Three qualities! | Aswamedha-Parva-Section-39 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 24)
பதிவின் சுருக்கம் : முக்குணங்களைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்...
பிரம்மன், "குணங்கள் அனைத்தையும் ஒன்றிலிருந்து ஒன்று தனித்தனியாக அறிவிக்க இயலாது. ஆசை {ரஜஸ்}, நல்லியல்பு {சத்வம்} மற்றும் இருள் {தமஸ் குணங்கள்} ஒன்று கலந்த நிலையிலேயே காணப்படுகின்றன.(1) அவை ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. அவை ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. அவை ஒன்றையொன்று தங்கள் புகலிடமாகக் கொண்டுள்ளன. அதே போல அவை ஒன்றையொன்று பின்தொடர்கின்றன.(2) நல்லியல்பு {சத்வம்} இருக்கும்வரை ஆசையும் {ரஜஸும்} நீடித்திருக்கிறது. இதில் ஐயமேதும் இல்லை. இருளும் {தமஸும்}, நல்லியல்பும் {சத்வமும்} இருக்கும்வரை ஆசையும் {ரஜஸும்} நீடித்திருக்கிறது.(3) அவை ஒன்றாக இணைந்தும், கூட்டாக நகர்ந்தும் தங்கள் பயணத்தைச் செய்கின்றன. உண்மையில் காரணத்தோடோ, காரணமில்லாமலோ செயல்படும்போது அவரை ஒரே அமைப்பாகவே செயல்படுகின்றன.(4)
வளர்ச்சியில் எவ்வளவு வேறுபட்டாலும் ஒன்றோடொன்று சேர்ந்து செயல்படும் இவை அனைத்தும் பெருகும் வகையையும், குறையும் வகையையும் இப்போது அறிவிக்கப் போகிறேன்.(5) எங்கே (எடுத்துக்காட்டாக) தாழ்ந்த உயிரினங்களில் அதிக அளவில் இருள் {தமஸ்} இருக்கிறதோ, அங்கே ஆசை {ரஜஸ்} குறைவான அளவிலும், நல்லியல்பு {சத்வம்} அதைவிடக் குறைந்த அளவிலும் இருக்கிறது.(6) எங்கே நடுநிலை உயிரினங்களில் அதிக அளவில் ஆசை {ரஜஸ்} இருக்கிறதோ, அங்கே இருள் {தமஸ்} சிறிய அளவிலும், நல்லியல்பு {சத்வம்} அதைவிடச் சிறிய அளவிலும் இருக்கிறது.(7) எங்கே மேல்நோக்கான போக்குக் கொண்ட உயிரினங்களில் அதிக அளவில் நல்லியல்பு {சத்வம்} இருக்கிறதோ, அங்கே இருள் {தமஸ்} குறைந்த அளவிலும், ஆசை {ரஜஸ்} அதைவிடக் குறைந்த அளவிலும் இருக்கிறதென அறியப்பட வேண்டும்.(8)
நல்லியல்பானது {சத்வம் என்பது} புலன்களில் மாற்றங்களை விளைவிக்கும் ஊற்றாகும். மேலும் அதுவே சிறந்த அறிவொளியாகவும் இருக்கிறது. நல்லியல்பைவிட உயர்ந்த கடமை வேறேதும் விதிக்கப்படவில்லை.(9) நல்லியல்பில் {சத்வத்தில்} நிலைத்திருப்பவர்கள் மேல்நோக்கிச் செல்கிறார்கள். ஆசையில் {ரஜஸில்} நிலைத்திருப்பவர்கள் நடுவில் இருக்கிறார்கள். இருளில் {தமஸில்} நிலைத்திருப்பவர்கள், தாழ்ந்த குணங்களால் வகைப்படுத்தப்பட்டுக் கீழ்நோக்கி மூழ்குவார்கள்.(10) இருள் {தமஸ்} சூத்திரனில் நிகழ்கிறது; ஆசை {ரஜஸ்} க்ஷத்திரியனிலும், உயர்ந்ததாக இருக்கும் நல்லியல்பு {சத்வம்} பிராமணனிலும் நிகழ்கின்றன. இவ்வாறே மூன்று குணங்களும் மூன்று வகைகளிலும் {வர்ணங்களிலும்} இருக்கின்றன.(11) தொலைவில் இருந்து கண்டாலும், இருள், நல்லியல்பு மற்றும் ஆசை என்ற குணங்கள் மூன்றும் கலந்த நிலையிலும், கூட்டாகவும் காணப்படுகின்றன. அவை ஒருபோதும் தனியான நிலையில் காணப்படுவதில்லை[1].(12)
