The qualities of elements! | Aswamedha-Parva-Section-50 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 35)
பதிவின் சுருக்கம் : தர்மத்தோடு கூடிய ஞானமே மோக்ஷஸாதனம் என்பதையும், க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞனுக்கு இடையிலான தொடர்பையும், பஞ்ச பூதங்களின் குணங்களையும் முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்...
பிரம்மன், "சரி, நீங்கள் கேட்பதை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். தம்மிடம் வந்த சீடனுக்கு ஓர் ஆசானால் சொல்லப்பட்டவற்றை அறிவீராக.(1) அவை அனைத்தையும் கேட்டு (என்னவாக இருக்கலாம் என்பதை) நீங்கள் தீர்மானிப்பீராக. எந்த உயிரினத்திற்கும் தீங்கிழையாமல் இருப்பதே {எல்லாப் பிராணிகளுக்கும் ஹிம்ஸை செய்யாமலிருப்பதே} கடமைகள் அனைத்திலும் முதன்மையானதாக {சிறந்த தர்மத்திற்கு லக்ஷணமாகக்} கருதப்படுகிறது.(2) இது கவலையில் இருந்தும் விடுபட்டதும், புனிதத்தன்மையின் அறிகுறியாகவும் இருக்கும் உயர்ந்த இருக்கையாகும் {ஸ்தானமாகும்}. குறிப்பிட்ட உண்மையைக் கண்டவர்களான புராதனர்கள், ஞானமே உயர்ந்த இன்பம் என்று சொல்கின்றனர்.(3)
எனவே, ஒருவன் தூய அறிவின் மூலம் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். அழிவு மற்றும் தீங்கு செய்வதில் ஈடுபடுபவர்களும், ஒழுக்கத்தில் நம்பிக்கையற்றவர்களாக {நாத்திகர்களாக} இருப்பவர்களும்,(4) பேராசை மற்றும் மயக்கத்துடன் கூடியவர்களாக இருப்பதன் விளைவால் நரகத்திற்குச் செல்வார்கள். எதிர்பார்ப்பால் தூண்டப்பட்டுச் சோம்பலின்றிச் செயல்களைச் செய்பவர்கள்,(5) மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறந்து, இன்பத்தில் திளைக்கிறார்கள். எதிர்பார்ப்புகள் இன்றி, குவிந்த மனத்துடனும், நம்பிக்கையுடனும் செயல்களைச் செய்பவர்களும், கல்வி மற்றும் ஞானத்துடன் கூடியவர்களுமான மனிதர்கள், தெளிவாகப் பார்ப்பவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(6)
இனி, க்ஷேத்ரஜ்ஞன் மற்றும் இயற்கையின் {சத்வத்தின்} சேர்க்கையும், பிரிதலும் எவ்வாறு நிகழ்கின்றன என்பதைச் சொல்லப் போகிறேன். மனிதர்களில் சிறந்தவர்களே, கேட்பீராக. பொருள் {விஷயம்} மற்றும் கருப்பொருளுக்கு {விஷயிக்கு} இடையிலான உறவுமுறையாக இது சொல்லப்படுகிறது[1].(7,8) புருஷன் எப்போதும் கருப்பொருளாவான்; இயற்கை {சத்வம்} பொருளெனச் சொல்லப்படுகிறது. கொதுகும் {கொசுவும்}, அத்திப்பழமும் போல இருக்கின்றன என உரையாடலின் முன் பகுதியில் சொல்வதன் மூலம் அவை விளக்கப்படுகின்றன.(9)
