Ear-rings! | Aswamedha-Parva-Section-57 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 42)
பதிவின் சுருக்கம் : உதங்கரை உண்ண முயன்ற ஸௌதாஸன்; குருதக்ஷிணை அளித்துவிட்டுத் திரும்ப வருவதாகச் சொல்லி அவனது மனைவியின் குண்டலங்களை வேண்டிய உதங்கர்; குண்டலத்தின் சிறப்பைச் சொல்லி சௌதாசனின் அனுமதியை வேண்டிய ராணி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, பிராமணரான உதங்கர், பயங்கரம் நிறைந்த முகத்தோற்றத்துடனும், மனிதக் குருதியால் நனைந்திருந்த நீண்ட தாடியுடனும் கூடிய மன்னனைக் {ஸௌதாஸனை} கண்டும் கலக்கமடையவில்லை.(1) ஒவ்வொருவரின் நெஞ்சிலும் அச்சத்தைத் தூண்டுபவனும் இரண்டாவது யமனைப் போலத் தெரிந்தவனும், பெருஞ்சக்தியைக் கொண்டவனுமான அந்த ஏகாதிபதி, எழுந்திருந்து உதங்கரிடம்,(2) "ஓ! பிராமணர்களில் சிறந்தவனே, நாளின் ஆறாம் காலத்தில் நான் உணவு தேடிக் கொண்டிருக்கும்போது நற்பேற்றினாலேயே நீ என்னிடம் வந்தாய்" என்றான்.(3)
உதங்கர் {ஸௌதாஸனிடம்}, "ஓ! மன்னா, நான் என் ஆசானின் நிமித்தமாகத் திரிந்து கொண்டிருக்கும்போது இங்கே வந்தேன் என்பதை அறிவாயாக. ஒருவன் தன் ஆசானின் நிமித்தமான வேலையில் ஈடுபட்டிருக்கும்போது அவனுக்குத் தீங்கிழைக்கக்கூடாது என்று ஞானிகள் சொல்கின்றனர்" என்றார்.(4)
மன்னன் {ஸௌதாஸன்}, "ஓ! பிராமணர்களில் சிறந்தவனே, நாளின் ஆறாம் காலத்தில் எனக்கான உணவு விதிக்கப்பட்டிருக்கிறது. நான் பசித்திருக்கிறேன். எனவே, இன்று நான் உன்னைத் தப்பவிட இயலாது" என்றான்.(5)
உதங்கர், "ஓ! மன்னா, அவ்வாறே ஆகட்டும். என்னுடன் இந்த உடன்பாட்டைச் செய்து கொள்வாயாக. என் ஆசானுக்காகத் திரிவதை நான் நிறுத்திய பிறகு, நான் மீண்டும் உன்னிடம் வந்து, என்னை உன் ஆளுகையில் வைப்பேன்.(6) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, என் ஆசானுக்காக நான் வேண்டும் பொருள் உன் கட்டுப்பாட்டில் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். எனவே, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நான் அதை உன்னிடம் வேண்டுகிறேன்.(7) நீ மேன்மையான பிராமணர்களுக்கு நாள்தோறும் முதன்மையான ரத்தினங்களைக் கொடையளிக்கிறாய். ஓ! மனிதர்களின் தலைவா, கொடைகளை எவரிடம் இருந்து ஏற்கலாமோ அந்தக் கொடையாளியாக நீ இருக்கிறாய். ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உன் முன் இருக்கும் நானும் ஈகைக்குத் தகுந்தவனே என்பதை அறிவாயாக.(8) ஓ! மன்னா, உன் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தப் பொருளை என் ஆசானுக்கான கொடையாக ஏற்றுச் சென்று,(9) என் உடன்பாட்டின் விளைவால் மீண்டும் உன்னிடமே வந்து என்னை நான் உன் ஆதிக்கத்தின் கீழ் நிறுத்திக் கொள்வேன். இதை நான் உண்மையாகவே உனக்கு உறுதி கூறுகிறேன். இதில் பொய்ம்மையேதுமில்லை. கேலிக்காகக் கூட நான் இதற்கு முன் எப்போதும் பொய்யேதும் பேசியவனில்லை. அவ்வாறிருக்கையில் பிறந்த சந்தர்ப்பங்களைக் குறித்துச் சொல்வதற்கென்ன இருக்கிறது?" என்றார் {உதங்கர்}.(10)
ஸௌதாஸன், "உன் ஆசானுக்காக நீ வேண்டும் பொருளை என்னால் உன் கரத்தில் வைக்க முடியுமென்றால், கொடையேற்கத் தகுந்தவனாக நீ கருதப்படுகிறாய் என்றால், அந்தப் பொருள் என்ன என்பதை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(11)
உதங்கர், "ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, ஓ! சௌதாஸா, கொடைகளை எவரிடம் இருந்து பெறலாமோ என் கணிப்பின்படி அதற்கு மிகத் தகுந்தவன் நீ. எனவே, நான் (உனது ராணி அணிந்திருக்கும்) காது குண்டலங்களை இரந்து பெற உன்னிடம் வந்திருக்கிறேன்" என்றார்.(12)
ஸௌதாஸன், "ஓ! கல்விமானும், மறுபிறப்பாளனுமான முனிவா, அந்தக் காது குண்டலங்கள் என் மனைவிக்கு உரியவை. அவற்றை அவளிடமே கேட்க வேண்டும். எனவே, நீ என்னிடம் இருந்து வேறு ஏதாவது கேட்பாயாக. ஓ! அற்புத நோன்புகளைக் கொண்டவனே, நான் உனக்கு அதைக் கொடுப்பேன்" என்றான்.(13)
உதங்கர், "நமக்கு ஏதும் அதிகாரம் இருக்குமெனக் கருதப்பட்டால், இந்தச் சாக்குபோக்கு சொல்வதை நிறுத்துவாயாக. அந்தக் காது குண்டலங்களை எனக்குக் கொடுப்பாயாக. ஓ! மன்னா, வாக்கில் வாய்மை நிறைந்தவனாக இருப்பாயாக" என்றார்".(14)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன், மீண்டும் உதங்கரிடம், "ஓ! மனிதர்களில் சிறந்தவனே, என் சொல்லின் அடிப்படையில் மதிப்புமிக்க என் ராணியிடம் சென்று,(15) "கொடுப்பாயாக" என அவளிடம் கேட்பாயாக. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, தூய நோன்புகளைக் கொண்டவளான அவள் இவ்வாறு உன்னால் கேட்கப்பட்டால், என் ஆணையின் பேரில் அந்தக் காதுகுண்டலங்களை நிச்சயம் உனக்குக் கொடுப்பாள்" என்றான்.(16)
உதங்கர், "ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நான் உன் ராணியை எங்கே சந்திக்க இயலும்? ஏன் நீயே அவளிடம் செல்லாமல் இருக்கிறாய்?" என்று கேட்டார்.(17)
ஸௌதாஸன், "நீ இப்போது அவளை ஒரு காட்டாற்றின் அருகில் காணலாம். நாளின் ஆறாவது காலமாகையால் என்னால் இன்று அவளைக் காண முடியாது" என்றான்".
