The highes goal! | Aswamedha-Parva-Section-46 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 31)
பதிவின் சுருக்கம் : பிரம்மசர்யம், வானப்ரஸ்தமுள்ளிட்ட மேலான தர்மங்களையும், உயர்ந்த இலக்கை அடையும் வழிமுறையையும் முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்...
பிரம்மன், "மேற்குறிப்பிட்ட வழியில் தன் சக்திக்குத் தகுந்தவாறு முறையாகப் படிப்பவனும், பிரம்மச்சாரியாக வாழ்பவனும், தன் வகைக்கான கடமைகளில் அர்ப்பணிப்புள்ளவனும், கல்வி கொண்டவனும், நோன்புகள் நோற்பவனும், புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துபவனும், ஆசானுக்கு ஏற்புடையதும், நன்மையானதும் எதுவோ அதில் அர்ப்பணிப்புள்ளவனும், வாய்மைக் கடமை பயில்வதில் உறுதியாக இருப்பவனும், எப்போதும் தூய்மையுள்ளவனுமான ஒருவன்,(1,2) தன் ஆசானின் அனுமதியுடன் உணவை இகழாமல் உண்ண வேண்டும். பிச்சையில் கிட்டியவற்றால் அமைந்த ஹவிஷ்யத்தை அவன் உண்ண வேண்டும். மேலும் அவன் (வழிகாட்டுதலின் படியே) நிற்கவும், அமரவும், செயல்படவும் வேண்டும்[1].(3) அவன் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு குவிந்த மனத்துடன் ஒரு நாளைக்கு இரண்டு முறை நெருப்பில் ஆகுதிகளை ஊற்ற வேண்டும். அவன் எப்போதும் வில்வத்தலோ, பலாசத்தாலோ ஆன தண்டத்தைத் தரிக்க வேண்டும்.(4) மறுபிறப்பாள மனிதனின் ஆடைகள் பட்டு, பருத்தி, மான் தோல் அல்லது முழுமையாகப் பழுப்புச் சிவப்பு நிறத்தில் இருக்கும் ஆடையாகவோ இருத்தல் வேண்டும்.(5)
[1] "ஹவிஷ்யம் என்பது ஒரு குறிப்பிட்ட வகையில் சமைக்கப்பட்டுத் தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும் உணவாகும். அஃது இறைச்சியற்றதாக இருக்க வேண்டும். அதில் பாலோ, நெய்யோ இருக்கலாம்; ஆனால் ஒரே குடம் அல்லது பாத்திரத்தில்தான் தொடர்ந்து சமைக்கப்பட வேண்டும். பாத்திர மாற்றம் அனுமதிக்கப்படுவதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
முஞ்சப்புல்லாலான கச்சையும் {அரைநாணும்} இருக்க வேண்டும். அவன் தன் தலையில் சடாமுடி தரித்துத் தினமும் தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும். அவன் புனித நூல் {பூணூல்} தரிக்கவும் {யஜ்ஞோபவீதமுள்ளவனும்}, சாத்திரங்களைப் படிக்கவும், பேராசையில் இருந்து விடுபடவும், நோன்புகள் நோற்பதில் உறுதியாக இருக்கவும் வேண்டும்.(6) அவன் மனத்தை அடக்கியவாறு தூய நீரைக் கொண்டு செய்யப்படும் படையல்களால் தேவர்களை நிறைவடையச் செய்ய வேண்டும். அத்தகைய பிரம்மச்சாரி மெச்சத்தகுந்தவனாவான்.(7) மேலீர்க்கப்பட்ட உயிர்வித்துடன், மனத்தைக் குவித்து இவ்வாறு அர்ப்பணிப்புடன் இருக்கும் ஒருவன் சொர்க்கத்தைக் கைப்பற்றுவதில் வெல்கிறான்.