Tree of Brahma! | Aswamedha-Parva-Section-47 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 32)
பதிவின் சுருக்கம் : மோக்ஷஸாதனங்களான துறவு, அறிவு, தவம் ஆகியவற்றைக் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்...
பிரம்மன், "குறிப்பிட்ட உண்மையைச் சொன்னவர்களான புராதனர்கள், துறவே தவம் என்று சொல்கின்றனர். பிரம்மத்தைப் பிறப்பிடமாகக் கொண்டதில் வசிக்கும் பிராமணர்கள், ஞானமே உயர்ந்த பிரம்மம் என்று புரிந்து கொள்கிறார்கள்[1].(1) பிரம்மம் மிகத் தொலைவிலிருக்கிறது, அஃதை அடைவது வேத ஞானத்தைச் சார்ந்திருக்கிறது. அது முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்ததாகவும், குணங்கள் ஏதும் அற்றதாகவும், நித்தியமானதாகவும், எண்ணமுடியாத குணங்களைக் கொண்டதாகவும், உயர்ந்ததாகவும் இருக்கிறது.(2) ஞானிகள் தங்கள் ஞானம் மற்றும் தவத்தின் மூலமே அந்த உயர்ந்ததைக் காண்கின்றனர். உண்மையில், களங்கமற்ற மனங்களைக் கொண்டவர்களும், பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவர்களும், ஆசை {ரஜோ குணம்} மற்றும் இருள் {தமோ குணம்} ஆகியவற்றைக் கடந்தவர்களுமாக அவர்கள் இருக்கின்றனர் (அவர்களே அதைக் காண்பதில் வெல்கிறார்கள்).(3)
[1] "பிரம்மத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது என்பது வேதங்களைக் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நிச்சயமாகச் சொல்லும் பெரியோர்கள், ஸந்யாஸத்தைத் தவமென்று சொல்லுகின்றனர். வேதத்தை நன்கு உணர்ந்த பிராம்மணர்கள் ஞானத்தைப் பரப்பிரம்மமாகக் கருதுகின்றனர்" என்றிருக்கிறது.
எப்போதும் துறவில் அர்ப்பணிப்புள்ளவர்களும், வேதங்களை அறிந்தவர்களுமான அவர்கள், இன்பம் மற்றும் அமைதியின் பாதையில் அடையாளம் காணப்படும் உயர்ந்த தலைவனை {பரமேஸ்வரனை} தவத்தின் உதவியால் அடைவதில் வெல்கிறார்கள்.(4) தவம் ஒளி {சிறந்த தீபம்} என்று சொல்லப்படுகிறது. ஒழுக்கம் பக்திக்கு வழிவகுக்கிறது {தர்மத்திற்கு ஸாதமாகும்}. ஞானம் உயர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. துறவே சிறந்த தவமாகும்.(5) அனைத்தையும் துல்லியமாகத் தீர்மானிப்பதன் மூலம் கலக்கமற்றதும், ஞானத்தோடு அடையாளம் காணப்படுவதும், அனைத்துப் பொருட்களிலும் வசிப்பதுமான சுயத்தை {ஆன்மாவைப்} புரிந்து கொள்ளும் ஒருவன் எங்கும் செல்வதில் வெல்கிறான் {அனைத்தையும் அறிந்தவனென்று இவ்வுலகில் சொல்லப்படுகிறான்}.(6)
சேர்தல் மற்றும் பிரிதல், வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றைக் காணும் கல்விமான் துன்பத்தில் இருந்து விடுபடுகிறான்.(7) எதையும் விரும்பாதவனும், எதையும் இகழாதவனுமான ஒருவன் இவ்வுலகில் வசிக்குபோதே பிரம்மத்துடன் கலப்பதற்குத் தகுந்தவனாகிறான்.(8) பிரதானத்தின் குணங்கள் குறித்த உண்மைகளை அறிந்து, அனைத்துப் பொருட்களிலும் பிரதானம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்பவனும், நான் என்ற மமதையிலிருந்தும், அகங்காரத்தில் இருந்தும் விடுபட்டவனுமான ஒருவன் நிச்சயம் விடுதலை {முக்தி} அடைகிறான்.(9)
முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனும், எவருக்கும் தலைவணங்காதவனும், ஸ்வதா சடங்குகளைக் கடந்தவனுமான ஒருவன், எது முரண்பட்ட இரட்டைகளில் இருந்து விடுபட்டதாக இருக்கிறதோ, எது நித்தியமானதோ, எது குணங்களற்றதாக இருக்கிறதோ அஃதை அமைதியான மனநிலையின் துணையால் மட்டுமே அடைந்து விடுகிறான்.(10) குணங்களில் இருந்து வளர்ந்து வரும் நல்லவையோ, அல்லவையோவான செயல்கள் அனைத்தையும் கைவிட்டு, வாய்மை, பொய்மை ஆகிய இரண்டையும் கைவிடும் ஓர் உயிரினம் நிச்சயம் விடுதலையடைகிறது {முக்தியடைகிறது}.(11)
புலப்படாததைத் தன் பிறப்பிடமாகக் கொண்டதும், புத்தியைத் தண்டாக {அடிமரமாகக்} கொண்டதும், அகங்காரம் என்ற பெருங்கோட்பட்டை கிளைகளாகக் கொண்டதும், புலன்களைச் சிறு தளிர்கள் முளைக்கும் பொந்துகளாகக் கொண்டதும்,(12) (ஐந்து) பெரும்பூதங்களைப் பெருங்கிளைகளாகக் கொண்டதும், புலன்நுகர் பொருட்களை எப்போதும் இலைகளுடனும், அலங்கரிக்கும் மலர்களுடனும் கூடியதும், இனிமையான மற்றும் இனிமையற்ற கனிகளை உண்டாக்கக்கூடிய சிறு கிளைகளாகக் கொண்டதுமான(13) நித்தியமான பிரம்ம மரமே அனைத்து உயிரினங்களையும் ஆதரிக்கும் அமைப்பாகிறது. வாய்மையில் ஞானம் என்ற வாளைக் கொண்டு அம்மரத்தை வெட்டிப் பிளக்கும் ஞானமுள்ள மனிதன்,(14) பற்றில் உண்டானவையும், பிறப்பு, முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றை உண்டாக்குபவையுமான கட்டுகளை {பந்தங்களைக்} கைவிட்டு, நான் எனது என்ற மமதை மற்றும் அகங்காரத்தில் இருந்து விடுபட்டு நிச்சயம் விடுதலையை {முக்தியை} அடைவான்[2].(15)
[2] கும்பகோணம் பதிப்பில், "மாயையாகி விதையினின்று உண்டானது, புத்தியாகி அடிமரமுள்ளதும், பெரியதும் மஹத்தத்துவமும், அஹங்காரமுமாகிற தளிர்களுள்ளதும், இந்திரியங்களிருக்கும் இடங்களாகிற பொந்துகளுள்ளதும், மஹாபூதங்களாகிற பெரிய கிளைகளுள்ளதும், பேதஜ்ஞானமாகிற சிறிய கிளைகளுள்ளதும், எப்பொழுதும் இலைகளுள்ளதும், எப்பொழுதும் மலர்களுள்ளதும், புண்ணியப் பாபங்களாகிற கனிகளின் உற்பத்தியுள்ளதும் எல்லாப் பிராணிகளுக்கும் அடுத்துப் பிழைக்கத்தக்கதும் ஸநாதனமுமான பிரம்மமாகி விருக்ஷத்தைத் தத்துவஜ்ஞானமாகிற கத்தியினால் வெட்டிப் பிளந்து மரணத்தையும், ஜன்மத்தையும், ஜரையையும் கொடுக்கக்கூடியவைகளான பற்றுதல்களென்னும் பாசங்களைவிட்டு மமதையும் அஹங்காரமுமற்ற பண்டிதன் முக்தி பெறுவான்; இதில் ஸம்சயமில்லை" என்றிருக்கிறது.
