Treasure excavated! | Aswamedha-Parva-Section-65 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 50)
பதிவின் சுருக்கம் : பூதகணங்களுடன் கூடிய சிவனைக் காணிக்கைகளால் நிறைவடையச் செய்த யுதிஷ்டிரன்;.இமயத்தில் இருந்து செல்வத்தை எடுத்துக் கொண்டு ஹஸ்தினாபுரம் திரும்பியது...
பிராமணர்கள், "உயர் ஆன்மாவான முக்கண் மஹாதேவனுக்குக் காணிக்கைகள் அளிக்கப்படட்டும். ஓ! மன்னா, அந்தக் காணிக்கைகளை முறையாக அர்ப்பணித்த பின்னர் நாம் நமது நோக்கத்தை ஈட்ட முனைவோம்" என்றனர்.(1)
அந்தப் பிராமணர்களின் சொற்களைக் கேட்ட யுதிஷ்டிரன், மலைச்சாரலில் கிடக்க விரும்பும் அந்தத் தேவனுக்கு {சிவனுக்கு} காணிக்கைகளை முறையாக அளிக்கச் செய்தான்.(2) விதிப்படி (ஆகுதியான) புனித நெய்யால் (வேள்வி) நெருப்பை நிறைவடையச் செய்த புரோகிதர் (தௌமியர்) மந்திரங்களின் உதவியால் சருவைச் சமைத்து தேவையான சடங்குகளைச் செய்தார்.(3) ஓ! மன்னா, அவர் மலர்கள் பலவற்றை எடுத்து மந்திரங்களால் அவற்றைப் புனிதப்படுத்தினார். மோதகங்கங்கள், பாயஸம் மற்றும் இறைச்சியை அவர் அந்தத் தேவனுக்குக் காணிக்கையளித்தார்.(4) வேதங்களில் நன்கு திறம்பெற்ற தௌமியர், பல்வேறு வகை மலர்கள், மிக மேன்மையான வகைச் சார்ந்த பொரிகள் ஆகியவற்றைக் கொண்டு எஞ்சிய சடங்குகளை {ஸ்விஷ்டகிருத் என்னும் ஹோமத்தை முழுதும் விதிப்படி} செய்தார்.(5)
அடுத்ததாக அவர் மஹாதேவனின் அணிவகுப்பில் அமையும் கிங்கரர்களுக்கு விதிப்படியான காணிக்கைகளை அளித்தார். அடுத்ததாக யக்ஷர்களின் தலைவனான குபேரனுக்கும், மாணிபத்ரனுக்கும் காணிக்கைகள் வழங்கப்பட்டன.(6) அந்தப் புரோஹிதர் {தௌமியர்}, உணவு, கிருஸரம், இறைச்சி மற்றும் எள்ளுடன் கலந்த நிவாபங்கள் {தர்ப்பண நீர்} ஆகியவற்றைப் பல குடங்களில் நிறைத்து, வேறு யக்ஷர்களுக்கும், மஹாதேவனின் தோழர்களான பூதங்களில் முதன்மையாவர்களுக்கும் {பூதபதிகளுக்கும்} முறையான வழிபாட்டைக் காணிக்கையாக்கினார். மன்னன் {யுதிஷ்டிரன்} பிராமணர்களுக்கு ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடையளித்தான்.(7,8)
அதன் பிறகு அவன் {யுதிஷ்டிரன்}, (மஹாதேவனுடன் வாழும்) இரவுலாவிகளுக்கு {கணங்களுக்கு} உரிய சடங்குகளின்படி காணிக்கைகளை அளிக்கச் செய்தான். தூப மணத்தால் பரவியிருந்ததும், மலர்களின் நறுமணத்தால் நிறைந்திருந்ததும்,(9) தேவர்களின் தேவனுக்குப் புனிதமானதுமான அந்தப் பகுதி இனிமை நிறைந்ததாக ஆனது. ருத்திர வழிபாடு மற்றும் கணங்கள் அனைத்திற்குமான வழிபாடுகளைச் செய்த பிறகு,(10) வியாசரை முன்னிலையில் நிறுத்திய மன்னன் {யுதிஷ்டிரன்}, புதையல் புதைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றான். பல்வேறு வகை மலர்கள், பிண்டங்கள் மற்றும் கிருஸரம்[1] ஆகியவற்றைக் கொண்ட மதிப்புடனும் அவனை வணங்கி, மீண்டும் கருவூலங்களின் தலைவனை முறையாக வழிபட்டு, சங்கம் மற்றும் நிதி என்ற முதன்மையான ரத்தினங்களையும், ரத்தினங்களின் தலைவர்களான அந்த யக்ஷர்களையும் வழிபட்டு[2],(11,12) பிராமணர்களில் முதன்மையானோர் பலரை வழிபட்டு, அவர்களை ஆசி கூற {ஸ்வஸ்திவாசனம் செய்யச்} செய்த பெரும் பலம் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பிராமணர்களின் சக்தி மற்றும் மங்கல ஆசிகளின் மூலம் வலுவடைந்து,(13) அந்த இடத்தை அகழ {தோண்டச்} செய்தான்.
