Krishna returning to Dwaravati! | Aswamedha-Parva-Section-52 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 37)
பதிவின் சுருக்கம் : ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்ட கிருஷ்ணார்ஜுனர்கள்; கிருஷ்ணனைப் புகழ்ந்து துதித்த அர்ஜுனன்; ஹஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரன் முதலியோரை வணங்கிய கிருஷ்ணன்; யுதிஷ்டிரன் முதலியோரிடம் விடைபெற்றுக் கொண்டு சுபத்திரையை அழைத்துக் கொண்டு துவாரகைக்குப் புறப்பட்ட கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அதன்பிறகு கிருஷ்ணன் தாருகனை அழைத்து, "என் தேர் பூட்டப்படட்டும்" என்று ஆணையிட்டான். மிகக் குறுகிய காலத்திற்குள் தாருகன் (தன் தலைவனிடம்), "பூட்டப்பட்டது" என்று சொன்னான்.(1) அப்போது தன் பணியாட்கள் அனைவரையும் அழைத்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, "ஆயத்தமாகி தயாராக இருப்பீராக. நான் யானையின் பெயர் கொண்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்படப் போகிறோம்" என்றான்.(2) ஓ! மன்னா {ஜனமேஜயா}, இவ்வாறு சொல்லப்பட்ட துருப்பினர், கவங்களைப் பூட்டியவர்களாக, அளவற்ற சக்தி கொண்ட அந்தப் பிருதையின் மைந்தனிடம் {அர்ஜுனனிடம்}, "அனைத்தும் ஆயத்தமாக இருக்கிறது" என்று சொன்னார்கள்.(3) அப்போது, கிருஷ்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகிய அன்பிற்கினிய நண்பர்கள் இருவரும் தங்கள் தேரில் ஏறி, இனிமை நிறைந்த உரையாடல்களில் ஈடுபட்டபடியே பயணம் செய்தனர்.(4)
ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தேரில் அமர்ந்திருந்த வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, பெருஞ்சக்தி கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} மீண்டும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(5) "ஓ! விருஷ்ணி குலத்தைத் தழைக்கச் செய்பவனே, உன் அருளின் மூலமே மன்னர் {யுதிஷ்டிரர்} வெற்றியை அடைந்தார். அவரது பகைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர், மேலும் அவர் ஒரு முள்ளுமின்றித் தன் நாட்டை மீட்டார்.(6) ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, பாண்டவர்கள் உன் மூலம் ஒரு பலமிக்கப் பாதுகாவலனை அடைந்தார்கள். உன்னை எங்கள் படகாகக் கொண்டே நாங்கள் குருக்களெனும் {கௌரவப்}பெருங்கடலைக் கடந்தோம்.(7) ஓ! அண்டத்தையே உன் கைவண்ணமாகக் கொண்டவனே {விஷ்வகர்மாவே}, ஓ! அண்டத்தின் ஆன்மாவே {விஷ்வாத்மாவே}, ஓ! அண்டத்தில் உள்ள அனைத்துள்ளும் சிறந்தவனே {விஷ்வஸத்தமனே}, நான் உன்னை வணங்குகிறேன். உன்னால் அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு நான் உன்னை அறிவேன்[1].(8)
[1] "இந்த வரி தெளிவற்றதாக உள்ளது. கிருஷ்ணன் விரும்பாவிட்டால் ஒருவராலும் பரமனை அறிய முடியாது. எனவே, ஒருவன் எந்த அளவுக்கு அறிய வேண்டும் வேண்டும் என்று கிருஷ்ணன் விரும்புகிறானோ, சரியாக அதே அளவிற்கே அவன் அறிவான் என்று சொல்வதாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! மதுசூதனா, ஒவ்வொரு உயிரினத்தின் ஆன்மாவும் எப்போதும் உன் சக்தியில் இருந்தே பிறக்கின்றன. (படைத்தல், காத்தல், அழித்தல் என்ற வடிவிலான) விளையாட்டு {லீலை} உன்னுடையதே. ஓ! தலைவா, பூமி, வானம் ஆகியவை உன் மாயையே .