[1] "சிந்திப்பது, அல்லது அனுபவிப்பது எதுவோ அது கருப்பொருளாகும், சிந்திக்கப்படுவது அல்லது அனுபவிக்கப்படுவது எதுவோ அது பொருளாகும். இவ்வாறான சொற்களைப் பயன்படுத்துவதில் நான் தெலங்க் அவர்களைப் பின்பற்றுகிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அனுபவிக்கத்தகுந்த பொருளாக இருக்கும் இயற்கை புத்தியற்றதாகவும், எதையும் அறியாததாகவும் இருக்கிறது. எனினும், அதை அனுபவிப்பவன் அதை அறிவான் எனச் சொல்லப்படுகிறது. அனுபவிப்பவன் க்ஷேத்ரஜ்ஞனாகவும், அனுபவிக்கப்படுவது இயற்கையாகவும் {சத்வமாகவும்} இருக்கின்றன.(10) இயற்கையானது, முரண்பட்ட இரட்டைகளால் அமைந்ததாகவும் {குணங்களைக் கொண்டதாகவும்} இருக்கிறது என்று ஞானிகள் சொல்கின்றனர். மறுபுறம், க்ஷேத்ரஜ்ஞன், முரண்பட்ட இரட்டைகள் அற்றவனாகவும், பகுதிகள் அற்றவனாகவும், நித்தியமானவனாகவும், சாரத்தைப் பொருத்தவரையில் குணங்களில் இருந்து விடுபட்டவனாகவும் இருக்கிறான்.(11) அவன் அனைத்திலும் ஒரே தன்மையுடனும், ஞானத்துடனும் வசிக்கிறான். தாமரை இலை நீரை (அனுபவிப்பதைப்) போல அவன் {க்ஷேத்ரஜ்ஞன்} எப்போதும் இயற்கையை {சத்வத்தை} அனுபவிக்கிறான்.(12)
ஞானம் கொண்டவனான அவன், குணங்கள் அனைத்துடன் தொடர்பு கொள்ள நேர்ந்தாலும் ஒருபோதும் களங்கப்படாதவனாக இருக்கிறான்.(13) தாமரை இலையில் நிலையில்லாதிருக்கும் நீர்த்துளியைப் போலப் புருஷன் பற்றற்றவனாக இருக்கிறான். இயற்கையானது புருஷனின் உடைமையாக இருக்கிறது என்பதே (சாத்திரங்களின்) நிச்சயமான தீர்மானமாகும்.(14) இவ்விரண்டும் (புருஷனும் இயற்கையும்) பொருள் மற்றும் அதைப் படைப்பவனுக்கிடையிலுள்ள உறவுமுறையுடன் கூடியவையாக இருக்கின்றன[2].
[2] கும்பகோணம் பதிப்பில், "தாமரையிலையிலுள்ள ஜலத்திவலையானது எப்படிப் பற்றாமலிருக்கிறதோ அவ்விதமே புருஷனும் (ஒன்றிலும்) ஸம்பந்தப்படாமலிருக்கிறான்; ஸந்தேஹமில்லை. (ஆனாலும்,) ஸத்வமும் புருஷனும் (சேர்ந்து ஒரு) திரவ்யமாகவே ஆயின என்பது நிச்சயம். (இது என்னப்படும்) பொருளும் (நான் என்னப்படும்) கர்த்தாவும் பல இவைகள் சேர்ந்திருக்கின்றன" என்றிருக்கிறது.