(8) தூய்மைச் சடங்குகள் அனைத்தாலும் தூய்மையடைந்து, பிரம்மச்சாரியாக வாழும் ஒருவன், தன் கிராமத்தில் இருந்து வெளியேறி, அடுத்ததாக (பற்றுகள் அனைத்தையும்) துறந்து, காடுகளில் தவசியாக வாழ வேண்டும்.(9) அவன் விலங்குத் தோல்கள் அல்லது மரப்பட்டைகளை உடுத்திக் கொண்டு, காலையும், மாலையும் தன் தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும். எப்போதும் காட்டுக்குள்ளேயே வாழும் அவன், ஒருபோதும் மக்கள் வசிக்கும் இடத்திற்குத் திரும்பக் கூடாது.(10)
விருந்தினர்கள் வரும்போது அவர்களை மதித்து, உறைவிடமளிக்கும் அவன், கனிகள், இலைகள், கிழங்குகள் மற்றும் சியாமகம் {சாமை} ஆகியவற்றை உண்டு வாழ வேண்டும்.(11) அவன் சோம்பலில்லாமல் தான் பெறும் நீர், காற்று மற்றும் காட்டுப் பொருட்கள் அனைத்தையும் கொண்டு வாழ வேண்டும். அவன் தனது தொடக்க விதிமுறைகளின்படி முறையான வரிசையில் இவற்றைக் கொண்டு வாழ வேண்டும்[2].(12) அவன் தன்னிடம் வரும் விருந்தினருக்கு கனிகளையும், கிழங்குகளையும் கொடுத்து மதிக்க வேண்டும். அதன் பிறகு அவன் சோம்பலில்லாமல் தன்னிடம் உள்ள வேறு உணவுப் பொருட்களையும் கொடுக்க வேண்டும்.(13) பேச்சைக் கட்டுப்படுத்தி, தேவர்களையும், விருந்தினர்களையும் நிறைவடையச் செய்த பிறகு அவன் உண்ணலாம். அவன் மனம் பொறாமையில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும். அவன் சிறிதளவே உண்டு, எப்போதும் தேவர்களைச் சார்ந்திருக்க வேண்டும்.(14) தற்கட்டுப்பாடுடன், உலகளாவிய கருணை பயின்று, மன்னிக்கும் தன்மையுடன் கூடிய அவன் (நாவிதரின் இயக்கங்களுக்கு இடமளிக்காமல்) தாடியும், முயிரும் வளர்க்க வேண்டும். வேள்விகளைச் செய்து, சாத்திரக் கல்விக்குத் தன்னை அர்ப்பணிக்கும் அவன், வாய்மைக் கடமையை நோற்பதில் எப்போதும் உறுதியுள்ளவனாக இருக்க வேண்டும்[3].(15)
[2] "அவன் முதலில் கனிகள், கிழங்குகள், இலைகள் முதலியவற்றைக் கொண்டு வாழ வேண்டும். பிறகு நீர், அதன்பிறகு காற்று ஆகியவற்றைக் கொண்டு வாழ வேண்டும். காட்டுத் துறவிகளில் பல்வேறு வகை உண்டு. அவர்களுடைய வாழ்க்கை வழிமுறை தொடக்கச் சடங்குகளின் போது தீர்மானிக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] கும்பகோணம் பதிப்பில், "மனம் சலியாதவனும், மிதமாகப் புஜிப்பவனும், தேவதைகளை ஆஸ்ரயித்தவனும், இந்திரியங்களை அடக்கினவனும், (எல்லாப் பிராணிகளிடத்திலும்) ஸ்நேஹமுள்ளவனும், பொறுமையுள்ளவனும், தலைமயிர்களையும், மீசையையும் தரிப்பவனும், ஹோமம் செய்பவனும், வேதாத்யஅயனத்தை ஸ்வபாவமாகக் கொண்டவனும், ஸத்யத்தையும், தர்மத்தையும் முக்யகதியாகக் கொண்டவனும் எப்பொழுதும் சரீரத்தில் அபிமானமற்றவனும், ஸமர்த்தனும் எப்பொழுதும் வனத்திலேயே வசிப்பவனும், ஜாக்ரதையுள்ளவனுமாக இருக்க வேண்டும்" என்றிருக்கிறது.
எப்போதும் தூய்மையாக உள்ள உடலுடனும், புத்திசாலித்தனத்துடனும், குவிந்த மனத்தோடு காட்டில் வசித்து, புலன்களை அடக்கியிருக்கும் ஒரு காட்டுத்துறவி {வானப்பிரஸ்தன்} இவ்வாறே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு சொர்க்கத்தைக் கைப்பற்றுவான்.(16) விடுதலையை {முக்தியை} அடைய விரும்பும் ஓர் இல்லறத்தானோ {கிருஹஸ்தனோ}, பிரம்மச்சாரியோ, காட்டுத்துறவியோ சிறந்த ஒழுக்கமுறை என்றழைக்கப்படும் நடைமுறையை {உத்தம நடையைப்} பின்பற்ற வேண்டும்.(17) முற்றான தீங்கிழையாமை என்ற உறுதிமொழியை அனைத்து உயிரினங்களுக்கும் அளிக்கும் அவன், தன் செயல்பாடுகள் அனைத்தையும் முற்றிலும் துறக்க வேண்டும். அவன் அனைத்து உயிரினங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதில் தன் பங்கைச் செலுத்தி, உலகளாவிய நட்பைப் பயின்று, புலன்கள் அனைத்தையும் அடக்கி ஒரு தவசியாக இருக்க வேண்டும்.(18) கேட்காமலும் {யாசியாமலும்}, தொல்லையில்லாமலும் {நிச்சயிக்காமலும்}, தானாகவும் {தற்செயலாகவும்} கிடைக்கும் உணவைக் கொண்டு அவன் நெருப்பை அமைக்க வேண்டும். எந்த இடத்தில் புகை அடங்கியிருக்கிறதோ, எங்கே வசிப்பவர்கள் அனைவரும் ஏற்கனவே உண்டுவிட்டனரோ அங்கே அவன் பிச்சை வாங்கச் செல்ல வேண்டும்[4].(19) விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் ஒழுக்கத்தை அறிந்த மனிதன், {தான் செல்லப்போகும் இடத்தில்} (சமையலுக்குப் பயன்படுத்தும்) பாத்திரங்கள் துலக்கப்பட்ட பிறகு {அங்கே} பிச்சை கேட்க செல்ல வேண்டும்.(20)
[4] "ஒரு சந்நியாசி பிச்சை கேட்கக் கூடாது; அவ்வாறு பிச்சை கேட்க நேர்ந்தால் அவன் ஏற்கனவே சமையல் முடிந்து, அனைவரும் உண்ட நிலையில் இருக்கும் கிராமத்திற்கோ, வீட்டிற்கோ செல்ல வேண்டும். தன்னைக் காணும் இல்லறத்தானால் உணவு வழங்கப்படாத நிலையில் ஒரு சந்நியாசிக்கு இந்த வரம்பு வழங்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தன்னுயிரைத் தாங்கிக் கொள்வதற்கு வேண்டியதை மட்டுமே வேண்டி, குவிந்த மனத்துடன் பிச்சை கேட்கச் செல்லும் அவன் உரிய நேரத்திற்காகக் காத்திருக்க வேண்டும். பிறருக்குப் பொதுவான வருவாயில் அவன் விருப்பம் கொள்ளக்கூடாது, கௌரவிக்கப்படும்போது உண்ணக்கூடாது.(21) துறவி {சந்நியாசி} வாழ்வுமுறையைப் பின்பற்றும் மனிதன், மதிப்புடன் வழங்கப்படும் கொடைகளைத் தவிர்ப்பதற்காகத் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும். உண்ணும்போது, பிறர் உண்டதன் எச்சத்தையோ, கசப்பு, துவர்ப்பு, கார்ப்புள்ள உணவையோ அவன் உண்ணக்கூடாது.(22) இனிய சுவை கொண்ட உணவு வகைகளையும் அவன் உண்ணக்கூடாது. அவன் தன் உயிரைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு மட்டுமே உண்ண வேண்டும்.(23) விடுதலையை {முக்தியை} அறிந்த ஒருவன், எந்த உயிரினத்திற்கும் தடங்கல் ஏற்படுத்தாமல் தன் வாழ்வாதாரத்தை அடைய வேண்டும். பிச்சை வாங்கச் செல்லும்போது (அதே நோக்கத்துடன் செல்லும்) மற்றொருவனைப் பின்தொடர்ந்து செல்லக் கூடாது.(24)
அவன் தன் பக்தியை வெளியிடக்கூடாது; அவன் ஆசையில் இருந்து விடுபட்டவனாக ஒதுக்குப்புறமான {ஆளரவமற்ற} இடங்களுக்கே செல்ல வேண்டும். வெறுமையான வீட்டையோ, காட்டையோ, ஏதோவொரு மரத்தடியையோ, ஆற்றையோ,(25) ஒரு மலைக்குகையையோ அவன் தன் உறைவிடமாகக் கொள்ளலாம். கோடைக் காலத்தில் அவன் மக்கள் வசிக்கும் இடங்களில் ஓரிரவை மட்டுமே கழிக்கலாம்; மழைக்காலங்களில் அவன் ஒரே இடத்தில் வசிக்கலாம்.(26) அவன் ஒரு புழுவைப் போல உலகில் சூரியனால் சுட்டிக் காட்டப்படும் பாதையில் பயணிக்க வேண்டும். உயிரினங்களிடம் கொள்ளும் கருணையை நோக்கமாகக் கொண்டு அவன் பூமியில் நடக்க வேண்டும்.(27) அவன் ஒருபோதும் எதையும் குவிக்கக்கூடாது, நண்பர்களுடன் வசிப்பதைத் தவிர்க்க வேண்டும். விடுதலையை {முக்தியை} அறிந்த மனிதன் நாள் தோறும் தன் செயல்கள் அனைத்தையும் தூய நீரைக் கொண்டே செய்ய வேண்டும்.(28) அத்தகைய மனிதன் (ஆற்றிலிருந்தோ, குளத்திலிருந்தோ) இறைக்கப்பட்ட நீரைக் கொண்டே எப்போதும் தன் தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும். தீங்கிழையாமை {அஹிம்ஸை}, பிரம்மச்சரியம், வாய்மை {ஸத்யம்}, எளிமை {கபடமின்மை},(29) கோபத்திலிருந்து விடுதலை {குரோதமின்மை}, இகழ்வதில் இருந்து விடுதலை {அஸூயையின்மை}, தற்கட்டுப்பாடு {மனவடக்கம்}, புறங்கூறுவதில் இருந்து விடுதலை {கோட்சொல்லாமை} ஆகியவற்றைப் பெற்ற ஒருவன் புலனடக்கத்துடன் கூடியவனாக, உறுதியுடன் இந்த எட்டு நோன்புகளையும் பயில வேண்டும்.(30)
