Unity and Diversity! | Aswamedha-Parva-Section-48 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 33)
பதிவின் சுருக்கம் : யோகிகளின் வகைகளையும், மோக்ஷத்தை விரும்புகிறவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு கருத்துகளையும் குறித்து முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்...
பிரம்மன், "{பிரம்மமே உலகம் என்று சொல்லும்} சிலர் பிரம்மத்தை {பிரபஞ்சம் என்ற} மரமாகக் கருதுகின்றனர். சிலர் பிரம்மத்தை பெருங்காடாக {பிரபஞ்சமாகக்} கருதுகின்றனர். {பிரம்மம் உலகம் ஆவதில்லை, உலகமே பிரம்மத்தில் இருந்து தோன்றுகிறது என்று சொல்லும்} சிலர் கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டுக் கடந்த நிலையாக அதை {பிரம்மத்தைக்} கருதுகின்றனர்.(1) இவை யாவும் புலப்படாததில் {அவ்யக்தத்தில்} இருந்து உண்டாகி ஈர்க்கப்படுகிறது என்று அவர்கள் {ஸாங்கியர்கள்} நினைக்கின்றனர். {பிரம்மமே உலகம் என்று சொல்லும்} எவன் தன் முடிவு வருங்காலத்தில் ஒரேயொரு மூச்சுவிடும்பொழுதில் ஆன்மாவை அடைந்து {அதனுடன்} ஒரே நிலையை அடைகிறானோ அவன் இறவாமைக்குத் தகுந்தவனாகிறான். கண்ணிமைக்கும் காலத்திற்குள்ளாக சுயத்தைச் சுயத்தில் அடக்கும் ஒருவன் {பிரம்மத்தில் இருந்தே உலகம் உண்டாகிறது என்று சொல்பவன்} தன் அமைதியின் மூலம் ஞானிகளால் அடையப்படும் வற்றாத உடைமையை {மோக்ஷத்தை} அடைகிறான். பிராணாயாமம்[1] என்றழைக்கப்படும் வழிமுறையின்படி உயிர் மூச்சுகளை மீண்டும் மீண்டும் கட்டுப்படுத்துவதன் மூலமும்,(2-4)பத்து, அல்லது பனிரெண்டின்[2] மூலமும் அவன் இருபத்து நான்கையும் கடந்திருப்பதை அடைகிறான்.
[1] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, புத்தி, மனம் இப்பன்னிரண்டையும் அடக்கும் உபாயம் என்பது பழைய உரை" என்றிருக்கிறது.[2] "பத்து அல்லது பனிரெண்டு என்பதன் மூலம் சொல்லப்படும் கருத்தில் உரையாசிரியர்கள் வேறுபடுகிறார்கள். நீலகண்டர், யோகத்தின் எட்டு சிறப்பியல்புகளான யமம், நியமம், ஆஸனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், ஸமாதி, தாரகை {யுக்தி}, வைராக்யம் ஆகிய பத்து என்று நினைக்கிறார். பனிரெண்டு என்பது ஏற்கனவே சொன்னவற்றில் முதல் எட்டுடன், மைத்திரீ, கருணை, முதிதை, உபேக்ஷை ஆகிய நான்கையும் சேர்த்து வருவதாகும். பத்து அல்லது பனிரெண்டு என்று கொள்ளாமல் இது மொத்தம் இருபத்தி இரண்டு என்று எடுத்துக் கொண்டால், யமத்தின் ஐந்து வழிமுறைகள், நியமத்தில் ஐந்து வழிமுறைகள், ஆசனம் தொடங்கிச் சமாதி வரைய யோகத்தில் எஞ்சியுள்ள ஆறு, மைத்திரீயுடன் தொடங்கும் நான்கு மற்றும் தாரகை மற்றும் வைராக்கியம் என்ற இரண்டும் எனக் கொள்ளலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பத்து அல்லது பன்னிரண்டு விதமான பிராணாயாமங்களால் அடிக்கடி பிராணன்களை அடக்கி இருபத்து நான்காவ(தான அவ்யக்தத்)தைக் காட்டிலும் மேலான (இருபத்தைந்தாமவனான) புருஷனை அடைவான்" என்றிருக்கிறது.
