The world of Nagas! | Aswamedha-Parva-Section-58 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 43)
பதிவின் சுருக்கம் : அடையாளம் பெற்று வந்து ராணியிடம் கொடுத்துக் குண்டலங்களைப் பெற்ற உதங்கர்; குண்டலங்களைக் கவர்ந்து சென்ற நாகன்; இந்திரனின் துணையால் நாகலோகம் சென்று அவற்றைப் பெற்றது; அஹல்யையிடம் குண்டலங்களைக் கொடுத்த உதங்கர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "உதங்கர், தன் நண்பர்களிடம் எப்போதும் நல்ல மனநிலையில் உள்ள மன்னன் சௌதாஸனிடம் திரும்பி, (தாம் உண்மையில் மன்னனிடம் இருந்தே வந்தார் என்று மதயந்தியை நம்பச் செய்ய) ஏதாவதொரு அடையாளத்தைத் தருமாறு வேண்டினார். இக்ஷாகு குலத்தில் முதன்மையான அவன் ஓர் அடையாளத்தை அவரிடம் கொடுத்தான்.(1)
ஸௌதாஸன், "என்னுடைய தற்போதைய நிலை பொறுக்கமுடியாததாகும். வேறெந்த புகலிடத்தையும் நான் காணவில்லை. என் விருப்பம் இதுவென அறிந்து காதுகுண்டலங்களை நீ கொடுப்பாயாக[1]" என்றான்.(2)
[1] "மன்னன் சொன்ன இந்த வார்த்தைகள் ராணியிடம் சொல்லப்பட வேண்டியவையாகும். ராணி அதிலுள்ள மறைகுறிப்பைப் புரிந்து கொள்வாள். இதன் பொருள் பின்வருமாறு: ’வசிஷ்டரால் சபிக்கப்பட்ட நான் மனித ஊனுண்ணியாக மாறினேன். என்னுடைய இந்த நிலை பொறுக்க முடியாதது. தகுந்த பிராமணருக்கு இந்தக் கொடையைக் கொடுப்பதன் மூலம் புண்ணியம் கிடைக்கும். அந்தப் புண்ணியம் என்னை விடுவிக்கலாம்’ என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கர் ராணியிடம் சென்று, அவளுடைய தலைவனின் சொற்களைச் சொன்னார். இந்தச் சொற்களைக் கேட்ட ராணி உதங்கரிடம் தன் காது குண்டலங்களைக் கொடுத்தாள்.(3) காது குண்டலங்களைப் பெற்றுக் கொண்ட உதங்கர் மன்னனிடம் {ஸௌதாஸனிடம்} திரும்ப வந்து அவனிடம், "ஓ! ஏகாதிபதி, ராணிக்கு அடையாளமாக நீ சொல்லி அனுப்பிய அந்தப் புதிரான சொற்களின் பொருளை நான் கேட்க விரும்புகிறேன்" என்றார்.(4)
ஸௌதாஸன் {உதங்கரிடம்}, "படைப்பின் தொடக்கத்திலிருந்தே க்ஷத்திரியர்கள் பிராமணர்களை மதிப்பது காணப்படுகிறது. எனினும், (க்ஷத்திரியர்களின் பங்கிற்கு) பிராமணர்களிடம் பல குற்றங்களும் எழுகின்றன.(5) என்னைப் பொறுத்தவரையில் நான் எப்போதும் அவர்கள் முன்பு பணிவுடன் இருந்தேன். நான் ஒரு பிராமணரின் மூலமே துன்பத்தில் மூழ்கினேன். மதயந்தியைத் தவிர வேறு எந்தப் புகலிடத்தையும் நான் காணவில்லை.(6) உண்மையில், ஓ! உயர்ந்த இலக்கைக் கொண்டவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, சொர்க்கத்தின் வாயில்களை அடைவதற்கோ, இங்கே தொடர்வதற்கோ வேறு எந்தப் புகலிடத்தையும் நான் காணவில்லை.(7) பிராமணர்களுடன் பகைமை பாராட்டும் மன்னன் இம்மையில் தொடர்ந்து வாழ்வதும், மறுமையில் இன்பத்தை அடைவதும் சாத்தியமற்றதாகும்.(8) எனவே நான் உன்னால் விரும்பப்படும் காதுகுண்டலங்களை உனக்குக் கொடுத்தேன்[2]. நீ இன்று என்னுடன் செய்து கொண்ட உடன்பாட்டைக் காப்பாயாக" என்றான் {சௌதாசன்}.(9)
[2] "இதுவும் வசிஷ்டர் கொடுத்த பயங்கரச் சாபம் குறித்த மறைகுறிப்பே ஆகும். மன்னன் மதயந்தி மட்டுமே தனது ஒரே புகலிடம் என்று சொல்கிறான். உண்மையில் தகுந்த பிராமணனுக்குத் தன்னுடைய மதிப்புமிக்கக் காது குண்டலங்களைக் கொடுப்பதன் மூலம் அவளால் தன்னைக் காக்க இயலும் என மன்னன் நம்புகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உதங்கர் {சௌதாசனிடம்}, "ஓ! மன்னா, நான் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியின்படியே நிச்சயம் நடப்பேன். நான் உண்மையில் திரும்பி வந்து என்னை உன் ஆளுகையின் கீழ் நிறுத்திக் கொள்வேன். எனினும், ஓ! பகைவரை எரிப்பவனே, நான் உன்னிடம் கேட்க விரும்பும் ஒரு கேள்வி உண்டு" என்றார்.(10)
ஸௌதாஸன் {உதங்கரிடம்}, "ஓ! கல்விமானான பிராமணா, உன் மனத்தில் இருப்பதைச் சொல்வாயாக. உன் சொற்களுக்கு நிச்சயம் நான் மறுமொழி கூறுவேன். உன் மனத்தில் இருக்கும் ஐயம் எதையும் நான் விலக்குவேன். இதில் எனக்குத் தயக்கமேதும் இல்லை" என்றான்.(11)
உதங்கர் {சௌதாசனிடம்}, "கடமைகளின் விதிகளில் திறம்பெற்றோர், பிராமணர்கள் கட்டுப்பாடுடைய வாக்கைக் கொண்டவர்கள் என்று சொல்கிறார்கள். நண்பர்களிடம் தவறாக நடந்து கொள்பவன் கள்வனைப் போன்ற ஒரு தீயவனாகக் கருதப்படுகிறான்[3].(12) ஓ! மன்னா, நீ இன்று என் நண்பனானாய். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனையை எனக்குச் சொல்வாயாக.(13) என்னைப் பொறுத்தவரையில் நான் என் விருப்பங்கள் கனிந்த நிலையை அடைந்துவிட்டேன். நீயோ மனித ஊனுண்ணியாக இருக்கிறாய். நான் உன்னிடம் திரும்பி வருவது முறையா? திரும்பி வராமல் போவது முறையா?" என்று கேட்டார்.(14)
