The behaviour that befits the good! | Aswamedha-Parva-Section-45 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 30)
பதிவின் சுருக்கம் : காலச்சக்கரம் எனும் உடல்; இல்லறம்; நல்லோருக்குப் பொருந்தும் ஒழுக்கம் ஆகியவை குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்...
பிரம்மன், "வாழ்வுச்சக்கரம் {காலச்சக்கரம்} சுழன்று கொண்டே இருக்கிறது. அது {அந்தச் சக்கரம்} புத்தியைத் தன் பலமாகவும், மனத்தை (அது சார்ந்திருக்கும்) அச்சாகவும் {ஸ்தம்பமாகவும்}, புலன்கூட்டங்களைக் கட்டுகளாகவும், (ஐந்து) பெரும்பூதங்களைக் குழிசியாகவும் {ஆர்களுக்குக் குடமாகவும்}, இல்லத்தைச் சுற்றளவாகவும் கொண்டிருக்கிறது[1].(1) அது முதுமை {ஜரை} மற்றும் துயரம் {சோகம்} ஆகியற்றில் மூழ்கியிருக்கிறது, நோய்களையும் {வியாதிகளையும்}, பேரிடர்களையும் {வியஸங்களையும்} தன் சந்ததியாகவும் கொண்டிருக்கிறது. அந்தச் சக்கரம் காலம் மற்றும் இடம் {தேசம்}தொடர்புடையதாக இருக்கிறது. அஃது உழைப்பு மற்றும் உடற்பயிற்சியைத் தன் ஒலியாகக் கொண்டுள்ளது.(2) பகலும், இரவும் அந்தச் சக்கரத்தின் சுழற்சிகளாக உள்ளன. வெப்பம் மற்றும் குளிரால் அது சூழப்பட்டிருக்கிறது. அஃது இன்பதுன்பங்களை இணைப்புகளாகவும், பசி தாகங்களைத் தன்னில் {இணைப்புகளில்} அறையப்படும் ஆணிகளாகவும் கொண்டுள்ளது.(3) சூரிய ஒளியும், நிழலும் அதன் தடங்களாக (விளைவுகளாக) இருக்கின்றன. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் உள்ள குறுகிய காலத்திலேயே அதைக் கலக்கம் கொள்ளவல்லதாக இருக்கிறது. அது பயங்கரமான மாய நீரால் சூழப்பட்டிருக்கிறது. அஃது எப்போதும் நனவற்றநிலையில் சுழன்று கொண்டே இருக்கிறது.(4) அது மாதங்களாலும், அரைமாதங்களாலும் {பக்ஷங்களாலும்} அளக்கப்படுகிறது. அஃது எப்போதும் சீரற்றதாக (எப்போதும் மாறும் தன்மை கொண்டதாக), அனைத்து உலகங்களிலும் திரிகிறது. தவமும், நோன்புகளும் அதற்குச் சேறு ஆகின்றன. ஆசையின் சக்தி அதை இயக்குகிறது[2].(5)
[1] "பந்தனம் அல்லது கட்டு என்று சொல்வதன் மூலம் சக்கரத்தின் எந்தப் பகுதி குறிப்பிடப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. நான் அதை ஆரங்கள் என்று எடுத்துக் கொள்கிறேன். பரிஸ்கந்தம் என்பது சமூகம், அல்லது ஒரு பொருளாக அமையும் உட்பொருட்களின் கூட்டமாகும். இங்கே குழிசி என்பதை மத்தி {அல்லது மையம்} என்று பொருள் கொள்ளலாம். இல்லம் சுற்றளவாகச் சொல்லப்படுவது ஏனெனில், அந்தச் சுற்றளவே சக்கரத்தின் எல்லைகளாக இருப்பதைப் போல இல்லமும், வாழ்வில் பற்றுகள் மற்றும் பந்தங்களின் எல்லைகளை நிர்ணயிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் இல்லம் என்பதற்குப் பதில் நிமேஷம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, "மஹாபூதங்களாகிற ஆர்களுக்குக் குடமாயிருப்பதும், நிமேஷமாகிற வட்டையுள்ளதும்" என்றிருக்கிறது.[2] கும்பகோணம் பதிப்பில், "எப்பொழுதும் சென்று கொண்டிருப்பதும், அறிவற்றதும், மாஸத்தாலும், பக்ஷத்தாலும் அளக்கப்பட்டதும் ஒரே விதமாக இராததும் மேலாகவும், நடுவாகவும், கீழாகவுமுள்ள உலகங்களில் ஸஞ்சரிப்பதும், தமோகுணஸமூகமாகிற சேறுள்ளதும், ரஜோகுணத்தின் வேகமாகிற தூண்டுகிறவனுள்ளதும்" என்றிருக்கிறது.
அது பேரகங்காரத்தால் ஒளியூட்டப்பட்டு, குணங்களின் மூலம் தக்க வைக்கப்படுகிறது. (விரும்பியதை அடையாததால் உண்டாகும்) எரிச்சல்கள் {மனச்சோர்வுகள்} அதைச் சுற்றிலும் கட்டப்பட்டுள்ள பிணைப்புகளாக இருக்கின்றன. அது துன்பம் மற்றும் அழிவுக்கு மத்தியில் சுழல்கிறது.(6) அது செயல்கள் {கர்மங்கள்} மற்றும் செயல்கருவிகள் {காரணங்கள்} ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கிறது. அது பெரியதாகவும், பற்றுகளால் நீட்டிக்கப்படுவதாகவும் இருக்கிறது. ஆசை மற்றும் பேராசையின் {லோபத்தின்} மூலம் அது நிலையற்ற தன்மையை அடைகிறது. அது பலவகையான அறியாமைகளில் இருந்து உண்டாக்குகிறது.(7) அஃது அச்சம் மற்றும் மயக்கம் கொள்வதாகவும், அனைத்து உயிரினங்களின் மயக்கத்துக்குக் காரணமாகவும் இருக்கிறது. அஃது இன்ப துன்பங்களை நோக்கி நகர்ந்து, ஆசை மற்றும் கோபத்தை உடைமையாக அடைகிறது.(8) அது மஹத் முதல் திரள் பூதங்கள் வரையிலான உட்பொருள்களால் ஆனது. அஃது இடைவிடாத உற்பத்தி மற்றும் அழிவின் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. அதன் வேகம் மனத்தைப் போன்றதாகும், மேலும் அது மனத்தையே தன் எல்லையாகக் கொண்டுள்ளது[3].(9) முரண்பட்ட இரட்டைகள் மற்றும் நனவற்ற நிலை ஆகியவற்றுடன் தொடர்புடைய இந்த வாழ்வுச்சக்கரமானது {உடலானது}, இறவாதவர்களுடன் {தேவர்களுடன்} கூடிய அண்டத்தைக் கைவிடவும், சுருக்கவும், சரிபார்க்கவும் வேண்டும்[4].(10)
[3] கும்பகோணம் பதிப்பில், "ஆனந்தத்திற்காகவும், பிரீதிக்காகவும் ஸஞ்சரிப்பதும், காமத்திற்கும், குரோதத்திற்கும் ஸ்வாதீனமானதும், மஹத்தத்வம் முதல் விசேஷம் வரையிலுள்ள பதார்த்தங்களுள்ளதும், அவ்யக்தமானதும், அழிவற்ற ஸம்ஸாரகாரணமும், மனமாகிற வேகமுள்ளதும், காலமாகிற சக்ரமானது ஒழிவற்றுச் சென்று கொண்டிருக்கிறது" என்றிருக்கிறது.[4] கும்பகோணம் பதிப்பில், "(மானாவமான முதலான) த்வந்துவங்களோடு கூடினதும், அசேதனமுமான இந்தச் சரீரமாகிற சக்கரமானது உலகத்தைப் படைக்கும்; அழிக்கும்; விழித்துக் கொள்ளச் செய்யும்; உறங்கச் செய்யும்" என்றிருக்கிறது.
