The lamentation of Subhadra! | Aswamedha-Parva-Section-61 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 46)
பதிவின் சுருக்கம் : அபிமன்யு கொல்லப்பட்டதைச் சொல்லுமாறு கிருஷ்ணனிடம் கேட்ட சுபத்திரை; அபிமன்யு வதத்தைக் கேட்டு மயக்கமடைந்த வசுதேவர்; வசுதேவரைத் தேற்றிய கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பேராற்றல் கொண்ட உயர் ஆன்மாவான வாசுதேவன் {கிருஷ்ணன்}, தன் தந்தையின் {வசுதேவரின்} முன்னிலையில் பாரதர்களின் பெரும்போரைச் சொல்லி முடித்த பிறகு, அபிமன்யு கொல்லப்பட்டதை அந்த வீரன் {கிருஷ்ணன்} சொல்லாமல் கடந்து செல்வது வெளிப்படையாகத் தெரிந்தது. இனிமையற்ற எதையும் தன் தந்தை கேட்க வேண்டாம் என்பதே அந்த உயர் ஆன்மாவின் நோக்கமாக இருந்தது.(1,2) உண்மையில், தன் தந்தையான வசுதேவர், தமது மகளின் {சுபத்திரையின்} மகனுடைய மரணத்தைச் சொல்லும் பயங்கரச் செய்தியைக் கேட்டு கவலையாலும், துயரத்தாலும் பீடிக்கப்படுவதை நுண்ணறிவுமிக்கக் கிருஷ்ணன் விரும்பவில்லை.(3)
(அவனது தங்கையான) சுபத்திரை, தன் மகன் {அபிமன்யு} கொல்லப்பட்டது சொல்லப்படாததைக் கண்டு தன் அண்ணனிடம், "ஓ! கிருஷ்ணா {அண்ணா}, என் மகன் இறந்ததைச் சொல்" என்று சொல்லி விட்டு (மயங்கி) பூமியில் விழுந்தாள்.(4) வசுதேவர், தம் மகள் பூமியில் விழுவதைக் கண்டார். அதைக் கண்டதும் அவரும், துயரத்தில் மதி மயங்கியவராகக் கீழே விழுந்தார்.(5)
(உணர்வுகள் மீண்ட) வசுதேவர், தமது மகளின் மகனுடைய {தம் பேரனுடைய} இறப்பால் உண்டான துயரத்தால் பீடிக்கப்பட்டவராகக் கிருஷ்ணனிடம்,(6) "ஓ! தாமரைக்கண்ணா, வாக்கில் வாய்மை வாய்ந்தவனாக நீ பூமியில் புகழ்பெற்றிருக்கிறாய். எனினும், ஓ! பகைவரைக் கொல்பவனே, என் மகளின் மகனுடைய மரணத்தைக் குறித்து நீ ஏன் இன்று எனக்குச் சொல்லவில்லை?(7) ஓ! பலமிக்கவனே, உன் தங்கையின் மகன் கொல்லப்பட்டதைக் குறித்து விரிவாக எனக்குச் சொல்வாயாக. ஐயோ, உன்னைப் போலவே கண்களைக் கொண்ட அவன் போரில் பகைவர்களால் எவ்வாறு கொல்லப்பட்டான்?(8) ஓ! விருஷ்ணி குலத்தோனே, நூறு துண்டுகளாய்ப் பிளக்காமல் இருப்பதால், வேளை வராத போது மனிதர்களுடன் சேர்ந்து இதயமும் அழிவதில்லை என்று தெரிகிறது.(9) ஓ!... வீழ்ந்த நேரத்தில், தன் தாயைக் குறிப்பிட்டு அவன் சொன்ன சொற்கள் என்னென்ன? ஓ! தாமரைக்கண்ணா, ஓய்வற்ற கண்களைக் கொண்டவனும், என் அன்புக்குரியவனுமான அவன் எனக்குச் சொன்னது என்ன?(10) போரில் புறமுதுகிட்டு ஓடும்போது அவன் பகைவர்களால் கொல்லப்படவில்லை என நான் நம்புகிறேன் {அவன் புறமுதுகிடவில்லையல்லவா?}. ஓ! கோவிந்தா, போரிடும்போது அவனது முகம் உற்சாகத்தை இழக்கவில்லை என நான் நம்புகிறேன் {அவன் உற்சாகம் இழக்கவில்லையல்லவா?}.(11) ஓ! கிருஷ்ணா, வலிமையும், சக்தியும் நிறைந்தவனாக அவன் இருந்தான். பலமிக்க அந்த வீரன், தன் சிறுபிள்ளைத்தனத்தால், என் முன்னிலையில் (தன் ஆற்றலைத்) தற்புகழ்ந்து, (போரில்) தன் திறனைக் குறித்து என்னிடம் பேசுவானே.(12) அந்தப் பிள்ளை, துரோணர், கர்ணன், கிருபர் மற்றும் பிறரால் வஞ்சகமாகக் கொல்லப்பட்டுப் பூமியில் கிடக்கவில்லை என நான் நம்புகிறேன் {அவர்களால் வஞ்சகமாகக் கொல்லப்படவில்லையல்லவா?}. இவை யாவற்றையும் எனக்குச் சொல்வாயாக.(13) என் மகளுடைய மகன் {என் பேரனான அபிமன்யு}, போரில் பீஷ்மரையும், வலிமைமிக்கப் போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையான கர்ணனையும் எப்போதும் அறைகூவி அழைப்பானே" என்றார் {வசுதேவர்}.(14)