இருளடைந்த இடத்திற்கு ஒருவன் தன்னுடன் விளக்கை எடுத்துச் செல்வதைப் போல,(15) உயர்ந்ததை விரும்புபவர்கள் இயற்கை எனும் விளக்குடன் செல்கின்றனர்[3]. (எண்ணையும், திரியும் போன்ற) பொருளும், குணமும் இருக்கும் வரை விளக்கும் ஒளிர்கிறது.(16) எனினும், பொருளும் குணமும் (அல்லது எண்ணெயும், திரியும்) தீரும்போது சுடரும் அணைகிறது. இவ்வாறே இயற்கை வெளிப்படுவதாகச் சொல்லப்படுகிறது, புருஷன் வெளிப்படாதவனாகச் சொல்லப்படுகிறான்.(17) கல்விமான்களான பிராமணர்களே இதைப் புரிந்து கொள்வீராக. சரி, நான் மேலும் சிலவற்றை உங்களுக்குச் சொல்கிறேன். ஆயிரம் (விளக்கங்களைச்) சொன்னாலும், தீய புத்தி உள்ள ஒருவன் ஞானத்தை அடைவதில் வெல்வதில்லை.(18)
[3] "இயற்கையின் வெளிப்பாடே ஞானம் என்ற நீலகண்டரின் விளக்கப்படி, சத்வ பிரதீபம் என்பது இயற்கை எனும் விளக்கு என்று கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் அர்ஜுன் மிஷ்ராவின் விளக்கம் சிறப்பானதாகத் தெரிகிறது. அவர் - உண்மை ஞானம் இயற்கையின் மூலம் சுயத்தால் அடையப்படுகிறது என்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
எனினும், புத்தியுள்ள ஒருவன், நான்கில் ஒரு பகுதியின் (கால் பாக விளக்கத்தின்) மூலமே மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான். இவ்வாறே கடமைகளை நிறைவேற்றல் வழிமுறைகளைச் சார்ந்தது என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும்.(19) வழிமுறைகள் குறித்த ஞானமுள்ள புத்திசாலி, உயர்ந்த இன்பத்தை அடைவதில் வெல்கிறான்.(20) பயணத்திற்குத் தேவையான பொருட்கள் இல்லாமல் {கட்டுச்சோறின்றி} சாலையில் பயணிக்கும் மனிதன், மன உலைவுடன் பயணித்து, தன் பயணம் முடிவடைவதற்கு முன்பே அழிவையும் அடைவதைப் போலவே, செயல்களில் கனிகளும், கனியின்மையும் நேரிடும் என்பதை அறிய வேண்டும்[4].(21)
[4] "சாலையில் பயணிக்கும் ஒருவன் அதற்குத் தேவையான பொருட்களுடன் செல்ல வேண்டும். இல்லையெனில் அவன் நிச்சயம் வசதியின்மையை உணர்வான், அல்லது அழிவையும் சந்திப்பான். அதே போலவே, வாழ்வெனும் பயணத்தில் ஒருவன் ஞானத்தைத் தேவைப்படும் பொருளாகக் கொள்ள வேண்டும். அப்போது அவன் அனைத்து வகை மன உலைவுகளையும், ஆபத்துகளையும் தவிர்க்கலாம். செயல்பாடு மட்டுமே உரிய வழிமுறையாக அமையாது. அது கனியை உண்டாக்கவும் செய்யலாம், உண்டாக்காமலும் இருக்கலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "உபாயத்தை அறிந்த மேதாவிதான் அழிவற்ற ஸுகம் பெறுவான். கட்டுச்சோறின்றி வழிநடகும் மனிதன் ஓரிடத்தில் மிகக்கஷ்டப்பட்டுச் செல்லுகிறான்; நடுவில் மரித்தும் விடுகிறான். அதுபோலவே, பயன் உண்டாவதும், உண்டாகாமல் இருப்பதும் கர்மங்களைச் சார்ந்தனவென்று தெரிந்து கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது.