[3] "இதன் பொருள் பின்வருமாறு: ஒரு பிராமணன் ஒருபோதும் அடக்கமற்ற நாவைக் கொண்டிருக்கக்கூடாது. அவன் வாய்மைமிக்கவன். எனவே, நான் திரும்பி வருவேன் என்று என் சொல்லைக் கொடுத்த பிறகு நான் நிச்சயம் என் சொல்லைக் காப்பேன். நண்பனிடம் தவறாக நடந்து கொள்பவன் கள்வனாகக் கருதப்படுகிறான். இதன் மூலம் உதங்கர், மன்னன் தன்னை உண்டு தனக்குத் தீங்கிழைத்துவிடக்கூடாது என்று நினைவூட்டுகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஸௌதாஸன் {உதங்கரிடம்}, "ஓ! மேன்மையான பிராமணர்களில் முதன்மையானவனே, நீ கேட்டதை (நான்) முறையாகச் சொல்ல வேண்டுமென்றால், ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, நீ என்னிடம் ஒருபோதும் திரும்பி வரக்கூடாது என்று உனக்குச் சொல்வேன்.(15) ஓ! பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, இவ்வாறு செயல்படுவதன் மூலம், நீ உனக்கு நன்மையானதை அடைவாய். ஓ! கல்விமானான பிராமணா, நீ திரும்பி வந்தால் நிச்சயம் மரணத்தையே அடைவாய்" என்றான்".(16)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "நுண்ணறிவுமிக்க மன்னனால் இவ்வாறு தமக்கு நன்மையானது சொல்லப்பட்ட உதங்கர், அந்த ஏகாதிபதியிடம் இருந்து அகன்று அஹல்யையிடம் செல்லப் புறப்பட்டார்.(17) தமது ஆசானின் மனைவிக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பிய அவர் தம்முடன் காதுகுண்டலங்களை எடுத்துக் கொண்டு கௌதமரின் ஆசிரமத்தை அடைவதற்காகப் பெரும் வேகத்துடன் சென்றார்.(18) மதயந்தி சொன்ன முறையிலேயே அவற்றைக் கருப்பு மான்தோலில் {கிருஷ்ணாஜினத்தில்} மடித்துக் கட்டி {முடிந்துக்} கொண்டு பாதுகாப்புடன் தன் வழியில் சென்றார்.(19) சிறிது தொலைவு சென்றதும் அவர் பசியால் பீடிக்கப்பட்டார். அங்கே (கனிந்த) கனிகளின் எடையால் வளைந்திருந்த ஒரு வில்வ மரத்தை அவர் கண்டார். அவர் அந்த மரத்தில் ஏறினார்.
ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர், தன்னுடைய மான்தொலை ஒரு கிளையில் தொங்கவிட்டு, சில கனிகளைப் பறிக்கத் தொடங்கினார்.(21) கனிகளில் கண்களைச் செலுத்தி அவற்றைப் பறிப்பதில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஓ! மன்னா, அவற்றில் சில அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரால் கவனமாகக் கட்டி வைக்கப்பட்டதும், காது குண்டலங்களோடு கூடியதுமான அந்த மான்தோல் மீதும் விழுந்தன. அந்தக் கனிகளால் அடிக்கப்பட்டு அதன் முடி தளர்ந்தது.(22,23) திடீரெனக் காதுகுண்டலங்களோடு கூடிய அந்த மான்தோல் கீழே விழுந்தது. முடி அவிழ்ந்து மான்தோல் கீழே விழுந்தபோது, அங்கே இருந்த ஒரு பாம்பு அந்தக் காது குண்டலங்களைக் கண்டது.(24) அந்தப் பாம்பு ஐராவதன் குலத்தைச் சேர்ந்ததாகும். பேராவலுடன் தன் வாயில் காது குண்டலங்களைக் கவ்வி கொண்டு அஃது {பாம்பு} ஓர் எறும்புப்புற்றுக்குள் நுழைந்தது.
அந்தப் பாம்பால் காது குண்டலங்கள் அபகரிக்கப்பட்டதைக் கண்ட உதங்கர்,(25,26) கோபத்தில் நிறைந்து, மனத்தில் பெருங்கவலையுடன் மரத்தில் இருந்து கீழே இறங்கினார். தன் தடியை எடுத்துக் கொண்டு அந்த எறும்புப்புற்றை அவர் துளைக்கத் தொடங்கினார்.(27) கோபத்திலும், பழிவாங்கும் விருப்பத்திலும் எரிந்து கொண்டிருந்த அந்தப் பிராமணர்களில் சிறந்தவர், முப்பத்தைந்து நாட்கள் தம்மை அந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார்.(28) உதங்கருடைய கைத்தடியின் சக்தியைப் பொறுக்க முடியாத பூமாதேவி அதனால் உடல்கிழிந்தவளாக மிகவும் துன்புற்றாள்.(29) நாகர்கள் வசிக்கும் பாதாள லோகத்திற்குப் பாதையை அமைக்கும் விருப்பத்தில் பூமியைத் தொடர்ந்து தோண்டிக் கொண்டிருந்த அந்த மறுபிறப்பாள முனிவர் இருந்த இடத்திற்கு,(30) வஜ்ரதாரியான தேவர்களின் தலைவன் {இந்திரன்} பச்சைக் குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில் வந்தான். பெரும் சக்தியுடன் கூடிய அவன் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரைக் கண்டு அங்கே அமர்ந்தான்".(31)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "உதங்கரின் துன்பத்தால் பீடிக்கப்பட்ட ஒரு பிராமணராக வேடம் தரித்துக் கொண்டு தேவர்களின் தலைவன் அவரிடம், "இது (உமது காரியம்) நிறைவேற்றப்பட இயலாதது.(32) நாகர்களின் உலகம் இவ்விடத்தில் இருந்து ஆயிரம் யோஜனைகளுக்கு அப்பால் இருக்கிறது. உமது கைத்தடியைக் கொண்டு இக்காரியத்தைச் சாதிக்க இயலாதென நான் நினைக்கிறேன்" என்றான்.(33)
உதங்கர், "ஓ! பிராமணரே, ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நாகலோகத்தில் இருந்து என்னால் அந்தக் காதுகுண்டலங்களை மீட்க முடியாமல் போனால் உமது கண்களுக்கு முன்னிலையிலேயே நான் என் உயிர் மூச்சுகளைக் கைவிடுவேன்" என்றார்".(34)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "வஜ்ரதாரியான இந்திரன், உதங்கரைத் தமது நோக்கத்தில் இருந்து திசைத்திருப்பத்தவறி போது, அவரது கைத்தடியில் வஜ்ரத்தின் சக்தியை இணைத்தான்.(35) அப்போது, ஓ! ஜனமேஜயா, வஜ்ரத்தின் சக்தியுடன் கூடிய அந்தத் தாக்குதலால் திறந்த பூமி, நாகர்கள் வசிக்கும் (பாதாள) உலகங்களுக்குச் செல்ல வழிகொடுத்தது.(36) அந்தப் பாதையின் மூலம் உதங்கர் நாகலோகத்திற்குச் சென்றார். அந்த உலகம் அனைத்துப் பக்கங்களிலும் ஆயிரக்கணக்கான யோஜனைகள் விரிந்திருப்பதை அவர் கண்டார்.(37) உண்மையில், ஓ! அருளப்பட்டவனே, உண்மையில் அது பசும்பொன்னால் அமைக்கப்பட்டவையும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான பல சுவர்களுடன் கூடியதாக இருந்தது.(38)
