Water in desert! | Aswamedha-Parva-Section-55 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 40)
பதிவின் சுருக்கம் : உதங்கருக்கு விஷ்வரூப தரிசனம் அளித்த கிருஷ்ணன்; உதங்கர் பெற்ற வரம்; சண்டாள வடிவில் வந்த இந்திரன் கொடுத்த அமிர்தத்தை மறுத்த உதங்கர்; பாலைவனத்திலும் நீர்கிடைக்கும் வரத்தை உதங்கருக்கு அளித்த கிருஷ்ணன்...
உதங்கர் {கிருஷ்ணனிடம்}, "ஓ! ஜனார்த்தனா, அண்டத்தைப் படைத்தவன் நீ என்பதை நான் அறிவேன். நீ என்னிடம் கொண்ட கருணையின் விளைவே இந்த ஞானம் என்பதில் ஐயமில்லை.(1) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, என் மனம் உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டிருப்பதால் உற்சாகம் நிறைந்து அமைதியின் வசப்பட்டதாக இருக்கிறது. ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, இதற்கு மேலும் என் இதயம் உன்னைச் சபிக்க விரும்பவில்லை என்பதை அறிவாயாக.(2) ஓ! ஜனார்த்தனா, அற்பக் கருணையையாவது உன்னிடம் அடையத்தகுந்தவனாக நான் இருந்தால், உன் இறை வடிவை {விஷ்ணு ரூபத்தை} எனக்கு ஒருமுறை காட்டுவாயாக" என்று கேட்டார்".(3)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவரிடம் நிறைவடைந்த அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, பெரும் நுண்ணறிவைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} கண்ட நித்தியமான வைஷ்ணவ வடிவை உதங்கருக்குக் காண்பித்தான்.(4) உதங்கர், உயர் ஆன்ம வாசுதேவனை வலிமைமிக்கக் கரங்களுடன் கூடியவனாக அண்ட வடிவில் கண்டார். அந்த வடிவின் பிரகாசம் சுடர்மிக்க நெருப்பைப் போன்றோ, ஆயிரம் சூரியர்களைப் போன்றோ இருந்தது. அது {அவ்வடிவம்} வெளிமுழுவதையும் நிறைத்தபடி அவரது முன்பு நின்றது. அனைத்துப் பக்கங்களிலும் முகங்களைக் கொண்டிருந்தது.(5) அந்தப் பிராமணர் உதங்கர், உயர்ந்ததும், அற்புதம் நிறைந்ததுமான விஷ்ணுவின் அந்த வைஷ்ணவ வடிவைக் கண்டு, உண்மையில் (அத்தோற்றத்தில்) பரமனையே கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தார்.(6)
உதங்கர் {கிருஷ்ணனிடம்}, "ஓ! அண்டத்தையே கைவினையாய் கொண்டவனே, ஓ! அண்டத்தின் ஆன்மாவே, ஓ! அனைத்துப் பொருட்களின் பிறப்பிடமே நான் உன்னை வணங்குகிறேன். உன் பாதத்தால் மொத்த பூமியையும் மறைத்தும், தலையால் ஆகாயத்தை நிறைத்தும் இருக்கிறாய்.(7) பூமிக்கும், ஆகாயத்திற்கும் இடையில் இருப்பதை உன் வயிறு நிறைத்திருக்கிறது. திசைப்புள்ளிகள் அனைத்தும் உன் கைகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. ஓ! மங்கா மகிமை கொண்டவனே, இவை யாவும் நீயே.(8) சிறப்பானதும், அழிவற்றதுமான இந்த வடிவை விலக்குவாயாக. நான் இப்போது உன்னை நித்தியமான (மனித) வடிவில் காண விரும்புகிறேன்" என்றார்".(9)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! ஜனமேஜயா, நிறைவடைந்த ஆன்மாவைக் கொண்ட கோவிந்தன், அவரிடம் {உதங்கரிடம்}, "வரம் ஏதும் கேட்பீராக" என்ற இந்த வார்த்தைகளைச் சொன்னான்.