அவன் எப்போதும் பாவமற்றதும், வஞ்சகமற்றதும், கோணலற்றதுமான ஒழுக்க முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். பற்றிலிருந்து விடுபட்டவனான அவன், விருந்தினராக வருபவருக்கு (குறைந்தது) ஒரு கவளம் உணவையாவது உண்ணக் கொடுக்க வேண்டும்.(31) அவன் தன் உயிரைத் தாங்கிக் கொள்ளும் வாழ்வாதாரத்திற்குத் தேவையான அளவுக்கு மட்டுமே உண்ண வேண்டும். நீதிமிக்க வழிமுறைகளில் அடையப்பட்ட உணவையே அவன் உண்ண வேண்டும், ஆசையின் ஆணைகளைப் பின்தொடரக்கூடாது.(32) உணவு, உடை ஆகியவற்றைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ளக்கூடாது. மேலும், அவன் தான் உண்ணக்கூடிய அளவைத் தவிர அதிகமாக ஏற்கக்கூடாது.(33) அவன் பிறரிடம் இருந்து கொடைகளை ஏற்கவோ, பிறருக்குக் கொடையளிக்கவோ தூண்டுதல் பெறக்கூடாது. உயிரினங்களின் ஆதரவற்ற நிலையின் காரணமாக ஞானமுள்ள ஒரு மனிதன் எதையும் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.(34) அவன் பிறரின் உடைமைகளை அபகரிக்கவோ, எதையும் கேட்காமல் எடுத்துக் கொள்ளவோ கூடாது. எதையும் அனுபவித்து விட்டு, அதை மீண்டும் பெற விரும்புமளவுக்கு அதனில் பற்று கொள்ளக்கூடாது.(35)
அவன் எந்தச் செயலையும் செய்ய விரும்பும்போது, வேறு எவருக்கும் உரிமையற்ற மண், நீர், கற்கள், இலைகள், மலர்கள் கனிகள் ஆகியவற்றையே எடுத்துக் கொள்ள வேண்டும்.(36) கைவினைஞர் {சிற்பி} தொழிலைச் செய்து அவன் வாழக்கூடாது, மேலும் அவன் பொன்னில் ஆசை கொள்ளக்கூடாது. அவன் வெறுக்கவோ, (கல்வி நாடாதவனுக்குக்) கற்பிக்கவோ, எந்த உடைமைகளையும் உரிமையாகக் கொள்ளவோ கூடாது.(37) நம்பிக்கையால் புனிதப்படுத்தப்பட்டதை {ஸ்ரத்தையினால் பரிசுத்தமானவற்றை} மட்டுமே அவன் உண்ண வேண்டும். அவன் சர்ச்சைகளில் இருந்து விலகயிருக்க வேண்டும். அமுதமாகச் சொல்லப்படும் ஒழுக்க நடைமுறையையே அவன் பின்பற்ற வேண்டும். அவன் எதனிலும் பற்றுக் கொள்ளாமல், எந்த உயிரினத்துடனும் நெருக்கமான உறவுகளில் ஒருபோதும் நுழையாமல் இருக்க வேண்டும்[5].(38) பயனில் எதிர்பார்ப்புள்ள, அல்லது உயிருக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய, அல்லது செல்வத்தையோ, பொருளையோ பதுக்கக்கூடிய எந்தச் செயலையும் அவன் செய்யவோ, செய்வதற்குக் காரணமாக அமையவோ கூடாது.(39) பொருட்கள் அனைத்தையும் புறக்கணித்து, (இல்லமற்றவனாக) சொற்பமானவற்றில் நிறைவடையும் அவன், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களிடம் சமமான நடத்தை கொண்டவனாக இருக்க வேண்டும்.(40)
[5] கும்பகோணம் பதிப்பில், "பயனில் விருப்பமில்லா செய்கைகளை உடையவனும், (ஒன்றிலும்) பற்றுதலற்றவனும், ஒரு பிராணியுடனும் சேராதவனுமாக இருக்க வேண்டும்" என்றிருக்கிறது.
அவன் மற்றொருவனை ஒருபோதும் எரிச்சலூட்டக்கூடாது; அதேபோல மற்றொருவனிடம் எரிச்சலடையவும் கூடாது. அனைத்து உயிரினங்களாலும் எவன் நம்பப்படுகிறானோ அவனே விடுதலையை {முக்தியைப்} புரிந்து கொண்டவர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான்.(41) அவன் கடந்த காலத்தை நினையாமல், எதிர்காலத்தைக் குறித்துக் கவலைகொள்ளாமல் இருக்க வேண்டும். அவன் நிகழ்காலம் பரிந்துரைக்கும் நேரத்தைக் குவிந்த மனத்துடன் அலட்சியம் செய்ய வேண்டும்[6].(42) அவன் கண்ணாலோ, மனத்தாலோ, வாக்காலோ எதையும் ஒருபோதும் தூய்மையிழக்கச் செய்யக்கூடாது. அவன் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ குற்றமெதுவும் செய்யக்கூடாது.(43) ஆமை தன் உறுப்புகளை உள்ளீர்த்துக் கொள்வதைப் போலப் புலன்களை அடக்கும் ஒருவன் தன் புலன்களையும், மனத்தையும் மட்டுப்படுத்தி, முற்றிலும் அமைதியான புத்தியை வளர்த்து, அனைத்திலும் திறனடைய முயற்சிக்க வேண்டும்.(44) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, ஒருவருக்கும் தலைவணங்காமல், ஸ்வாஹா சொல்லப்படும் சடங்குகளைத் தவிர்க்கும் ஒருவன் நான் என்ற மமதை மற்றும் அகங்காரத்தில் இருந்து விடுபட வேண்டும். தூய இதயத்துடன் கூடிய அவன், தன்னிடம் இல்லாததை அடையவோ, தன்னிடம் இருப்பதைப் பாதுகாக்கவோ முயற்சிக்ககூடாது.(45) எதிர்பார்ப்புகளில் இருந்து விடுபட்டு, குணங்களை நீக்கி, அமைதியடையும் ஒருவன் பற்றுகள் அனைத்தில் இருந்து விடுபட்டு, எதையும் சாராதவனாக இருக்க வேண்டும். தன்னிலே பற்றுக் கொண்டு அனைத்தையும் புரிந்து கொள்ளும் ஒருவன், ஐயமில்லாமல் விடுதலையடைவான் {முக்தியடைவான்}.(46)
[6] "காலாகாங்க்ஷீ என்பது வெறுமனே பரிந்துரைக்கப்படும் நேரமாகும். அதாவது காலம் அலட்சியமாகக் கடந்து செல்ல அனுமதித்தல் என்பது பொருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "வரப்போவதைப் பற்றித் தியானம் செய்யக்கூடாது; சென்றதைப் பற்றிக் கவலைப்படக் கூடாது; நிகழ்கின்றதை உபேக்ஷிக்க வேண்டும்" என்றிருக்கிறது.
கைகள், கால்கள், முதுகு, தலை, வயிறு அற்றதும், குணங்கள் அனைத்தின் இயக்கத்தில் இருந்தும் விடுபட்டதும், முழுமையானதும் {தனித்திருப்பதும்}, களங்கமற்றதும் {நிர்மலமானதும்}, நிலையானதும் {ஸ்திரமானதும்},(47) மணம் {கந்தம்}, சுவை {ரஸம்}, தீண்டல் {ஸ்பரிசம்}, நிறம் {ரூபம்} மற்றும் ஒலியற்றதும் {சப்தமற்றதும்}, (கவனமான ஆய்வின் மூலம்) புரிந்து கொள்ளப்பட வேண்டியதும் {அனுசரிக்கத்தக்கதும்}, பற்றற்றதும், தசையற்றதும்,(48) கவலையில் இருந்து விடுபட்டதும், மங்காததும் {அழிவற்றதும்}, தெய்வீகமானதும் {திவ்யமானதும்}, ஒரு வீட்டில் வசித்தாலும் அனைத்து உயிரினங்களிலும் இருப்பதுமான சுயத்தை {ஆன்மாவை} உணர்ந்தவர்கள் இறப்பில் இருந்து தப்புவதில் வெல்கிறார்கள்.