Egoism! | Aswamedha-Parva-Section-41 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 26)
பதிவின் சுருக்கம் : அஹங்காரம் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்...
பிரம்மன், "முதலில் உண்டான அந்த மஹத் {நான் என்று உண்டானதால்) அஹங்காரம் என்றழைக்கப்படுகிறது. நான் என்று அஃது எழுந்தபோது, அஃது இரண்டாம் படைப்பென்று {ஸிருஷ்டி என்று}அழைக்கப்படலாயிற்று.(1)
அந்த அகங்காரத்தின் மாறுதல்களில் இருந்தே உயிரினங்கள் அனைத்தும் உண்டானதால், அதுவே {அஹங்காரமே} அவற்றின் {அந்த உயிரினங்களின்} பிறப்பிடம் {பூதாதி வைகாரிகன்} என்று சொல்லப்படுகிறது. அது தூய ஒளியாகவும் {தைஜஸனனாகவும்}, நனவுநிலையை ஆதரிப்பதாகவும் {சேதனனாகவும்} இருக்கிறது. அதுவே பிரஜாபதியாகும்[1].(2)
[1] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "பூதாதி - பூதங்களுக்கு ஆதியாயுள்ளது. தாமஸாஹங்காரத்திற்குக் காரணப் பெயர் என்பது பழைய உரை; வைகாரிகன் - மஹான் என்னும் விகாரத்தினிடமிருந்து உண்டானது என்பது பழைய உரை; தைஜஸன் - ரஜஸின் விகாரம் என்பது பழைய உரை" என்றிருக்கிறது.
அஃது ஒரு தேவனாகவும், தேவர்களைப் படைப்பவனாகவும், மனமாகவும் இருக்கிறது. அதுவே மூவுலகங்களையும் படைக்கிறது. "இவை அனைத்தும் நானே" என எது உணருமோ அதுவே இதுவென {அபிமானம் / அகங்காரமெனச்} சொல்லப்படுகிறது.(3)
ஆன்மா தொடர்புடைய அறிவில் நிறைவுடன் இருப்பவர்களும், ஆன்மாவைத் தியானிப்பவர்களும், வேதகல்வி மற்றும் வேள்விகளின் மூலம் வெற்றியை அடைந்தவர்களுமான தவசிகளுக்கான நித்திய உலகம் {ஸனாதனமான லோகம்} {அனிருத்தனென்று பெயருள்ள} அதுவே {அஹங்காரமே} ஆகும்.(4)
ஆன்மாவின் நனவாலேயே ஒருவன் குணங்களை அனுபவிக்கிறான். அனைத்து உயிரினங்களுக்கும் தோற்றுவாயாக இருப்பதும், அனைத்து உயிரினங்களையும் படைப்பதுமான அஃது (அனைத்து உயிரினங்களையும்) இவ்வழியிலேயே உண்டாக்குகிறது. அதுவே அனைத்து மாற்றங்களையும் விளைவிக்கிறது. அதுவே அனைத்தையும் அசைய வைக்கிறது. தன்னொளியால் அதுவே அண்டத்திற்கும் ஒளியூட்டுகிறது" என்றான் {பிரம்மன்}.
அஸ்வமேதபர்வம் பகுதி – 41ல் உள்ள சுலோகங்கள் : 5
ஆங்கிலத்தில் | In English |