(9) அசையும் மற்றும் அசையாத பொருட்களை உள்ளடக்கிய இந்த மொத்த அண்டமும் உன்னிலேயே நிறுவப்பட்டுள்ளது. {ஈன்று பிறப்பவை, முட்டையிட்டுப் பிறப்பவை, கழிவில் இருந்து பிறப்பவை, காய்கறிகள் என்ற) நான்கு வகை உயிரினங்களையும், மாற்றத்தின் மூலம் நீயே படைக்கிறாய்.(10) ஓ! மதுசூதனா, பூமி, ஆகாயம், சொர்க்கம் ஆகியவற்றை நீயே படைத்தாய். களங்கமற்ற சந்திர ஒளி உன் புன்னகையாகும். பருவகாலங்கள் உன் புலன்களாகும்.(11) எப்போதும் வீசும் காற்று உன் மூச்சாகும், நித்தியமானதாக இருக்கும் மரணம் உன் கோபமாகும். உன் அருளிலேயே செழிப்பின் தேவி இருக்கிறாள். உண்மையில், ஓ! உயர்ந்த நுண்ணறிவைக் கொண்டவனே, ஸ்ரீ உன்னிலேயே எப்போதும் நிறுவப்பட்டிருக்கிறாள்.(12)
(உயிரினங்கள் ஈடுபடும்) விளையாட்டு நீயே; அவற்றின் மனநிறைவு நீயே; அவற்றின் புத்தி நீயே; அவற்றின் பொறுமை நீயே; அவற்றின் விருப்பங்கள் நீயே; அவற்றின் அழகும் நீயே. அசையும், மற்றும் அசையாத பொருட்களைக் கொண்ட அண்டம் நீயே. ஓ! பாவமற்றவனே, யுக முடிவில் அழிவு என்றழைக்கப்படுபவன் நீயே.(13) நீண்ட காலம் எடுத்துக் கொண்டாலும் உன் குணங்கள் அனைத்தையும் சொல்லவல்லவனாக நான் இல்லை. ஆத்மாவும், பரமாத்மாவும் நீயே. ஓ! தாமரையை (தாமரை இதழ்களைப்) போன்ற கண்களைக் கொண்டவனே, நான் உன்னை வணங்குகிறேன்.(14)
ஓ! தடுக்கப்பட முடியாதவனே, நாரதர், தேவலர், தீவில் பிறந்தவர் (வியாசர்) மற்றும் குருக்களின் பாட்டன் {பீஷ்மர்} ஆகியோரிடம் இருந்து, இவை அனைத்தும் (இந்த அண்டம் அனைத்தும்)(15) உன்னையே சார்ந்திருக்கின்றன என்பதை நான் அறிந்திருக்கிறேன். உயிரினங்கள் அனைத்தின் ஒரே தலைவன் நீயே. ஓ! பாவமற்றவனே, ஓ! ஜனார்த்தனா, எனக்கு உன் அருளைக் கொடுக்கும் நிமித்தமாக நீ அறிவித்ததை,(16) ஓ! ஜனார்த்தனா, நான் முழுமையாக நிறைவேற்றுவேன். எங்களுக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பி பேரற்புதத்தைச் செய்திருக்கிறாய்;(17) போரில் திருதராஷ்டிரர் மகனான கௌரவனுக்கு (இளவரசனுக்கு) {துரியோதனனுக்கு} அழிவை ஏற்படுத்தினாய். (அடுத்தடுத்து) போரில் நான் வீழ்த்திய அந்தப் படை ஏற்கனவே உன்னால் எரிக்கப்பட்டதாகும்.(18) நீ செய்த சாதனையின் விளைவால் வெற்றி எனதானது. உன் புத்தியின் சக்தி மூலமே, போரில் துரியோதனன், கர்ணன், சிந்துக்களின் பாவம் நிறைந்த ஆட்சியாளன் {ஸைந்தவன் / ஜெயத்ரதன்} மற்றும் பூரிஸ்ரவஸ் ஆகியோர் முறையாக அழிக்கப்பட்டனர்.(19,20)
ஓ! தேவகியின் மைந்தா {கிருஷ்ணா}, என்னிடம் நிறைவடைந்து எனக்கு அறிவித்த அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன். இதில் எந்த ஐயத்திற்கும் நான் இடமளிக்க மாட்டேன்.(21) ஓ! பாவமற்றவனே, ஓ! அனைத்துக் கடைமைகளையும் அறிந்தவனே, நீதிமிக்க ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரரிடம் சென்று, உனக்கு விடையளிக்குமாறு அவரைத் தூண்டுவேன்.(22) ஓ! தலைவா, நீ துவாரகைக்குப் புறப்படுவதை நானும் ஏற்கிறேன். ஓ! ஜனார்த்தனா, நீ விரைவில் என் தாய் மாமனை {வசுதேவரைக்} காண்பாய்.(23) தடுக்கப்பட முடியாதவரான பலதேவரையும் {பலராமரையும்}, விருஷ்ணி குலத்தின் வேறு தலைவர்களையும் நீ காண்பாய்" என்றான் {அர்ஜுனன்}. இவ்வாறு ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே அவ்விருவரும் யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தை {ஹஸ்தினாபுரத்தை} அடைந்தனர்.(24)
