Journey to Himavat! | Aswamedha-Parva-Section-63 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 48)
பதிவின் சுருக்கம் : வியாசரின் ஆணைப்படி தம்பிமாருடன் ஆலோச்சித்த யுதிஷ்டிரன்; வேள்விக்குத் தேவையான செல்வத்தைக் கொண்டு வர இமய மலைக்குச் சென்றது...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே, குதிரை வேள்வி குறித்து உயர் ஆன்ம வியாசரால் சொல்லப்பட்ட சொற்களைக் கேட்டு யுதிஷ்டிரனால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?(1) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, மருத்தன் பூமிக்கடியில் புதைத்து வைத்த செல்வத்தை அடைவதில் மன்னன் வென்றது எவ்வாறு?" என்று கேட்டான்.(2)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தீவில் பிறந்த தவசியின் {வியாசரின்} சொற்களைக் கேட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகளான அர்ஜுனன், பீமசேனன் மற்றும் மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகிய அனைவரையும் உரிய நேரதில் அழைத்து, அவர்களிடம் (பின்வரும் சொற்களில்),(3) "வீரர்களே, உயர்ந்த நுண்ணறிவைக் கொண்டவரும், உயர் ஆன்மாவுமான கிருஷ்ணர் {வியாசர்}[1], குருக்களிடம் கொண்ட நட்பின் நிமித்தமும், அவர்களுக்கு நன்மை செய்ய விரும்பியும் சொன்ன சொற்களைக் கேட்டீர்கள். உண்மையில், அபரிமிதமான தவங்களைச் செய்தவரும், நண்பர்களுக்குச் செழிப்பை வழங்கவல்லவரும்,(4,5) நேர்மையான ஒழுக்கம் கொண்ட ஆசானும், அற்புதச் செயல்களைச் செய்தவருமான அந்தப் பெருந்தவசியால் {வியாசரால்} சொல்லப்பட்ட அந்தச் சொற்களைக் கேட்டீர்கள்.
[1] "இங்கே கிருஷ்ணர் என்பது வியாசரைக் குறிக்கும். அந்தப் பெரும் முனிவர் தீவில் பிறந்த கிருஷ்ணர் என்றழைக்கப்பட்டார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் சொன்னதையும், பெரும் நுண்ணறிவைக் கொண்ட கோவிந்தன் {கிருஷ்ணன்} சொன்னதையும் நீங்கள் கேட்டீர்கள்.(6) பாண்டுவின் மகன்களே, அச்சொற்களை நினைவுகூரும் நான் அவற்றுக்கு முறையாகக் கீழ்ப்படிய விரும்புகிறேன். அவர்களுடைய சொற்களுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் உங்கள் அனைவருக்கும் பேரருள் கிட்டும்.(7) பிரம்மத்தை ஓதுபவர்களால் சொல்லப்படும் சொற்கள் (அந்தச் சொற்களுக்குக் கீழ்ப்படிவது) குறிப்பிடத்தக்க நன்மையை நிச்சயம் கொண்டு வரும். குரு குலத்தைத் தழைக்கச் செய்பவர்களே, பூமாதேவி செல்வத்தை இழந்தவளாக இருக்கிறாள்.(8) எனவே மன்னர்களே, (பூமிக்குள் புதைந்து கிடக்கும்) மருத்தனின் செல்வத்தைக் குறித்து வியாசர் நமக்குச் சொன்னார். அந்தச் செல்வம் அதிகமானது, அல்லது போதுமானது என நீங்கள் நினைத்தால்,(9) அதை நாம் (நமது தலைநகருக்குக்) கொண்டு வருவது எவ்வாறு? ஓ! பீமா, இது குறித்து நீ என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டான்.
ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே {ஜனமேஜயா}, மன்னன் இச்சொற்களைச் சொன்ன போது,(10) பீமசேனன் தன் கரங்களைக் குவித்து, மறுமொழியாக இந்தச் சொற்களில், "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, வியாசரால் குறிப்பிடப்பட்டச் செல்வத்தைக் கொண்டு வருவது குறித்து நீர் சொன்ன சொற்களை நான் ஏற்கிறேன். ஓ! பலமிக்கவரே, அவிக்ஷித்தின் மகனால் {மருத்தனால்} அங்கே வைக்கப்பட்ட செல்வத்தை அடைவதில் நாம் வென்றால்,(11,12) ஓ! மன்னா, அப்போது நம்மால் கருதப்படும் இந்த வேள்வியை எளிதாக நடத்தலாம். இதையே நான் நினைக்கிறேன். எனவே, நாம் உயர் ஆன்ம கிரீசனுக்கு {சிவனுக்கு} தலைவணங்கி,(13) அந்தத் தேவனுக்கு உரிய காணிக்கையளித்து, அந்தச் செல்வத்தைக் கொண்டுவருவோம். நீர் அருளப்பட்டிருப்பீராக. தேவர்களுக்குத் தேவனையும் {சிவனையும்}, அவனது தோழர்கள் மற்றும் தொண்டர்களையும் {பூதகணங்களையும்}, சொல்லாலும், எண்ணத்தாலும், செயலாலும் நிறைவடையச் செய்து, நிச்சயம் நாம் அந்தச் செல்வத்தை அடையப் போகிறோம். காளையைத் தன் அடையாளமாகக் கொண்ட அந்தப் பெருந்தேவன் {சிவன்} நம்மிடம் நிறைவடைந்தால், அந்தப் புதையலைப் பாதுகாக்கும் பயங்கர முகத்தோற்றம் கொண்ட கின்னரர்களும் நிச்சயம் நம் வசப்படுவார்கள்" என்றான்.