இந்த வாழ்வுச்சக்கரத்தின் இயக்கத்தையும், நிறுத்தத்தையும் எப்போதும் துல்லியமாகப் புரிந்து கொள்ளும் மனிதன், உயிரினங்கள் அனைத்தின் மத்தியிலும் ஒருபோதும் மயங்கியவனாகத் தென்படுவதில்லை.(11) அனைத்து மனப்பதிவுகளில் {எண்ணங்களில்} இருந்தும் விடுபட்டு, முரண்பட்ட இரட்டைகள் அனைத்திலும் இருந்து விலகி, பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட ஒருவன் உயர்ந்த இலக்கை அடைகிறான்.(12) இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, பிரம்மச்சாரி, காட்டில் ஒதுங்கி வாழ்பவன் {வானப்பிரஸ்தன்}, துறவி {ஸந்யாசி} ஆகிய வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} நான்கும் இல்லறத்தானின் வாழ்வுமுறையையே தங்கள் அடித்தளமாகக் கொண்டுள்ளன.(13) இந்த உலகில் பரிந்துரைக்கப்படும் விதிமுறைகளில் {ஆசிரமங்களில்} எவற்றைக் கடைப்பிடித்தாலும் நன்மையே பயக்கும். இத்தகைய நோற்றல் எப்போதும் உயர்வாகவே பேசப்பட்டிருக்கிறது.(14) சடங்குகளால் முதலில் தூய்மையடைந்தவனும், முறையாக நோன்புகளை நோற்றவனும், உயர்ந்த தகுதிகளைக் கொண்ட ஓர் இனத்தில் பிறந்தவனும், வேதங்களைப் புரிந்து கொண்டவனுமான ஒருவன், (தன் ஆசானின் இல்லத்தில் இருந்து) திரும்ப வேண்டும்[5].(15)
[5] "ஆசானின் இல்லத்திற்குச் சென்று, கல்வி பயின்று அங்கே தொண்டாற்றி, தன் படிப்பை முடித்து இல்லற வாழ்வு நோற்கத் திரும்ப வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "குணங்களால் மேன்மைபெற்ற (பிராம்மண) ஜாதியில் பிறந்தவன் முந்தி (ஜாதகர்மமுதலான) ஸம்ஸ்காரங்களால் ஸம்ஸ்கரிக்கப்பட்டவனாகி உள்ளபடி விரதங்களை அனுஷ்டித்து வேதங்களை அறிந்தவனாகி ஸமாவர்த்தனம் செய்து கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது.
தான் மணந்து கொண்ட மனைவியிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் நல்லோரைப் போன்ற ஒழுக்கத்துடன், புலன்களை அடக்கி, நிறைந்த நம்பிக்கையுடன் கூடிய ஒருவன் இவ்வுலகில் ஐந்து வேள்விகளைச் செய்ய வேண்டும்.(16) தேவர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு உணவளித்த பிறகு எஞ்சியதை உண்பவனும், தன் வாழ்வுமுறையின்படி {ஆசிரமத்தின்படி} வேள்விகளையும், கொடைகளையும் முறையாகச் செய்பவனும்,(17) பற்றில்லாமல் கைகள் மற்றும் கால்களைச் செயல்படுத்துபவனும், பற்றில்லாமல் தன் கண்ணைச் செயல்படுத்துபவனும், தவங்களில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனும், வாக்கு மற்றும் வாக்கின் வரம்புகளைப் பற்றில்லாமல் செயல்படுத்தாதவனுமான ஒருவன், சிஷ்டன் அல்லது நல்லவன் என்ற பகுப்பின் {பிரிவின்} கீழ் வருவான்[6].(18) அவன் எப்போதும் புனிதநூலை {பூணாலைத்} தரிக்கவும், (தூய) வெள்ளுடை உடுத்தவும், தூய நோன்புகளை நோற்கவும், எப்போதும் நல்லோரின் துணையுடன் இருக்கவும், கொடைகளை அளிக்கவும், தற்கட்டுப்பாட்டைப் பயிலவும் வேண்டும்.(19) அவன் தன் காமத்தையும், வயிற்றையும் அடக்கி, உலகளாவிய கருணையைப் பயின்று, நல்லோருக்குப் பொருந்தும் ஒழுக்கத்தில் {சிஷ்டாசாரத்தில் பொருந்தியவனாகத்} தன்னை வகைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் மூங்கில் தடியையும், நீர் நிறைந்த குடத்தையும் {கமண்டலுவையும்} சுமக்க வேண்டும்.(20)
[6] கும்பகோணம் பதிப்பில், "தேவதைகளுக்கும், அதிதிகளுக்கும் (அர்ப்பணம் செய்து) மிச்சத்தைப் புஜிப்பவனும், வேதத்தில் சொல்லிய கர்மங்களில் பற்றுதலுள்ளவனும், சக்திக்குத் தக்கவாறு விதிப்படி யாகமும், தானமும் செய்பவனுமாக இருக்க வேண்டும். பாணி, பாதம், கண், வாக்கு, சரீரம் இவைகளின் விஷயங்களில் ஆசையற்று முனியாக இருக்க வேண்டும். இது சிஷ்டனுடைய லக்ஷணம்" என்றிருக்கிறது.
