Do thou Aswamedha sacrifice! | Aswamedha-Parva-Section-62 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 47)
பதிவின் சுருக்கம் : அபிமன்யுவுக்கு ஸ்ராத்தஞ்செய்த வசுதேவர்; ஹஸ்தினாபுரம் வந்து உத்தரையைத் தேற்றிய வியாசர்; யுதிஷ்டிரனை அஸ்வமேத வேள்வி செய்யத் தூண்டியது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தம்மகன் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} சொற்களைக் கேட்டவரும், நீதிமிக்க ஆன்மா கொண்டவருமான அந்தச் சூர குல வழித்தோன்றல் {வசுதேவர்}, தமது துயரத்தைக் கைவிட்டு (அபிமன்யுவுக்குச்) சிறந்த ஈமக் காணிக்கைகளை அளித்தார் {ஸ்ராத்தஞ்செய்தார்}.(1) வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தன் தந்தையின் அன்புக்குரியவனும், தன் மருமகனுமான அவன் {அபிமன்யு} (சொர்க்கத்திற்கு) உயர்வதற்கான அந்தச் சடங்குகளைச் செய்தான்.(2) பெருஞ்சக்தி கொண்டவனான அவன் {கிருஷ்ணன்}, அறுபது லட்சம் பிராமணர்களுக்கு ஏற்புடைய அனைத்துக் குணங்களுடன் கூடிய உணவைப் படைத்தான்.(3) அவர்களுக்குத் துணிமணிகள் பலவற்றைக் கொடுத்த கிருஷ்ணன், அந்தப் பிராமணர்களின் செல்வ தாகத்தைத் தணித்தான். கொடையளிக்கப்பட்ட பொற்குவியல்களும், பசுக்கள், படுக்கைகள், துணிமணிகளின் எண்ணிக்கையும் ஆச்சரியகரமானவையாக இருந்தன. அந்தப் பிராமணர்கள், "(கிருஷ்ணனின் செல்வம்) பெருகட்டும்" என்று உரக்க அறிவித்தார்கள்.(4,5)
பிறகு, தசார்ஹ குலத்தோனான வாசுதேவன் {கிருஷ்ணன்}, பலதேவன் {பலராமன்}, சாத்யகி, சத்யகன் ஆகியோர் ஒவ்வொருவரும் அபிமன்யுவுக்கான ஈமச் சடங்குகளை {சிராத்தம்} செய்தனர்.(6) துயரால் மிகவும் பீடிக்கப்பட்ட அவர்கள் ஆறுதலேதும் அடையத் தவறினர். யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்தில் {ஹஸ்தினாபுரத்தில்} பாண்டு மகன்களின் நிலையும் இவ்வாறே இருந்தது.(7) ஓ! ஏகாதிபதி, விராடனின் மகள் {உத்தரை}, தன் கணவனின் இறந்த துயரத்தால் மிகவும் பீடிக்கப்பட்டவளாக மொத்தமாக உணவனைத்தையும் தவிர்த்தாள். இதனால் அவளது உறவினர்கள் அனைவரும் பெருந்துயரத்தில் மூழ்கினர்.(9)
அப்போது தமது ஆன்மப் பார்வையால் அனைவரின் நிலைகளையும் அறிந்த வியாசர் அங்கே வந்தார். உயர்ந்த நுண்ணறிவையும், பெருஞ்சக்தியையும் கொண்ட அந்த முனிவர், (அரண்மனைக்கு வந்து), நீண்ட கண்களைக் கொண்ட பிருதையிடம் {குந்தியிடம்} பேசிவிட்டு,(10) உத்தரையிடம், "இத்துயரைக் கைவிடுவாயாக. ஓ! புகழ்பெற்ற பெண்ணே, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} பலத்தாலும், என் சொல்லாலும் பெருஞ்சக்தி கொண்ட மகன் ஒருவன் {பரீக்ஷித்} உனக்குப் பிறப்பான். அந்த மகனே பாண்டவர்களுக்குப் பிறகு (அவர்கள் பூமியை விட்டுச் சென்ற பிறகு} பூமியை ஆள்வான்" என்றார்.(12)
ஓ! பாரதா {ஜனமேஜயா}, தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்ட அவர் {வியாசர்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் கேட்டுக் கொண்டிருக்கையில், தன் சொற்களால் அவனுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில்,(13) "ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, உன் பேரன் ஓர் உயர் ஆன்ம இளவரசனாவான். கடலின் விளிம்பு வரையுள்ள மொத்த பூமியையும் அவன் நீதியுடன் ஆட்சி செய்வான்.(14) எனவே, ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, ஓ! பகைவரை வெட்டுபவனே, இத்துயரைக் களைவாயாக. இதில் ஐயங்கொள்ளாதே. உண்மையில் இது நடக்கும்.(15) முன்பு விருஷ்ணி வீரனால் {கிருஷ்ணனால்} சொல்லப்பட்டது நிச்சயம் நடக்கும். வேறு வகையில் நினைக்காதே.(16) அபிமன்யுவைப் பொறுத்தவரையில், அவன் தன் செயல்களால் வென்ற தேவ லோகங்களுக்குச் சென்றிருக்கிறான். அந்த வீரனுக்காக நீயோ, குருக்களில் பிறரோ வருந்தலாகாது" என்றார் {வியாசர்}.(17)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, இவ்வாறு தன் பாட்டனால் {வியாசரால்} சொல்லப்பட்டவனும், நீதிமிக்க ஆன்மா கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் துயரைக் கைவிட்டு, உற்சாகம் நிறைந்தனவாக ஆனான்.(18) ஓ! இளவரசே, ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, கடமைகள் அனைத்தையும் அறிந்தவனான உன் தந்தை {பரீக்ஷித்}, வளர்பிறைச் சந்திரனைப் போல {உத்தரையின்} அந்தக் கருவறையில் வளர்ந்தான்.(19) பிறகு வியாசர், தர்மனின் அரச மகனிடம் குதிரை வேள்வி செய்வதற்குத் தூண்டினார்[1]. இவ்வாறு சொன்ன அவர் அங்கேயே அப்போதே மறைந்து போனார்.(20) நுண்ணறிவுமிக்கவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், வியாசரின் சொற்களைக் கேட்டு, (வேள்விக்கான) செல்வத்தைக் கொண்டு வரும் பயணத்தில் தன் மனத்தை நிலைநிறுத்தினான்" {என்றார் வைசம்பாயனர்}.(21)
[1] அஸ்வமேத பர்வம் 3ம் பகுதியில் வியாசர் முதல்முறையாக யுதிஷ்டிரனை அஸ்வமேத யாகம் செய்யச் சொல்லித் தூண்டினார். இப்போது அதை வலியுறுத்துகிறார்.
அஸ்வமேதபர்வம் பகுதி – 62ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |