Utanka! | Aswamedha-Parva-Section-53 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 38)
பதிவின் சுருக்கம் : துவாரகைக்குச் செல்லும் வழியில் உதங்கரைக் கண்ட கிருஷ்ணன்; கௌரவர்கள் அழிக்கப்பட்டதற்காகச் சபிக்கப் போவதாகச் சொன்ன உதங்கர்; உதங்ருக்கு உண்மையைச் சொல்லத் தொடங்கிய கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} துவாரகைக்குப் புறப்படும்போது, பகைவர்களைத் தண்டிப்பவனும், பாரதக் குல இளவரசர்களில் முதன்மையானவனும் ஆனவன் {அர்ஜுனன்} அவனைத் தழுவி கொண்டு, தன் பணியாட்களுடன் சேர்ந்து திரும்பினான்.(1) விருஷ்ணி வீரனை மீண்டும் மீண்டும் தழுவிய பல்குனன் {அர்ஜுனன்}, அவன் தன் பார்வையின் வரம்புக்குள் உள்ள வரை மீண்டும் மீண்டும் தன் கண்களை அவனை நோக்கிச் செலுத்தினான்.(2) கோவிந்தன் மேல் விழுந்த தன் பார்வையைப் பெருங்கடினத்துடன் பிருதையின் மகன் {அர்ஜுனன்} விலக்கினான். வெல்லப்பட முடியாதவனான கிருஷ்ணனும் அவ்வாறே செய்தான் (அதையே செய்தான்).(3) அந்த உயர் ஆன்மா புறப்படும்போது வெளிப்பட்ட அறிகுறிகளை {சகுனங்களை} நான் உனக்கு விரிவாகச் சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(4)
தேருக்கு முன் பெருவேகத்துடன் வீசிய காற்றானது, பாதையில் இருந்து மணற்துகள்கள், புழுதி மற்றும் முட்களை அகற்றியது.(5) வாசவன் {இந்திரன்}, அந்தச் சாரங்கதாரிக்கு {கிருஷ்ணனுக்கு} முன்பு நறுமணமிக்க தெய்வீக மலர்மாரியைப் பொழிந்தான்.(6) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன் {கிருஷ்ணன்} இவ்வாறு சென்று கொண்டிருந்தபோது, நீரில்லாத பாலைவனத்தை அடைந்தான். அங்கே அளவற்ற சக்தி கொண்டவரும், உதங்கர் என்ற பெயரைக் கொண்டவருமான முதன்மையான தவசியைக்[1] கண்டான்.(7) பெரிய கண்களையும், பெருஞ்சக்தியையும் கொண்ட அந்த வீரன் {கிருஷ்ணன்} அந்தத் தவசியை வணங்கினான். பதிலுக்கு அந்தத் தவசியாலும் வணங்கப்பட்டான். அப்போது வாசுதேவன் அவரது நலத்தை விசாரித்தான்.(8)
[1] ஆதிபர்வம் பகுதி 3-ல் கண்ட உதங்கரின் கதையும், இங்கே குறிப்பிடப்படும் உதங்கரின் கதையும் கிட்டத்தட்ட ஒன்று போல் தெரிகிறது. இருவரும் ஒருவராகவே இருக்க வேண்டும்.
பிராமணர்களில் முதன்மையானவரானவரும், மாதவனால் மென்மையாக விசாரிக்கப்பட்டவருமான உதங்கர், முறையாக {பதிலுக்கு} அவனைக் கௌரவித்து, இவ்வார்த்தைகளை அவனிடம் சொன்னார்.(9) அவர் {உதங்கர்}, "ஓ! சௌரியே, குருக்கள் மற்றும் பாண்டவர்களின் மாளிகைகளுக்குச் சென்று சகோதரர்களுக்கிடையில் நீடிக்க வேண்டிய நீடித்த புத்தியை நிறுவுவதில் வெற்றி கண்டாயா? அனைத்தையும் எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்.(10) ஓ! கேசவா, ஓ! விருஷ்ணி குலத்தில் முதன்மையானவனே, உன் உறவினர்களும், உனக்கு எப்போதும் அன்பானவர்களுமான அவர்களை அமைதியடையவும், ஒற்றுமையடையவும் செய்தாயா?(11) ஓ! பகைவர்களை எரிப்பவனே, பாண்டு மகன்கள் ஐவரும், திருதராஷ்டிரன் பிள்ளைகளும் இவ்வுலகில் இன்பமாக உன்னுடன் விளையாடினார்களா?(12) கௌரவர்கள் உன்னால் தணிக்கப்பட்டதன் விளைவால் மன்னர்கள் அனைவரும் தங்கள் தங்கள் நாடுகளில் மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறார்களா?(13) ஓ! மகனே, நான் உன்னிடம் கொண்ட நம்பிக்கை கௌரவர்களைப் பொறுத்தவரையில் கனி கொடுத்ததா {பயனளித்ததா}?" என்று கேட்டார்.(14)
