Eternal duty! | Aswamedha-Parva-Section-51 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 36)
பதிவின் சுருக்கம் : க்ஷேத்ரஜ்ஞன் குறித்த மேலும் சில அவதானிப்புகளை முனிவர்களுக்குச் சொன்ன பிரம்மன்; பிரம்மன் சொன்ன சொற்களின்படியே நடக்க வேண்டுமென அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்; தன் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்ல அர்ஜுனனிடம் அனுமதி கேட்ட கிருஷ்ணன்; அர்ஜுனனின் பதில்...
பிரம்மன், "இந்த ஐந்து பூதங்களைக் கட்டுப்படுத்துவதிலும், அவற்றை வளர்ப்பதிலும் ஆட்சியாளனாக மனமே இருப்பதால், அதுவே பூதங்களின் ஆன்மாவாக இருக்கிறது.(1) மனமே எப்போதும் பெரும்பூதங்களுக்குத் தலைமை தாங்குகிறது. அதிகாரத்தை அறிவிக்கும் புத்தியானது க்ஷேத்ரஜ்ஞன் என்றழைக்கப்படுகிறது[1].(2) நல்ல குதிரைகளைப் பூட்டும் சாரதியைப் போல மனமானது புலன்களைப் பூட்டுகிறது. புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியன எப்போதும் க்ஷேத்ரஜ்ஞனுடன் இணைந்திருக்கிறது.(3) பெருங்குதிரைகள் பூட்டப்பட்டதும், புத்தியைக் கடிவாளமாகக் கொண்டதுமான தேரில் ஏறும் தனிப்பட்ட ஆன்மாவானது அனைத்துப் பக்கங்களிலும் அதைச் செலுத்துகிறது.(4) (குதிரைகளாகப்) புலன்கள் பூட்டப்பட்டதும், மனத்தைச் சாரதியாகக் கொண்டதும், புத்தியை நித்திய கடிவாளமாகக் கொண்டதுமாகப் பெரும் பிரம்மத் தேர் இருக்கிறது[2].(5)
[1] "புத்தியானது, மனம் தன் முன் வைப்பனவற்றால் இயங்குகிறது. எனவே, புத்தியானது, மனத்தால் தொண்டாற்றப்பட்டு அதிகாரம் அல்லது உரிமையைச் செயல்படுத்தும் தலைவனாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "இந்த ஐந்து பூதங்களுக்கும் மனமே ஈஷ்வரன், பூதங்களுடைய ஸ்ருஷ்டியிலும், ஸம்ஹாரத்திலும் மனமே காரணம். மனமானது எப்பொழுதும் மஹாபூதங்களுக்கு அதிஷ்டாதாவாகவும், ஜீவனாகவும் இருக்கிறது. (அதனுடைய) தலைமையைப் புத்தி சொல்கிறது" என்றிருக்கிறது.[2] கும்பகோணம் பதிப்பில், "சரீராபிமானியான அந்த ஜீவன் (இந்திரியங்களாகிற) பெரிய குதிரைகளோடு கூடினதும் (ஸாரதியாக இருக்கும் புத்தியினால் நடத்தப்பட்டதுமான (சரீரமாகிற) ரதத்தில் ஏறிக் கொண்டு எங்கும் அலைகிறான். இந்திரயக்கூட்டத்துடன் கூடினதும், மனமாகிற ஸாரதியுள்ளதும், புத்தியாகிற சாட்டையுள்ளதுமான (சரீரமாகிற) ரதமானது எப்பொழுதும் பெரியதாகவும், பிரம்மமயமாகவும் ஆகிறது" என்றிருக்கிறது. சரீராபிமானியான என்பதன் அடிக்குறிப்பில், "சரீரத்தில் அபிமானமுள்ளவன் இஷ்டப்படி இந்திரியங்களை விஷயங்களில் செலுத்தி அலைகிறான்" என்பது கருத்து என்றும், இந்திரியக்கூட்டத்துடன் என்பதன் அடிக்குறிப்பில், "மனத்தாலும், புத்தியாலும் இந்திரியங்களை அடக்கினவன் பிரம்மஜ்ஞானியாகிறான்" என்றும் இருக்கிறது.