[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "கிருஸரம் என்பது கோதுமை மாவு, அரிசி மற்றும் எள் ஆகியவற்றால் செய்யப்படுவதாகும்" என்றிருக்கிறது.[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "நிதி என்பது குபேரனுக்குச் சொந்தமான கருவூலம். இவ்வாறு ஒன்பது நிதிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றே இந்தச் சங்கம். ஒவ்வொரு நிதிக்கும் ஒரு காவலன் {யக்ஷத்தலைவன்} உண்டு" என்றிருக்கிறது.
பல்வேறு இனிய வடிவங்களிலான எண்ணற்ற பாத்திரங்கள்,(14) பிருங்காரங்கள், கடாஹங்கள், கலசங்கள், வர்தமானகங்கள், அழகிய வடிவிலான எண்ணற்ற பாஜனங்கள் {அன்னப்பாத்திரங்கள், சிறிய குடங்கள், கரண்டிகள், குடங்கள், அண்டாக்கள், பானைகள்} ஆகியவை நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் அகழ்ந்து {தோண்டி} எடுக்கப்பட்டன. இவ்வாறு அகழப்பட்ட செல்வங்கள், பாதுகாப்புக்காகப் பெரிய கரபூதங்களில் {மடக்குகளில்} வைக்கப்பட்டன[3].(15,16) அந்தச் செல்வத்தின் ஒரு பகுதி, தராசின் இருமுனைகளைப் போன்ற மரக்கூடைகளுடன் கூடிய தடித்த மர நிலுவைகளில் மனிதர்களின் தோள்களில் சுமக்கச் செய்யப்பட்டன. உண்மையில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, பாண்டு மகனின் அந்தச் செல்வத்தைச் சுமந்து செல்வதற்கு வேறு வழிமுறைகளிலான செல்கலன்களும் {விலங்குகள் பூட்டப்பட்ட வண்டிகளும்} இருந்தன[4].(17) ஓ! ஏகாதிபதி, அங்கே அறுபதாயிரம் ஒட்டகங்களும், ஒருலட்சத்து இருபதாயிரம் குதிரைகளும், ஒரு லட்சம் யானைகளும் இருந்தன.(18) அதே அளவு {ஒரு லட்சம்} தேர்களும், அதே அளவு வண்டிகளும், அதே அளவு பெண் யானைகளும் இருந்தன. கோவேறு கழுதைகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை சொல்ல {எண்ண} முடியாததாக இருந்தது.(19)
[3] "கரபூதம் என்பது சங்கிலி அல்லது கயிறுகளால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இரு மரவறைகளைக் கொண்டதாகும். அஃது ஒட்டகங்கள் மற்றும் இளங்காளைகள் சுமப்பதற்கு ஏற்றது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அப்பொழுது, தர்மராஜரான யுதிஷ்டிரர் அதிலிருந்து பலவகையானவைகளும், அழகாக இருப்பவைகளுமான அன்னமெடுக்கக்கூடிய பெரிய பாத்திரங்களையும், சின்னக்குடங்களையும், கரண்டிகளையும், அண்டாக்களையும், குடங்களையும், மடக்குகளையும் அநேக விசித்ரமான பாத்திரங்களையும் ஆயிரக்கணக்காக எடுத்தார். மன்னரே, மனிதரைக் காப்பவரே, அவற்றை ரக்ஷிப்பதற்காகப் பெரிதும் ஸம்புடம் போன்ற வடிவமுள்ளதும், மூடிபோட்டதும் அரைத்துலாம் நிறையுள்ளதுமான ஒரு பாத்திரமும் இருந்தது" என்றிருக்கிறது.[4] "17ம் ஸ்லோகத்தின் முதல் வரியைப் புரிந்து கொள்ள மிகக் கடினமாக உள்ளது. சொல்லுக்குச் சொல் பொருள் கொண்டால், ஒவ்வொரு பாத்திரமும் மற்றொன்றோடு இணைக்கப்பட்டு, தராசு போலத் தொங்கும் (மொத்த) எடையில் பாதியாக இருந்தது" என்ற பொருள் வரும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அரைத்துலாம் நிறையுள்ள ஒரு பாத்திரமும் இருந்தது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மன்னன் ஒரு கம்பத்தின் இரண்டு முனையிலும் இந்தப் பாத்திரங்களில் இருந்து மூன்று லட்சம் பாத்திரங்களை வைத்தான்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது. கங்குலியின் உரையே பொருள் கொள்ளக்கூடியதாகத் தெரிகிறது.
யுதிஷ்டிரனால் அகழ்ந்தெடுக்கப்பட்ட அந்தச் செல்வம் அவ்வளவு அதிகமானதாக இருந்தது. ஒவ்வொரு ஒட்டகத்தின் முதுகிலும் பதினாறாயிரம்; ஒவ்வொரு தேரிலும் எட்டாயிரம்; ஒவ்வொரு யானையிலும் இருபத்து நான்காயிரம்; (அதேவேளையில், குதிரைகள், கழுதைகளின் முதுகுகளிலும், மனிதர்களின் முதுகுகள், தோள்கள் மற்றும் தலைகளிலும் மேற்கண்ட எண்ணிக்கையின் விகிதாச்சார அளவில்) {பொன்} நாணயங்கள் வைக்கப்பட்டன[5].(20) இந்த வாகனங்களை அந்தச் செல்வத்தால் நிறைத்த பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மீண்டும் பெருந்தேவனான சிவனை வழிபட்ட பிறகு, தீவில் பிறந்த முனிவரின் {வியாசரின்} அனுமதியுடனும், தன் புரோகிதரான தௌமியரை முன்னணியில் விட்டும், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டுச் சென்றான். மனிதர்களில் முதன்மையானவனும், பாண்டுவின் அரச மகனுமான அவன், ஒரு கோயுதத்தால் (4 மைல்கள் {6.5 கி.மீ.}) அளக்கப்படும் குறுகிய பயணங்களையே ஒவ்வொரு நாளும் மேற்கொண்டான்[6].(21,22) ஓ! மன்னா, சுமந்த சுமையால் பீடிக்கப்பட்ட அந்தப் பெரும்படை, குரு குலத்தைத் தழைக்கச் செய்பவர்கள் அனைவரின் இதயங்களையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்யும் வகையில், அந்தச் செல்வத்தைச் சுமந்து கொண்டு, தலைநகரம் {ஹஸ்தினாபுரம்} நோக்கித் திரும்பியது" என்றார் {வைசம்பாயனர்}.(23)
[5] கும்பகோணம் பதிப்பில், "யுதிஷ்டிரர் எடுத்த இந்தத் தனம் பதினாறு எட்டு இருபத்துநான்கு ஆயிரம் பாரமாக இருந்தன" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "ஓர் ஒட்டகத்திற்கு எட்டாயிரம் பொன்னும், ஒரு வண்டிக்குப் பதினாறாயிரம் பொன்னும், ஒரு யானைக்கு இருபத்துநாலாயிரம் பொன்னும் பார அளவென்றும், இப்படியே குதிரை, கழுதை மனிதர்களுக்கு ஏற்றபடி பாரம் என்றும் பழைய உரை கூறுகிறது" என்றிருக்கிறது.[6] கும்பகோணம் பதிப்பில், "புருஷஸ்ரேஷ்டரான பாண்டவர், அந்தத் திரவியத்தை இவற்றின் மீது எடுத்துக் கொண்டு மறுபடியும் மஹாதேவரைப் பூஜித்து வியாஸரால் அனுமதி கொடுக்கப்பட்டுப் புரோஹிதரை முன்னிட்டுக் கொண்டு ஹஸ்தினாபுரத்தைக் குறித்து இரண்டு குரோச தூரத்திற்கொருமுறை தங்கியிருந்து சென்றார்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "வேறுபாடம், ஒரு நாளுக்கு இரண்டு குரோசம் வீதம் சென்றாரென்பது" என்றிருக்கிறது. ஒரு குரோசம் என்பது 3 கி.மீ. அல்லது 1.91 மைல்களாகும். பிபேக்திப்ராய் பதிப்பில், "அந்த மனிதர்களில் காலை ஒவ்வொரு நாளும் ஒரு கோவ்யுதி அளவு தொலைவுக்கு அணிவகுத்துச் சென்று அதன்படியே முகாமை அமைத்துக் கொண்டான்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "கோவ்யுதி என்பது தொலைவின் அளவீடாகும். இஃது ஒரு பசுவின் ஒலி கேட்கும் தொலைவாகும். எனவே, ஒரு கோவ்யுதி என்பது குத்துமதிப்பாக நான்கு மைல்களாகும்" என்றிருக்கிறது. ஒவ்வொரு பதிப்பிலும் அளவின் பெயர் மாறுபட்டாலும், தொலைவின் அளவு {4 மைல்கள் / 6.5 கி.மீ.} ஒன்றாகவே இருக்கிறது.
அஸ்வமேதபர்வம் பகுதி – 65ல் உள்ள சுலோகங்கள் : 23
ஆங்கிலத்தில் | In English |