அருளப்பட்ட அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, "கௌரவர்களைப் பொறுத்தவரையில் {அவர்களுக்கு} நல்ல புத்தியைக் கொண்டு வருவதற்கு என்னால் முடிந்த அளவுக்கு முதலில் நான் முயன்றேன். எவ்வழிமுறையினாலும் அவர்களில் அமைதியை நிறுவச் செய்ய முடியாதபோது,(15) உற்றார் உறவினருடன் கூடிய அவர்கள் அனைவரும் மரணமடைய நேர்ந்தது. புத்தியாலோ, பலத்தாலோ விதியைக் கடப்பது சாத்தியமல்ல.(16) ஓ! பெரும் முனிவரே, ஓ! பாவமற்றவரே, இதுவும் நீர் அறியாததல்ல. என்னைக் குறிப்பிட்டு பீஷ்மர் மற்றும் விதுரர் செய்த ஆலோசனைகள் அனைத்தையும் அவர்கள் (கௌரவர்கள்) மீறினர்[2].(17) ஒருவரோடொருவர் மோதிக் கொண்ட அவர்கள் யமனுடைய வசிப்பிடத்திற்கு விருந்தினர்களாகச் சென்றனர். நண்பர்கள் அனைவரும், பிள்ளைகள் அனைவரும் கொல்லப்பட்ட நிலையில் கொல்லப்படாமல் எஞ்சியவர்கள் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே. பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் கூடிய திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்" என்றான் {கிருஷ்ணன்}.(18)
[2] "மஹயம் என்று இங்கே குறிப்பிடப்படுவது என்னுடைய தெய்வீக இயல்பைக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு என்பதற்கு நிகரானது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அவர்கள், நானும், பீஷ்மரும், விதுரரும் சொன்ன புத்தியைக் கேட்கவில்லை" என்றிருக்கிறது.
கிருஷ்ணன் இந்தச் சொற்களைச் சொன்ன போது, உதங்கர் கோபத்தில் நிறைந்தவராக, சினத்தில் கண்களை அகல விரித்தவராக இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னார்.(19)
உதங்கர், "ஓ! கிருஷ்ணா, உன் உறவினர்களும், உனக்கன்பானவர்களுமான குரு குலத்தின் முதன்மையானவர்களைக் காக்க இயன்றவனாக இருந்தும் நீ மீட்கவில்லை என்பதால் நான் நிச்சயம் உன்னைச் சபிக்கப் போகிறேன்.(20) ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, வலுக்கட்டாயமாகப் பொறுத்துச் செல்லுமாறு அவர்களை நீ வற்புறுத்தாததால் கோபத்தில் நிறைந்திருக்கும் நான் உன்னைச் சபிக்கப் போகிறேன்.(21) ஓ! மாதவா, குருக்களில் முதன்மையான அவர்களைக் காக்க முழுமையாக இயன்றவனாக இருந்தும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி, கபடத்தில் மூழ்கி, அவர்களிடம் நீ அக்கறையற்றவனாக இருந்ததால்தான் அவர்கள் அனைவரும் அழிவை அடைந்திருப்பதாகத் தெரிகிறது" என்றார்.(22)
வாசுதேவன் {கிருஷ்ணன் உதங்கரிடம்}, "ஓ! பிருகு குலக் கொழுந்தே, நான் விரிவாகச் சொல்வதைக் கேட்பீராக. நான் சொல்லும் சமாதானங்களையும் நீர் ஏற்பீராக. ஓ! பிருகு குலத்தவரே {பார்க்கவரே} நீர் ஒரு தவசியாவீர்.(23) ஆன்மா தொடர்புடைய என் சொற்களைக் கேட்ட பிறகு நீர் என்னைச் சபிக்கலாம். அற்பமான தவத்தகுதியைக் கொண்டு எந்த மனிதனாலும் என்னை அவமதிக்க முடியாது.(24) ஓ! தவசிகளில் முதன்மையானவரே, உமது தவங்கள் அனைத்தும் அழிவடைவதைக் காண நான் விரும்பவில்லை. நீர் பெருமளவில் சுடர்மிக்கத் தவங்களைச் செய்தவராவீர். நீர் உமது ஆசான்களையும், பெரியோர்களையும் நிறைவடையச் செய்துள்ளீர்[3].(25) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நீர் குழந்தைப் பருவத்திலிருந்தே பிரம்மச்சரிய விதிகளை நோற்று வருவதை நான் அறிவேன். எனவே, பெரும் துன்பத்துடன் தவங்களின் மூலம் நீர் அடைந்தவற்றுக்குக் குறைவு ஏற்படவோ, உமது தவங்கள் அழிவடையவோ நான் விரும்பவில்லை" என்றான் {கிருஷ்ணன்}.(26)
[3] "சரியாகவோ, தவறாகவோ மற்றொருவனைச் சபிப்பதன் மூலம் ஒரு தவசி தன் தவங்களை இழக்கிறார். எனவே, தவசிகளாக இருந்த பிராமணர்களால் எப்போதும் மன்னிக்கும் தன்மை {பொறுமை} கடைப்பிடிக்கப்பட்டது. ஒரு பிராமணரின் பலம் மன்னிக்கும் தன்மையில் இருந்தது. அவர் எவ்வளவு மன்னிக்கும் தன்மையுடன் இருந்தாரோ அவ்வளவு சக்தி மிக்கவராகத் திகழ்வார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அஸ்வமேதபர்வம் பகுதி – 53ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |