Knowledge! | Aswamedha-Parva-Section-44 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 29)
பதிவின் சுருக்கம் : ஞானமே மோக்ஷஸாதனம் என்பது குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்...
பிரம்மன், "தொடக்கம், நடுநிலை, முடிவு ஆகியவற்றையும், பெயர் மற்றும் சிறப்பியல்புகளைக் கொண்டவை அனைத்தையும், அவற்றை அடைவதற்குரிய வழிமுறைகளுடன் நான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(1) முதலில் பகல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பிறகே இரவு எழுந்தது. மாதங்களில் வளர்பிறை நாட்கள் முதன்மையானவை என்று சொல்லப்படுகிறது. விண்மீன் கூட்டங்கள் சிரவணத்தை {திருவோணம் நட்சத்திரத்தைத்} தங்களில் முதன்மையானதாகக் கொண்டுள்ளன; பருவ காலங்கள் தங்களில் பனிக் காலத்தை (குளிர் காலத்தை) முதன்மையானதாகக் கொண்டுள்ளன.(2) மணங்கள் அனைத்தின் பிறப்பிடமாகப் பூமியும், சுவைகள் அனைத்தின் பிறப்பிடமாக நீரும் இருக்கின்றன. நிறங்கள் அனைத்தின் பிறப்பிடமாகச் சூரிய ஒளியும், தீண்டல் உணர்வுகளின் பிறப்பிடமாகக் காற்றும் {வாயுவும்} இருக்கின்றன.(3) அதே போல ஒலியின் பிறப்பிடமாக வெளி (அல்லது வானம்) இருக்கிறது. இவையே பூதங்களின் குணங்களாகும். இனி, பொருட்கள் அனைத்திலும் முதன்மையானவற்றையும், உயர்ந்தவற்றையும் நான் அறிவிக்கப் போகிறேன்.(4)
ஒளிகள் {தேஜஸுகள்} அனைத்திலும் சூரியனே முதன்மையானவன். பூதங்கள் அனைத்திலும் நெருப்பே முதன்மையானது {அக்னியே முதன்மையானவன்}. கல்விக்கிளைகள் {வித்தைகள்} அனைத்திலும் சாவித்ரியே முதன்மையானவள். தேவர்கள் அனைவரிலும் பிரஜாபதியே முதன்மையானவன்.(5) வேதங்கள் அனைத்திலும் ஓம் என்ற அசையே முதன்மையானது, காற்றுகள் {வாயுக்கள்} அனைத்திலும் உயிர் காற்றான பிராணனே முதன்மையானது. இவ்வுலகில் பரிந்துரைக்கப்படும் அனைத்தும் சாவித்ரி என்றழைக்கப்படுகிறது[1].(6) சந்தஸ்கள் அனைத்திலும் காயத்ரி முதன்மையானது; (வேள்வி) விலங்குகள் அனைத்திலும் ஆடு முதன்மையானது. நான்கு கால் உயிரினங்களில் பசுக்களே முதன்மையானவை. மனிதர்கள் அனைவரிலும் இருபிறப்பாளர்கள் முதன்மையானவர்கள்.(7)
[1] "பிராமணர்கள் முதலியவர்களாலும், மிலேச்சர்களாலும் நோற்கப்படும் வழிபாட்டு முறைகள் அனைத்தையும் குறிக்கும் வகையில் சாவித்ரி என்ற சொல் இங்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நீலகண்டர் விளக்குகிறார். முன்பு பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்லுக்குத் விளக்கம் சொல்லத் திரும்புவது, சிங்கத்தைப் போலத் திரும்பிப் பார்க்கும் தருணமாகச் சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எல்லாவித்தைகளுக்கும் ஸாவித்ரி ஆதியாகவுள்ளது. இவ்வுலகில் ஜபிக்கத்தகுந்தவையெல்லாம் ஸாவித்ரி என்று சொல்லப்படுகின்றது" என்று அடுத்தடுத்து வருகிறது. கங்குலியில் அவ்வாறு இல்லை.