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கர் அந்த இடத்தை விட்ட அகன்றார். மதயந்தியைக் கண்டு, இக்காரியம் குறித்து அவளுக்குச் சொன்னார்.(19)
சௌதாஸனின் ஆணையைக் கேட்டவளும், அகன்ற கண்களைக் கொண்டவளுமான அந்தப் பெண்மணி, ஓ! ஜனமேஜயா, உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட உதங்கரிடம் இந்தச் சொற்களைச் சொன்னாள்,(20) "ஓ! மறுபிறப்பாளரே, இஃது இவ்வாறே இருக்கிறது. எனினும், ஓ! பாவமற்றவரே, நீர் பொய் சொல்வதில்லை என்று எனக்கு உறுதிகூற வேண்டும். என் கணவரிடம் இருந்து ஏதாவதொரு அடையாளத்தை எனக்குக் கொண்டு வருவதே உமக்குத் தகும்.(21) மதிப்புமிக்க ரத்தினங்களால் செய்யப்பட்ட இந்தத் தெய்வீகக் காது குண்டலங்கள், அபகரித்துச் செல்லும் வாய்ப்புக்காகத் தேவர்கள், யக்ஷர்கள் மற்றும் பெரும் முனிவர்களாலும் எப்போதும் கண்காணிக்கப்படுவையாக இருக்கின்றன.(22) இந்த மதிப்புமிக்கப் பொருளை எந்தக் காலத்திலும் கீழே வைத்தால் நாகர்களால் இது களவாடப்படும். உண்பதன் விளைவால் தூய்மையற்றிருக்கும் ஒருவரால் அணியப்பட்டால் அது யக்ஷர்களால் எடுத்துக் கொள்ளப்படும். (இந்த மதிப்புமிக்கக் காதுகுண்டலங்களில் கவனம் இல்லாமல்) இவற்றை அணிந்திருப்பவர் உறங்கினால் தேவர்கள் அபகரித்துச் செல்வர்.(23) ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, அத்தகைய வாய்ப்புகள் அமையும்போது, விழிப்புணர்வற்றவர்களால் அணியப்பட்டால் தேவர்கள், ராட்சசர்கள் மற்றும் நாகர்களாலும் களவாடப்படக்கூடியவையா இந்தக் காது குண்டலங்கள் இருக்கின்றன.(24)
ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, இந்தக் காதுகுண்டலங்கள், இரவும் பகலும் தங்கத்தை உற்பத்தி செய்கின்றன. இறவில் நட்சத்திர மற்றும் விண்மீன் கூட்டங்களின் கதிர்களை ஈர்க்கும் வகையில் அவை பிரகாசமாக ஒளிர்கின்றன.(25) ஓ! புனிதமானவரே, இவற்றை அணிபவர் எவரும், பசி, தாகம் மற்றும் அனைத்து வகை அச்சங்களில் இருந்தும் விடுபடுவர். இந்தக் காது குண்டலங்களை அணிபவர், நஞ்சு, நெருப்பு மற்றும் அனைத்து வகை ஆபத்துகளில் எழும் அச்சங்களில் இருந்தும் விடுபடுவர்.(26) குட்டையான ஒருவர் அணிந்தால் இவை சிறியனவாகும். நெட்டையான ஒருவன் அணிந்தால் இவை அளவில் வளரும்.(27) என்னுடைய இந்தக் காது குண்டலங்கள் இத்தகைய குணங்களைக் கொண்டவையாகும். இவை எங்கும் புகழவும், மதிக்கவும் படுகின்றன. உண்மையில், இவை மூவுலகங்களில் அறியப்பட்டிருக்கின்றன. எனவே, (என் கணவரிடமிருந்து) ஏதாவதொரு அடையாளத்தை எனக்குக் கொண்டு வருவீராக" என்றாள் {மதயந்தி}.(28)
அஸ்வமேதபர்வம் பகுதி – 57ல் உள்ள சுலோகங்கள் : 28
ஆங்கிலத்தில் | In English |