அப்போது அவர்கள் உற்சாகமிக்க இதயங்களுடன், எந்தக் கவலையுமின்றி, சக்ரனின் மாளிகைக்கு ஒப்பாக இருந்த திருதராஷ்டிரனின் அரண்மனைக்குள் நுழைந்தனர்.(25) பிறகு, ஓ! ஏகாதிபதி, அவன் மன்னன் திருதராஷ்டிரனையும், பெரும் நுண்ணறிவுமிக்க விதுரனையும், மன்னன் யுதிஷ்டிரனையும்,(26) தடுக்கப்பட முடியாதவனான பீமசேனனையும், பாண்டுவின் மூலம் மாத்ரிக்குப் பிறந்த இரு மகன்களையும் {நகுல சகாதேவர்களையும்} கண்டனர். அமர்ந்திருந்த மன்னன் திருதராஷ்டிரன்; வெல்லப்படாத யுயுத்சு {27); பெரும் ஞானியான காந்தாரி, பிருதை {குந்தி}, அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, மேலும் சுபத்திரை முதலான பாரதப் பெண்மணிகள் பிறரையும் அவர்கள் கண்டனர்.(28)
காந்தாரிக்குப் பணிவிடை செய்யும் பெண்கள் அனைவரையும்கூட அவர்கள் கண்டார்கள். பிறகு, பகைவர்களைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும், மன்னன் திருதராஷ்டிரனிடம் சென்று(29) தங்கள் பெயர்களை அறிவித்து, அவனது பாதங்களைத் தீண்டினர். உண்மையில் அந்த உயர் ஆன்மாக்கள் இருவரும், காந்தாரி மற்றும் பிருதையின் பாதங்களையும்,(30) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் மற்றும் பீமனின் பாதங்களையும் தீண்டினர். விதுரனைத் தழுவி கொண்ட அவர்கள், அவனது நலத்தைக் குறித்து விசாரித்தனர்.(31) அந்த மனிதர்கள் அனைவரின் துணையுடன் கூடிய அர்ஜுனனும், கிருஷ்ணனும் (மீண்டும்) மன்னன் திருதராஷ்டிரனை அணுகினர். இரவு வந்ததும், பெரும் நுண்ணறிவுமிக்க மன்னன் திருதராஷ்டிரன் அவரவர் தங்கள் தங்கள் அறைகளில் ஓய்வெடுக்கும் வகையில் குரு குலத்தைத் தழைக்கச் செய்யும் அனைவருக்கும், ஜனார்த்தனனுக்கும் விடைகொடுத்து அனுப்பினான். மன்னனால் அனுமதிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் தங்களுக்குரிய அறைகளுக்குள் நுழைந்தனர்.(32,33)
பெருஞ்சக்தி கொண்ட கிருஷ்ணன், தனஞ்சனின் {அர்ஜுனனின்} அறைக்குச் சென்றான். முறையாக வழிபடப்பட்டவனாக, அனைத்து வகை வசதி மற்றும் இன்பங்களுடன் கூடியவனாக,(34) பெரும் நுண்ணறிவைக் கொண்ட கிருஷ்ணன், தனஞ்சயனின் துணையுடன் மகிழ்ச்சியாக உறங்கி அந்த இரவைக் கழித்தான். இரவு கடந்து காலை விடிந்ததும் அவ்விரு வீரர்களும்,(35) தங்கள் காலைச் சடங்குகளை முடித்துக் கொண்டு, முறையாகத் தங்கள் மேனிகளை அலங்கரித்துக் கொண்டு நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் மாளிகைக்குச் சென்றனர். அங்கே பெரும் வலிமை கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் தன் அமைச்சர்களுடன் அமர்ந்திருந்தான்.(36)
நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த அறைக்குள் நுழைந்த அந்த உயர் ஆன்மாக்கள் இருவரும், தேவர்கள் தலைவனை {இந்திரனைக்} காணும் அஸ்வினி இரட்டையர்களைப் போல நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் கண்டனர்.(37) அம்மன்னனைச் சந்தித்த அந்த விருஷ்ணி குலத்தோனும் {கிருஷ்ணனும்}, குரு குல வீரர்களில் முதன்மையானவனும் {அர்ஜுனனும்}, தங்களிடம் பெரும் நிறைவை அடைந்திருந்த யுதிஷ்டிரனின் அனுமதியைப் பெற்று கீழே அமர்ந்தனர்.(38) அப்போது, பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்த நண்பர்கள் இருவருரையும் கண்டு, அவர்களிடம் பேச விருப்பம் கொண்டான். பேசுபவர்களில் முதன்மையான அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன், விரைவில் பின்வரும் சொற்களில் அவர்களிடம் பேசினான்.(39)
யுதிஷ்டிரன், "வீரர்களே, யது மற்றும் குரு குலத்தில் முதன்மையானவர்களே, நீங்கள் இருவரும் என்னிடம் ஏதோ சொல்ல விரும்புவதாகத் தெரிகிறது. உங்கள் மனத்தில் இருப்பதைச் சொல்வீராக. நான் அதை விரைவில் நிறைவேற்றுவேன். தயங்காதீர்" என்றான்.(40)
இவ்வாறு சொல்லப்பட்டதும், வாக்கை நன்கறிந்தவனான பல்குனன் {அர்ஜுனன்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைப் பணிவுடன் அணுகி, இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(41) அவன் {அர்ஜுனன்}, "ஓ! மன்னா, பேராற்றலைக் கொண்ட இந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, நீண்ட நாட்களாக வீட்டில் இல்லாமல் இருக்கிறான். இவன் உமது அனுமதியுடன் தன் தந்தையைக் காண விரும்புகிறான்.(42) உமக்கு விருப்பமிருந்தால் இவனை ஆனர்த்தர்களின் நகரத்திற்குச் செல்ல அனுமதிப்பீராக. ஓ! வீரரே, இவனுக்கு அனுமதி கொடுப்பதே உமக்குத் தகும்" என்றான்.(43)
யுதிஷ்டிரன், "ஓ! தாமரைக் கண்ணா, நீ அருளப்பட்டிருப்பாயாக. ஓ! மதுசூதனா, ஓ! பலமிக்கவனே, சூர குலத்தில் முதன்மையானவரை {வசுதேவரைக்} காண இன்றே நீ துவாராவதி நகரத்திற்குச் செல்வாயாக.(44) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கேசவா, உன் புறப்பாடு என்னால் அனுமதிக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக என் தாய் மாமனையும் {வசுதேவரையும்}, தேவகி தேவியையும் காணாமல் இருக்கிறாய்.(45) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, ஓ! பெரும் ஞானியே, என் தாய்மாமனைச் சந்தித்து, பலதேவரிடமும் சென்று, அவர்களுக்குத் தகுந்தவாறு என் வார்த்தைகளால் அவ்விருவரையும் வழிபடுவாயாக[2].(46) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, என்னையும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையான பீமனையும், பல்குனனையும் {அர்ஜுனனையும்}, நகுலனையும், சகாதேவனையும் நாள்தோறும் நீ நினைப்பாயாக.(47) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! பாவமற்றவனே, ஆனர்த்தர்களையும், உன் தந்தையையும், விருஷ்ணிகளையும் கண்ட பிறகு என் குதிரை வேள்விக்கு மீண்டும் திரும்பி வருவாயாக.(48) பிறகு பல்வேறு வகை ரத்தினங்களையும், பல்வேறு வகைச் செல்வங்களையும் எடுத்துக் கொண்டு நீ செல்வாயாக. ஓ! சாத்வத குல வீரா, நீ விரும்பும் எதையும் நீ எடுத்துச் செல்வாயாக.(49) ஓ! கேசவா, மொத்த பூமியும் எங்கள் ஆட்சிப்பகுதியானதும், எங்கள் பகைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதும் உன் அருளாலேயே நடந்தன" என்றான் {யுதிஷ்டிரன்}.(50)