கல்வியும், ஞானமும் கொண்டவனும், இவ்வழியில் பிரம்மத்தேரை எப்போதும் புரிந்து கொள்பவனுமான மனிதன், அனைத்துப் பொருள்களுக்கு {உலகங்களுக்கு} மத்தியிலும் ஒருபோதும் மயக்கத்தில் {அறியாமையில் / மோஹத்தில்} மூழ்க மாட்டான்.(6) பிரம்மம் எனும் இந்தக் காடு புலப்படாததில் தொடங்கி, பொருட்திரளில் முடிகிது. அஃது அசையும், மற்றும் அசையாத பொருட்களையும் சேர்த்துக் கொண்டு, சூரியன் மற்றும் சந்திரனிடம் இருந்து ஒளியைப் பெற்றுக் கொண்டு, கோள்கள் மற்றும் விண்மீன்கூட்டங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அஃது ஆறுகள் மற்றும் மலைகள் எனும் வலைகளால் எப்போதும் நிறைந்திருக்கிறது. எப்போதும் அது பல்வேறு வகை நீர்நிலைகளுடன் பிரகாசிக்கிறது. அஃது அனைத்து உயிரினங்களுக்கு வாழ்வாதார வழிமுறையாக இருக்கிறது. மேலும் அஃது அனைத்து உயிரினங்களின் இலக்காகவும் இருக்கிறது. அந்தக் காட்டிலேயே க்ஷேத்ரஜ்ஞன் எப்போதும் திரிகிறான்.(7-9) இவ்வுலகில் உள்ள அசையும் மற்றும் அசையாத பொருட்கள் எதுவும் முதலில் அழிவதாக இருக்கிறது {அவையே முதலில் லயமடைகின்றன}. அதன் பிறகு, அனைத்துப் பொருட்களையும் {பூதங்களையும்} தொகுக்கும் குணங்கள் (அழிவை அடைகின்றன).(10)
குணங்களுக்குப் பிறகு ஐம்பூதங்கள் (அழிவையடைகின்றன). இதுவே பொருட்களின் {பூதங்களின்} படிநிலையாகும். தேவர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், அசுரர்கள்,(11) ராட்சசர்கள் ஆகியோரனைவரும் இயற்கையில் இருந்தே உண்டாகின்றனர், {வேள்விகள் முதலான} செயல்களில் இருந்தோ, {பிரம்மா முதலான} காரணத்தில் இருந்தோ உண்டாவதில்லை. அண்டத்தைப் படைப்பவர்களான பிராமணர்கள் இம்மையில் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள்[3].(12) அவர்களில் இருந்து உதிக்கும் அனைத்தும் வேளை வரும்போது கடலில் அலைகளைப் போல அந்த ஐம்பூதங்களிலேயே கறைகின்றன {அழிகின்றன / லயமடைகின்றன}.(13) பெரும்பூதங்கள் அனைத்தும் அண்டத்தைத் தொகுக்கும் பூதங்களைக் கடந்தவையாகும். ஐம்பூதங்களில் இருந்து விடுபட்டவன் உயர்ந்த இலக்கை அடைகிறான்.(14) பலமிக்கவனான பிரஜாபதியே அனைத்தையும் மனத்திலேயே உண்டாக்கினான். அதே போல முனிவர்களும் தவத்தின் துணையுடன் தேவர்களின் நிலையை அடைந்தனர்.(15)
[3] கும்பகோணம் பதிப்பில், "பிராம்மணர்களே, இவ்வுலகில் எல்லாவற்றையும் படைப்பவர்களான இந்த ஸ்ருஷ்டி கர்த்தர்களாக அடிக்கடி ஜனிக்கின்றனர்" என்றிருக்கிறது.