தூய ஸ்படிகத்தால் அமைக்கப்பட்ட படிகளுடன் கூடிய பல சிறந்த தடாகங்களும், தூய, தெளிந்த நீரைக் கொண்ட பல ஆறுகளும் அங்கே இருந்தன. பல்வேறு வகைப் பறவைகள் அமர்ந்திருக்கும் பல மரங்களையும் அவர் அங்கே கண்டார்.(39) பிருகு குலத்தைத் தழைக்கச் செய்பவரான அவர், முழுமையாக ஐந்து யோஜனைகள் உயரமும், நூறு யோஜனைகள் அகலமும் கொண்ட அந்த உலகத்தின் வாயிலைக் கண்டார்.(40) நாகர்களின் உலகத்தைக் கண்ட உதங்கர் உற்சாகமிழந்தவரானார். உண்மையில், காதுகுண்டலங்களைத் திரும்பப் பெறும் எண்ணத்தில் அவர் மனத்தளர்ச்சியடைந்தார்.(41) அப்போது வெள்ளை வால் கொண்ட ஒரு கருப்புக் குதிரை அவர் முன்பு தோன்றியது. ஓ! குரு குலத்தவனே {ஜனமேஜயா}, அதன் முகமும் கண்களும் தாமிர வண்ணத்தில் இருந்தன. அது சக்தியால் சுடர்விடுவதாகத் தெரிந்தது.(42)
உதங்கரிடம் பேசிய அஃது, "என்னுடலின் அபானக் குழாயில் {குதத்தில்} ஊதுவாயாக. ஓ! கல்விமானான பிராமணா, அப்போது ஐராவத குலத்தின் வழித்தோன்றலால் அபகரிக்கப்பட்ட உன் காதுகுண்டலங்களை நீ மீண்டும் பெறுவாய்.(43) ஓ! மகனே, நான் சொல்வதைச் செய்வதில் வெறுப்படைய வேண்டாம். முற்காலத்தில், கௌதமரின் ஆசிரமத்தில் நீ இதையே அடிக்கடி செய்துவந்தாய்" என்றது.(44)
உதங்கர், "என் ஆசானின் ஆசிரமத்தில் நான் எவ்வாறு உன்னை அறிந்தேன்? உண்மையில், நீ இப்போது செய்யச் சொன்னதை அந்தக் காலத்தில் நான் எவ்வாறு செய்தேன் என்பதைக் கேட்க விரும்புகிறேன்" என்றார்.(45)
அந்தக் குதிரை, "ஓ! கல்விமானான பிராமணா, நானே ஜாதவேதஸ் (நெருப்பின் தேவன் {அக்னி}) என்பதால், உன் ஆசானின் ஆசான் நானே என்பதை அறிவாயாக. உன் ஆசானின் நிமித்தமாக நீ அடிக்கடி என்னை வழிபட்டாய்.(46) ஓ! பிருகு குலத்தின் குழந்தாய், தூய இதயம் மற்றும் உடலுடன் முறையாக நீ அதைச் செய்தாய். அந்தக் காரணத்தினாலேயே நான் உனக்கான நன்மையைச் செய்யப் போகிறேன். தாமதமில்லாமல் நான் சொன்னதைச் செய்வாயாக" என்றது.(47)
நெருப்பின் தேவனால் இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கர், அவன் சொன்னவாறே செய்தார். அவரிடம் நிறைவடைந்த அந்தத் தேவன் அனைத்தையும் விழுங்குவதற்குச் சுடர்விட்டு எரிந்தான்.(48) ஓ! பாரதா {ஜனமேஜயா}, அவனது உடலின் துளைகளில் இருந்து, அவனது இயல்பின் விளைவால், நாகலோகத்தையே அச்சுறுத்தும் அடர்த்தியான புகை எழுந்தது.(49) ஓ! பாரதா, பரந்துவிரியும் அந்தப் பெரும் புகையால் அனைத்தும் இருளுக்குள் மூழ்கின. ஓ! மன்னா, நாகலோகத்தில் அதற்கு மேல் எதையும் காணமுடியவில்லை.(50) ஓ! ஜனமேஜயா, ஐராவதர்களின் மாளிகைகள் முழுவதிலும் வாசுகியின் தலைமையிலான நாகர்களின் துன்ப ஓலம் கேட்டது.(51)
