Doubts! | Aswamedha-Parva-Section-49 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 34)
பதிவின் சுருக்கம் : பலர் பலவாறாகச் சொல்லும் தர்மங்களில் தங்களுக்குள்ள ஐயங்களைப் பிரம்மனிடம் கேட்ட முனிவர்கள்...
முனிவர்கள் {பிரம்மனிடம்}, "கடமைகளில் {தர்மங்களில்} எது நிறைவேற்றுவதற்கு மிகவும் தகுந்ததாகக் கருதப்படுகிறது? கடமைகளில் பல்வேறு வழிமுறைகள் முரண்பட்டவையாக இருப்பதை நாம் காண்கிறோம்.(1) சிலர் உடலுக்கு (உடல் அழிந்த) பிறகும் (அஃது {ஆத்மா} எஞ்சி) இருக்கிறது என்று சொல்கிறார்கள். மற்றவர்கள் அஃது அவ்வாறிருப்பதில்லை என்று சொல்கிறார்கள். சிலர் அனைத்தும் ஐயம் நிறைந்தன என்று சொல்கிறார்கள். வேறு சிலருக்கு ஐயங்கள் ஏதுமில்லை[1].(2)
[1] "கடமைகள் செய்யப்பட வேண்டுமா? வேண்டாமா? என்பது தொடர்பாகவும் அவற்றுக்கு இம்மையிலும், மறுமையிலும் விளைவுகளேதும் உள்ளனவா? என்பது தொடர்பாகவும் ஐயங்கள் உண்டாகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சிலர், நித்தியமானது (கோட்பாடு) நித்தியமானதல்ல என்று சொல்கிறார்கள். சிலர் அஃது இருக்கிறது என்றும், வேறு சிலர் அஃது இல்லை என்றும் சொல்கிறார்கள். சிலர் அஃது ஒரு வடிவில் அல்லது இரு வடிவில் இருக்கிறது என்று சொல்கிறார்கள், வேறு சிலர் அது கலந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.(3) பிரம்மத்தை அறிந்தவர்களும், வாய்மை பேசுபவர்களுமான பிராமணர்கள் சிலர் அஃது ஒன்றே என்று கருதுகிறார்கள். வேறு சிலர் அது வேறுபட்டது எனவும், மேலும் சிலர் அது பல வகையானது என்றும் கருதுகிறார்கள்.(4)
சிலர் காலமும், வெளியும் {இடமும் / தேசமும்} இருக்கின்றன என்று சொல்கின்றனர்; வேறு சிலர் அஃது அவ்வாறில்லை என்று சொல்கின்றனர். சிலர் தங்கள் தலைகளில் ஜடா முடி தரித்து மான் தோல் உடுத்துகின்றனர். வேறு சிலர் தலையை மழித்து, முற்றிலும் அடையின்றி இருக்கின்றனர்.(5) சிலர் குளிப்பதை முற்றிலும் தவிர்ப்பதை ஆதரிக்கின்றனர், சிலர் குளிப்பதை ஆதரிக்கின்றனர். தேவர்கள், பிரம்மத்தை அறிந்த பிராமணர்கள், மற்றும் வாய்மை உணர்வுகளுடன் கூடியவர்களுக்கு மத்தியில் இத்தகைய வேறுபட்ட கருத்துகள் தென்படுகின்றன.(6)
சிலர் உணவு {ஆஹாரம்} உட்கொள்வதை ஆதரிக்கின்றனர்; வேறு சிலர் உண்ணா நோன்புகளில் {உபவாஸங்களில்} அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர். சிலர் செயல்பாட்டை {கர்மாவை} மெச்சுகின்றனர். வேறு சிலர் முற்றான அமைதியை {அடக்கத்தை} மெச்சுகின்றனர்.(7) சிலர் விடுதலையை {முக்தியை / மோக்ஷத்தை} மெச்சுகின்றனர். வேறு சிலர் பல்வேறு வகை இன்பங்களை {போகங்களை} மெச்சுகின்றனர்.(8)
சிலர் பல்வேறு வகைச் செல்வங்களை விரும்புகின்றனர். சிலர் வறுமையை விரும்புகின்றனர். சிலர் {தியானம் முதலிய} வழிமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர். வேறு சிலர் அவ்வாறில்லை என்கின்றனர்.(9) சிலர் தீங்கிழைக்காத வாழ்வில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். வேறு சிலர் அழிவைச் செய்வதில் அடிமையாக இருக்கிறார்கள். சிலர் தகுதியையும் {புண்ணியம் செய்வதையும்}, மகிமையையும் {புகழடைவதையும்} ஆதரிக்கின்றனர். வேறு சிலர் அவ்வாறில்லை என்கின்றனர்.(10)
சிலர் நல்லியல்பில் அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர். வேறு சிலர் ஐயத்தில் நிறுவப்பட்டுள்ளனர். சிலர் இன்பத்தை ஆதரிக்கின்றனர். சிலர் துன்பத்தை ஆதரிக்கின்றனர். வேறு சிலர் அது தியானம் என்று சொல்கின்றனர்[2].(11) கல்விமான்களான பிராமணர்கள் சிலர் அது வேள்வி என்று சொல்கின்றனர். மேலும் சிலர் அது கொடை என்கின்றனர். சிலர் தவங்களை மெச்சுகின்றனர். வேறு சிலர் சாத்திரக்கல்வியை மெச்சுகின்றனர்.(12)
[2] கும்பகோணம் பதிப்பில், "சிலர் நல்ல காரியத்தில் பற்றுள்ளவர்களும், சிலர் (செய்தது இருக்குமோ இராதோ என்னும்) ஸம்சயமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். சிலர் துக்க நிவிருத்திக்காகவும், சிலர் ஸுகத்திற்காகவும், சிலர் (பயனைக் கருதாமலும்) தியானம் செய்ய வேண்டுமென்று சொல்லுகிறார்கள்" என்றிருக்கிறது.
சிலர் ஞானமும், துறவும் (பின்பற்றப்பட வேண்டும்) என்கின்றனர். உட்கூறுகளைச் சிந்திக்கும் வேறு சிலர் {ஸாதனங்கள் எல்லாம் பூர்த்தியாக இருப்பதினாலேயே உண்டாகிறது} அஃது இயற்கை என்கின்றனர். சிலர் அனைத்தையும் போற்றுகின்றனர். சிலர் எதையும் போற்றுவதில்லை.(13) ஓ! தேவர்களில் முதன்மையானவரே, இவ்வாறு குழப்பமுடையதும், பல்வேறு வகை முரண்பாடுகள் நிறைந்ததுமான கடமைகளில் நாங்கள் மயக்கமடைந்து, {சிறந்தது எது என்ற} எந்தத் தீர்மானத்தையும் எட்ட இயலாதவர்களாக இருக்கிறோம்.(14)
"இது நல்லது, இது நல்லது" என்று சொல்லி மனிதர்கள் செயல்படுகிறார்கள். ஒரு கடமையில் {தர்மத்தில்} பற்றுடன் இருக்கும் ஒருவன் அந்தக் கடமையே சிறந்ததென மெச்சுகிறான்.(15) இந்தக் காரணத்தினாலேயே எங்கள் புத்தி {ஒழுங்கற்றதாக} நொறுங்குகிறது, எங்கள் மனமும் திசை திரும்புகிறது. எனவே, ஓ! இருப்பவை அனைத்திலும் சிறந்தவரே, நாங்கள் நன்மையை அறிய விரும்புகிறோம்.(16) எது (பெரும்) புதிரோ, எது க்ஷேத்ரஜ்ஞன் மற்றும் இயற்கைக்கிடையிலான {சத்வத்திற்கிடையிலான} தொடர்பை உண்டாக்குகிறதோ, அதை இதன் பிறகு எங்களுக்கு அறிவிப்பதே உமக்குத் தகும்" என்று கேட்டனர் {முனிவர்கள்}.(17)
கல்விமான்களான அந்தப் பிராமணர்களால் இவ்வாறு கேட்கப்பட்டதும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், அற ஆன்மாவும், சிறப்புமிக்கவனுமான உலகங்களின் படைப்பாளன் {பிரம்மன்} அவர்கள் கேட்டதைக் குறித்துத் துல்லியமாக அவர்களுக்கு அறிவித்தான்" {என்றார் ஆசான்}.(18)
அஸ்வமேதபர்வம் பகுதி – 49ல் உள்ள சுலோகங்கள் : 18
ஆங்கிலத்தில் | In English |