அதேபோலவே, துல்லியத்தை அடைந்தவர்களும், யோகக் குவிப்புக்கு வல்லவர்களும், கனி மற்றும் கிழங்குகளை உண்டு வாழ்பவர்களுமாக இருப்பவர்கள் தவத்தின் மூலம் மூவுலகத்தையும் உணர்கிறார்கள்.(16) அடையப்படும் உடைமைகளான அனைத்திற்கும் தவமே வேராக இருப்பதால் மருந்துகள், மூலிகைகள் மற்றும் பல்வேறு அறிவியல்கள் அனைத்தும் தவம் எனும் வழிமுறையால் மட்டுமே அடையப்படுகிறது.(17) தவம் தடுக்கப்பட முடியாதது என்பதால், அடைதற்கரிதான எதுவும், கற்பதற்கரிதான எதுவும், வெல்வதற்கரிதான எதுவும், கடப்பதற்கரிதான எதுவும் என அனைத்தும் தவத்தின் மூலம் அடையப்படுகின்றன.(18) மதுவைப் பருகியவன், பிராமணனைக் கொன்றவன், களவாடுபவன், கருவை அழித்தவன், ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தியவன் ஆகியோரும் நன்கு செய்யப்படும் தவத்தின் மூலம் பாவத்தில் இருந்து தூய்மையடைகிறார்கள்.(19)
மனிதர்கள், பித்ருக்கள், தேவர்கள், (வேள்வி) விலங்குகள், பறவைகள், விலங்குகள், அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும்,(20) தவங்களில் தங்களை எப்போதும் அர்ப்பணித்துக் கொள்வதன் மூலம், தவத்தால் மட்டுமே வெற்றியால் மகுடம் சூட்டப்படுகின்றன. அதே போலவே, பெரும் மாயசக்திகளுடன் கூடிய தேவர்களும் சொர்க்கத்தை அடைந்தனர்.(21) சோம்பலின்றி, அஹங்காரம் நிறைந்தவர்களாக எதிர்பார்ப்புகளுடன் கூடிய செயல்களைச் செய்பவர்கள் பிரஜாபதியின் முன்னிலையை அடைகிறார்கள்.(22) எனினும், மமதையற்றவர்களும், தூய்மையான தியான யோகத்தின் மூலம் அகங்காரத்தில் இருந்து விடுபட்டவர்களுமான உயர் ஆன்மாக்கள் பெருமைக்குரிய உயர்ந்த உலகங்களை அடைகின்றனர்.(23) சுயத்தைச் சிறப்பாகப் புரிந்து கொள்பவர்கள், தியான யோகத்தை அடைந்து, எப்போதும் தங்கள் மனங்களை உற்சாகம் நிறைந்தவையாக்கி, புலப்படாத இன்பத்திரளுக்குள் நுழைகின்றனர்.(24) மமதை மற்றும் அஹங்காரத்தில் இருந்து விடுபட்டவர்களும், தியான யோகத்தில் நிறைவை அடைந்து மீண்டும் பிறப்பவர்களுமான மனிதர்கள், (அத்தகைய வாழ்வில் இருந்து விடுபடும்போது) புலப்படாத பெரியதற்கு ஒதுக்கப்பட்ட உயர்ந்த உலகத்திற்குள் நுழைகிறார்கள்.(25)
அதே புலப்படாததில் (கோட்பாட்டில்) பிறந்து, இருள் {தமஸ்} மற்றும் ஆசை {ரஜோ} குணங்களில் இருந்து விடுபட்டு, நல்லியல்பின் {சத்வ} குணத்தை மட்டுமே பிற்பற்றுபவன் அதையே மீண்டும் அடைந்து,(26) அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, அனைத்துப் பொருட்களையும் படைக்கிறான்[4]. அத்தகைய ஒருவனே துல்லியமான க்ஷேத்ரஜ்ஞனாக அறியப்பட வேண்டும். எவன் தன்னை அறிவானோ, அவன் வேதங்களை அறிவான்[5].(27) மனத்தில் (மனக்கட்டுப்பாட்டில்) இருந்து தூய ஞானத்தை அடையும் தவசி தற்கட்டுப்பாட்டுடன் அமர வேண்டும். ஒருவனுடைய மனம் எதனில் நிறுவப்பட்டுள்ளதோ அவன் அதுவாகவே ஆகிறான். இதுவே நித்தியப் புதிராகும் {ஸநாதனமான ரஹஸ்யமாகும்}.(28) புலப்படாததை {அவ்யக்தத்தை} தொடக்கமாகவும், குணத்திரளை {விசேஷங்களை} முடிவாகவும் கொண்டது ஞானமின்மையை {அவித்தையைத்} தன் குறியீடாகக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நீங்கள் குணங்களற்ற இயல்பைக் கொண்டதெது {அது ஞானம்} என்பதை நீங்கள் புரிந்து கொள்வீராக.(29) மிருத்யு (மரணம்) இரண்டு எழுத்துகளைக் கொண்டதாகும்; நித்திய பிரம்மம் மூன்றெழுத்துகளைக் கொண்டதாகும். மமதையே மரணம், மமதைக்கு எதிர்நிலை நித்தியமாகும்[6].(30)
[4] "புலப்படாததே அண்டத்தின் காரணம் என்பதால், சர்வான் ஸ்ரீஜதி என்பவன் அண்டத்தின் காரண நிலையை அடைவதன் மூலம் அனைத்துப் பொருட்களையும் படைக்கிறான். அத்தகைய ஒருவனுக்கும், பரமாத்மாவுக்கும் இடையில் எந்த வேறுபாடும் கிடையாது. இதுவே இறுதி வாக்கியத்தில் சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] "வேதம் என்றழைக்கப்படும் நூலைப் படிக்கும் மனிதன் உண்மையில் வேதத்தை அறிவதில்லை. எனினும், க்ஷேத்ரஜ்ஞனை அறிந்தவன் உண்மையில் வேதத்தை அறிந்தவனாகக் கருதப்படுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அவ்யக்தத்திலிருந்தே உண்டானவர்கள் காலத்தை அறிந்தவர்களும், தமஸாலும், ரஜஸாலும் விடப்பட்டவர்களுமாகித் தனிமையான ஸத்வத்தை அடைந்து மீண்டும் (அதனையே) அடைகின்றனர். எல்லாப் பாவகளினின்றும் விடப்பட்டவனும், சுத்தனுமாயிருப்பவன் எல்லாவற்றையும் விடுவான். அவனை க்ஷேத்ரஜ்ஞனென்று தெரிந்து கொள்ள வேண்டும். எவன் அவனை அறிகிறானோ அவன் வேதத்தை அறிந்தவனாகிறான்" என்றிருக்கிறது.[6] "மிருத்யு, அல்லது மரணம் இரண்டு எழுத்துள்ளதெனும் போது அதற்கும் "மம" என்ற ஈரெழுத்துக்கும் இடையில் உள்ள தொடர்பு சரியானதாக இருக்கும். எனவே பிரம்மத்தில் வழக்கில் அது "நமம" என்பதாகும். நான் எனது என்ற மமதை மரணம் என்பதும், மமதையற்ற நிலை பிரம்மம் அல்லது முக்தி {மோட்சம்} என்பதும் முந்தைய பகுதிகளைக் கவனமாகப் படித்தவர்களால் புரிந்து கொள்ள முடியாதவையன்று" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அவ்யக்த முதல் விசேஷம் வரையிலுள்ளது அவித்தையால் ஏற்பட்டதென்று கருதப்பட்டிருக்கிறது. அவ்வாறே, ஞானத்தைக் குணங்களால் ஏற்பட்டதாகத் தெரிந்து கொள்ளுங்கள். (’என்னுடையது’ என்ற பொருளுள்ள) "மம" என்னும் இரண்டு அக்ஷரங்கள், ஸம்ஸாரத்திற்குக் காரணமும் ("என்னுடையதன்று" என்ற பொருளுள்ள) "நமம" என்னும் மூன்று அக்ஷரங்களும் சாஸ்வதமான பிரம்மத்தை அடைவதற்குக் காரணமும் ஆகின்றன" என்றிருக்கிறது.
கெட்ட புத்தியினால் வழிநடத்தப்படும் சில மனிதர்கள் செயல்களை மெச்சுகின்றனர். எனினும், உயர் ஆன்மாக்களைக் கொண்ட புராதனர்களாக எண்ணப்படுவோர் ஒருபோதும் செயல்களை மெச்சுவதில்லை.(31) செயல்பாட்டின் மூலம் பதினாறாலான உடலுடன் ஓர் உயிரினம் பிறக்கிறது[7]. (உண்மை) ஞானம், (உடலின் நனவுடன் கூடிய சுயத்தை) புருஷனை விழுங்குகிறது. அமிர்தத்தை உண்பவர்களுக்கு இதுவே மிக ஏற்புடையதாக இருக்கிறது[8].(32) எனவே, (வாழ்வெனும் கடலின்) மறுகைவரை விரிந்த பார்வையைக் கொண்டவர்கள், செயல்களில் பற்றேதும் வைப்பதில்லை. எனினும், இந்தப் புருஷன் ஞானம் நிறைந்தவனாக இருக்கிறானேயன்றி செயல்நிறைந்தவனாக அல்ல[9].(33) மரணமற்றவனும், மாற்றமில்லாதவனும், அறியப்படமுடியாதவனும், நித்தியமானவனும், அழிவற்றவனும், பற்றுகள் அனைத்தையும் கடந்தவனும், கட்டுப்படுத்தப்படாதவனுமான ஆன்மாவைப் புரிந்து கொள்பவன் இறப்பதில்லை.(34) முன்னவனெவனும் இல்லாதவனும், படைக்கப்படாதவனும், மாற்றமில்லாதவனும், வெல்லப்படாதவனும், அமுதம் உண்பவர்களாலும் புரிந்து கொள்ளப்பட முடியாதவனுமான ஆன்மாவை இவ்வாறு புரிந்து கொள்பவன், இவ்வழிமுறைகளின் மூலம் தானே புரிந்து கொள்ளப்பட முடியாதவனாகவும், இறப்பில்லாதவனாகவும் ஆகிறான்.(35)
