Quality of Goodness! | Aswamedha-Parva-Section-38 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 23)
பதிவின் சுருக்கம் : ஸத்வ குணத்தைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்...
பிரம்மன், "இனி, (நமது பட்டியலின்படி) மூன்றாவதாக வரும் சிறந்த குணத்தை {ஸத்வ குணத்தை} உங்களுக்குச் சொல்லப் போகிறேன். அஃது, உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதாகவும், குற்றமற்றதாகவும், நல்லோரின் ஒழுக்கமாகவும் அமைந்திருக்கிறது.(1)
இன்பம் {ஆனந்தம்}, நிறைவு {பிரீதி}, மேதகைமை {மேன்மை}, அறிவொளி {பிரகாசித்தல்}, மகிழ்ச்சி {ஸுகம்}, கஞ்சத்தனமின்மை (அல்லது ஈகை) {தைன்யமில்லாதிருத்தல்}, அச்சமின்மை {பயமில்லாதிருத்தல்}, மனநிறைவு {ஸந்தோஷம்}, நம்பிக்கை கொண்ட மனநிலை {ஸ்ரத்தை},(2) மன்னிக்கும் தன்மை {பொறுமை}, துணிவு {தைரியம்}, எந்த உயிரினத்திற்கும் தீங்கிழையாமை {அஹிம்ஸை}, சமத்துவம், வாய்மை, நேர்மை, கோபமின்மை, வன்மமின்மை {அஸூயையின்மை}, தூய்மை {சுத்தி}, புத்திக்கூர்மை {ஸாமர்த்தியம்}, ஆற்றல் {பாரக்ரமம்} (ஆகியவை நல்லியல்பின் குணம் தொடர்புடையனவாகும்).(3)
யோகக்கடமையில் அர்ப்பணிப்புள்ள ஒருவன், அறிவு {ஞானம்}, ஒழுக்கம் {கர்மம்}, தொண்டு {ஸேவை} ஆகியவற்றை வீணெனக் கருதி, மறுமையில் உயர்ந்ததை அடைகிறான்.(4) எனதென்ற கருத்தில் இருந்து விடுதலை, நானென்ற கருத்தில் இருந்து விடுதல், எதிர்பார்ப்புகளில் இருந்து விடுதல், அனைத்தையும் சம கண்ணில் பார்த்தல், ஆசையில் இருந்து விடுதலை ஆகிய இவையே நல்லோரின் நித்திய அறமாக {ஸனாதன தர்மமாக} அமைகின்றன.(5)
தன்னம்பிக்கை {நம்பிக்கை}, அடக்கம் {வெட்கம்}, மன்னிக்கும்தன்மை {பொறுமை}, துறவு {ஈதல்}, தூய்மை {சுத்தி}, சோம்பலின்மை, கொடூரமின்மை, மயக்கமின்மை {மோகமின்மை}, அனைத்து உயிரினங்களிடமும் கருணை, இழித்துக் கூறும் மனமின்மை {கோள் சொல்லாமை},(6) மகிழ்ச்சி {ஸந்தோஷம்}, நிறைவு {திருப்தி}, பேர் உவகை {கர்வமின்மை}, பணிவு {வணக்கம்}, நன்னடத்தை {நல்ல கார்யத்தைச் செய்வது}, அமைதியை அடைவதை நோக்கமாகக் கொண்ட செயல்கள் அனைத்திலும் தூய்மை {மோக்ஷத்திற்குரிய கர்மத்தைக் கபடமின்றிச் செய்தல்}, நேர்மையான புத்தி {சுத்தசித்தனாக இருத்தல்}, (பற்றுகளிலிருந்து) விடுதலை),(7) கருத்தின்மை {உதாஸீனனாக இருப்பது}, பிரம்மச்சரியம், முழுமையான துறவு {எல்லா ஆசைகளையும் விடுவது}, எனதென்ற கருத்தில் இருந்து விடுதலை {மமதையில்லாமை}, எதிர்பார்ப்புகளில் இருந்து விடுதலை {விரும்பாமை}, தொடர்ந்து நீதியைக் கடைப்பிடித்தல் {தர்மங்கெடாமல் இருப்பது},(8) கொடைகள் {தானம்}, வேள்விகள் {யாகம்}, கல்வி {அத்யயனம்}, நோன்புகள் {விரதம்}, கொடையேற்பு {பிரதிக்ரஹம்}, கடமைகளை நோற்றல், தவங்கள் ஆகியன வீணென்ற நம்பிக்கை,(9) என்ற இந்தக் குணங்களை ஒழுக்கமாகக் கொண்டவர்களும், நீதியைப் பின்பற்றுபவர்களும், வேதங்களுக்கு இணக்கமாக இருப்பவர்களுமான பிராமணர்கள், ஞானிகள் என்றும், சரியான பார்வை கொண்டவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்.(10)
பாவங்கள் அனைத்தையும் கைவிட்டு, துன்பத்தில் இருந்து விடுதலையடைந்தவர்களும், ஞானம் கொண்டவர்களுமான அம்மனிதர்கள், சொர்க்கத்தை அடைந்து, (தங்களுக்கென) பல்வேறு உடல்களைப் படைக்கிறார்கள்.(11)
சொர்க்கத்தில் வசிக்கும் தேவர்களைப் போலவே, இந்த உயர் ஆன்மாக்களும் தங்கள் மனத்தின் இயக்கத்தால் {ஈசித்வத்தால்} அனைத்தையும் ஆளும் சக்தி {வசித்வம்}, தற்கட்டுப்பாடு {லகுத்வம்}, நுட்பம் {அணுத்வம்} ஆகியவற்றை அடைகிறார்கள்.(12) இத்தகைய மனிதர்கள் மேல்நோக்கிய போக்கு கொண்டவர்களாக {ஊர்த்வஸ்ரோதஸுகளாகச்} சொல்லப்படுகிறார்கள். இவர்கள் அனைத்தையும் மாற்றியமைக்கவல்ல மெய்யான தேவர்களாக {வைகாரி தேவர்களாக} இருக்கிறார்கள். சொர்க்கத்தை அடையும் அவர்கள், தங்கள் இயல்பின்படியே அனைத்துப் பொருட்களையும் மாற்றி அமைக்கின்றனர்.(13) அவர்கள், தாங்கள் விரும்பும் பொருட்களை அடைந்து அவற்றை அனுபவிக்கின்றனர். மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, இவ்வாறே நான் நல்லியல்பின் {சத்வ} குணம் தொடர்புடைய ஒழுக்கத்தை உங்களுக்கு விளக்கிச் சொன்னேன். இவற்றை முறையாகப் புரிந்து கொள்ளும் ஒருவன் தான் விரும்பும் எந்தப் பொருளையும் அடைவான்.(14) நல்லியல்பு தொடர்பான குணங்களே குறிப்பாக அறிவிக்கப்பட்டன. அந்தக் குணங்களைக் கொண்ட ஒழுக்கமும் முறையாக நிறுவப்பட்டது. எந்த மனிதன் இந்தக் குணங்களை எப்போதும் புரிந்து கொள்வானோ, அவன் இந்தக் குணங்களில் பற்று கொள்ளாமலே இவற்றை அனுபவிப்பதில் வெல்வான்" என்றான் {பிரம்மன்}.(15)
அஸ்வமேதபர்வம் பகுதி – 38ல் உள்ள சுலோகங்கள் : 15
ஆங்கிலத்தில் | In English |