எனினும் உதங்கர்,(10) "ஓ! பெரும் காந்தியைக் கொண்டவனே, ஓ! கிருஷ்ணா, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, உன்னுடைய இந்த வடிவைக் கண்டதே எனக்குப் போதுமான வரமாகும்" என்றார்.(11)
எனினும், கிருஷ்ணன் மீண்டும் அவரிடம், "இக்காரியத்தில் தயங்காதீர். இது செய்யப்பட வேண்டும். என் வடிவைக் கண்டது கனியற்றதாகக் கூடாது" என்றான்.(12)
உதங்கர் {கிருஷ்ணனிடம்}, "ஓ! தலைவா, எது செய்யப்பட வேண்டுமென நீ நினைக்கிறாயோ, அதை நான் நிறைவேற்ற வேண்டும். நான் எங்கெல்லாம் நீரை விரும்புவேனோ அங்கெல்லாம் அஃதை அடைய விரும்புகிறேன். இத்தகைய பாலைவனங்களில் நீர் கிடைப்பது அரிதாகும்" என்றார்.(13)
அந்தச் சக்தியை விலக்கிக் கொண்ட பரமன், அப்போது உதங்கரிடம், "எங்கெல்லாம் உமக்கு நீர் தேவைப்படுகிறதோ, அங்கே என்னை நினைப்பீராக" என்று சொன்னான். இவ்வாறு சொல்லிவிட்டு அவன் துவாரகையை நோக்கிச் சென்றான்.(14)
அதன் பிறகு ஒரு நாள் சிறப்புமிக்கவரான உதங்கர், பாலைவனத்தில் மிகுந்த தாகத்துடன் நீர் வேண்டித் திரிந்தார். அவ்வாறு திரியும்போது, மங்கா மகிமை கொண்ட கிருஷ்ணனை நினைத்தார்.(15) அப்போது, அந்த நுண்ணறிவுமிக்க முனிவர் {உதங்கர்}, அந்தப் பாலைவனத்தில், உடல்முழுவதும் புழுதி படர்ந்தவனும், நாய்க்கூட்டத்தால் சூழப்பட்டவனுமான, (சண்டாள வகையைச் சேர்ந்த) ஒரு நிர்வாண வேடனை {புலையனைக்}[1] கண்டார்.(16) மிகக் கடுந்தோற்றத்தில் இருந்த அவன், ஒரு வாளையும், வில்லையும், கணைகளையும் தரித்திருந்தான். அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர், அந்த வேடனின் சிறுநீர் உறுப்பில் இருந்து {காலருகில் உள்ள தோற்பையில்} அபரிமிதமான நீர் வருவதை {இருப்பதைக்} கண்டார்[2].(17)
[1] மலைசார்ந்த இடங்களில் திரியும் வேடனைக் குறித்த மதங்கன் என்ற சொல் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. புலையன் என்று கும்பகோணம் பதிப்பில் இருக்கிறது.[2] கும்பகோணம் பதிப்பில், "பிராம்மண ஸ்ரேஷ்டரான உதங்கர் அவனுடைய கால்பக்கத்திலுள்ள தோற்பையில் அதிக ஜலமிருக்கக்கண்டார்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது. இங்கே மொழிமயக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், கும்பகோணம் பதிப்பின் உரையே சரியாகத் தெரிகிறது. இங்கே சிறுநீர் உறுப்பு என்று கொள்ளாமல் தோற்பை என்று கொள்வதே சரியாக இருக்கும். மூலச் சொற்கள் பின்வருமாறு, "பீஷணம் பத்தனிஸ்த்ரிம்ஸம் பாணகார்முகதாரிணம் தஸ்யாத ஸ்ரோதஸோ (அ)பஶ்யத்வாரி பூரி த்விஜோத்தம bhīṣaṇaṃ baddhanistriṃśaṃ bāṇakārmukadhāriṇam tasyādhaḥ srotaso 'paśyad vāri bhūri dvijottamaḥ". - https://sacred-texts.com/hin/mbs/mbs14054.htm
உதங்கர் கிருஷ்ணனை நினைத்ததும், அந்த வேடன் சிரித்துக் கொண்டே அவரிடம், "ஓ! உதங்கரே, ஓ! பிருகு குலத்தவரே, இந்த நீரை என்னிடம் இருந்து நீர் பெறுவீராக.(18) தாகத்தால் பீடிக்கப்பட்ட உம்மிடம் பெருங்கருணை கொள்கிறேன்" என்றான்.
வேடனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்த நீரை ஏற்கும் விருப்பம் எதையும் அந்தத் தவசி வெளிக்காட்டவில்லை.(19) நுண்ணறிவுமிக்க உதங்கர், மங்கா மகிமை கொண்ட கிருஷ்ணனை நிந்திக்கவும் தொடங்கினார். எனினும் அந்த வேடன் மீண்டும் மீண்டும் அம்முனிவரிடம் "பருகுவீராக" என்றான்.(20) அந்தத் தவசி, இவ்வாறு அளிக்கப்பட்ட நீரைப் பருக மறுத்தார். மறுபுறம், பசி மற்றும் தாகத்தால் பீடிக்கப்பட்ட அவர் கோபவசப்பட்டார். ஓ! மன்னா, அந்த உயர் ஆன்மா முனிவரின் தீர்மானத்தால் அவமதிக்கப்பட்ட அந்த வேடன், தன் நாய் கூட்டத்துடன் அங்கேயே அப்போதே மறைந்து போனான். (அற்புதம் நிறைந்த) அந்த மறைதலைக் கண்ட உதங்கர் நாணத்தால் நிறைந்தார்.(22) அவர், பகைவர்களைக் கொல்பவனான கிருஷ்ணனால் (அவன் கொடுத்த வரத்தால்) தாம் வஞ்சிக்கப்பட்டதாகவும் நினைத்தார்.
மிக விரைவில், சங்கு சக்கரக் கதாதாரி {கிருஷ்ணன்} அந்த (வேடன் வந்த) வழியிலேயே உதங்கரிடம் வந்தான். கிருஷ்ணனிடம் பேசிய அந்தப் பிராமணர் {உதங்கர்}, "ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, ஓ! தலைவா, பிராமணர்களில் முதன்மையான ஒருவனுக்கு ஒரு வேடனின் சிறுநீர் வடிவில் {தோற்பையிலுள்ள} நீரை அளிப்பது முற்றிலும் தகாததாகும்" என்றார்[3].
[3] கும்பகோணம் பதிப்பில், "நீர் பிராம்மண ஸ்ரேஷ்டர்களுக்குப் புலையனுடைய தோற்பையிலுள்ள அவிதமான ஜலத்தைக் கொடுப்பது யுக்தம் அன்று" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.
பெரும் நுண்ணறிவுமிக்க ஜனார்த்தனன், இச்சொற்களைச் சொன்ன உதங்கருக்கு ஆறுதலளிக்கும் வகையில் மென்மையான சொற்கள் பலவற்றைச் சொல்லி, "எந்த வடிவில் நீரை உமக்கு அளிப்பது முறையோ அந்த வடிவிலேயே உமக்கு நீர் அளிக்கப்பட்டது. ஐயோ, ஆனால் நீர் அதைப் புரிந்து கொள்ளவில்லை. உமக்காக வஜ்ரதாரியான புரந்தரன் என்னால் வேண்டிக்கொள்ளப்பட்டான்.(23-27)
பலமிக்க அந்தத் தேவனிடம், "நீரின் வடிவில் உதங்கருக்கு அமுதத்தை அளிப்பாயாக" என்பதே நான் சொன்ன சொற்களாகும். அப்போது தேவர்களின் தலைவன் என்னிடம், "இறக்கக்கூடிய ஒருவன் இறவாதவன் {அமரன்} ஆவது முறையாகாது.(28) உதங்கருக்கு வேறேதும் வரத்தைக் கொடுப்பாயாக" என்றான்.
