Kshetrajna! | Aswamedha-Parva-Section-43 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 28)
பதிவின் சுருக்கம் : க்ஷத்திரியர்களிடம் ரஜோ குணத்தின் முக்கியத்துவம்; ஸத்வ குணம் கொண்ட பிராமணர்கள்; ஓவ்வொன்றின் சிறப்பியல்புகள்; தீங்கிழையாமை; க்ஷேத்ரஜ்ஞன் ஆகியவற்றைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்...
பிரம்மன், "மனிதர்களில் அரச க்ஷத்திரியர்கள் நடுக்குணம் {ரஜோ குணம்} கொண்டவர்கள். வாகனங்களில் யானை (அவ்வாறே); காட்டில் வசிப்பவற்றுள் சிங்கம்;(1) (வேள்வி) விலங்குகள் அனைத்திலும் ஆடு; வளைகளில் வாழ்பவற்றுள் பாம்பு; கால்நடைகளுக்கு மத்தியில் காளை; பெண்களுக்கு மத்தியில் ஆண்கள் (ஆகியோரும் அவ்வாறே).(2) இவ்வுலகில் நியக்ரோதம் {ஆல மரம்}, ஜம்பு {நாவல் மரம்}, பிப்பலம் {அரசமரம்}, சால்மலி {முள்ளிலவமரம்}, சிம்சபை {நூக்கம் / சீஷம்}, மேஷசிருங்கம், {மூங்கில் வகையைச் சார்ந்த} கீசகம் ஆகியவை மரங்களில் முதன்மையானவையாக இருக்கின்றன என்பதில் ஐயமில்லை.(3) ஹிமவான் {இமயமலை}, பாரிபாத்ரம் {பாரியாத்ரம்}, ஸஹ்யம், விந்தியம், திரிகூடவான், ஸ்வேதம், நீலம், பாஸம், கோஷ்டவான் {ராஷ்ட்ரவான்},(4) குருஸ்கந்தம் {ப்ருசஸ்கந்தம்}, மஹேந்திரம், மால்யவான் ஆகிவை மலைகளில் முதன்மையானவையாகும். அதே போல மருத்துகள் கணங்களில் முதன்மையானவர்கள் ஆவர்.(5)
கோள்கள் அனைத்திற்கும் சூரியனும், நட்சத்திரக்கூட்டங்கள் அனைத்திற்கும் சந்திரமாஸும் தலைவர்களாவர். யமன் பித்ருக்களின் தலைவனாவான்; பெருங்கடலானது ஆறுகள் அனைத்திற்கும் தலைமையானதாகும்.(6) வருணன் நீர்நிலைகளின் மன்னனாவான். இந்திரன் மருத்துகளின் மன்னனாவான். வெப்பங்கள் {உஷ்ணங்கள்} அனைத்திற்கும் அர்க்கனும், ஒளிகள் {ஜ்யோதிகள்} அனைத்திற்கும் இந்திரனும் மன்னர்களாவர்[1]. பூதங்களுக்கு அக்னியும், பிராமணர்களுக்குப் பிருஹஸ்பதியும் நித்திய தலைவர்களாவர். சோமன் (இலையுதிர்) மூலிகைகளின் தலைவனாகவும், விஷ்ணு வலிமை நிறைந்த மனிதர்களனைவரிலும் முதன்மையானவனாகவும் திகழ்கின்றனர்.(8) ருத்திரர்களுக்கு {ரூபங்களுக்குத்} தாஷ்டிரியும் {துவஷ்டாவும்}, அனைத்து உயிரினங்களுக்கு {பசுக்களுக்கு} சிவனும் மன்னர்களாக இருக்கின்றனர். தொடக்கச் சடங்குகள் {தக்ஷிணைகள்} அனைத்திலும் முதன்மையாக வேள்வி முதன்மையானதாக இருக்கிறது, தேவர்களில் மகவத் {இந்திரன்} முதன்மையானவனாக இருக்கிறான்[2].(9) திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் தலைவனாக வடக்கு இருக்கிறது; கல்விமான்களான பிராமணர்கள் அனைவருக்கும் தலைவனாகப் பெருஞ்சக்தி கொண்ட சோமன் திகழ்கிறான். மதிப்புமிக்க ரத்தினர்கள் அனைத்திற்கும் குபேரனும், தேவர்கள் அனைவருக்கும் புரந்தரனும் {இந்திரனும்} தலைவர்களாக இருக்கின்றனர்.(10)
[1] கும்பகோணம் பதிப்பில், "ஜலங்களுக்கு வருணனும், தேவர்களுக்கு இந்திரனும் அரசர்களாகச் சொல்லப்படுகின்றனர். உஷ்ணங்களுக்கு ஸூர்யனும், ஜ்யோதிகளுக்குச் சந்திரனும் அதிபதிகளாகச் சொல்லப்படுகின்றனர்" என்றிருக்கிறது.
[2] கும்பகோணம் பதிப்பில், "ரூபங்களுக்குத் துவஷ்டா சிறந்த அரசன். பசுக்களுக்குச் சிவன் ஈஸ்வரன். தக்ஷிணைகளுக்கு யாகமும், வேதங்களுக்கு ருக்குக்களும், திசைகளுக்கு வடக்கும், பிராம்மணர்களுக்குப் பிரதாபமுள்ள சந்திரனும் அரசர்கள்" என்றிருக்கிறது.
இவ்வாறே பொருட்கள் அனைத்திலும் உயர்ந்த படைப்பு இருக்கிறது. பிரஜாபதி உயிரினங்கள் அனைத்தின் தலைவனாக இருக்கிறான். எந்தப் பொருளாக இருந்தாலும், நானே பிரம்மம் நிறைந்தவன், நானே முதன்மையானவன்.(11) என்னையோ, விஷ்ணுவையோ தவிர உயர்ந்த பொருள் வேறேதும் இல்லை. பிரம்மம் நிறைந்தவனான பெரும் விஷ்ணு, மன்னர்கள் அனைவருக்கும் மன்னனாக {பேரரசனாக} இருக்கிறான். அவனையே ஆட்சியாளனாகவும், படைப்பாளனாகவும், பிறப்பற்ற ஹரியாகவும் அறிவீராக.(12) மனிதர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், ராட்சசர்கள், தேவர்கள், தானவர்கள் மற்றும் நாகர்களின் ஆட்சியாளன் அவனே ஆவான்.(13) ஆசை நிறைந்த மனிதர்களால் பின்தொடரப்படுபவர்களுக்கு {பெண்களுக்கு} மத்தியில் அழகிய கண்களைக் கொண்ட மஹேஸ்வரியே பெருந்தேவியாவாள்[3].(14) அவள் பார்வதி என்று வேறு பெயரிலும் அழைக்கப்படுகிறாள். உமா தேவியையே பெண்கள் அனைவரிலும் முதன்மையானவளாகவும், மங்கலமிக்கவளாகவும் அறிவீராக. இன்பத்தின் ஊற்றுக்கண்ணாகத் திகழும் பெண்களுக்கு மத்தியில் பெரும் காந்தியைக் கொண்ட அப்ஸரஸ்களே முதன்மையானவர்களாவர்.(15)
[3] கும்பகோணம் பதிப்பில், "காமுகர்களால் அனுஸரிக்கப்பட்ட எல்லா ஸ்திரீகளுக்கும் அழகான கண்ணுள்ளவளும், மஹேஸ்வரருடைய மனைவியும் மஹாதேவியுமான அந்தப் பார்வதியானவள் பிரபுவாகச் சொல்லப்படுகிறாள்" என்றிருக்கிறது.
மன்னர்கள் பக்தியில் விருப்பமுள்ளவர்களாக இருக்கிறார்கள், பிராமணர்கள் பக்திக்குச் செல்லும் பாலங்களாக {அணைகளாக} இருக்கின்றனர். எனவே, மன்னன் எப்போதும் இருபிறப்பாளர்களைப் பாதுகாக்க முனைய வேண்டும்.(16) எந்த மன்னர்களின் ஆட்சிப்பகுதிகளில் நல்ல மனிதர்கள் நலிவடைகிறார்களோ அவர்கள் தங்கள் வகைக்கான அறங்களை இழந்தவர்களெனக் கருதப்படுவார்கள். மறுமையில் அவர்கள் தவறான பாதைகளில் செல்ல நேரிடும் {அவர்கள் இழிவான கதியை அடைவார்கள்}.(17) எந்த மன்னர்களின் ஆட்சிப்பகுதிகளில் நன்மக்கள் பாதுகாக்கப்படுகிறார்களோ, அவர்கள் இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.(18) உண்மையில், அந்த உயர் ஆன்மாக்கள் உயர்ந்த இருக்கையை அடைகிறார்கள். மறுபிறப்பாளர்களில் முதன்மையானோரே இதைப் புரிந்து கொள்வீராக. இனி எப்போதும் நீடித்திருக்கும் கடமைகளின் குறியீடுகளை {தர்மலக்ஷணத்தைச்} சொல்லப் போகிறேன்.(19) தீங்கிழையாமையே உயர்ந்த கடமையாகும். தீங்கிழைத்தல் மறத்தின் குறியீடாகும். காந்தி தேவர்களின் குறியீடாகும். மனிதர்கள் செயல்களைத் தங்கள் குறியீடுகளாகக் கொண்டுள்ளனர்.(20)
வானம் (அல்லது வெளி) ஒலியைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது. காற்று {வாயு} தீண்டலைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது. ஒளியின் சிறப்பியல்பு நிறமாகவும் {ரூபமாகவும்}, நீரின் சிறப்பியல்பு சுவையாகவும் இருக்கின்றன.(21) அனைத்துப் பொருட்களையும் தாங்கும் பூமி மணத்தைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டிருக்கிறது. வாக்கானது, செம்மைப்படுத்தப்பட்ட உயிரெழுத்துகளையும், மெய்யெழுத்துகளையும் கொண்ட சொற்களைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது.(22) மனம் எண்ணத்தை {சிந்தையைத்} தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது. மேலும் எண்ணமானது, புத்தியின் சிறப்பியல்பாகவும் சொல்லப்படுகிறது. மனத்தால் எண்ணப்படும் பொருட்கள் புத்தியால் துல்லியமாக உறுதி செய்யப்படுகின்றன.(23) புத்தியானது, விடாமுயற்சியின் மூலம் பொருட்கள் அனைத்தையும் தெரிந்து கொள்கிறது என்பதில் ஐயமில்லை. அறியப்படாமல் இருப்பது (வாழ்வது) நல்ல மனிதனின் சிறப்பியல்பாகும்[4].(24) அர்ப்பணிப்பு {பக்தி}, செயல்களைத் தன் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது. ஞானமானது, துறவின் சிறப்பியல்பாக இருக்கிறது. எனவே, புத்தியுள்ள மனிதன் ஞானத்தை நோக்கமாகக் கொண்டு துறவை பயில வேண்டும்.(25) துறவை மேற்கொள்பவனும், ஞானம் கொண்டவனும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும், இருளையும் {அறியாமையையும்}, மரணத்தையும், மூப்பையும் கடந்தவனுமான மனிதன் உயர்ந்த இலக்கை அடைகிறான்.(26)
[4] "நல்ல மனிதர்கள் தாங்கள் செய்யும் செயல்கள் என்னென்ன என்பதை ஒருபோதும் பிறர் அறிய அனுமதிப்பதில்லை. அஃதாவது அவர்கள் பகட்டுக்கு அந்நியர்கள் என்பது இங்கே பொருளாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மனமானது சிந்தையை லக்ஷணமாகக் கொண்டது. சிந்தையானது புத்தியை லக்ஷணமாகக் கொண்டதென்று சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வுலகில் (புருஷனானவன்) மனத்தால் ஆலோசிக்கப்பட்ட விஷயங்களைப் புத்தியினால் நிச்சயிக்கிறான். புத்தியானது நிச்சயத்தால் அறியப்படுகிறது; இதில் ஸம்சயமில்லை. மனத்திற்குத் தியானம் லக்ஷணம். ஆத்மாவுக்கு அவ்யக்தம் லக்ஷணம்" என்றிருக்கிறது.
இவ்வாறே நான் கடமைகளின் குறியீடுகள் குறித்து உங்களுக்கு முறையாக அறிவித்தேன். இனி, குணங்களை அடைவது (புரிந்து கொள்வது) குறித்து உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(27) பூமி தொடர்புடைய மணம், மூக்கால் அடையப்படுகிறது. மூக்கில் வசிக்கும் காற்றானது, மணத்தை உணர்ந்து கொள்வதற்காக (ஒரு முகவராக) நியமிக்கப்பட்டதைப் போல இருக்கிறது.(28) சுவையானது நீரின் சாரமாக இருக்கிறது. அது நாக்கால் அடையப்படுகிறது. நாவில் வசிக்கும் சோமன், சுவையை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறான்.(29) ஒளியுடலின் குணம் நிறமாகும். அது கண்களால் அடையப்படுகிறது. எப்போதும் கண்களில் வசிப்பவனாக ஆதித்தியன், நிறத்தை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறான்.(31) தீண்டலானது எப்போதும் காற்றுத் தொடர்பானதாக (காற்றின் குணமாக) இருக்கிறது. அது தோலால் உணரப்படுகிறது. தோலில் எப்போதும் வசிக்கும் காற்று {வாயு}, தீண்டலை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது.(31)