[1] "’தொலைவில் இருந்து கண்டாலும்’ என்பது, ’நுட்பமாக ஆய்வு செய்யாமல் மேம்போக்கான பார்வையில் கண்டாலும் கூட’ என்ற பொருளைத் தரும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தீச்செயல் செய்யும் மனிதர்கள், சூரியன் எழுவதைக் கண்டு அச்சத்தால் பீடிக்கப்படுகிறார்கள். பயணிகள் தங்கள் வழியில் வெப்பத்தால் பீடிக்கப்பட்டு, துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.(13) சூரியன் நல்லியல்பில் வளர்ந்தது; தீச்செயல் புரியும் மனிதர்கள் இருளை {தமஸைக்} குறிக்கின்றனர்; பயணிகள் தங்கள் வழியில் உணரும் வெப்பம் ஆசை {ரஜஸ்} குணம் என்று சொல்லப்படுகிறது.(14) ஒளியைக் குறிக்கும் சூரியன் நல்லியல்பாகும் {ஸத்வமாகும்}; வெப்பம் ஆசை {ரஜஸ்} குணம் கொண்டதாகும்; பர்வன் நாட்களில் சூரியன் மறைவது (அல்லது கிரஹணம்} இருளை {தமஸைக்} குறிக்கும் என்று அறியப்பட வேண்டும்.(15) இவ்வாறே இந்த முக்குணங்களும் ஒளியுடல்கள் அனைத்திலும் இருக்கின்றன. அவை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வழிகளில் மீண்டும் மீண்டும் செயல்படுகின்றன.(16)
அசைவில்லா பொருட்களின் மத்தியில் இருள் {தமஸ்} குணம் அதிக அளவில் இருக்கிறது. ஆசை {ரஜஸ்} தொடர்புடைய குணங்கள், தொடர் மாற்றங்களுக்கு உட்படும் {அழகு, உறைப்பு, புளிப்பு உள்ளிட்ட} குணங்களாக அவற்றில் {அந்த அசைவற்ற பொருட்களில்} இருக்கின்றன. அவற்றின் எண்ணெய் தன்மையுள்ள குணங்கள், நல்லியல்பின் {சத்வத்தின்} தொடர்புடையனவாகும்[2].(17) பகலை மூன்று வகையாகப் புரிந்து கொள்ள வேண்டும். இரவு மூன்று வகையாக இருக்குமாறே விதிக்கப்பட்டிருக்கிறது. பிறைநாட்கள் {பக்ஷங்கள்}, மாதங்கள், வருடங்கள், பருவகாலங்கள் {ருதுக்கள்}, ஸந்திகள்[3] ஆகியவையும் மூன்று வகையாக அறியத்தக்கவையே.(18) கொடுக்கப்படும் கொடைகள் மூன்று வகையாகும். அவற்றில் உண்டாகும் வேள்விகள் மூன்று வகையாகும். உலகங்கள் மூன்று வகையாகும்; தேவர்கள் மூன்று வகையாவர்; ஞானம் மூன்று வகையாகும்; பாதை அல்லது கதியும் மூன்று வகையாகும்.(19) கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம், அறம், பொருள், இன்பம், பிராணன், அபானன், உதானன் ஆகியவையும் முக்குணங்களால் நிறைந்தவையே.(20)
[2] "அண்டத்தில் உள்ள அசையாத பொருட்களிலும் முக்குணங்கள் இருக்கின்றன. இருளைப் பொருத்தவரையில் அஃது அவற்றில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆசையைப் பொருத்தவரையில், அது சமைத்தல், அல்லது கலத்தலின் விளைவால் காலத்திற்குக் காலம் மாறும் இயல்பைக் கொண்ட உறைப்பு, புளிப்பு, இனிப்பு முதலியவையாக இருக்கிறது. அவற்றின் எண்ணெய் தன்மைகள் நல்லியல்பின் தொடர்புடையனவாகச் சொல்லப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸ்தாவரங்களான பதார்த்தங்களில் தமஸ் அதிகமாக இருக்கிறது. (அழகு, உறைப்பு, புளிப்பு முதலான) ராஜஸ குணங்களும் மாறுகின்றன. (நெருப்பை உண்டுபண்ணிப் பிரகாசிக்கச் செய்வதால்) ஸ்நேஹமென்னும் ஸாத்விக குணமும் இருக்கிறது" என்றிருக்கிறது.