ஓ! பாரதா {ஜனமேஜயா}, பீமனால் சொல்லப்பட்ட இந்தச் சொற்களைக் கேட்டவனும்,(14-16) தர்மனின் மகனுமான மன்னன் யுதிஷ்டிரன் உயர்வான நிறைவை அடைந்தான். அதே நேரத்தில், அர்ஜுனனின் தலைமையிலான பிறரும் {மற்ற தம்பிகளும்}, "அப்படியே ஆகட்டும்" என்றனர்.(17)
அந்தச் செல்வத்தைக் கொண்டு வருவது எனத் தீர்மானித்த பாண்டவர்கள், துருவ நட்சத்திரம் மற்றும் அதே பெயரால் {துருவம் என்ற பெயரால்} அழைக்கப்படும் நாளில் தங்கள் படைகளை அணிவகுக்க ஆணையிட்டனர்[2].(18) அந்தப் பாண்டுவின் மகன்கள், பிராமணர்களைத் தங்களுக்கு ஆசிகூற {ஸ்வஸ்திவாசனம் செய்யும்படிச்} செய்து, பெருந்தேவனான மஹேஸ்வரனை முறையாக வழிபட்டு (தங்கள் காரியத்திற்குப்) புறப்பட்டுச் சென்றனர்.(19) மோதகங்கள், பாயஸம், இறைச்சியால் செய்யப்பட்ட பிண்டங்கள் {மாம்ஸம், ஆபூபங்கள்} ஆகியவற்றைக் கொண்டு அந்த உயர் ஆன்ம தேவனை நிறைவடையச் செய்த பாண்டுவின் மகன்கள், உற்சாகமிக்க இதயங்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.(20)
[2] "துருபம் என்பது ரோஹிணி மற்றும் மூன்றாவது நட்சத்திரமான உத்தரத்தைக் குறிக்கும். மேலும் ஞாயிற்றுக்கிழமை துருவ நாள் என்றழைக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பாண்டவர்களெல்லாரும் ரத்னங்களைக் கொண்டுவர நிச்சயித்து, ரோஹிணீநக்ஷத்திரம் கூடிய பானு வாரத்தில் ஸேனையை ( புறப்படும்படி) கட்டளையிட்டார்கள்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "நக்ஷத்ரே(அ)ஹனி ச த்ருவே என்பது மூலம், உத்தரமும் ஞாயிறுங் கூடிய அம்ருதஸித்த யோக்கத்தில் என்பது பழைய உரை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவர்கள் ஒரு நல்ல நட்சத்திரத்தின் கீழ், ஒரு துருவ நாளில் புறப்பட வேண்டும் எனப் படைவீரர்களுக்குக் கட்டளையிட்டார்கள்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "துருவனின் நாள் என்பது ஞாயிற்றுக் கிழமையைக் குறிக்கும்" என்றிருக்கிறது.
அவர்கள் அவ்வாறு புறப்பட்டுச் சென்றபோது, குடிமக்களும், பிராமணர்களில் முதன்மையானோர் பலரும், உற்சாகமிக்க இதயங்களுடன் (அவர்களுடைய தலைகளில் {கைவைத்து}) மங்கல ஆசிகளைக் கூறினர்.(21) பாண்டவர்கள், தங்கள் தங்கள் நெருப்புகளை நாள்தோறும் வழிபடும் பிராமணர்கள் பலரை வலம் வந்து, அவர்களுக்குத் தலைவணங்கி தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.(22) மகன்களின் மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டிருந்த மன்னன் திருதராஷ்டிரன், அவனது ராணி (காந்தாரி) மற்றும் நீண்ட கண்களைக் கொண்ட பிருதை {குந்தி} ஆகியோரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு,(23) திருதராஷ்டிரன் மகனான கௌரவ இளவரசன் யுயுத்சுவை தலைநகரில் {ஹஸ்தினாபுரத்தில்} நிறுவிய அவர்கள், குடிமக்களாலும், பெரும் ஞானம் கொண்ட பிராமணர்கள் பலராலும் வழிபடப்பட்டுப் புறப்பட்டுச் சென்றனர்" {என்றார் வைசம்பாயனர்}.(24)
அஸ்வமேதபர்வம் பகுதி – 63ல் உள்ள சுலோகங்கள் : 24
ஆங்கிலத்தில் | In English |