Piteous appeal! | Aswamedha-Parva-Section-54 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 39)
பதிவின் சுருக்கம் : தன் மகிமையை உதங்கருக்கு உணர்த்திய கிருஷ்ணன்; தன்னுடைய சொல்லைக் கேட்காததால் கௌரவர்கள் அழிந்தனர் என்று சொன்ன கிருஷ்ணன்...
உதங்கர் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா, களங்கமற்ற அத்யாத்மத்தை எனக்குச் சொல்வாயாக. உன் உரையைக் கேட்டப் பிறகு, ஓ! ஜனார்த்தனா உனக்கு நன்மையானதை விதிப்பேன், அல்லது உன்னைச் சபிப்பேன்" என்றார்.(1)
வாசுதேவன் {கிருஷ்ணன் உதங்கரிடம்}, "இருள் {தமஸ்}, ஆசை {ரஜஸ்} மற்றும் நல்லியல்பின் {சத்வ} குணங்கள் மூன்றும் என்னையே தங்கள் புகலிடமாகக் கொண்டு என்னையே சார்ந்திருக்கின்றன என்பதை அறிவீராக. ஓ! மறுபிறப்பாளரே, ருத்திரர்களும், வசுக்களும் என்னிலிருந்தே உண்டாகினர் என்பதை அறிவீராக.(2) என்னில் அனைத்து உயிரினங்களும் இருக்கின்றன; அனைத்து உயிரினங்களிலும் நான் இருக்கிறேன்; இதையும் அறிவீராக. இது குறித்து உமது மனத்தில் ஐயமேதும் எழவேண்டாம்.(3) ஓ! மறுபிறப்பாளரே, தைத்தியர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள், நாகர்கள், அப்சரஸ் கூட்டங்கள் அனைவரும் என்னில் இருந்தே உண்டாகினர் என்பதையும் அறிவீராக.(4)
இருப்பு, இல்லாமை, வெளிப்பட்டவை, வெளிப்படாதவை, அழியத்தக்கவை, அழிவில்லாதவை என்று எவையெல்லாம் அழைக்கப்படுகின்றனவோ அவை அனைத்தும் என்னையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன.(5) ஓ! தவசியே, (நான்கு) வாழ்வுமுறைகளுடன் தொடர்புடையதாக அறியப்படும் நான்கு வகைக் கடமைகளும், வேதக் கடமைகள் அனைத்தும் என்னையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன.(6) அண்டமாக அமைந்திருக்கும் இல்லாதவை, இருந்தும் இல்லாதவை, இருப்பு இல்லாமையைக் கடந்தவை ஆகிய அனைத்தும் என்னில் இருந்தே உண்டானவையாகும். தேவர்களுக்கும் நித்திய தேவனான என்னையும் விட உயர்ந்தது (என்னைக் கடந்திருப்பது) வேறு எதுவும் கிடையாது[1].(7)
[1] "முதல் அசத் அல்லது இல்லாமை என்பது முயல் கொம்புகளைப் போன்ற பொருட்களைக் குறிக்கிறது. இரண்டாவது சதாசத் அல்லது இருப்பும் இல்லாமையும், இருந்து அழியும் பொருட்களைக் குறிக்கின்றன. சதாசத்பரம் அல்லது இருப்பு மற்றும் இல்லாமையைக் கடந்தது என்பது புலப்படாததைக் குறிப்பிடுகிறது. அண்டம் இவை மூன்றையும் கொண்டதாகும். இவையனைத்தும் வாசுதேவனின் வடிவமே ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸத் அஸத் என்று சொல்லப்படுவதும், அவ்யக்தமும், வ்யக்தமும், அக்ஷரமும், க்ஷரமும் ஆகிய இவையெல்லாம் என் ஸ்வரூபமாக இருக்கின்றன. முனிவரே, நான்கு ஆஸ்ரமங்களுக்கும் விதிக்கப்பட்டிருக்கும் தர்மங்களும், வைதிககர்மங்களும் ஆகிய எல்லாவற்றையும் என் ஸ்வரூபமாகத் தெரிந்து கொள்ளும். அஸத்தாகவும், ஸத்தாகவுமுள்ள ஜகத்தும் ஸத்தையும் அஸத்தையும் விட மேலான அவ்யகத்தமும் நானே. தேவர்களுக்குத் தேவனும், ஸனாதனனுமான என்னிலும் மேலானதில்லை" என்றிருக்கிறது.
ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, ஓம்! (என்ற மூல எழுத்துடன்) தொடங்கும் வேதங்கள் அனைத்தும் என்னுடன் அடையாளங்காணப் படுபவை என்பதை அறிவீராக. ஓ! பிருகு குல மைந்தரே, வேள்வித்தம்பம் நானே; (வேள்விகளில் பருகப்படும்) சோமம் நானே; (தேவர்களுக்குக் காணிக்கை அளிப்பதற்கு வேள்விகளில் சமைக்கப்படும்) சாரு நானே; (செய்யப்படும்) ஹோமம் நானே; தேவர்களை நிறைவடையச் செய்ய வேள்வி செய்பவர்கள் செய்யும் செயல்கள் நானே; வேள்விக் காணிக்கைகளை ஊற்றுபவன் {ஹோதா} நானே; ஊற்றப்படும் ஹவி அல்லது ஆகுதியும் {ஹவ்யம்} நானே என்பதை அறிவீராக. அத்யர்யு நானே. கல்பகன் நானே; புனிதம் நிறைந்த வேள்வி ஹவியும் நானே. பெரும் வேள்விகளில் உத்காத்ரி {உத்காதா} தன் பாடலொலிகளில் என்னையே பாடுகிறார். ஓ! பிராமணரே, ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, பரிகாரச் சடங்குகள் அனைத்திலும் மங்கல மந்திரங்களையும், அமைதி நிறைந்த ஆசிகளையும் சொல்பவர்கள், அண்டத்தின் கைவினைஞனான என் புகழையே பாடுகின்றனர்.(8-10)
ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, ஓ! கல்விமானான பிராமணரே, அனைத்து உயிரினங்களிடமும் கொள்ளும் கருணையையே தன் சாரமாகக் கொண்டவனும், என் மனத்தில் இருந்து உதித்தவனுமான தர்மன் என்னுடைய மூத்த மகன் என்பதை அறிவீராக.(11) ஓ! மனிதர்களில் சிறந்தவரே, என் மகனை ஆதரிப்பதற்காக இடையறாமல் என்னை மாற்றிக் கொண்டு, இவ்வுலகில் உள்ள அல்லது இவ்வுலகை விட்டுச்சென்ற மனிதர்களின் துணையுடன் பல்வேறு கருவறைகளில் நான் பிறக்கிறேன் {அவதரிக்கிறேன்}. உண்மையில், அறத்தைப் பாதுகாக்கவும், அதை நிறுவுவதற்காகவுமே நான் இவற்றைச் செய்கிறேன்.(12) ஓ! பிருகு குல மைந்தரே, இந்த நோக்கத்திற்காக நான் ஏற்கும் வடிவங்களில் விஷ்ணு, பிரம்மன் மற்றும் சக்ரன் {இந்திரன்} என்று மூவுலகங்களிலும் அறியப்படுகிறேன்.(13)
இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் நானே, அவற்றை அழிப்பவனும் நானே. மாற்றமடையாதவனான நானே பாவம் நிறைந்த தன்மையுடன் வாழும் உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கிறேன்.(14) ஒவ்வொரு யுகத்திலும், என் உயிரினங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தில் பல்வேறு வகைக் கருவறைகளில் நுழைந்து அறத்தின் பாலத்தைச் செப்பனிடுகிறேன்.(15) ஓ! பிருகு குல மைந்தரே, தேவ வகையில் வாழும்போது உண்மையில் நான் ஒரு தேவனுக்குரிய அனைத்து வழிமுறைகளிலும் செயல்படுவேன்.(16)
ஓ! பிருகு குல மைந்தரே, கந்தர்வ வகையில் வாழும்போது கந்தர்வனுக்குரிய அனைத்து வழிமுறைகளிலும் நான் செயல்படுவேன்.(17) நாகர்களின் வகையில் வாழும்போது நாகனாகச் செயல்படுவேன், யக்ஷர்கள் அல்லது ராட்சசர்களின் வகையில் வாழும்போது அந்தந்த வகைக்குரிய வழியிலேயே நான் செயல்படுவேன்.(18) இப்போது மனித வகையில் பிறந்திருக்கும் நான் மனிதருக்குரிய வழிமுறையிலேயே செயல்பட வேண்டும். நான் அவர்களிடம் (கௌரவர்களிடம்) மிகப் பரிதாபகரமான வகையில் முறையிட்டேன். ஆனால், மூடர்களான அவர்கள் மதி கலங்கியவர்களாக என் சொற்களை ஏற்க மறுத்தனர்.(19)
கோபத்தில் நிறைந்த நான், (என் செய்தியைப் புறக்கணிப்பதன் விளைவால் ஏற்படப்போகும்) பெரும் பயங்கரத்தைச் சொல்லி அவர்களை அச்சுறுத்தினேன். ஆனால் மீண்டும் அவர்களுக்கு என் வழக்கமான (மனித) வடிவையே காட்டினேன்.(20) மறத்திற்கு {அதர்மத்திற்கு} வசப்பட்டவர்களும், காலமெனும் அறத்தால் {தர்மத்தால்} தாக்கப்பட்டவர்களும், போர்க்களத்தில் நியாயமாகக் கொல்லப்பட்டவர்களுமான அவர்கள் அனைவரும் சொர்க்கத்தை அடைந்தார்கள் என்பதில் ஐயமில்லை.(21) ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, பாண்டவர்களும் பெரும்புகழை அடைந்திருக்கிறார்கள். நீர் கேட்ட அனைத்தையும் நான் உமக்குச் சொல்லிவிட்டேன்" என்றான் {கிருஷ்ணன்}.(22)
அஸ்வமேதபர்வம் பகுதி – 54ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English |