Brief account of the war! | Aswamedha-Parva-Section-60 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 45)
பதிவின் சுருக்கம் : போர் குறித்த விபரம் கேட்ட வசுதேவர்; பதினெட்டு நாட்கள் நடந்த குருக்ஷேத்திரப் போரை மிகச் சுருக்கமாகச் சொன்ன கிருஷ்ணன்; வருத்தமடைந்த விருஷ்ணிகள்...
வசுதேவர் {கிருஷ்ணனின் தந்தை}, "ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, (குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையில் நடைபெற்ற) அற்புதம் நிறைந்த போரைக் குறித்து மனிதர்கள் பேசுவதை நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.(1) எனினும், ஓ! வலிமைநிறைந்த கரங்களைக் கொண்டவனே, நீ உன் கண்களாலேயே அதைக் கண்டிருக்கிறாய். எனவே, ஓ! பாவமற்றவனே, அந்தப் போரைக் குறித்து விரிவாக நீ விளக்குவாயாக.(2) உண்மையில், (ஒரு தரப்பில் இருந்த) உயர் ஆன்ம பாண்டவர்களுக்கும், (மறுதரப்பில் இருந்த) பீஷ்மர், கர்ணன், கிருபர், துரோணர், சல்லியன் மற்றும் பிறர் ஆகியோருக்கிடையிலும்,(3) உண்மையில் முகத்தோற்றம் மற்றும் ஆடைகளில் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்களும், ஆயுதங்களில் திறன்மிக்கவர்களும், பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்து வந்தவர்களுமான எண்ணற்ற வெவ்வேறு க்ஷத்திரியர்களுக்கிடையிலும் அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டார் {வசுதேவர்}".(4)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன் {கிருஷ்ணன்}, தன் தாயாரின் {தேவகியின்} முன்னிலையில், தன் தந்தையால் {வசுதேவரால்} இவ்வாறு கேட்கப்பட்டதும், போரில் கௌரவ வீரர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை உரைத்தான்.(5)
வாசுதேவன் {கிருஷ்ணன்}, "அந்த உயர் ஆன்ம க்ஷத்திரியர்களால் அடையப்பட்ட சாதனைகள் உயர்ந்த அற்புதம் நிறைந்தவையாகும். பெரும் எண்ணிக்கையில் இருந்ததன் விளைவால், நூறு வருடங்களானாலும் அவர்களைப் பட்டியலிட இயலாது.(6) எனினும், நான் அவர்களில் முதன்மையானோரைக் குறித்து மட்டுமே சொல்லப் போகிறேன். எனவே, ஓ! தேவரைப் போன்ற காந்தியைக் கொண்டவரே, பூமியின் மன்னர்களால் அடையப்பட்ட அந்தச் சாதனைகளைச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பீராக.(7)
தேவர்ப்படையில் வாசவனைப் போல, குரு குலத்தின் பீஷ்மர், பதினோரு பிரிவுகளாக {அக்ஷௌஹிணிகளாக}[1] இருந்த கௌரவ இளவரசர்களைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்ட படைத்தலைவரானார்.(8) பெரும் நுண்ணறிவைக் கொண்ட சிகண்டி, அருள்நிறைந்த அர்ஜுனனால் பாதுகாக்கப்பட்டவனாகப் பாண்டு மகன்களின் ஏழு பிரிவுகளுக்கு {அக்ஷௌஹிணிகளுக்குத்} தலைவனானான்.(9) (இந்தத் தலைவர்களின் கீழ்) குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையில் நடைபெற்ற போரானது பத்து நாட்கள் நீடித்தது. அது மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் வண்ணம் கடுமையானதாக இருந்தது.(10) பிறகு, பெரும்போரில் காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} துணையைக் கொண்ட சிகண்டி, துணிவுடன் போரிட்டுக் கொண்டிருந்த கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} எண்ணற்ற கணைகளைக் கொண்டு வீழ்த்தினான்.(11) வீரரான பீஷ்மர், தெற்கு நோக்கிய பாதையில் இருந்து சூரியன் வடக்குப் போக்கில் நுழையும் வரை ஒரு தவசியைப் போலக் கணைப்படுக்கையில் காத்திருந்து தன் உயிர் மூச்சுகளைக் கைவிட்டார்.(12)
