The great soul! | Aswamedha-Parva-Section-40 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 25)
பதிவின் சுருக்கம் : : மஹத்தத்வம் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்...
பிரம்மன், " புலப்படாததிலிருந்து முதலில் பெரும் நுண்ணறிவைக் கொண்டதும், அனைத்துக் குணங்களின் ஊற்றுக்கண்ணுமான பேரான்மாவானது {மஹத்தத்வம்} உண்டானது. அதுவே முதல் படைப்பென்று சொல்லப்படுகிறது.(1) அந்தப் பேரான்மாவானது {மஹத்தத்வமானது}, பேரான்மா, மதி, விஷ்ணு, ஜிஷ்ணு, பெரும் வீரமிக்கச் சம்பு {சம்பு, வீர்யவான்}, புத்தி, ஞானமடைவதற்கான வழிமுறைகள் {பிரஜ்ஞை}, உணர்வதற்கான வழிமுறைகள் {உபலப்தி}, புகழ் {கியாதி}, துணிவு {த்ருதி}, நினைவு {ஸ்ம்ருதி} என்று ஒத்த சொற்களால் {ஒரே பொருளுள்ள பல சொற்களால்} குறிப்பிடப்படுகிறது. கல்விமானான ஒரு பிராமணன் இஃதை அறிந்து கொண்டு ஒருபோதும் மாயையால் தாக்கப்படாமல் இருக்க வேண்டும்.(2,3)
அஃது அனைத்துப் பக்கங்களிலும் கைகளையும், கால்களையும் கொண்டுள்ளது. அனைத்துப் பக்கங்களிலும் அது காதுகளைக் கொண்டுள்ளது. அண்டத்தில் உள்ள அனைத்திலும் அது படர்ந்தூடுருவி இருக்கிறது.(4) பெருஞ்சக்தி கொண்ட அஃது அனைத்தின் இதயத்திலும் நிலைத்திருக்கிறது. நுட்பமடைதல் {அணிமா / உடலைப் பஞ்சினும் ஒப்பதாக மாற்றிப் பிறர் கண்களுக்குத் தோன்றாமல் மறைதல்}, அதிக எடையற்றத் தன்மையடைதல் {லகிமா / கனமற்றதாகும் ஆற்றல்}, செல்வாக்கு {பிராப்தி / மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடையப் பெறுதல் / காலநிலைகளை மாறச் செய்தல்} ஆகியவை அதனுடையவையே. அஃது அனைத்திற்கும் தலைவனாகவும் {ஈசானனாகவும்}, பிரகாசத்தோடு அடையாளம் காணப்படுவதாகவும் {ஜோதியாகவும்}, சிதைவை அறியாததாகவும் {அழிவற்றதாகவும்} இருக்கிறது.(5)
புத்தியின் இயல்பைப் புரிந்து கொண்டவர்கள் அனைவரும், நல்லியல்பின் மனநிலையில் அர்ப்பணிப்புடன் இருக்கும் அனைவரும், தியானம் பயிலும் அனைவரும், எப்போதும் யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவர்களும், வாய்மையில் உறுதியாக இருப்பவர்களும், புலன்களை அடக்கியவர்களும், ஞானம் கொண்டவர்களும், பேராசையில் இருந்து விடுபட்டவர்கள், கோபத்தை வென்றவர்கள், உற்சாகம் நிறைந்த இதயங்களைக் கொண்டவர்கள், ஞானம் கொண்டவர்கள், எனது என்ற கருத்துகளில் இருந்து விடுபட்டவர்கள், அகந்தையற்றவர்கள் ஆகியோர் அதனையே அடைகின்றனர்.(6,7)
அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்ட இவர்கள் அனைவரும் மேன்மையான {மகத்துவ} நிலையை அடைகிறார்கள். புனிதமானதாகவும், உயர்ந்த இலக்காகவும் இருக்கும் பேரான்மாவை {மகத்தத்வத்தைப்} புரிந்து கொள்ளும் மனிதன், மாயையிலிருந்து விடுபட்டவனாகிறான்.(8) சுயம்புவான விஷ்ணு முதன்மையான படைப்புகளின் தலைவனாகிறான். {இதயக்} குகையில் கிடப்பவனும், பரமனும் {மேலானவன்}, புராதனனும் {புராணபுருஷனும்}, அண்ட வடிவம் கொண்டவனும் {விஷ்வரூபனும்}, பொன்னார்மேனியனும் {ஸுவர்ணமயனும்}, புத்தியுடன் கூடிய மனிதர்கள் அனைவரின் உயர்ந்த இலக்காக {புத்திமான்களின் சிறந்த கதியாக} இருப்பவனுமான அந்தத் தலைவனை {பிரபுவை} இவ்வாறு அறியும் புத்தியுள்ள மனிதன், புத்தியைக் கடந்தவனாக வாழ்கிறான்" என்றான் {பிரம்மன்}.(9)
அஸ்வமேதபர்வம் பகுதி – 40ல் உள்ள சுலோகங்கள் : 9
ஆங்கிலத்தில் | In English |