துயரம் மேலிட இத்தகைய புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தன் தந்தையிடம், அவரைவிட அதிகம் பீடிக்கப்பட்டவனான கோவிந்தன் {கிருஷ்ணன்} இந்தச் சொற்களால் பதிலளித்தான்,(15) "போரின் முன்னணியின் நின்று போரிட்ட அவனது முகம் ஒருபோதும் உற்சாகத்தை இழக்கவில்லை. அந்தப் போர் கடுமையானதாக இருந்தாலும் அவன் ஒருபோதும் புறமுதுகிடவில்லை.(16) பூமியின் மன்னர்களில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பேரைக் கொன்று துரோணருக்கும், கர்ணனுக்கும் துயரைக் கொண்டு வந்த அவன் இறுதியில் துச்சாசனன் மகனிடம் வீழ்ந்தான்.(17) ஓ! தலைவா, ஒற்றைக்கு ஒற்றையாக இடைவெளியே இல்லாமல் அவனுடன் போரிட்டிருந்தாலும் வஜ்ரதாரியாலும் {இந்திரனாலும்} போரில் அவனைக் கொல்ல முடியாது.(18)
அவனுடைய தந்தையான அர்ஜுனன் (தன்னுடன் தனியாகப் போரிட அறைகூவியழைத்த) சம்சப்தகர்களால் மையப்பகுதியில் இருந்து விலகிச் சென்ற போது, போரில் துரோணரின் தலைமையிலானவர்களும், சீற்றத்துடன் கூடியவர்களுமான கௌரவவீரர்களால் அபிமன்யு சூழப்பட்டான்.(19) ஓ! தந்தையே, பெரும் எண்ணிக்கையிலான பகைவர்களைக் கொன்ற பிறகே உமது மகளின் மகன் {பேரன் அபிமன்யு} இறுதியாகத் துச்சாசனன் மகனிடம் வீழ்ந்தான்[1].(20)
[1] பார்க்க: துரோண பர்வம் பகுதி - 47
அவன் சொர்க்கத்திற்குச் சென்றிருக்கிறான் என்பதில் ஐயமில்லை. ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவரே, உம்முடைய இந்தத் துயரத்தைக் கொல்லும். தெளிவான புத்தி கொண்டவர்கள் துயரமேதும் அடையும்போது ஒருபோதும் அவர்கள் நலிவடைவதில்லை.(21) வலிமையில் இந்திரனுக்கு நிகரான வீரர்களான துரோணரையும், கர்ணனையும், பிற வீரர்களையும் எதிர்த்தவனான அவன், ஏன் சொர்க்கத்திற்கு உயராமல் இருக்கப் போகிறான்?(22) ஓ! தடுக்கப்பட முடியாதவரே, நீர் உம்முடைய இந்தத் துயரத்தைக் கொல்வீராக. கோபத்தின் ஆளுகைக்குள் கிடந்து துன்புறாதீர். பகை நகரங்களை வெல்பவனான அவன், ஆயுத முனையில் அடையும் மரணத்தைச் சார்ந்த புனித இலக்கை அவன் அடைந்துவிட்டான்.(23)
அந்த வீரன் {அபிமன்யு} வீழ்ந்த பிறகு துயரால் பீடிக்கப்பட்ட என்னுடைய தங்கையான இந்தச் சுபத்திரை, குந்தியைக் கண்டபோது பெண் அன்றிலை {குரரிபக்ஷியைப்} போல உரத்த ஒப்பாரியில் ஈடுபட்டாள்.(24)
துயரத்தில் இருந்த அவள் திரௌபதியிடம், "ஓ! மதிப்புக்குரிய பெண்ணே {அம்மா}, நம் மகன்கள் அனைவரும் எங்கே? நான் அவர்களைக் காண விரும்புகிறேன்" என்றாள்.(25)
அவளுடைய ஒப்பாரியைக் கேட்ட கௌரவப் பெண்மணிகள் அனைவரும் அவளைத் தழுவிக்கொண்டு அவளைச் சூழ்ந்து அமர்ந்து அழுதனர்.(26)