ஒருவனுடைய சுயத்திற்கு {அகத்திற்கு} எது ஏற்புடையது, எது ஏற்புடையதல்ல என்பதை ஆய்வு செய்வது நன்மையை விளைவிக்கும்[5]. உண்மையை உணராத மனிதனின் வாழ்வில் முன்னேற்றமானது, ஒரு மனிதன் முன்பின் காணாத நீண்ட சாலையில் மூர்க்கமாகப் பயணிப்பதை {ஓடிச் செல்வதைப்} போன்றதாகும். எனினும், புத்தியுள்ளோரின் முன்னேற்றமானது, அதே சாலையில் வேகமாகச் செல்லும் குதிரைகள் பூட்டப்பட்ட தேரைச் செலுத்துவதற்குச் சமமானதாகும். மலையின் உச்சிக்கு ஏறிய பிறகு ஒருவன் பூமியின் பரப்பில் கண்களைச் செலுத்தக்கூடாது[6].(22-24)
[5] "ஒருவன் புறத்தில் கவனம் செலுத்தக்கூடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] "ஒருவன் மிக உயர்ந்த இருக்கையாக {ஸ்தானமாக} உள்ள ஞானத்தை அடைந்த பிறகு சாத்திரங்களால் பணிக்கப்படும் செயல்களைச் செய்ய வேண்டியதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "புருஷனுக்குத் தன்னுடைய ஸ்ரேயஸானது புண்யபாவங்களைத் திருஷ்டாந்தமாகக் கொண்டது. தத்துவஞானமில்லாதவன் கதி முன் பார்த்திராத நீண்ட வழியை ஒருவன் கால்களாலேயே நடந்து போவதை ஒத்திருக்கிறது. அறிஞனின் கதி, அதே நீண்ட வழியில் வேகமாகச் செல்லும் குதிரை வண்டியிலேறினவனது கதியைப் போன்றிருக்கும். உயர்ந்த மலை மேலேறி பூமியைப் பார்க்கக்கூடாது" என்றிருக்கிறது.
தேரில் பயணித்தாலும், உணர முடியாத துன்பத்தால் பீடிக்கப்படும் ஒரு மனிதனைக் காணும் புத்திசாலி, தேருக்கான பாதை உள்ள தொலைவு வரையே தேரில் பயணிப்பான்[7].(25) கல்விமானான மனிதன், தேருக்கான பாதை முடிவடைவதைக் காணும்போது, மேலும் பயணிக்கத் தன் தேரைத் தவிர்க்கிறான். வாய்மை மற்றும் யோகத்தின் (அல்லது ஞானம் மற்றும் பக்தியின்) விதிகளை அறிந்த புத்திசாலி மனிதனும் இவ்வாறே செல்வான்.(26) குணங்களை அறிந்த மனிதன், அடுத்தடுத்து என்னென்ன என்பனவற்றைப் புரிந்து கொண்டே முன்னேறிச் செல்வான்[8].(27)
[7] "தேரில் செல்வது எப்போதும் வசதியாக இராது. தேருக்கான பாதை உள்ள தொலைவு வரையே ஒருவன் தன் தேரில் பயணிக்க வேண்டும். எனினும், தேர் செல்வதற்குத் தகுந்த பாதையில்லாவிட்டால், தேர் உலைச்சலை மட்டுமே ஏற்படுத்தும் என்பதால், அவன் வசதியைக் கருதாமல், அத்தகைய பாதையில் தேரில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[8] "முதலில் ஆசையுடன் கூடிய செயல்பாடு; அடுத்தது ஆசையற்ற செயல்பாடு; அதற்கடுத்தது ஞானம் என்று அர்ஜுனன் மிஸ்ரா விளக்குகிறார். முதலில் செயல், பிறகு யோகம்; அடுத்து ஹம்ச மற்றும் பரமஹம்ச நிலையென நீலகண்டர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே குறிப்பிடுகிறார்.