மாற்றமில்லாதவையும், நண்பர்களும், புத்தியற்றவையாக அறியப்பட வேண்டியவையுமான இரு பறவைகள் இருக்கின்றன. இவையிரண்டில் இருந்து வேறுபட்ட மற்றொன்று புத்தி என்றழைக்கப்படுகிறது.(16) ஞான இயல்பற்றதும், புத்தியற்றதுமான சுயம் {ஆன்மா}, எது இயற்கைக்கும் மேலானதோ அதை அறியும்போது, க்ஷேத்திரத்தைப் புரிந்து கொண்டு, குணங்கள் அனைத்தையும் கடந்த புத்தியுடன் கூடியதாக அனைத்தையும் தெரிந்து கொண்டு பாவங்கள அனைத்தில் இருந்து விடுதலை அடைகிறது[3]" என்றான் {பிரம்மன்}.(17)
[3] கும்பகோணம் பதிப்பில், "(இந்த மரத்தில்) நித்யமானவைகளும், அடங்கினவைகளும், அசேதனங்களுக்குமான இரண்டு பறவைகள் இருக்கின்றன. எவன் இவைகளைவிட மேலானவனும், வேறானவனுமாயிருக்கிறானோ அவன் சைதன்யமுள்ளவனென்று சொல்லப்படுகிறான். அசேதனன் போன்றவனும், ஜீவர்களுக்குரிய உபாதிகளால் விடப்பட்டவனும், புத்தியைக் காட்டிலும் மேலானவனும், சைதன்யத்தை உண்டுபண்ணுகிறவனும், அந்தராத்மாவும், க்ஷேத்ரஜ்ஞனும் எல்லாப் புத்திகளுக்கும் ஸாக்ஷியும் குணங்களைக் கடந்தவனுமான ஜீவன் எல்லாப் பாவங்களாலும் விடப்படுகிறான்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "புலப்படாதது படைப்பின் வித்தாக இருக்கிறது. புத்தியே பெரும் அடிமரமாக இருக்கிறது. பேரஹங்காரம் அதன் கிளைகளாகவும், புலன்கள் அவற்றுக்குள் உள்ள பொந்துகளாகவும் இருக்கின்றன. பெரும்பூதங்கள் சிறுகிளைகளாகவும், அதனிலும் சிறு கிளைகளாகவும் இருக்கின்றன. இதுவே பிரம்மமெனும் நித்திய மரமாகும். அதில் எப்போதும் இலைகளும், மலர்களும் நிறைந்திருக்கின்றன. அது நல்ல மற்றும் தீய கனிகளைத் தருகிறது. அஃது அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வாதாரத்தைத் தருகிறது. ஞானமெனும் உயர்ந்த இருக்கையின் மூலம் ஒருவனால் இம்மரத்தை வெட்டிப் பிளக்க முடியும். அப்போது அவன் இறப்பு, பிறப்புடன் கூடிய தொடர்பைக் கைவிட்டு இறவாமையை அடைகிறான். அத்தகைய மனிதன் உரிமையென்ற உணர்வற்றவனாகவும், அகங்காரமற்றவனாகவும் இருக்கிறான். அவன் விடுதலையடைந்தவன் என்பதில் ஐயமில்லை. அங்கே நண்பர்களான இரு பறவைகள் எப்போதும் இருக்கின்றன. இவற்றில் ஒன்று மயக்கம் {ஜீவாத்மா} என்றும் மற்றொன்று நனவு {பரமாத்மா} என்றும் சொல்லப்படுகின்றன. மயக்கம் கொண்ட ஆவி {மனம்} சச்சரவு நிறைந்ததாக இருக்கிறது. புத்தியுள்ள ஆவியான {மனமான} மற்றொன்று ஆத்மாவுக்குள் இருக்கிறது. ஆவிகளுக்குள் {மனங்களுக்குள்} உள்ள சச்சரவை க்ஷேத்ரஜ்ஞன் {ஆன்மா} புத்தியைப் பயன்படுத்திப் புரிந்து கொள்கிறான். அவன் குணங்களைக் கடந்து, மரணக் கயிற்றில் இருந்து விடுபடுகிறான்" என்றிருக்கிறது.
அஸ்வமேதபர்வம் பகுதி – 47ல் உள்ள சுலோகங்கள் : 17
ஆங்கிலத்தில் | In English |