இவ்வாறே முதலில் அமைதியான ஆன்மாவை அடையும் {நிர்மலமான சத்வ குணமுள்ள} ஒருவன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையையும் அடைகிறான்.(5) புலப்படாததில் இருந்து எழுவதில் {அவ்யக்தத்தில்} நல்லியல்பின் {சத்வ} குணம் அதிக ஆதிக்கம் செலுத்தும்போது அவன் இறவாமையை அடைய {அமிருதனாக இருக்கத்} தகுந்தவனாகிறான். நல்லியல்பை அறிந்தவர்கள், நல்லியல்பைக் காட்டிலும் உயர்ந்தது வேறேதுமில்லை என்று சொல்லி அதை உயர்வாகப் புகழ்கின்றனர்.(6) புருஷன் நல்லியல்பைச் சார்ந்திருக்கிறான் என்பதை நாம் உள்ளுணர்வின் மூலம் அறிகிறோம். மறுபிறப்பாளர்களே, வேறு எந்த வழிமுறைகளின் மூலமும் புருஷனை அடைவது சாத்தியமில்லை.(7)
மன்னிக்கும் தன்மை {பொறுமை}, துணிவு {தைரியம்}, தீங்கிழையாமை {கொல்லாமை / அஹிம்ஸை}, சீர்மை {ஸமமாக இருப்பது}, வாய்மை {உண்மை}, நேர்மை, அறிவு {ஞானம்}, கொடை {தியாகம்}, துறவு {ஸந்யாஸம்} ஆகியன நல்லியல்பில் இருந்து எழும் ஒழுக்க நடைமுறையின் சிறப்பியல்புகளாக {ஸத்வத்தின் கார்யங்களெனச்} சொல்லப்படுகின்றன.(8) இந்த உள்ளுணர்வின் மூலமே ஞானிகள், புருஷன் மற்றும் நல்லியல்பின் அடையாளங்களை {ஒன்றென} நம்புகிறார்கள். இதில் ஐயமேதுமில்லை.(9) ஞானத்தில் அர்ப்பணிப்புள்ள கல்விமான்கள் சிலர், க்ஷேத்ரஜ்ஞன் {புருஷன்} மற்றும் இயற்கைக்கு {சத்வத்திற்கு} இடையிலான ஒற்றுமையை வலியுறுத்திச் சொல்கின்றனர். எனினும், இது சரியல்ல.(10)
இயற்கையானது {சத்வம்}, புருஷனிலிருந்து வேறுபட்டது எனச் சொன்னால், அதுவும் கருத்தின்மையையே குறிக்கும்.(11) உண்மையில், வேற்றுமையும், ஒற்றுமையும் (புருஷனுக்கும், இயற்கைக்கும் பொருந்துவதாக) அறியப்பட வேண்டும். ஒற்றுமையும் {ஏகத்வமும்}, வேற்றுமையும் {நானாத்வமும்} இவ்வாறே விதிக்கப்பட்டிருக்கின்றன. இதுவே கல்விமான்களின் கோட்பாடாகும். கொதுகு {கொசு} மற்றும் அத்திப்பழத்தில் ஒற்றுமையும், வேற்றுமையும் காணப்படுகின்றன.(12) நீரில் இருக்கும் மீன் வேறாக இருப்பதைப் போலவே இவை இரண்டின் (புருஷன் மற்றும் இயற்கையின் {சத்வத்தின்} உறவு இருக்கிறது. உண்மையில் அவற்றின் உறவானது தாமரை இலையில் உள்ள நீர்த்துளிகளைப் போன்றதாகும்" என்றான் {பிரம்மன்}".(13)
ஆசான் தொடர்ந்தார், "{பிரம்மனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், கல்விமான்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான அந்தப் பிராமணர்கள் சில ஐயங்களை உணர்ந்தனர். (எனவே) அவர்கள் மீண்டும் ஒருமுறை (அனைத்துயிரினங்களின்) பெரும்பாட்டனைக் கேள்வி கேட்டனர்" {என்றார் ஆசான்}[3].(14)
[3] "புலப்படாதது அல்லது பிரகிருதி என்ற நிலை நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} ஆகிய மூன்று குணங்களும் கலந்த நிலையாகும். புலப்படாதது என்பது படைப்புக்கு முன் இருக்கும் நிலையாகும். நல்லியல்பு என்ற குறிப்பிட்ட குணம் மேலோங்கும்போது எவனில் இருந்து அனைத்தும் உண்டாகிறதோ அந்தப் புருஷன் எழுகிறான். புருஷன் மற்றும் இயற்கையின் உறவு ஒற்றுமை மற்றும் வேற்றுமை ஆகிய இரண்டுமாகும். கொதுகு மற்றும் அத்திப்பழம், மீன் மற்றும் நீர், நீர்த்துளிகள் மற்றும் தாமரை இலைகள் என்ற மூன்று உதாரணங்களும் புருஷன் மற்றும் இயற்கைக்கு இடையிலான உறவுகள் விளக்குகின்றன. அவன் இயற்கையில் இருக்கிறான், ஆனால் அவன் அதனிலிருந்து வேறுபட்டவனாவான். சேர்தல், பிரிதல் என்ற இரண்டும் இருக்கின்றன. இதுவே இந்தப் பகுதியில் விளக்கப்படும் கருத்தாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அஸ்வமேதபர்வம் பகுதி – 48ல் உள்ள சுலோகங்கள் : 14
ஆங்கிலத்தில் | In English |