[1] "சம்மு என்று இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல் பொதுவாக ஒரு பிரிவு என்பதைக் குறிப்பதாகும். உண்மையில் அஃது ஓர் அக்ஷௌஹிணியைக் குறிப்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பிறகு, ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவரும், தைத்தியர்களின் தலைவனுக்குக் காவியரை {சுக்கிராச்சாரியரைப்} போன்றவரும், துரியோதனனின் கீழ் இருந்த மனிதர்களில் பெரியவருமான துரோணர் படைத்தலைவரானார்.(13) போரில் தமதாற்றல் மீது எப்போதும் செருக்கு கொண்ட அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர், கௌரவப்படையில் எஞ்சியிருந்த ஒன்பது அக்ஷௌஹிணிகளாலும் ஆதரிக்கப்பட்டு, கிருபர், விருஷன் {கர்ணன்} மற்றும் பிறரால் பாதுகாக்கப்பட்டார்.(14) வலிமைமிக்க ஆயுதங்கள் பலவற்றை அறிந்தவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான திருஷ்டத்யும்னன், பாண்டவர்களின் தலைவனானான். மித்ரனால் பாதுகாக்கப்பட்ட வருணனைப் போல அவன் பீமரால் பாதுகாக்கப்பட்டான்.(15) தன் பலத்தை எப்போதும் துரோணருடன் அளவிட விரும்பும் அந்த உயர் ஆன்ம வீரன் {திருஷ்டத்யும்னன்}, (எஞ்சியிருந்த) பாண்டவப் படையால் ஆதரிக்கப்பட்டு, தன் தந்தைக்கு (பாஞ்சாலர்களின் மன்னனான துருபதனுக்குத் துரோணரால்) இழைக்கப்பட்ட குற்றங்களை நிறைவு கூர்ந்து, போரில் பெரும் சாதனைகளைச் செய்தான்.(16) துரோணருக்கும், பிருஷதன் மகனுக்கும் {திருஷ்டத்யும்னனுக்கும்} இடையில் நடைபெற்ற மோதலில் பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்து அங்கு திரண்டிருந்த மன்னர்கள் கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்டனர்.(17) அந்தக் கடும்போர் ஐந்து நாட்கள் நீடித்தது. அந்தக் காலத்தின் இறுதியில் திருஷ்டத்யும்னனிடம் துரோணர் வீழ்ந்தார்.(18)
அதன்பிறகு, துரியோதனனின் படைக்குக் கர்ணன் படைத்தலைவனானான். கௌரவப் படையில் எஞ்சியிருந்த ஐந்து அக்ஷௌஹிணிகளால் போரில் அவன் ஆதரிக்கப்பட்டான்.(19) பாண்டவர்களிடம் அப்போது மூன்று அக்ஷௌஹிணிகள் இருந்தன. எண்ணற்ற வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு, அர்ஜுனனால் பாதுகாப்பட்ட அவர்கள் போரிட வந்தனர்.(20) சூதனின் மகனான கர்ணன், சீற்றமிகு போர்வீரனாக இருப்பினும், சுடர்மிக்க நெருப்புடன் மோதும் ஒரு பூச்சியைப் போல இரண்டாம் நாளில் தன் முடிவை அடைந்தான்.(21)
கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு உற்சாகத்தை இழந்த கௌரவர்கள் தங்கள் சக்தி அனைத்தையும் இழந்தனர். எண்ணிக்கையில் மூன்று அக்ஷௌஹிணிகளாக இருந்த அவர்கள், மத்ர ஆட்சியாளனை {சல்லியனைச்} சூழ்ந்து திரண்டனர்.(22) தேர்வீரர்கள் பலரையும், யானைகளையும், குதிரைவீரர்களையும் இழந்து எண்ணிக்கையில் ஓர் அக்ஷௌஹிணியாக எஞ்சியிருந்த பாண்டவப் படை உற்சாகத்தை இழந்தவர்களாக (தங்கள் தலைவரான) யுதிஷ்டிரரை ஆதரித்தனர்.(23) குரு மன்னனான யுதிஷ்டிரர், தொடர்ந்து நடந்த போரில் செயற்கரிய சாதனைகளைச் செய்து, அரை நாளுக்கு முன்பே மத்ரர்களின் மன்னனை {சல்லியனைக்} கொன்றார்.(24)
சல்லியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அளவிலா ஆற்றலைக் கொண்ட உயர் ஆன்ம சகாதேவன், (பாண்டவர்களுக்கும், குருக்களுக்கும் இடையில்) சச்சரவை உண்டாக்கிய சகுனியைக் கொன்றான்.(25)
சகுனியின் வீழ்ச்சிக்குப் பிறகு, பேரிழப்பை அனுபவித்த படையைக் கொண்டவனும், அதன் காரணமாக உற்சாகத்தை இழந்தவனும், கதாயுதம் தரித்தவனுமான திருதராஷ்டிரரின் அரச மகன் {துரியோதனன்} களத்தைவிட்டுத் தப்பி ஓடினான்.(26) அப்போது பேராற்றலைக் கொண்ட பீமசேனர், கோபத்தால் நிறைந்து அவனைத் தொடர்ந்து சென்று துவைபாயனத் தடாகத்தின் நீருக்கடியில் அவனைக் கண்டுபிடித்தார்.(27) எஞ்சியிருந்த தங்கள் படையுடன் கூடிய பாண்டவர்கள் அந்தத் தடாகத்தைச் சூழ்ந்து கொண்டு மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாக நீருக்குள் மறைந்திருந்த துரியோதனனிடன் போரிட்டனர்.(28) அவர்களுடைய சொற்கணைகள் நீருக்குள் ஊடுருவிச் சென்று துரியோதனனைத் துளைத்தன. அந்தத் தடாகத்தில் இருந்து எழுந்த அவன் {துரியோதனன்}, போரிட விரும்பியவனாகக் கதாயுதம் தரித்துப் பாண்டவர்களை அணுகினான்.(29) அப்போது தொடர்ந்து நடந்த பெரும்போரில் பல மன்னர்களின் முன்னிலையில் பேராற்றலை வெளிப்படுத்திய பீமசேனரால் திருதராஷ்டிரரின் அரச மகன் கொல்லப்பட்டான்.(30)
அதன்பிறகு எஞ்சியிருந்த பாண்டவப் படையினர் முகாமில் உறங்கிக் கொண்டிருந்தபோது, (திருஷ்டத்யும்னன் கைகளால்) தன் தந்தை கொல்லப்பட்டதைப் பொறுத்துக் கொள்ளப்பட முடியாத துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} அந்த இரவு நேரத்தில் கொல்லப்பட்டனர்.(31) மகன்கள் கொல்லப்பட்டவர்களும், படைகள் கொல்லப்பட்டவர்கள், நண்பர்கள் கொல்லப்பட்டவர்களுமான பாண்டவர்கள் ஐவரும், நானும், யுயுதானனும் {சாத்யகியும்} மட்டுமே உயிருடன் இருக்கிறோம்.(32) கௌரவப்படையில் கொல்லப்படாமல் எஞ்சியிருப்பவர்கள், கிருபர், போஜ இளவரசனான கிருதவர்மன் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோராவர். திருதராஷ்டிரரின் மகனான யுயுத்சுவும் பாண்டவர்களின் தரப்பை ஏற்றதால் கொல்லப்படாமல் தப்பினான்.(33)
கௌரவ மன்னன் (சுயோதனன்) தன் தொண்டர்கள் மற்றும் கூட்டாளிகள் அனைவருடன் சேர்த்துக் கொல்லப்பட்ட பிறகு, விதுரரும், சஞ்சயனும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரின் முன்னிலைக்கு வந்தனர்.(34) இவ்வாறே, ஓ! தலைவரே, அந்தப் போர் பதினெட்டு நாட்கள் நீடித்தது. பூமியின் மன்னர்கள் பலர் அங்கே கொல்லப்பட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்" என்றான் {கிருஷ்ணன்}".(35)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தப் பயங்கரக் கதையைக் கேட்ட விருஷ்ணிகள், துயரம், சோகம் மற்றும் வருத்தத்தால் நிறைந்தனர்".(36)
அஸ்வமேதபர்வம் பகுதி – 60ல் உள்ள சுலோகங்கள் : 36
ஆங்கிலத்தில் | In English |