Camp at Himavat! | Aswamedha-Parva-Section-64 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 49)
பதிவின் சுருக்கம் : இமயம் நோக்கிப் புறப்பட்ட பாண்டவர்கள்; இடத்தை அடைந்து முகாமை அமைத்தது; பிராமணர்களின் தொடக்கச் சடங்குகள்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அப்போது அவர்கள் உற்சாகம் நிறைந்த இதயங்களுடனும், இணையான உற்சாகம் நிறைந்த மனிதர்கள் மற்றும் விலங்குகளின் துணையுடனும் {இமயத்தை நோக்கி} புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் தங்கள் சக்கரங்களின் சடசடப்பொலியால் மொத்த பூமியையும் நிறைத்தனர்.(1) துதிபாடிகள், சூதர்கள், மாகதர்கள் மற்றும் வந்திகளால் புகழ்பாடப்படவும், தங்கள் படையின் ஆதரவுடனும் சென்ற அவர்கள் கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட பல ஆதித்தியர்களைப் போலத் தெரிந்தனர்.(2) தலைக்கு மேல் பிடிக்கப்பட்ட வெண்குடையுடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரன், இரவில் நட்சத்திரங்களின் தலைவன் முழுமையாக இருப்பதை {இரவில் முழுநிலவைப்} போன்ற அழகுடன் ஒளிர்ந்தான்.(3)
மனிதர்களில் முதன்மையானவனும், பாண்டு மகன்களில் மூத்தவனுமான அவன் {யுதிஷ்டிரன்}, தன் வழியில் செல்லும்போது மகிழ்ச்சி நிறைந்தவர்களான தன் குடிமக்களின் ஆசிகளையும், வாழ்த்துகளையும் உரிய வடிவில் ஏற்றுக் கொண்டான்.(4) மன்னனைப் பின்தொடர்ந்த படைவீரர்களைப் பொறுத்தவரையில், குழப்பமான அவர்களது முணுமுணுப்புகள் மொத்த ஆகாயத்தையும் நிறைப்பதாகத் தெரிந்தது. அந்தப் படை பல தடாகங்கள், ஆறுகள், காடுகள் மற்றும் இன்பத்தோட்டங்களைக் கடந்து சென்றது. இறுதியாக அவர்கள் அந்த மலையை {இமய மலையை} அடைந்தனர்.(6)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தச் செல்வம் புதைக்கப்பட்ட பகுதியை அடைந்த அரசன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் அனைவருடன் கூடிய துருப்புகளுடன் தன் முகாமை அமைத்தான்.(7) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அக்காரியத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி முற்றிலும் சமமானதாகவும், மங்கலமானதாகவும் இருந்தது. ஓ! குரு குலத்தோனே, அங்கே, அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, தவம், கல்வி மற்றும் தற்கட்டுப்பாட்டுடன் கூடிய பிராமணர்களையும்,(8) வேதங்கள் மற்றும் அதன் கிளைகளை நன்கறிந்தவரான தன் புரோகிதர் ஆக்நிவேஷ்யரையும் {தௌமியரையும்} முன்னிலையில் கொண்டு தன் முகாமை அமைத்தான்[1]. அதன் பிறகு, பாண்டுவின் அரச மகன்களும், (அந்தப் பயணத்தில் உடன் சென்ற) பிற மன்னர்களும், வேள்விச் சடங்குகளில் நன்கு திறம்பெற்றவர்களான பிராமணர்களும், புரோகிதர்களும் முறையாகத் தொடக்கச் சடங்குகளைச் செய்து அந்த இடமெங்கும் பரவியிருந்தார்கள். மன்னனையும், அவனது அமைச்சர்களையும் நடுவில் கொண்டு,(9,10) ஆறு சாலைகள் மற்றும் ஒன்பது பிரிவுகளையும் {கண்டங்களையும்} அமைத்து அங்கே அந்தப் பிராமணர்கள் முகாமை அமைத்தனர்[2]. மன்னன் யுதிஷ்டிரன், தன் படையுடன் கூடிய மதங்கொண்ட யானைகளுக்கென ஒரு தனி முகாமை அமைக்கச் செய்தான்.
[1] "ஆக்நிவேஷ்யர் என்பது தௌமியருக்கான மற்றொரு பெயராகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "இவை வடக்கில் இருந்து தெற்காக ஓடும் மூன்று சாலைகள், கிழக்கிலிருந்து மேற்காக ஓடி, {வடக்கிலிருந்து தெற்காக ஓடும்} முந்தையவற்றைக் குறுக்காக வெட்டும் மூன்று சாலைகள் என மொத்தம் ஆறு சாலைகளாகும். இவை இரண்டு எல்லைக் கோடுகளுடன் கூடிவையும், ஒன்றுக்கொன்று செங்கோணங்களாக அமைபவையுமான ஒன்பது சதுரங்களை உண்டாக்குகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். அந்த ஒன்பது சதுரங்களே மேலே பிரிவுகள் / கண்டங்கள் என்று கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அனைத்தும் நிறைவடைந்தபோது, அவன் {யுதிஷ்டிரன்}, பிராமணர்களிடம், "முதன்மையான பிராமணர்களே, "நடக்க இருக்கும் காரியத்தைக் கருத்தில் கொண்டு செய்யப்படவேண்டியவை என்று நீங்கள் நினைப்பவற்றைச் செய்வீராக. உண்மையில், ஒரு மங்கல நாளையும், நட்சத்திரத்தையும் அதற்காகத் தேர்ந்தெடுப்பீராக. நாம் இங்கே ஆவலில் தவித்துக் காத்திருக்கும்போது, நீண்ட காலம் கழிந்துவிடக்கூடாது. கல்விமானான பிராமணர்களில் முதன்மையானவர்களே, இந்தத் தீர்மானத்தை அமைத்துக் கொண்டு, இதன் பிறகு என்ன செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்யுங்கள்" என்றான்.(11-13)
மன்னனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவர்களும், அங்கிருந்தவர்களில் அறச்சடங்குகள் செய்வதில் திறம்பெற்றவர்களுமான பிராமணர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பி,(14) "இன்றே நட்சத்திரமும், நாளும் மங்கலமானவையாக இருக்கின்றன. எனவே, நாங்கள் கருதும் அந்த உயர்ந்த சடங்குகளை நிறைவேற்ற {இன்றே} முனைவோம். ஓ! மன்னா, இன்று நாங்கள் நீரை மட்டுமே பருகி வாழ்வோம். நீங்களும் இன்று உண்ணாநோன்பைக் கடைப்பிடிப்பீராக" என்றனர்.(15)
அந்த முதன்மையான பிராமணர்களின் சொற்களைக் கேட்ட பாண்டுவின் அரச மகன்கள், உணவனைத்தையும் தவிர்த்து, வேள்வியில் சுடர்விடும் நெருப்பைப் போலக் குசப்புல் படுக்கைகளில் நம்பிக்கையுடன் கிடந்து அவ்விரவைக் கழித்தனர்.(16) கல்விமான்களான (பல்வேறு காரியங்கள் குறித்துப் பேசிய) பிராமணர்களின் உரையாடல்களை அவர்கள் கேட்டுக் கொண்டு இருந்தபோதே இரவு கழிந்தது. மேகமற்ற காலைவேளை உதித்த போது, பிராமணர்களில் முதன்மையான அவர்கள் தர்மனின் அரச மகனிடம் (பின்வருமாறு) பேசினர்" {என்றார் வைசம்பாயனர்}.(17)
அஸ்வமேதபர்வம் பகுதி – 64ல் உள்ள சுலோகங்கள் : 17
ஆங்கிலத்தில் | In English |