பயங்கரப் பெருங்கடலில் ஒருவன் அறியாமையால் படகில்லாமல் தன்னிரு கைகளுடன் {கைகளை நம்பி} மட்டுமே மூழ்கும்போது நிச்சயம் அழிவையே எதிர்நோக்குவான்;(28) அதே வேளையில், வேறுபாடுகளை அறிந்த ஞானம் கொண்ட மனிதன் {பகுத்தறியும் மனிதன்}, துடுப்புடன் கூடிய படகில் களைப்பில்லாமல் தடாகத்தைக் கடந்து, மறுகரையை அடைந்து, படகைக் கைவிட்டுவிட்டு, நான், எனது என்ற மமதை எண்ணத்தில் இருந்து விடுபடுகிறான்.(29) இது தேர் மற்றும் பாதசாரி குறித்த எடுத்துக்காட்டின் மூலம் ஏற்கனவே விளக்கப்பட்டிருக்கிறது. பற்றின் விளைவால் அறியாமையில் மூழ்கியிருக்கும் ஒருவன், படகில் ஒட்டும் மீனவனைப் போல அதனுடன் ஒட்டிக் கொள்கிறான்.(30)
நான் எனது என்ற மமதையில் மூழ்கும் ஒருவன் குறுகிய எல்லைகளுக்குள்ளேயே திரிகிறான். ஒரு படகில் ஏறிய பிறகு நிலத்தில் செல்ல முடியாது.(31) அதேபோல, ஒருவன் தேரில் ஏறிய பிறகு நீரில் செல்ல முடியாது. வெவ்வேறு நோக்கங்களுக்கு இவ்வாறே வெவ்வேறு செயல்பாடுகள் உள்ளன.(32) இவ்வுலகில் செயல்கள் செய்யப்படுவதைப் போலவே அவற்றைச் செய்பவனுக்கான விளைவுகளும் நேர்கின்றன. மணமற்றதும், சுவையற்றதும், தீண்டல் மற்றும் ஒலியற்றதும் எதுவோ,(33) புத்தியின் துணையுடன் தவசிகளால் தியானிக்கப்படுவது எதுவோ அது பிரதானம் என்று சொல்லப்படுகிறது.
அந்தப் பிரதானமே வெளிப்படாததாக {புலப்படாததாக / அவ்யக்தமாக} இருக்கிறது. வெளிப்படாததன் வளர்ச்சியே மஹத் ஆகும். பிரதானம் மஹத் ஆன பிறகு நேரும் வளர்ச்சியே அஹங்காரமாகும். அஹங்காரத்திலிருந்து பெரும்பூதங்கள் என்றழைக்கப்படும் வளர்ச்சி உண்டாகிறது.(35) முறையே அந்தப் புலன்நுகர் பொருட்கள், பெரும்பூதங்களிலிருந்து உண்டாகும் வளர்ச்சிகள் என்று சொல்லப்படுகின்றன. வெளிப்படாதது வித்தின் இயல்பைக் கொண்டதாகும். அதன் சாரம் உற்பத்தியாக இருக்கிறது.(36)
பேராத்மா {மஹத்} ஒரு வித்தின் குணங்களைக் கொண்டதென்றும் {காரணமென்றும்}, அஃது ஓர் உற்பத்திப் பொருள் என்றும் {காரியமென்றும்} நாம் கேள்விப்படுகிறோம்[9]. மேலும், அஹங்காரமும் வித்தின் இயல்பைக் கொண்டதாகவும், உற்பத்திப்பொருளாகவும் இருக்கிறது.(37) ஐம்பெரும்பூதங்களும் வித்தின் இயல்பைக் கொண்டவையாகவும், உற்பத்திப் பொருட்களாகவும் இருக்கின்றன. பெரும்பூதங்களுக்குரிய பொருட்கள் {விஷயங்களும்} வித்தின் இயல்பைக் கொண்டு உற்பத்திப் பொருட்களை விளைவிக்கின்றன. இவை சித்தத்தைத் தங்கள் உடைமையாகக் கொண்டுள்ளன. அவற்றில், வெளி {ஆகாயம்} ஒரு குணத்தையும், காற்று {வாயு} இரண்டு குணங்களையும் கொண்டிருக்கின்றன.(38,39)
[9] கும்பகோணம் பதிப்பில், "அவ்யக்தமானது காரணமாகவும், காரியமாகவும் இருப்பது பல மஹத்தத்துவமமும் காரணமாகவும், காரியமாகவும் இருக்கிறதென்று நமக்குக் கேள்வி" என்றிருக்கிறது.