கல்வி பயின்றவனான அவன் கற்பிக்கவும், தானே வேள்வி செய்யவும், பிறரின் வேள்வியை நடத்தித் தரவும் வேண்டும். அவன் தான் பெற்ற கொடைகளை அளிக்கவும் {கொடையளிக்கவும்} வேண்டும். உண்மையில் ஒருவன் இந்த ஆறு செயல்களின் மூலம் தன் ஒழுக்கத்தை வகைப்படுத்திக் கொள்ள வேண்டும்[7].(21) (சீடர்களுக்குக்) கற்பித்தல், பிறரின் வேள்விகளை நடத்தித் தருதல், தூய்மையானவனிடம் இருந்து கொடைகளை ஏற்றல் ஆகிய இந்த மூன்று செயல்களும் பிராமணர்களுக்கான வாழ்வாதாரமாக {ஜீவனோபாயாமாக} அமைகின்றன என்பதை அறிவீராக.(22) கொடையளித்தல், கல்வி கற்றல் மற்றும் வேள்வி செய்தல் என்று எண்ணிக்கையில் மூன்றாக எஞ்சியிருக்கும் கடமைகள் தகுதியுடன் {புண்ணியத்துடன்} கூடியவையாக இருக்கின்றன[8].(23) தவம் செய்பவனாகவும், தற்கட்டுப்பாடுடையவனாகவும், உலகளாவிய கருணை பயில்பவனாகவும், மன்னிக்கும் தன்மை கொண்டவனாகவும், அனைத்து உயிரினங்களையும் சமமான பார்வையில் பார்ப்பவனாகவும் கடமைகளை அறிந்தவனாகவும் இருக்கும் மனிதன், அந்த மூன்று செயல்களில் ஒருபோதும் கவனமில்லாமல் இருந்து விடக்கூடாது {அவற்றைத் தவறாமல் செய்ய வேண்டும்}.(24) தூய இதயம் கொண்டவனும், இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} பின்பற்றுபவனும், கடும் நோன்புகளை நோற்பவனும் இவ்வாறு அர்ப்பணிப்புடன் இருப்பனும், இவ்வாறு கடமைகள் அனைத்தையும் தன் சக்திக்குத் தகுந்தவாறு செய்வபனும், கல்விமானுமான பிராமணன், சொர்க்கத்தைக் கைப்பற்றுவதில் வெல்வான்" என்றான் {பிரம்மன்},(25)
[7] கும்பகோணம் பதிப்பில், "ஓதல், ஓதுவித்தல், யாகம் செய்தல், யாகம் செய்வித்தல், ஈதல், ஏற்றல் எனும் ஆறுவிதமான தொழிற்களையும் செய்ய வேண்டும்" என்றிருக்கிறது.[8] "இவை மூன்றும் புண்ணியத்தை உண்டாக்குபவை என்று சொல்லப்படுவதாகத் தெரிகிறது. எனவே, இவற்றைச் செய்ய வேண்டும். எனினும், முதல் மூன்றும் வாழ்வாதாரம் ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அஸ்வமேதபர்வம் பகுதி – 45ல் உள்ள சுலோகங்கள் : 25
ஆங்கிலத்தில் | In English |