.(13,14)
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைத் தியானிப்பவர்களும், அறம், பொருள் மற்றும் இன்பம் என்ற முத்தொகையில் {புருஷார்த்தங்களில்} அர்ப்பணிப்புள்ளவர்களும்,(15) ஆசையின் தூண்டுதலால் செயல்பட்டு, ஒவ்வொரு ஆசையின் பொருட்டும் செல்வத்தை அடைவதில் களிப்படைபவர்களுமான மனிதர்கள், ஆசையால் {ரஜோகுணத்தால்} சூழப்பட்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இம்மனிதர்கள் கீழ்நோக்கிய போக்கைக் கொண்டவர்களாவர் {அர்வாக்ஸ்ரோதஸுகள்}.(16) மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறக்கும் இவர்கள், இன்பத்திற்கு வசப்பட்டவர்களாகிறார்கள். இம்மைக்கு உரியவற்றிலும், மறுமைக்குரிய கனிகளிலும் இவர்கள் ஆசை கொள்கிறார்கள். இவர்கள் கொடை அளிப்பவர்களாகவும், கொடைகளை ஏற்பவர்களாகவும், பித்ருக்களுக்குக் காணிக்கைகளை அளித்து, வேள்வித்தீயில் ஆகுதிகளை ஊற்றுபவர்களாகவும் இருப்பார்கள்.(17) ஆசை குணங்களின் வகைகள் உங்களுக்கு (இவ்வாறே) அறிவிக்கப்பட்டன. அது {ரஜோ குணம்} வழிவகுக்கும் ஒழுக்க நடைமுறைகளும் உங்களுக்கு முறையாக விளக்கப்பட்டன. இந்தக் குணங்களை எப்போதும் புரிந்து கொள்ளும் மனிதன், ஆசை {ரஜோ குணம்} தொடர்புடைய இவை அனைத்தில் {ராஜஸமான எல்லாக் குணங்களில்} இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்வதில் வெல்கிறான்" என்றான் {பிரம்மன்}.(18)
அஸ்வமேதபர்வம் பகுதி – 37ல் உள்ள சுலோகங்கள் : 18
ஆங்கிலத்தில் | In English |