ஒளி, மூன்று குணங்களைக் கொண்டிருப்பதாகவும், நீர் நான்கு குணங்களைக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அசைவன மற்றும் அசையாதன நிரம்பிய பூமி ஐந்து குணங்களைக் கொண்டதாக அறியப்படுகிறது.(40) அவள் அனைத்து உட்பொருட்களின் பிறப்பிடமாகவும், இனியன, அல்லாதன நிறைந்த தேவியாகவும் இருக்கிறாள். ஒலி, தீண்டல், நிறம், சுவை மற்றும் ஐந்தாவதான மணம் ஆகியவை,(41) மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, பூமியின் ஐந்து குணங்களாக இருக்கின்றன. எப்போதும் பூமிக்கு உரியதாக இருக்கும் மணம் பல்வேறு வகைகளில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(42)
நான் மணத்தின் எண்ணற்ற குணங்களை விரிவாகச் சொல்லப் போகிறேன். ஏற்புடையது {இஷ்டம்}, ஏற்பில்லாதது {அனிஷ்டம்}, இனியது {மதுரம்}, புளிப்பானது {அம்லம்}, கடுமையானது {கடு}, பரவலானது {நிர்ஹாரி}, கச்சிதமானது {ஸம்ஹதம்}, எண்ணெயானது {ஸ்நிக்தம்}, உலர்ந்தது {ரூக்ஷம்}, தெளிவானது {விசதம்} என்ற {பத்து} வகைகளில் மணம் இருக்கிறது.(43) இவ்வாறே பூமிக்கு உரிய மணம் பத்து வகைகளில் இருக்கிறது என்று அறியப்பட வேண்டும்[10].(44) ஒலி, தீண்டல், நிறம், சுவை ஆகியன நீரின் குணங்களாகும். நான் இனி சுவையின் குணங்களைச் சொல்லப் போகிறேன். சுவை பல்வேறு வகைப்பட்டதெனச் சொல்லப்படுகிறது.(45)
[10] "இங்கே குறிப்பிடப்படும் கடு என்பது கசப்பல்ல; மிளகாயின் மணம் போன்று கடுமையானதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இனியது {இனிப்பு}, புளிப்பு, கடுமையானது {கார்ப்பு}, கசப்பானது, துவர்ப்பானது மற்றும் உவர்ப்பானது என்று {என்ற வகைகளில் சுவை} இருக்கிறது. இவ்வாறே நீர் தொடர்பானது என்று சொல்லப்படும் சுவை ஆறு வகைகளில் இருக்கிறது.(46) ஒளியானது, ஒலி, தீண்டல் மற்றும் நிறம் என்ற மூன்று குணங்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. நிறம் ஒளியின் குணமாகும், மேலும் நிறம் பல வகையெனச் சொல்லப்படுகிறது.(47) வெள்ளை, கருப்பு, சிவப்பு, நீலம், மஞ்சள், சாம்பல், குட்டை, நீளம், இளைத்தது, பருத்தது, வட்டம் {நாற்கோணம்}, வட்டம்(48) ஆகிய பனிரெண்டு வகைகள் ஒளிக்குரிய நிறத்திற்கு இருக்கின்றன.
வயது முதிர்ந்தவர்களும், கடமைகளை அறிந்தவர்களும், பேச்சில் வாய்மை நிறைந்தவர்களுமான பிராமணர்களால் இது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.(49) ஒலியும் {சப்தமும்}, தீண்டலும் {ஸ்பர்சமும்} காற்றின் {வாயுவின்} இரு குணங்களாக அறியப்படுகின்றன. தீண்டல் பல்வேறு வகைகளில் சொல்லப்படுகிறது.(50) முரடு, குளிர் {சீதம்}, வெப்பம் {உஷ்ணம்}, இளையது {பிச்சிலம்}, தெளிவு {விசதம்}, கடுமை {கடினம்}, எண்ணெய் {ஸ்நிக்தம்}, வழுவழுப்பானது {சிக்கணம்}, வழுக்கும்தன்மையுள்ளது {ஸ்லக்ஷணம்}, துன்பம்நிறைந்தது {தாருணம் / கூச்சம் நிறைந்தது}, மென்மையானது {மிருது}[11](51) என்ற பனிரெண்டு வகைகளில் காற்றின் குணமான தீண்டல் இருக்கிறதென வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், கடமைகளை அறிந்தவர்களும், உண்மையைக் கண்டவர்களுமான பிராமணர்களால் சொல்லப்படுகிறது.(52)
[11] கும்பகோணம் பதிப்பில், "வாயுவின் குணமான ஸ்பரிசமானது உஷ்ணம் {வெப்பம்}, சீதம் {குளிர்}, ஸுகம் {இன்பம்}, துக்கம் {துன்பம்}, ஸ்நிக்தம் {எண்ணெயான}, விசதம் {வெளிப்படையான}, கடினம், சிக்கணம் {வழுவழுப்பான}, ஸ்லக்ஷ்ணம் {வழுக்கும் தன்மையுள்ளது}, பிச்சிலம் {ஈரமானது}, தாருணம் {கூச்சமானது}, மிருது {மென்மையானது} என இப்படிப் பன்னிரெண்டு விதமுள்ளதென்று ஸித்தி பெற்றவர்களும், மந்திரத்தை அறிந்தவர்களும், தத்வத்தைக் கண்டவர்களுமான பிராம்மணர்கள் விதிப்படி சொல்லுகின்றனர்" என்றிருக்கிறது.
இனி, வெளி ஒரேயொரு குணத்தைக் கொண்டது, அஃது ஒலி என்று சொல்லப்படுகிறது. ஒலியின் எண்ணற்ற குணங்களை நான் விரிவாகச் சொல்லப் போகிறன்.(53) காந்தாரத்துடன் சேர்ந்த ஷட்ஜம் மற்றும் ரிஷபம், மத்யமம், பஞ்சமம், நிஷாதம், தைவதம், இவற்றையும் தவிர ஏற்புடைய ஒலிகள் {இஷ்டம்}, ஏற்பில்லாத ஒலிகள் {அனிஷ்டம்}, ஸம்ஹதம் {கச்சிதமானது} எனப் பல உட்பொருட்களைக் கொண்டதாக இருக்கிறது[12].(54) வெளியில் பிறக்கும் ஒலி இவ்வாறே பத்து வகைகளாக இருக்கிறது என அறிய வேண்டும்.
[12] "இவை ஹிந்து வரம்புகளின் ஒலிக்குறிகளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
(ஐந்து) பூதங்களில் வெளியே உயர்ந்ததாகும். அஹங்காரம் அதைவிட உயர்ந்தது.(55) அஹங்காரத்தைவிடப் புத்தி உயர்ந்தது. புத்தியைவிட ஆன்மா உயர்ந்தது. ஆன்மாவைவிடப் புலப்படாதது {அவ்யக்தம்} உயர்ந்தது. புலப்படாததைவிடப் புருஷன் உயர்ந்தவன்.(56) இருப்பிலுள்ள உயிரினங்களுக்கு மத்தியில் உயர்ந்தவற்றையும், தாழ்ந்தவற்றையும் அறிந்தவனும், செயல்கள் அனைத்தின் விதிமுறைகள் அறிந்தவனும், அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னையே அமைத்துக் கொள்பவனுமான ஒருவன், மங்கிமறையாத ஆன்மாவை அடைகிறான்" என்றான் {பிரம்மன்}.(57)
அஸ்வமேதபர்வம் பகுதி – 50ல் உள்ள சுலோகங்கள் : 57
ஆங்கிலத்தில் | In English |