ஓ! பிருகுவின் மகனே, இச்சொற்களே மீண்டும் மீண்டும் எனக்குச் சொல்லப்பட்டன. எனினும், "உதங்கருக்கு அமுதம் கொடுக்கப்பட வேண்டும்" என்ற இந்தச் சொற்களால் மீண்டும் சச்சியின் தலைவன் {இந்திரன்} என்னால் வேண்டிக் கொள்ளப்பட்டான்.(29)
தேவர்களின் தலைவன், எனக்கு ஆறுதலளிக்கும் வகையில், "ஓ! பெரும் நுண்ணறிவு மிக்கவனே, அவருக்கு அமுதம் கொடுக்கப்பட வேண்டுமெனில்,(30) நான் ஒரு வேடனின் வடிவை ஏற்று உயர் ஆன்மா கொண்ட அந்தப் பிருகு குலக் கொழுந்துக்கு அதைக் கொடுப்பேன். அவ்வாறே அந்தப் பிருகுவின் மைந்தர் அதை ஏற்றுக் கொள்வாரெனில்,(31) ஓ! தலைவா, நான் அவருக்கு அதைக் கொடுக்கச் செல்வேன். எனினும், அவர் அலட்சியத்தால் என்னைத் திருப்பி அனுப்பினால் எக்காரணத்தினாலும் நான் அவருக்கு அதைக் கொடுக்க மாட்டேன்" என்றான்[4].(32)
[4] இங்கே சிறுநீர் வடிவில் அமுதத்தைக் கொடுக்கப்போகிறேன் என இந்திரன் கிருஷ்ணனிடம் சொல்லவில்லை. சண்டாள வடிவில் சென்று அமுதத்தைக் கொடுக்கப் போகிறேன் என்றே சொல்கிறான். எனவே, மற்ற மூன்று பதிப்புகளிலும் சிறுநீர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தாலும், கும்பகோணம் பதிப்பில் உள்ளது போலத் தோற்பையிலுள்ள நீர் என்பதே சரியானதாக இருக்க வேண்டும்.
என்னிடம் இந்த உடன்பாட்டைச் செய்து கொண்ட வாசவன் {இந்திரன்}, அமுதத்தைக் கொடுப்பதற்காகவே அந்தத் தோற்றத்தில் உம் முன் தோன்றினான். எனினும், அந்தச் சிறப்புமிக்கவன் சண்டாளத் தோற்றத்தில் இருப்பதைக் கொண்டு நீர் அவனை அலட்சியம் செய்து அனுப்பிவிட்டீர். உமது பிழை பெரியதாகும். உமது விருப்பத்தைப் பொறுத்தவரையில் என் அதிகாரத்திற்கு உட்பட்டு என்னால் செய்ய முடிந்ததைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன். உண்மையில், துன்பம் நிறைந்த உமது தாகத்தைத் தணிக்க நான் ஏற்பாடு செய்கிறேன். ஓ! மறுபிறப்பாளரே, நீர் நீரை விரும்பும் நாட்களில்,(33-35) நீருண்ட மேங்கங்கள் இந்தப் பாலைவனத்தில் எழும். ஓ! பிருகு குல மைந்தரே, அந்த மேகங்கள் உமக்குச் சுவைமிக்க நீரை அளிக்கும். உண்மையில், அம்மேகங்கள் உதங்க மேகங்கள் என்று உலகில் அறியப்படும்" என்றான் {கிருஷ்ணன்}.(36)
கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கர், மகிழ்ச்சியால் நிறைந்தார். ஓ! பாரதா {ஜனமேஜயா}, இந்த நாள் வரையிலும் வறண்ட பாலைவனங்களில் உதங்க மேகங்கள் (தோன்றி) மழையைப் பொழிகின்றன" {என்றார் வைசம்பாயனர்}.(37)
அஸ்வமேதபர்வம் பகுதி – 55ல் உள்ள சுலோகங்கள் : 37
ஆங்கிலத்தில் | In English |