[7] "ஐம்பெரும் பூதங்களும், {பதினோரு விகாரங்களாகிய} மனத்துடன் கூடிய அறிவுப்புலன்கள் ஐந்தும், செயற்புலன்கள் ஐந்தும் இவையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[8] "புருஷன் என்ற சொல் "தேஹாபிமானி ஜீவன்" அல்லது உடல்நனவுடன் கூடிய தனிப்பட்ட சுயம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஞானி தன்னை அண்டத்தோடு அடையாளம் கண்டு, பிரம்மத்தோடு தன்னைக் கலப்பதால், உண்மை ஞானமானது ஜீவனின் இந்நிலையை அழிக்கிறது. அமிர்தத்தை உண்பவர்கள் என்பது, தேவர்கள், பித்ருக்கள் மற்றும் விருந்தினர்களுக்குப் பங்கு கொடுக்காமல் எந்த உணவையும் உண்ணாதவர்கள் என்ற பொருளில் சொல்லப்படுகிறது. பக்தியுடன் கூடிய யோகிகளையே இது குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[9] "இங்கே சொல்லப்படும் புருஷன் என்பது, உடல்நனவற்ற ஜீவனைக் குறிப்பிடுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மனப்பதிவுகள் {எண்ணங்கள்} அனைத்தையும் அகற்றி, ஆன்மாவுக்குள் ஆன்மாவைக் கட்டுப்படுத்தி, எதைவிடப் பெரியதேதும் இல்லையோ அந்த மங்கலமான பிரம்மத்தை அவன் புரிந்து கொள்கிறான்.(36) புத்தி தெளிவடைந்ததும் அவன் அமைதியை அடைவதில் வெல்கிறான். ஒரு கனவில் நடைபெறுவதைப் போல இருப்பதே அமைதியின் அறிகுறியாகும்[10].(37) இதுவே,, ஞானத்தை நோக்கமாகக் கொண்டவர்களும், விடுதலையடைந்தவர்களுமான இவர்களின் இலக்காகும். அடுத்தடுத்த வளர்ச்சிகளில் பிறக்கும் இயக்கங்கள் அனைத்தையும் அவர்கள் காண்கிறார்கள்[11].(38) இஃது உலகப்பற்றற்றவர்களின் இலக்காகும். இது நித்திய நடைமுறையாகும். இது ஞானிகள் அடையக்கூடிய உடைமையாகும். இதுவே இகழப்படாத ஒழுக்கமுறையுமாகும்.(39) இந்த இலக்கானது, அனைத்து உயிரினங்களிடமும் ஒத்த நடை கொண்டவனும், பற்றற்றவனும், எதிர்பார்ப்பில்லாதவனும் {பயன் கருதாதவனும்}, அனைத்துப் பொருட்களையும் நிகராகக் காண்பவனுமான ஒருவனால் அடையக்கூடியதாக இருக்கிறது.(40) மறுபிறப்பாள முனிவர்களில் முதன்மையானவர்களே, நான் அனைத்தையும் உங்களுக்கு அறிவித்து விட்டேன். இவ்வழியில் உடனே செயல்பட்டு வெற்றியை அடைவீராக" என்றான் {பிரம்மன்}".(41)
[10] "ஒரு கனவில் காணப்படுவது அனைத்தும் உண்மையல்ல. எனவே, அமைதியை அடைந்த பிறகு சூழ்ந்திருக்கும் அனைத்தும் உண்மையற்றதாகும். நீலகண்டர் இதற்குச் சற்றே வேறுபட்ட விளக்கத்தை அளிக்கிறார். அது பின்வருமாறு: அமைதி அடையப்படும்போது, உடலுடனும், புறப்பொருட்கள் அனைத்துடனும் எந்தப் பற்றுமில்லாமல் ஆன்மா வாழ்கிறது. உண்மையில், கனவில் செயல்படுவதைப் போலவே அப்போது ஆன்மாவானது முழுமையாகத் தன்னிலேயே வாழ்கிறது {என நீலகண்டர் விளக்குகிறார்}" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[11] "முன்வினைகளின் வளர்ச்சியின் மூலம் தற்காலம் , கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தையும், உலகப் பொருட்கள் அனைத்தையும் அவர்கள் காண்கின்றனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஆசான் தொடர்ந்தார், "ஆசானான பிரம்மனால் இவ்வாறு சொல்லப்பட்டவர்களான அந்த உயர் ஆன்ம தவசிகள் அதன்படியே செயல்பட்டு, (பேரின்ப) உலகங்கள் பலவற்றை அடைந்தனர்.(42) ஓ! அருளப்பட்டவனே, ஓ! தூய ஆன்மா கொண்டவனே, என்னால் அறிவிக்கப்பட்டதும், பிரம்மனால் சொல்லப்பட்டதுமான சொற்களின்படியே நீயும் முறையாகச் செயல்படுவாயாக. அப்போது நீ வெற்றியை அடைவாய்" என்றார் {ஆசான்}".(43)