வானத்தின் குணம் ஒலியாகும். அது காதுகளால் அடையப்படுகிறது. காதுகளில் வசிக்கும் திசைகள் அனைத்தும், ஒலியை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கின்றன.(32) மனத்தின் குணம் எண்ணம் {சிந்தை} ஆகும். அது புத்தியால் அடையப்படுகிறது. இதயத்தில் வசித்து நனவைத் தாங்குபவன் {ஜீவன்}, மனத்தை உணர்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறான்.(33) புத்தியானது, உறுதிப்பாடு அல்லது நிச்சய உணர்வின் வடிவத்திலும், மஹத்-ஆனது, ஞானத்தின் வடிவத்திலும் உணரப்படுகின்றன. உணரப்படாதது (பிரகிருதி), நிச்சய உணர்வுக்குப் பிறகு அனைத்துப் பொருட்களையும் அடைவதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவானதாகும். இதில் ஐயமேதும் இல்லை[5].(34) சாரத்தைப் பொறுத்தவரையில், நித்தியமானதும், குணங்களற்றதுமான க்ஷேத்ரஜ்ஞன், சின்னங்களால் {குறியீடுகளால் / லிங்கத்தால்} அடையப்பட இயலாததாக இருக்கிறது. எனவே சின்னங்களற்ற க்ஷேத்ரஜ்ஞனின் சிறப்பியல்பானது, தூய ஞானமாகும்.(35) புலப்படாதது, க்ஷேத்ரம் என்றழைக்கப்படும் சின்னத்தில் வசித்துக் கொண்டு, குணங்களை உண்டாக்குவதாகவும், ஈர்ப்பதாகவும் இருக்கிறது. அது மறைந்திருந்தாலும், நான் அதைப் பார்க்கவும், அறியவும், கேட்கவும் செய்கிறேன்.(36)
[5] "ஒருவனின் சொந்த அடையாளத்தையும், ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்ட பொருட்களையும் குறித்த அறிவானது பிரகிருதியால் தலைமை தாங்கப்படுகிறது என்பது இங்கே பொருளாகத் தோன்றுகிறது. "நான் இவ்வாறானவன்", "இஃது இவ்வாறானது" என்ற அறிவு எங்கே இருக்கிறது என்று கேட்கப்பட்டால், அது பிரகிருதி அல்லது இயற்கையில் இருந்து வருகிறது என்பதே பதிலாக இருக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "புத்தியானது (தன் ஸ்வரூபமான) நிச்சயத்தாலும், மஹத்துவமானது (தன் ஸ்வரூபமான) ஞானத்தாலும் அறியப்படுகின்றன. இவை நிச்சயித்து அறிவதால் வ்யக்தமானாலும் (இயற்கையில்) அவ்யக்தமே; இதில் ஸம்சயமில்லை" என்றிருக்கிறது.
புருஷன் அஃதை அறிகிறான்; எனவே அவன் க்ஷேத்ரஜ்ஞன் என்று அழைக்கப்படுகிறான். க்ஷேத்ரஜ்ஞன், குணங்களின் இயக்கங்களையும், இயக்கமற்ற நிலையையும் உணர்கிறான்.(37) மீண்டும் மீண்டும் உண்டாகுபவையும், புத்தியற்றவையுமான குணங்கள், படைக்கப்பட வேண்டிய பொருட்களாகவும், தொடக்கம், நடுநிலை மற்றும் முடிவுகளுடன் கூடியதாகவும் தங்களை ஒருபோதும் அறிவதில்லை.(38) உயர்ந்ததும், பெரியதும், குணங்களையும், குணங்களில் பிறக்கும் பொருட்களையும் கடந்திருப்பதுமான ஒன்றை {பிரம்மத்தை} க்ஷேத்ரஜ்ஞன் மட்டுமே அடைகிறான்; வேறெதுவும் அடைவதில்லை.(39) எனவே, கடமைகளைப் புரிந்து கொள்ளும் ஒருவன், குணங்களையும், புத்தியையும் கைவிட்டு, தன் பாவங்கள் அழிக்கப்பட்டு, குணங்களைக் கடந்தவனாக க்ஷேத்ரஜ்ஞனில் நுழைகிறான் {பரமாத்மாவை அடைகிறான்}.(40) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனும், எவருக்கும் தலைவணங்காதவனும், ஸ்வாஹா இல்லாதவனும் {ஸ்வாஹாகாரமற்றவனும்}, அசையாதவனும், இருப்பிடமற்றவனுமாக க்ஷேத்ரஜ்ஞன் இருக்கிறான். அவனே உயர்ந்த தலைவனாவான் {தெய்வமாவான் / விபுவாவான்}" என்றான் {பிரம்மன்}.(41)
அஸ்வமேதபர்வம் பகுதி – 43ல் உள்ள சுலோகங்கள் : 41
ஆங்கிலத்தில் | In English |