(49) புத்தியோ, புலன்களோ, தேவர்களோ, வேதங்களோ, வேள்விகளோ, (மேன்மையான அருள் கொண்ட) உலகங்களோ, தவமோ, நோன்புகளோ அஃதை அடைவதில்லை.(50) ஞானம் கொண்டவர்களால் அடையப்படுவதாகவும், அடையாளங்களால் அறிய முடியாததாகவும் அது சொல்லப்படுகிறது. எனவே, அடையாளங்களற்ற அதன் இயல்புகளை அறிந்த மனிதன் பக்தியுடன் கூடிய வாய்மையை {தர்மத்தைப்} பயில வேண்டும்[7].(51) இல்லறம் மேற்கொள்ளும் கல்விமான், உண்மை அறிவுக்கு இணக்கமான ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும். மயக்கமடையாத ஒருவனும் {ஞானியானவன்}, மயக்கமடைந்த {அஜ்ஞானியான} ஒருவன் பயிலும் பக்தியில் {தர்மத்தில்} குறை காணாமல் அவ்வகையிலேயே அதைப் பயில வேண்டும்[8].(52) நல்லோரின் நடைமுறைகளில் குறைகாணாமல், தன்னை எப்போதும் அவமதிப்பவர்களான பிறரைத் தூண்டும் வகையிலான பக்தி நடைமுறை கொண்ட ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.(53)
[7] "சுயம் அல்லது ஆன்மா என்பது குணங்கள் அற்றது. சுயத்தை அறிந்தவன், அல்லது ஒருவேளை அதை அறியும் விருப்பத்துடன் பின்தொடர்பவன், மேலே விதிக்கப்பபட்ட பக்தியின் உண்மைகளைப் பின்பற்ற வேண்டும். அவை சுயத்துக்கு வழிவகுக்கும் பாதையாக அமைகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அது ஞானிகளால் அடையக்கூடியதும், அடையாளங்களால் அறியமுடியாததுமாகக் கருதப்பட்டது. ஆகையால், அடையாளமற்ற தர்மத்தைத் தெரிந்து கொண்டு அந்த உண்மையான தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும்" என்றிருக்கிறது.[8] கும்பகோணம் பதிப்பில், "வித்வானானவன் ரஹஸ்யமான தர்மத்தை ஆஸ்ரயித்துச் சாஸ்திர ஞானத்திற்குரிய நடையை அனுஷ்டிக்க வேண்டும். ஞானியாயிருந்தும் அஜ்ஞானி போலத் தர்மத்தைத் தூஷிக்காமல் செய்ய வேண்டும்" என்றிருக்கிறது.
இத்தகைய ஒழுக்கத்துடன் கூடிய மனிதன் தவசிகளில் முதன்மையானவன் {சிறந்த முனிவன்} எனச் சொல்லப்படுகிறான். புலன்கள், புலன்நுகர் பொருட்கள், (ஐந்து) பெரும்பூதங்கள்,(54) மனம், புத்தி, அகங்காரம், புலப்படாதது {அவ்யக்தம்}, புருஷன் ஆகியவற்றைச் சரியான அனுமானங்களின் துணையுடன் முறையாகப் புரிந்து கொண்ட பிறகே(55) ஒருவன் அனைத்துப் பந்தங்களில் இருந்தும் விடுபட்டுச் சொர்க்கத்தை அடைகிறான். வாய்மையை அறிந்த ஒருவன், உயிர் போகும் வேளையில் இவை அனைத்தையும் புரிந்து கொண்டு(56) உரிய தனிமையான இடத்தில் தியானிக்க வேண்டும். அதன்பிறகு, எதையும் சாராதிருக்கும் அவன் விடுதலையை {முக்தியை} அடைவான். வெளியிலுள்ள {ஆகாயத்திலுள்ள} காற்றைப் போலப் பந்தங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, குவித்தவற்றைத் தீர்த்து, எவ்வகைத் துன்பமுமின்றி மிக உயர்ந்த இலக்கை அவன் அடைவான்" என்றான் {பிரம்மன்}.(57)
அஸ்வமேதபர்வம் பகுதி – 46ல் உள்ள சுலோகங்கள் : 57
அஸ்வமேதபர்வம் பகுதி – 46ல் உள்ள சுலோகங்கள் : 57
ஆங்கிலத்தில் | In English |