(தன் மருமகளான) உத்தரையைக் கண்ட அவள், "ஓ! அருளப்பட்ட பெண்ணே, உன் கணவன் எங்கே சென்றுவிட்டான்? அவன் திரும்பி வரும்போது, ஒருக்கணமும் தாமதிக்காமல் அது குறித்து எனக்குத் தெரிவிப்பாயாக.(27) ஐயோ, ஓ! விராடன் மகளே {உத்தரையே}, என் குரலைக் கேட்ட உடனேயே ஒரு கணமும் தாமதிக்காமல் தன் அறையில் இருந்து அவன் வெளி வருவான். உன் கணவன் இன்று ஏன் வரவில்லை?(28) ஐயோ, ஓ! அபிமன்யு, வலிமைமிக்கத் தேர்வீரர்களான உன் தாய்மாமன்கள் அனைவரும் நலமாக இருக்கிறார்கள். போருக்கு ஆயத்தமாக இங்கே நீ வருவதைக் காணும்போதெல்லாம் அவர்கள் உன்னை வாழ்த்தினார்கள்.(29) ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, முன்பு போலவே இன்று போரில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் எனக்குச் சொல்வாயாக. ஓ! இவ்வாறு அழுது புலம்பும் எனக்ககு நீ ஏன் பதிலளிக்காமல் இருக்கிறாய்" என்று சொல்லி அழுதாள் {சுபத்திரை}.(30)
விருஷ்ணி குலமகளின் இந்த ஒப்பாரியைக் கேட்ட பிருதை {குந்தி}, ஆழ்ந்த துயரத்தில் பீடிக்கப்பட்டவளாக அவளிடம் மெதுவாக,(31) "ஓ! சுபத்திரா, வாசுதேவன் {கிருஷ்ணன்}, சாத்யகி மற்றும் தன் தந்தை {அர்ஜுனன்} ஆகியோரால் பாதுகாக்கப்பட்டாலும், இளைஞனான உன் மகன் கொல்லப்பட்டிருக்கிறான். இந்தக் கொலை காலத்தின் ஆதிக்கத்தால் நேர்ந்திருக்கிறது.(32) ஓ! யதுகுல மகளே, உன் மகன் இறவாதவனாக {அமரனாக} இருந்தான். வருந்தாதே. போரில் தடுக்கப்பட முடியாதவனான உன் மகன் உயர்ந்த இலக்கை அடைந்துவிட்டான் என்பதில் ஐயமில்லை.(33) உயர் ஆன்ம க்ஷத்திரியர்களின் உயர் குலத்தில் பிறந்தவள் நீ. ஓ! ஓய்வற்றபார்வை கொண்டவளே, ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட பெண்ணே, வருந்தாதே.(34) குழந்தையைக் கருவில் சுமக்கும் உத்தரையின் மேல் உன் விழிகளைச் செலுத்துவாயாக. ஓ! அருளப்பட்ட மங்கையே, துயரத்தின் வசப்படாதே. இந்த மங்கலப் பெண் {உத்தரை}, விரைவில் அந்த வீரனுக்கு {அபிமன்யுவுக்கு} ஒரு மகனை ஈன்றெடுப்பாள்" என்றாள் {குந்தி}.(35)
ஓ! யது குலத்தைத் தழைக்கச் செய்பவரே {வசுதேவரே}, ஓ! தடுக்கப்பட முடியாதவரே, கடமைகள் அனைத்தையும் அறிந்தவளான குந்தி, இவ்வழியில் அவளுக்கு ஆறுதலளித்து, தன் துயரத்தைக் கைவிட்டு, ஆற்றலில் யமனுக்கு ஒப்பானவர்களான மன்னர் யுதிஷ்டிரர், பீமர், இரட்டையர்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்) ஆகியோரின் ஏற்புடன் அபிமன்யுவின் ஈமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்தாள். பிராமணர்களுக்குக் கொடையளித்த அவள்,(36,37) ஓ! யது குலத்தைத் தழைக்கச் செய்பவரே, அவர்களுக்குப் பல பசுக்களையும் கொடுத்தாள்.
பிறகு அந்த விருஷ்ணி வீரமகள் (குந்தி), சிறு ஆறுதல் அளிக்கும் வகையில் விராடன் மகளிடம் {உத்தரையிடம்},(38) "ஓ! விராடனின் குற்றமற்ற மகளே, நீ வருந்தலாகாது. ஓ! உருண்ட இடைகளைக் கொண்டவளே, உன் கணவனுக்காக உன் கருவறையில் உள்ள பிள்ளையைப் பாதுகாப்பாயாக" என்றாள்.(39)
ஓ! பெருங்காந்தி கொண்டவரே, இச்சொற்களைச் சொன்னதுடன் குந்தி நிறுத்திக் கொண்டாள். அவளுடைய {குந்தியின்} அனுமதியைப் பெற்றுக் கொண்டு, சுபத்திரையை இங்கே நான் அழைத்து வந்தேன்.(40) ஓ! கௌரவங்களை அளிப்பவரே, இவ்வாறே, உமது மகளின்{சுபத்திரையின்} மகன்{அபிமன்யு} தன் மரணத்தை அடைந்தான். ஓ! தடுக்கப்பட முடியாதவரே, எரியும் துயரைக் களைவீராக. உண்மையில், கவலையில் உமது இதயத்தை நிறுவாதீர்" என்றான் {கிருஷ்ணன்}".(41)
அஸ்வமேதபர்வம் பகுதி – 61ல் உள்ள சுலோகங்கள் : 41
ஆங்கிலத்தில் | In English |