The festival of Raivataka! | Aswamedha-Parva-Section-59 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 44)
பதிவின் சுருக்கம் : ரைவதக மலைக்குச் சென்ற கிருஷ்ணன்; அங்கு நடந்த விளையாட்டுகள்; துவாரகைக்கு வந்து பெற்றோரை வணங்கிய கிருஷ்ணன்...
இன்றைய குஜராத்தில் உள்ள கிர்நார் மலை - அன்றைய ஆநர்த்த நாட்டு ரைவதக மலை |
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "உதங்கருக்கு வரமளித்த கோவிந்தன், சாத்யகியின் துணையுடன், பெரும் வேகம் கொண்ட பெரிய குதிரைகளால் இழுக்கப்பட்ட தன் தேரில் துவாரகைக்குச் சென்றான்.(2) தடாகங்கள், ஆறுகள், காடுகள் மற்றும் மலைகளைக் கடந்து சென்ற அவன், இறுதியாக இனிமை நிறைந்த துவாராவதி நகரத்தை அடைந்தான்.(3) ஓ! மன்னா, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவன் {கிருஷ்ணன்} தன் தோழனான சாத்யகியுடன் ரைவதகத்திற்கு வந்த நேரத்தில் அங்கே திருவிழா {ரைவதக உற்சவம்} தொடங்கியிருந்தது.(4) ஓ! மன்னா, அந்த ரைவதக மலை பல அழகிய பொருட்களால் அலங்கரிக்கப்பட்டும், ரத்தினங்களால் செய்யப்பட்ட பல்வேறு கோஷங்களால் {கவசங்களால்} மறைக்கப்பட்டும் பெருங்காந்தியுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(5)
அந்த உயர்ந்த மலை, சிறந்த தங்க மாலைகளாலும், அழகிய மலர்த்தோரணங்களாலும், இந்திரனின் தோட்டத்தில் உள்ள கல்ப மரங்களைப் போலத் தெரிந்த பெரும் மரங்கள் பலவற்றாலும்,(6) பகலும் இரவும் அழகுடன் ஒளிரும் வகையில் விளக்குகள் பொருத்தப்பட்ட தங்கத் தூண்கள் பலவற்றாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குகைகள் மற்றும் அருவிகள் இருந்த இடங்கள் பகல் நேரத்தைப் போல எப்போதும் பேரொளியுடன் திகழ்ந்தன.(7) அனைத்துப் பக்கங்களிலும் சிறு மணிகளுடன் கூடிய அழகிய கொடிகள் தொடர்ந்து கிங்கிணி ஒலியுடன் காற்றில் பறந்து கொண்டிருந்தன. மொத்த மலையும் ஆண்கள் மற்றும் பெண்களின் மெல்லிசைப் பாடல்களை எதிரொலித்துக் கொண்டிருந்தது.(8) ரைவதகம் அனைத்து ரத்தினங்களுடன் மேரு போன்று மிகக் கவர்ச்சியாகக் காட்சியளித்தது. ஓ! பாரதா, மகிழ்ச்சியில் நிறைந்தத் திளைப்பில் இருந்த ஆண்களும், பெண்கள் உரக்கப் பாடினார்கள்.(9)
அந்த முதன்மையான மலையில் இவ்வாறு எழுந்த இசைப் பெருக்கம் சொர்க்கங்களையே எட்டுவதாகத் தோன்றியது. உற்சாகத்தின் அனைத்து நிலைகளிலும் இருந்த மனிதர்களின் ஒலிகளும், உரத்த குரல்களும் எங்கும் கேட்டுக் கொண்டிருந்தன.(10) ஆயிரக்கணக்கான குரல்களின் கொக்கரிப்பு அந்த மலையை இனிமை நிறைந்ததாகவும், அழகானதாகவும் ஆக்கியது. பல்வேறு உணவுப் பொருட்களும், அனுபவிக்கத்தகுந்த பொருட்களும் நிறைந்த பல கடைகள் மற்றும் நிலையங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(11) துணிகள் மற்றும் மாலைகளின் குவியல்களும் ஆங்காங்கே கிடந்தன, வீணைகள், புல்லாங்குழல்கள், மிருதங்கங்கள் ஆகியவற்றின் இசை எங்கும் கேட்கப்பட்டன. பல்வேறு வகை மதுபானங்கள் {கள் மற்றும் சாராயம்} கலந்த உணவு ஆங்காங்கே தேக்கப்பட்டிருந்தன.(12)
துன்பமடைந்தவர்கள், குருடர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு இடைவிடாமல் கொடைகள் வழங்கப்பட்டன. இவையாவற்றின் விளைவால் அந்த மலையின் திருவிழா மங்கலம் நிறைந்ததாக இருந்தது.(13) ஓ! வீரா, அறச்செயல்கள் செய்யும் மனிதர்கள் பலர் வசிப்பதற்குரிய புனித வசிப்பிடங்கள் பலவும் அந்த மலையின் சாரலில் கட்டப்பட்டிருந்தன. இவ்வாறே ரைவதகத் திருவிழாவில் விருஷ்ணி குல வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.(14) அந்த மாளிகைகளுடன் கூடிய அந்த மலை இரண்டாவது சொர்க்கத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது. கிருஷ்ணன் வந்ததும், ஓ! பாரதக் குலத்தின் தலைவா,(15) அந்த மலைகளின் இளவரசன் இந்திரனின் அருளப்பட்ட வசிப்பிடத்திற்கு ஒப்பானது.
(தன் உறவினர்களால்) வழிபடப்பட்டவனான கிருஷ்ணன் ஓர் அழகிய மாளிகைக்குள் நுழைந்தான். சாத்யகியும் திளைத்த ஆன்மாவுடன் தன் பகுதிக்குள் நுழைந்தான். தானவப் படைக்கு மத்தியில் வாசவனைப் போலப் பெருங்கடின சாதனைகளை நிறைவேற்றிய கோவிந்தன், நீண்ட காலம் இல்லாத பிறகு தன் வசிப்பிடத்திற்குள் நுழைந்தான். போஜ, விருஷ்ணி மற்றும் அந்தகக் குலங்களின் வீரர்கள் அனைவரும், நூறு வேள்விகளைச் செய்தவனை {இந்திரனை} வரவேற்க முன்னேறும் தேவர்களைப் போல அந்த உயர் ஆன்மாவை {கிருஷ்ணனை} வரவேற்க முன்வந்தனர்.(16-18)
பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான அவன், பதிலுக்கு அவர்களைக் கௌரவித்து, அவர்களுடைய நலம் குறித்து விசாரித்தான். நிறைவடைந்த இதயத்துடன் கூடிய அவன் {கிருஷ்ணன்} தன் தாயையும் தந்தையையும் வணங்கினான்.(19) வலிய கரங்களைக் கொண்ட அந்த வீரன் அவர்கள் இருவரையும் தழுவிக் கொண்டு (எண்ணற்ற அன்புச் சான்றுகளின் மூலம்) அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் செய்தான். பிறகு அவன், தன்னைச் சூழ்ந்து அமர்ந்திருந்த விருஷ்ணிகளுடன் சேர்ந்து அமர்ந்தான்.(20) தன் கால்களைக் கழுவி களைப்பை விலக்கியவனும், வலிமையும், சக்தியும் கொண்டவனுமான கிருஷ்ணன் அங்கே அமர்ந்த போது, தன் தந்தையால் {வசுதேவரால்} தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அந்தப் பெரும்போரின் முக்கிய நிகழ்வுகளை நினைவுகூர்ந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(21)
அஸ்வமேதபர்வம் பகுதி – 59ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |