Preceptor Fee! | Aswamedha-Parva-Section-56 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 41)
பதிவின் சுருக்கம் : முதுமையைக் கண்டு வருந்திய உதங்கர்; உதங்கருக்கு இளமையைக் கொடுத்துத் தமது மகளைத் திருமணம் செய்து கொடுத்த கௌதமர்; உதங்கரிடம் அஹல்யை கேட்ட குருதக்ஷிணை...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "வலிமைகள் அனைத்திற்கும் பிறப்பிடமான விஷ்ணுவையே சபிக்க விரும்பும் அளவுக்கு உயர் ஆன்ம உதங்கர் செய்த தவங்கள் என்ன?" என்று கேட்டான்.(1)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! ஜனமேஜயா, உதங்கர் கடுந்தவங்களைச் செய்தவராவார். அவர் தமது ஆசானிடம் அர்ப்பணிப்பு கொண்டவராக இருந்தார். பெரும் சக்தி கொண்ட அவர், வேறு எவரையும் வழிபடுவதைத் தவிர்த்தார்.(2) ஓ! பாரதா {ஜனமேஜயா}, உதங்கரின் அர்ப்பணிப்பைப் போலத் தாங்கள் ஆசானிடம் கொண்டுள்ள அர்ப்பணிப்பும் பெரியதாக இருக்க வேண்டுமென முனிவர்களின் பிள்ளைகள் அனைவரும் விரும்பினர்.(3) ஓ! ஜனமேஜயா, கௌதமர், தமது எண்ணற்ற சீடர்களுக்கு மத்தியில் உதங்கரிடம் நிறைவும் அன்பும் கொண்டிருந்தார்.(4) உண்மையில், உதங்கரின் தற்கட்டுப்பாடு, தூய ஒழுக்கம், மற்றும் ஆற்றலுக்கேற்ப அவர் ஆற்றிய தொண்டு ஆகியவற்றில் கௌதமர் உயர்வான நிறைவை அடைந்திருந்தார்.(5)
ஒருவர்பின் ஒருவராக ஆயிரக்கணக்கான சீடர்கள், தங்கள் (கல்வியின் காலம் முடிவடைந்து) ஆசானின் அனுமதியைப் பெற்றுத் தங்கள் தங்களுக்குரிய வீடுகளுக்குத் திரும்பினர். எனினும், உதங்கரிடம் கொண்ட பேரன்பால் கௌதமரால் அவரைத் தமது ஆசிரமத்தை விட்டு அனுப்ப இயலவில்லை.(6) ஓ! மகனே, காலப்போக்கில் பெருந்தவசியான உதங்கர் முதுமையை அடைந்தார். எனினும், தமது ஆசானிடம் கொண்ட அர்ப்பணிப்பின் விளைவால் அத்தவசி அதனை உணரவில்லை.(7) ஓ! ஏகாதிபதி, ஒருநாள் அவர் தமது ஆசானுக்காக விறகு கொண்டு வரச் சென்றார். விரைவில் பெருஞ்சுமை கொண்ட விறகை உதங்கர் கொண்டு வந்தார்.(8)
ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, உழைப்பால் களைத்தவரும், பசித்தவரும், தன் தலையில் சுமந்த சுமையால் பீடிக்கப்பட்டவருமான அவர், ஓ! மன்னா, அந்தச் சுமையைப் பூமியில் போட்டார்.(9) அவரது சடாமுடியில் வெள்ளிக்கு ஒப்பாக இருந்த ஒரு மயிர் {சடை} அந்தச் சுமையுடன் சிக்கியிருந்தது. அந்தச் சுமை வீசப்பட்ட போது, அதனுடன் சேர்ந்து அந்தச் சடாமுடியும் பூமியில் விழுந்தது.(10) ஓ! பாரதா, அந்தச் சுமையால் ஒடுக்கப்பட்டவரும், பசியில் மூழ்கியவருமான உதங்கர், முதிய வயதுக்கான அந்த அறிகுறியைக் கண்டு பெரும் துன்பத்துடன் உரக்க அழத் தொடங்கினார்.(11)
அப்போது, கடமைகள் அனைத்தையும் அறிந்தவளும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவளும், உருண்டு திரண்ட இடை கொண்டவளும், கீழ் நோக்கும் முகத்துடன் கூடியவளுமான அவரது ஆசானின் {கௌதமரின்} மகள், தன் தந்தையின் ஆணையின் பேரில் உதங்கரின் கண்ணீரைத் தன் கைகளில் ஏந்தினாள். அவள் ஏந்திய கண்ணீர்த்துளிகள் அவளது கைகளில் எரிவதாகத் தெரிந்தது. அதற்கு மேலும் அதைத் தாங்க முடியாததால் அவள் அதைப் பூமியில் போடும்படி நேர்ந்தது.(12,13) உதங்கரின் கண்ணீர் துளிகளைப் பூமாதேவியாலேயே தாங்க முடியவில்லை.
நிறைவடைந்த இதயத்துடன் கூடிய கௌதமர், மறுபிறப்பாளரான உதங்கரிடம்,(14) "ஓ! மகனே, உன் மனம் ஏன் இன்று துயரத்தால் இவ்வளவு பீடிக்கப்பட்டிருக்கிறது? ஓ! கல்விமானான முனிவா, நான் விரிவாகக் கேட்க விரும்புவதால் என்னிடம் மென்மையாகவும், அமைதியாகவும் சொல்வாயாக" என்றார்.(15)
உதங்கர் {கௌதமரிடம்}, "உம்மிடம் முழுமையான அர்ப்பணிப்புக் கொண்ட மனத்துடன், உமக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்யும் விருப்பத்தில், என் இதயப் பக்தியை உம்மிடம் திருப்பி, என் எண்ணங்களை முழுமையாக உம்மில் வசிக்கச் செய்து,(16) முதுமை எனக்கு நேர்வதை (அது நேரும்வரை) முற்றிலும் அறியாது இருந்திருக்கிறேன். இன்பமெதையும் நான் அறிந்தவனில்லை. உம்முடன் நூறு வருட காலம் வசித்திருப்பினும் நான் செல்வதற்கான அனுமதியை நீர் தரவில்லை.(17) எனினும், எனக்கு இளையவர்களான உமது சீடர்கள் பலர் உமது அனுமதியைப் பெற்றுத் திரும்பிவிட்டனர். உண்மையில், ஞானத்துடன் கூடிய நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான முதன்மையான பிராமணர்கள் (உமது ஆசிரமத்தை விட்டுச் செல்வதற்கும், தாங்கள் ஆசானாவதற்கும்) உமது அனுமதியைப் பெற்றனர்" என்றார்.(18)
கௌதமர் {உதங்கரிடம்}, "ஓ! பிராமணர்களில் முதன்மையானவனே, உன்னிடம் கொண்ட அன்பு மற்றும் பாசத்தாலும், கடமையுணர்வுடன் நீ எனக்குச் செய்த தொண்டின் விளைவாலும் நான் இதை அறிந்து கொள்ளாமலே நீண்ட காலம் கடந்துவிட்டது.(19) எனினும், ஓ! பிருகு குலத்தவனே, இந்த இடத்தைவிட்டுச் செல்ல நீ விரும்பினால், எந்தத் தாமதமுமின்றி என் அனுமதியுடன் செல்வாயாக" என்றார்.(20)
உதங்கர் {கௌதமரிடம்}, "நான் என் ஆசானுக்கு என்ன தர வேண்டும்? ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, இதை எனக்குச் சொல்வீராக. ஓ! தலைவரே, அதைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, உமது அனுமதியுடன் நான் இங்கிருந்து செல்வேன்" என்றார்.(21)
கௌதமர் {உதங்கரிடம்}, "ஆசானின் மனநிறைவே இறுதிக் கட்டணம் என நல்லோர் சொல்கின்றனர்[1]. ஓ! மறுபிறப்பாளனே, உன் ஒழுக்கத்தில் நான் நிச்சயம் உயர்வான நிறைவை அடைந்திருக்கிறேன்.(22) ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, இதன் காரணமாக நான் மிகவும் மனம் நிறைந்தவனாக இருக்கிறேன். ஓ! மறுபிறப்பாளனே, நீ இன்று பதினாறு வயது இளைஞனானால்,(23) என் மகளையே உனக்கு மனைவியாகத் தருவேன். உன் சக்தியைப் பொறுக்கும் வல்லமை இவளைத் தவிர வேறு எந்தப் பெண்ணுக்கும் கிடையாது" என்றார்.(24)