[3] "சந்திகள் என்பன, ஒரு பருவகாலம் முடிந்து மற்றொன்று தொடங்கும் இரு காலமும் இணைந்த பகுதியாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இவ்வுலகில் உள்ள எந்தப் பொருளிலும், அதில் உள்ள அனைத்திலும் முக்குணங்கள் நிறைந்திருக்கின்றன. அனைத்துப் பொருட்களிலும், அனைத்துச் சூழ்நிலைகளிலும் இந்த முக்குணங்களும் மாறி மாறி செயல்படுகின்றன.(21) உண்மையில், இந்த முக்குணங்களும் வெளிப்படாத ஒரு வடிவத்திலேயே எப்போதும் செயல்படுகின்றன. நல்லியல்பு {ஸத்வம்}, ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்கள் மூன்றின் படைப்பும் நித்தியமானவையே.(22) முக்குணங்களையும் உள்ளடக்கிய புலப்படாதது {அவ்யக்தமானது}, இருள் {தமஸ்}, காணப்படாதது {அவ்யக்தம்}, புனிதமானது {சிவம்}, நிலையானது {தாம்}, பிறப்பற்றது {ரஜஸ்}, கருவறை {யோனி}, நித்தியமானது {ஸநாதனம்}, இயற்கை {பிரகிருதி}, மாற்றம் அல்லது திருத்தம் {விகாரம்}, அழிவு {பிரளயம்}, பிரதானம், உற்பத்தி {பிரபவம்} மற்றும் ஈர்த்தல் {அப்யயம்}, வளர்ச்சியின்மை {அனுத்ரிக்தம்}, சிறிதல்லாதது (அதாவது பெரியது) {அநூனம்}, கலக்கமற்றது {அகம்பம்}, அசையாதது {அசலம்}, நிலையானது {த்ருவம்}, இருப்பில் உள்ளது {ஸத்}, இருப்பற்றது {அஸத்} என்று சொல்லப்படுகிறது.(23,24)
ஆன்மா தொடர்புடைய காரியங்களைத் தியானிப்போரால் இந்தப் பெயர்கள் அறியப்பட வேண்டும்.(25) புலப்படாததன் {அவ்யக்தத்தின்} பெயர்கள் அனைத்தையும், குணங்களையும், (அந்தக் குணங்களின்) தூய இயக்கங்களையும் {கதிகளையும்} மிகச் சரியாக அறிந்தவனும், பிரிவுகள் அனைத்தின் உண்மைகளையும் நன்கறிந்தவனும், உடலில் இருந்து விடுபட்டவனுமான {தேஹாபிமானம் விலகியவனுமான} மனிதன், குணங்கள் அனைத்தில் இருந்து விடுபட்டு {கெடுதியற்றவனாகி} முழுமையான மகிழ்ச்சியை அனுபவிக்கிறான்" என்றான் {பிரம்மன்}.(23)
அஸ்வமேதபர்வம் பகுதி – 39ல் உள்ள சுலோகங்கள் : 23
ஆங்கிலத்தில் | In English |