ஓ! பாரதா, அந்தப் புகையால் சூழப்பட்ட மாளிகைகளை அதற்கு மேலும் காண முடியவில்லை. அவை அடர்பனியில் மூழ்கியிருந்த காடுகளுக்கும், மலைகளுக்கு ஒப்பாக இருந்தன.(52) நெருப்பின் தேவனுடைய சக்தியால் பீடிக்கப்பட்டவர்களும், அந்தப் புகையின் விளைவால் கண்கள் சிவந்தவர்களுமான நாகர்கள், என்ன காரியம் என்பதை உறுதி செய்வதற்காகப் பிருகு குலத்தைச் சேர்ந்த அந்த உயர் ஆன்ம மைந்தரிடம் வந்தனர்.(53) அளவற்ற சக்தி கொண்ட அந்தத் தவசியிடம் இருந்து காரியத்தைக் கேட்ட நாகர்கள் அனைவரும் தங்கள் கண்களில் அச்சம் தெரிய, உரிய வடிவில் தங்கள் வழிபாட்டை அவருக்குக் காணிக்கையாக்கினர்.(54) உண்மையில், முதியவர்களையும், குழந்தைகளையும் தங்கள் முன் நிறுத்திக் கொண்ட நாகர்கள் அனைவரும் அவருக்குத் தலைவணங்கிக் கூப்பிய கைகளுடன், அவரிடம், "ஓ! புனிதமானவரே, எங்களிடம் நிறைவடைவீராக" என்றனர்.(55) அந்தப் பிராமணரை நிறைவடையச் செய்து, அவரது பாதங்களைக் கழுவி கொள்ள நீர் கொடுத்து, (அவரைக் கௌரவிக்க) அர்க்கிய உட்பொருட்களையும் கொடுத்து, தெய்வீகமானவையும், உயர்ந்த புகழைக் கொண்டதுமான அந்தக் காதுகுண்டலங்களையும் நாகர்கள் அவரிடம் கொடுத்தனர்.(56)
பேராற்றல் கொண்ட உதங்கர், அவர்களால் இவ்வாறு கௌரவிக்கப்பட்டு, நெருப்பின் தேவனை வலம் வந்து, தமது ஆசானின் ஆசிரமத்திற்குப் புறப்பட்டார்.(57) உண்மையில், ஓ! மன்னா, கௌதமரின் ஆசிரமத்திற்கு விரைவாகத் திரும்பிய அவர், ஓ! பாவமற்றவனே, தமது ஆசானின் மனைவியிடம் அந்தக் காதுகுண்டலங்களைக் கொடுத்தார்.(58) அந்தப் பிராமணர்களில் சிறந்தவர் வாசுகி மற்றும் பிற நாகர்கள் குறித்தும், முன் நேர்ந்தவை குறித்தும் தமது ஆசானிடம் தெரிவித்தார்.(59) ஓ! ஜனமேஜயா, இவ்வாறே உயர் ஆன்ம உதங்கர் மூவுலகங்களிலும் திரிந்து (தமது ஆசானின் மனைவிக்காக) அந்தக் காது குண்டலங்களைக் கொண்டு வந்தார்.(60) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தவசியான உதங்கர் இத்தகைய ஆற்றலைக் கொண்டவராவார். அவ்வளவு கடுமையான தவங்களை அவர் செய்தவராவார். நீ கேட்டதை நான் உனக்குச் சொல்லிவிட்டேன்" {என்றார் வைசம்பாயனர்}[4].(61)
[4] ஆதிபர்வத்தின் 3ம் பகுதியில் உள்ளதற்கும், இங்கே மறுவாசிப்பாகச் சொல்லப்படுவதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. உதங்கர் என்ற பெயரும் சில பெயர்களும் ஒன்றாகவே இருப்பினும், இவற்றில் சொல்லப்படும் பலரின் அடையாளங்களும், பெயர்களும் வெவ்வாறாக இருக்கின்றன. உதாரணத்திற்கு ஆதிபர்வத்தில் உதங்கர் குளிக்கச் செல்லும்போது தக்ஷகன் குண்டலங்களைக் கவர்ந்து செல்வான். இங்கே உதங்கர் வில்வ மரத்தில் ஏறியிருக்கும்போது ஒரு பாம்பு குண்டலங்களைக் கவர்ந்து செல்கிறது. ஒற்றை வரிக் கதையெனில் இவையிரண்டும் ஒன்றே. குருவின் மனைவிக்காக மன்னனிடம் குண்டலம் யாசித்துச் செல்வது, குண்டலம் கிடைப்பது, குண்டலத்தைப் பாம்பு கவர்வது, நாகலோகம் செல்வது, இந்திரன் உதங்கரின் தடிக்கு வஜ்ரத்தின் சக்தியை அளிப்பது, அக்னி குதிரையாக வருவது, வாசுகி, ஐராவதக் குலப் பாம்புகள் என கதையின் மையச் சரடு ஒன்றாகவே இருக்கிறது.
அஸ்வமேதபர்வம் பகுதி – 58ல் உள்ள சுலோகங்கள் : 61
ஆங்கிலத்தில் | In English |