பறவைகள் அனைத்திலும் பருந்தே முதன்மையானது. வேள்விகளில் நெருப்பில் தெளிந்த நெய்யை ஊற்றுவதே {ஹோமமே} முதன்மையானது. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, ஊர்வனவற்றில் பாம்பே முதன்மையானது.(8) யுகங்கள் அனைத்திலும் கிருதமே முதன்மையானது; இதில் ஐயமேதும் இல்லை. மதிப்புமிக்கப் பொருட்கள் அனைத்திலும் பொன்னே முதன்மையானது.(9) செடிகள் அனைத்திலும் யவம் {வாற்கோதுமை} முதன்மையானது. உண்ணத்தக்க, அல்லது விழங்கத்தக்க அனைத்துப் பொருட்களிலும் உணவே முதன்மையானது. பருகத்தகுந்த நீர்மங்கள் அனைத்திலும் நீரே முதன்மையானது.(10)
அசையாத பொருட்கள் அனைத்திலும் வேறுபாடில்லாமல், பிரம்மனின் நித்திய புனிதக் களமான பிலக்ஷமே {ப்லக்ஷமரமே [அரசமரமே]} முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது[2].(11) பிரஜாபதிகள் அனைவரிலும் நானே முதன்மையானவன். இதில் ஐயமேதும் இல்லை. நினைத்தற்கரிய ஆன்மாவும், தானே இருப்பவனுமான விஷ்ணு என்னிலும் உயர்ந்தவனாகச் சொல்லப்படுகிறான்[3].(12) மலைகள் அனைத்திலும் பெரும் மேருவே முதலில் பிறந்ததெனச் சொல்லப்படுகிறது. அடிவானத்தின் முக்கிய மற்றும் துணைத் திசைகள் அனைத்திலும் கிழக்கே முதன்மையானதாகவும், முதலில் பிறந்ததாகவும் சொல்லப்படுகிறது.(13)
[2] கும்பகோணம் பதிப்பில், "ஸ்தாவரங்களான எல்லா இடங்களுள்ளும் வேற்றுமையின்றிப் பிரம்மக்ஷேத்ரம் புண்ணியமானது. ஸ்தாவரங்களான எல்லா விருக்ஷங்களுள்ளும் ப்லக்ஷமரம் மிகச் சிறந்ததென்று கருதப்படுகிறது" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "அசையாத இடங்கள் அனைத்திற்கும் மத்தியில் எவ்வித விதிவிலக்கும் இல்லாமல் எப்போதும் பிலக்ஷமே முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது. இதுவே பிரம்மக்ஷேத்ரம் எனப்படும் புனிதப்பகுதியாகும்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "ஏழு த்வீபங்களில் ஒன்றான பிலக்ஷத்வீபத்தை இது குறிக்கலாம். எனினும், குருக்ஷேத்திரமே பிரம்மக்ஷேத்ரம் என்று எப்போதும் சொல்லப்படுகிறது. குருக்ஷேத்திரத்தில் வளரும் பிலக்ஷ மரத்தையும் இது குறிக்கலாம்" என்றிருக்கிறது.[3] கும்பகோணம் பதிப்பில், "சிந்திக்க முடியாத ஸ்வபாவமுள்ளவரும், தாமாக ஆவிர்ப்பவருமான விஷ்ணுவானவர் எனக்கு மேலானவரென்று நன்கு கருதப்பட்டவர்" என்றிருக்கிறது.
ஆறுகள் அனைத்திலும், மூன்று ஓடைகளைக் கொண்ட கங்கையே முதலில் பிறந்தவளாகச் சொல்லப்படுகிறாள். அதே போலக் கிணறுகள் மற்றும் நீரின் கொள்ளிடங்கள் அனைத்திலும் பெருங்கடலே முதலில் பிறந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(14) தேவர்கள், தானவர்கள், பூதங்கள், பிசாசங்கள், பாம்புகள் {உரகர்கள்}, ராட்சசர்கள், மனிதர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள் ஆகியோர் அனைவருக்கும் உயர்ந்த தலைவனாக {பிரபுவாக} ஈஸ்வரன் இருக்கிறான்.(15) பிரம்மம் நிறைந்தவனும், மூவுலகங்களிலும் தனக்கு உயர்ந்தவர் எவரும் இல்லாதவனுமான பெரும் விஷ்ணுவே {மஹாவிஷ்ணுவே} அண்டமனைத்திலும் முதன்மையானவனாக இருக்கிறான்.(16)
வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} அனைத்திலும் இல்லற வாழ்வுமுறையே {கிருஹஸ்தாஸ்ரமமே [இல்லறமே]} முதன்மையானதாகும். இதில் ஐயமேதுமில்லை. புலப்படாததே {அவ்யக்தமானதே} அனைத்திற்கும் பிறப்பிடமாகவும் முடிவாகவும் உள்ளது.(17) சூரியன் மறைவில் பகலும், சூரியன் எழுச்சியில் இரவும் முடிகின்றன. இன்பத்தின் முடிவு கவலையாகவும், கவலையின் முடிவு இன்பமாகவும் எப்போதும் இருக்கிறது.(18) ஒன்றுதிரளும் அனைத்தும் வெளிப்படுவதையும், ஏற்றங்கள் அனைத்தும் வீழ்ச்சியையும் தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன. தொடர்புகள் அனைத்தும் தொடர்பறுதலையும், பிறப்பு இறப்பையும் தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன.(19)
செயல்கள் அனைத்தும் அழிவையே தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன, பிறந்தவை அனைத்தும் நிச்சயம் இறப்பைச் சந்திக்கின்றன. அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் இவ்வுலகில் நிலையற்றவையாக இருக்கின்றன.(20) வேள்வி {யாகம்}, கொடைகள் {தானம்}, தவங்கள், கல்வி {அத்யயனம்}, நோன்புகள் {விரதங்கள்}, நியமங்கள் அனைத்தும் அழிவையே தங்கள் முடிவாகக் கொண்டுள்ளன. ஞானம் மட்டுமே முடிவற்றதாகும் {ஞானத்திற்கு நாசமில்லை}.(21) எனவே, அமைதியான ஆன்மாவைக் கொண்டவனும், புலன்களை அடக்கியவனும், நான், எனது என்ற மமதையில் இருந்து விடுபட்டவனும், அகங்காரமற்றவனுமான ஒருவன் தூய அறிவால் {சுத்தமான ஞானத்தால்} பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்" என்றான் {பிரம்மன்}.(22)
அஸ்வமேதபர்வம் பகுதி – 44ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English |