[2] "கிருஷ்ணனின் தந்தை வசுதேவர் யுதிஷ்டிரனின் தாய்மாமன் ஆவார். வசுதேவரையும், பலதேவனையும் தன் சார்பாக வழிபடுமாறு யுதிஷ்டிரன் கிருஷ்ணனைக் கேட்டுக் கொள்கிறான். அதாவது மரியாதை நிமித்தமான அன்பான செய்தியை அவர்களிடம் கொண்டுசெல்லுமாறு கிருஷ்ணனை அவன் பணிக்கிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
குருகுலத்தின் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இவ்வாறு சொன்னபோது, மனிதர்களில் முதன்மையான வாசுதேவன் {கிருஷ்ணன்} (மறுமொழியாக) இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(51)
வாசுதேவன் {கிருஷ்ணன்}, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, பொன், ரத்தினங்கள் அனைத்தும், செல்வமனைத்தும், மொத்த பூமியும் உம்முடையவையே, அவை உம்முடையவை மட்டுமே ஆகும். ஓ! தலைவா, என் இல்லத்தில் இருக்கும் செல்வம் எதனுக்கும் நீரே உரிமையாளர் ஆவீர்" என்றான்.(52)
தர்மனின் மகனான யுதிஷ்டிரன், அவனிடம், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி, பெருஞ்சக்தியுடன் கூடியவனான கதனின் அண்ணனை (கிருஷ்ணனை) முறையாக வழிபட்டான். வாசுதேவன் அப்போது தன் அத்தையிடம் ({தன் தந்தையின் சகோதரியான குந்தியிடம்) சென்றான். முறையாக அவளைக் கௌரவித்த அவன் அவளை வலம் வந்தான்.(53) பிறகு அவளால் பதிலுக்கு முறையாக அணுகப்பட்டான்; பிறகு விதுரனை முதலாகக் கொண்ட பிறர் அனைவரும் அவனை அணுகினர். நான்கு கரங்களைக் கொண்டவனும், கதனின் அண்ணனுமான அவன், அப்போது தன் சிறந்த தேரில் நாகபுரத்தை {ஹஸ்தினாபுரத்தை} விட்டுப் புறப்பாட்டான்[3].(54)
[3] "ஹஸ்தினாபுர நகரம் சில வேளைகளில் நாகபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஹஸ்தி மற்றும் நாக என்ற இரு சொற்களும் யானையையே குறிக்கும். யானையின் பெயரைக் கொண்ட அழைக்கப்படும் நகரம் என்றே அந்தக் குரு தலைநகரம் வழக்கமாக விளக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான ஜனார்த்தனன், யுதிஷ்டிரன் மற்றும் தன் அத்தை (குந்தி) ஆகியோரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, தன் சகோதரியான பெண்மணி சுபத்திரையைத் தன் தேரில் அமர்த்திக் கொண்டு, பெரும் எண்ணிக்கையிலான குடிமக்களின் துணையுடன் புறப்பட்டுச் சென்றான். முதன்மையான குரங்கைத் தன் கொடியில் கொண்ட வீரன் {அர்ஜுனன்}, சாத்யகி, மாத்ராவதியின் இரு மகன்கள், அளவிலா நுண்ணறிவைக் கொண்ட விதுரன், யானைகளின் இளவரசனுக்கு ஒப்பான நடையைக் கொண்ட பீமன் ஆகியோர் அனைவரும் மாதவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(56) வலிமையும் சக்தியும் கொண்ட ஜனார்த்தனன், குரு நாட்டை விரிவுபடுத்து அவர்களை அனைவரையும், விதுரனையும் திரும்பச் செய்து, தாருகன் மற்றும் சாத்யகியிடம், "குதிரைகளை விரைவாகத் தூண்டுவீராக" என்று சொன்னான்.(57) பிறகு, பகைக்கூட்டங்களைக் கலங்கடிப்பவனும், பேராற்றல் கொண்டவனுமான ஜனார்த்தனன், சினி குலத்தின் முதன்மையான சாத்யகியின் துணையுடன் தன் பகைவர்கள் அனைவரையும் கொன்ற பிறகு, சொர்க்கத்திற்குச் செல்லும் நூறு வேளைவியைச் செய்தவனை {இந்திரனைப்} போல ஆனர்த்தர்களின் நகரத்திற்குச் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(58)
அஸ்வமேதபர்வம் பகுதி – 52ல் உள்ள சுலோகங்கள் : 58
ஆங்கிலத்தில் | In English |