[1] "இன்று வரை இந்தியாவில் உள்ள ஆசிரியர்கள் பணம் சார்ந்த எந்த ஈடும் இன்றித் தங்கள் சீடர்களுக்கு உணவும், கல்வியும் கொடுக்கிறார்கள். உண்மையில் ஞானத்தை விற்பனை செய்வது கடுமையாக நிந்திக்கப்படுகிறது. எனினும், தங்கள் கல்வியை நிறைவு செய்யும் சீடர்கள் தங்கள் தங்கள் வாழ்வாதார நிலைகளுக்கு ஏற்ப இறுதி தக்ஷிணை கொடுக்கும் வழக்கம் இருந்தது. இந்தியாவைச் சார்ந்த மன்னர்களும், இளவரசர்களும் இறுதி தக்ஷிணை தேடும் சீடர்களால் வேண்டப்படுவதைக் கௌரவமாகக் கருதினார்கள். இங்கே கௌதமர், ஆசானின் மன நிறைவே இறுதி தக்ஷிணையின் பொருள் என்று சொல்கிறார். எனினும், அவர் உதங்கரின் கடமை உணர்வு நிறைந்த ஒழுக்கத்தினால் ஏற்கனவே நிறைவடைந்திருந்தார். எனவே, இங்கே வேறு எந்தக் கொடைக்கான தேவையும் எழவில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
கௌதமரின் இந்தச் சொற்களால் உடனடியாக இளைஞனாக மாறிய உதங்கர், அந்தப் புகழ்பெற்ற கன்னிகையைத் தன் மனைவியாக ஏற்றுக் கொண்டார். தமது ஆசானின் அனுமதியைப் பெற்ற அவர், தம் ஆசானின் மனைவியிடம் {குருபத்னியிடம்},(25) "என் ஆசிரியையான உமக்கு இறுதிக் கட்டணமாக {குருதக்ஷிணையாக} நான் என்ன கொடுக்க வேண்டும்? எனக்கு ஆணையிடுவீராக. உமக்கு ஏற்புடையதையும், நன்மையானதையும் செல்வத்தைக் கொண்டோ என் உயிரைக் கொண்டோ நிறைவேற்ற விரும்புகிறேன்.(26) இவ்வுலகில் பெரும் மதிப்பிற்குரியதும், அற்புதம் நிறைந்ததும் எந்த ரத்தினத்தையும் என் தவத்தின் உதவியால் உமக்கு நான் கொண்டு வருவேன். இதில் எனக்கு ஐயமேதுமில்லை" என்றார் {உதங்கர்}.(27)
அஹல்யை, "ஓ! கல்விமானான பிராமணா, ஓ! பாவமற்றவனே, உன் தடங்கலற்ற அர்ப்பணிப்பில் நான் உயர்வான நிறைவை அடைந்திருக்கிறேன். இதுவே போதுமானதாகும். நீ அருளப்பட்டிருப்பாயாக. விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக" என்றாள்".(28)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "எனினும், ஓ! ஏகாதிபதி, உதங்கர் மீண்டும் அவளிடம், "ஓ! தாயே, எனக்கு ஆணையிடுவீராக. உமக்கு ஏற்புடைய ஏதாவதொன்றை நான் செய்ய வேண்டியது இன்றியமையாததாகும்" என்றார்.(29)
அஹல்யை, "நீ அருளப்பட்டிருப்பாயாக, சௌதாஸனின் மனைவி அணிந்திருக்கும் தெய்வீகக் காது குண்டலங்களை எனக்குக் கொண்டு வருவாயாக. அப்போது, நீ உன் ஆசானுக்குரியதை நன்கு கொடுத்ததாகும்" என்றாள்.(30)
ஓ! ஜனமேஜயா, "அவ்வாறே ஆகட்டும்" என்று அவளிடம் சொன்ன உதங்கர், தமது ஆசானின் மனைவிக்கு ஏற்புடையதைச் செய்வதற்கு அந்தக் காது குண்டலங்களைக் கொண்டுவரத் தீர்மானித்தார்.(31) பிராமணர்களில் முதன்மையானவரான உதங்கர், (வசிஷ்டரின் சாபத்தால்) மனிதவூனுண்ணியாக மாறி இருந்த சௌதாஸனிடம் அந்தக் காதுகுண்டலங்களை வேண்டிப் பெற எந்தத் தாமதமுமின்றிச் சென்றார்[2].(32)
[2] ஆசானின் மனைவியிடம் உதங்கர் இவ்வாறு வேண்டும் கதை வேறு வடிவில் ஆதிபர்வம் பகுதி 3லும் வருகிறது. ஆனால் அங்கே அவரது ஆசானின் பெயர் வேதா என்றிருக்கிறது. இங்கே கௌதமர் என்று வருகிறது. அங்கே குருவின் மனவியுடைய பெயர் குறிப்பிடப்படவில்லை. இங்கே அஹல்யை என்று குறிப்பிடப்படுகிறது. அங்கே மன்னனின் பெயர் பௌசியன், இங்கே மன்னனின் பெயர் சௌதாஸன். அங்கே மன்னன் சபிக்கப்பட்ட மனித ஊனுண்ணியாக இல்லை இங்கே அவ்வாறு இருக்கிறான். ஆதி பர்வம் பகுதி 178ல் மன்னன் சௌதாஸனின் {கல்மாஷபாதனின்} கதை சொல்லப்பட்டிருக்கிறது.
அதேவேளையில் கௌதமர், தமது மனைவியிடம், "இன்று உதங்கனைக் காணவில்லையே" என்று கேட்டார். இவ்வாறு கேட்கப்பட்ட அவள் (சௌதாஸனுடைய ராணியின்) காதுகுண்டலங்களைப் பெற அவர் சென்றிருப்பதைக் குறித்து அவரிடம் சொன்னாள்.(33)
இதன்பேரில் கௌதமர், "நீ விவேகத்துடன் செயல்படவில்லை. (வசிஷ்டரால்) சபிக்கப்பட்ட (மனித ஊனுண்ணியாக மாறியுள்ள) அந்த மன்னன் {சௌதாஸன்} நிச்சயம் உதங்கனைக் கொல்லப் போகிறான்" என்றார்.(34)
அஹல்யை, "ஓ! புனிதமானவரே, இதை அறியாமல் நான் இப்பணியில் உதங்கனை ஈடுபடுத்தினேன். எனினும், உமது அருளால் அவன் எந்த ஆபத்துக்கும் உள்ளாக மாட்டான்" என்றாள்.(35)
அவளால் இவ்வாறு சொல்லப்பட்ட கௌதமர், "அப்படியே ஆகட்டும்" என்றார். அதே வேளையில் உதங்கர், ஓர் ஆளரவமற்ற காட்டில் மன்னன் ஸௌதாஸனைச் சந்தித்தார்" {என்றார் வைசம்பாயனர்}.(36)
அஸ்வமேதபர்வம் பகுதி – 56ல் உள்ள சுலோகங்கள் : 36
ஆங்கிலத்தில் | In English |