வாசுதேவன் சொன்னான், "ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, இவ்வாறு அந்த ஆசானால் உயர்ந்த அறக்கோட்பாடுகள் கற்பிக்கப்பட்ட அந்தச் சீடன், அதன்படியே அனைத்தையும் செய்து, விடுதலையை {முக்தியை} அடைந்தான்.(44) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, தான் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்த அந்தச் சீடன், எங்கே கவலைப்பட வேண்டியதில்லையோ அந்த இருக்கையை {ஸ்தானத்தை} அடைந்தான்" {என்றான் வாசுதேவன்}.(45)
அர்ஜுனன், "ஓ! கிருஷ்ணா, ஓ! ஜனார்த்தனா, அந்தப் பிராமணரும், அந்தச் சீடரும் உண்மையில் யாவர்? ஓ! தலைவா, அஃது என்னால் கேட்கத்தகுந்ததாக இருந்தால் உண்மையாக எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(46)
வாசுதேவன், "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நானே ஆசான் என்றும், என் மனமே என் சீடன் என்றும் அறிவாயாக. ஓ! தனஞ்சயா, உன்னிடம் கொண்ட பற்றின் {அன்பின்} காரணமாக நான் இந்தப் புதிரை {ரஹஸ்யத்தை} உனக்குச் சொன்னேன்.(47) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே, உனக்கு என்னிடம் அன்பேதும் இருந்தால் ஆன்மா குறித்த இந்தப் போதனைகளைக் கேட்ட நீ எப்போதும் (அவற்றின்படியே) செயல்படுவாயாக.(48) ஓ! பகைவரைப் பிளப்பவனே, இவ்வறத்தை முறையாகப் பயிலும்போது நீ உன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு முழுமையான விடுதலையை {முக்தியை} அடைவாயாக.(49) முன்னர், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, போருக்கான காலம் வந்தபோது, இந்த அறமே என்னால் (உனக்கு) அறிவிக்கப்பட்டது. எனவே, உன் மனத்தை அதில் நிறுவுவாயாக.(50) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நான் தலைவரான என் தந்தையைக் கண்டு நெடுங்காலம் ஆகிவிட்டது. ஓ! பல்குனா {அர்ஜுனா}, உன்னிடம் விடைபெற்றுக் கொண்டு நான் மீண்டும் அவரைக் காண விரும்புகிறேன்" என்றான் {கிருஷ்ணன்}".(51)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு சொன்ன கிருஷ்ணனிடம், மறுமொழியாகத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, "நாம் இன்று இந்த நகரத்தில் {இந்திரப்பிரஸ்தத்தில்} இருந்து புறப்பட்டு, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குச்} செல்வோம்.(52) அற ஆன்மாவான மன்னன் யுதிஷ்டிரரை அங்கே சந்தித்து, (உன் நோக்கத்தை) அவரிடம் தெரிவித்தபிறகு நீ உன் சொந்த நகரத்திற்கு {துவாரகைக்குச்} செல்வாயாக" என்றான் {அர்ஜுனன்}[12].(53)
அஸ்வமேதபர்வம் பகுதி – 51ல் உள்ள சுலோகங்கள் 53
[12] அஸ்வமேதபர்வம் பகுதி 16 முதல் 51வரை வரும் 36 பகுதிகள் மட்டுமே உண்மையில் அநுகீதையாகும். எனினும் அநுகீதா உபபர்வம் இத்தோடு முற்று பெறுவதில்லை. அஸ்வமேத பர்வத்தின் இறுதிப் பகுதியான 92ம் பகுதிவரை தொடர்கிறது
அஸ்வமேதபர்வம் பகுதி – 51ல் உள்ள சுலோகங்கள் 53
அநுகீதை முற்றும்
ஆங்கிலத்தில் | In English |