Kunti's prayer to Krishna! | Aswamedha-Parva-Section-66 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 51)
பதிவின் சுருக்கம் : சுபத்திரை, பலராமன் முதலியோருடன் ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பி வந்த கிருஷ்ணன்; இறந்த குழந்தையை உத்தரை ஈன்றது; குழந்தையை உயிர்ப்பிக்குமாறு கிருஷ்ணனை வேண்டிய குந்தி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அதேவேளையில், விருஷ்ணிகளுடன் கூடிய பெருஞ்சக்தி கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} வந்தான்.(1) தன் சொந்த நகரமான துவாரகை திரும்புவதற்காக அந்த நகரத்தைவிட்டுச் சென்ற போது, மீண்டும் திரும்பி வருமாறு தர்மனின் மகனால் {யுதிஷ்டிரனால்} அவன் வேண்டப்பட்டான். எனவே, குதிரை வேள்விக்கெனக் குறிக்கப்பட்ட வேளை வருவதை அறிந்த அந்த மனிதர்களில் முதன்மையானவன் (குரு தலைநகரத்திற்குத்) திரும்பி வந்தான்.(2) ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, யுயுதானன் {சாத்யகி}, சாருதேஷ்ணன், சாம்பன், கதன், கிருதவர்மன், சாரணன், நிசடன், உன்முகன் ஆகியோருடனும், சுபத்திரையுடனும், அணிவகுப்பின் தலைமையில் பலதேவனுடனும் வாசுதேவன் {கிருஷ்ணன்} வந்தான்.(4)
உண்மையில் திரௌபதி, உத்தரை, பிருதை {குந்தி} மற்றும் தங்கள் பாதுகாவலர்களை இழந்த புகழ்பெற்ற க்ஷத்திரியப் பெண்மணிகளுக்கு ஆறுதலளிப்பதற்காக அந்த வீரன் {கிருஷ்ணன்} வந்தான்.(5) அந்த வீரர்கள் வருவதைக் கண்ட மன்னன் திருதராஷ்டிரனும், உயர் ஆன்ம விதுரனும் அவர்களை உரிய கௌரவத்துடன் வரவேற்றனர்.(6) மனிதர்களில் முதன்மையானவனும், பெருஞ்சக்தி கொண்டவனுமான கிருஷ்ணன், விதுரன் மற்றும் யுயுத்சுவால் நன்கு துதிக்கப்பட்டு, குருவின் தலைநகரில் வசித்து வந்தான்.(7) ஓ! ஜனமேஜயா, ஓ! மன்னா, அவ்வாறு விருஷ்ணி வீரர்கள் குருவின் நகரில் வசித்துக் கொண்டிருந்தபோதுதான் உன் தந்தை {பரிக்ஷித்} பிறந்தான்.(8)
ஓ! ஏகாதிபதி (அஸ்வத்தாமனின்) பிரம்ம ஆயுதத்தால் பீடிக்கப்பட்ட அரசன் பரிக்ஷித், கருவறையை விட்டு வெளியே வந்தபோது, உயிரற்றவனாக இருந்த காரணத்தால் அசைவற்றுக் கிடந்தான். தனது பிறப்பால் குடிமக்கள் அனைவருக்கும் அவன் மகிழ்ச்சியூட்டியிருந்தாலும் மிகவிரைவில் அவர்களைத் துயரில் ஆழச் செய்தான்.(9) இளவரசன் பிறந்ததைக் கேட்ட குடிமக்கள் சிங்க முழக்கம் செய்தனர். கிட்டத்தட்ட திசைப்புள்ளிகள் ஒவ்வொன்றின் விளிம்புகளையும் அவ்வொலி அடைந்தது. எனினும் விரைவில் (இளவரசன் உயிரற்றவனாக இருப்பதை அறிந்தபோது) அவ்வொலி அடங்கியது.(10) கணிசமான அளவுக்கு உணர்வுகளும், மனமும் பாதிக்கப்பட்ட கிருஷ்ணன், யுயுதானனுடன் {சாத்யகியுடன்} கூடியவனாக, அரண்மனையின் அந்தப்புரத்திற்குள் விரைவாக நுழைந்தான்.(11) தன் அத்தை (குந்தி) உரக்க அழுதுகொண்ட மீண்டும் மீண்டும் தன்னை {கிருஷ்ணா ஓடிவா என்று} அழைத்துக் கொண்டே வருவதை அவன் கண்டான்.(12) அவளுக்குப் பின்னால், திரௌபதி, புகழ்பெற்ற சுபத்திரை, பாண்டவர்களுடைய உறவினர்களின் மனைவிமார் ஆகியோர் பரிதாபகரமாக அழுது கொண்டிருந்தனர்.(13)
ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, போஜ குல மகளான குந்தி கிருஷ்ணனைச் சந்தித்து, கண்ணீரால் தடைபட்ட குரலுடன் அவனிடம் இந்தச் சொற்களில்,(14) "ஓ! வாசுதேவா {கிருஷ்ணா}, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா, உன்னை {கருவறையில்} சுமந்ததன் மூலம் தேவகி சிறந்த தாயாகக் கருதப்படுகிறாள். எங்கள் புகலிடமும், எங்கள் மகிமையும் நீயே. (பாண்டுவின்) இந்தக் குலம் தன் பாதுகாவலனாகக் கொண்ட உன்னையே சார்ந்திருக்கிறது.(15) ஓ! யாதவ வீரா, ஓ! பலமிக்கவனே, உன் தங்கை {சுபத்திரை} மகனுடைய இந்தக் குழந்தை கருவறையில் இருந்து அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டு வெளியே வந்திருக்கிறான்.(16) ஓ! யாதவர்களைத் திளைக்கச் செய்பவனே, ஓ! பலமிக்கவனே, அஸ்வத்தாமன், வலிமைமிக்க சக்தி கொண்ட பிரம்மாயுதத்தைப் புல்லில் ஈர்த்தபோது, நீ ஏற்ற உறுதி மொழி இதுவே. ஓ! கேசவா, நீ சொன்ன சொற்கள் இவையே. இந்தக் குழந்தை கருவறையில் இருந்து இறந்து பிறந்தால், நான் அவனை உயிர்ப்பிப்பேன் என்று நீ சொன்னாய்.(17)
ஓ! மகனே, அந்தக் குழந்தை இறந்து பிறந்திருக்கிறான். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அவனைப் பார். ஓ! மாதவா, உத்தரை, சுபத்திரை, திரௌபதி ஆகியோரையும், என்னையும், தர்மனின் மகனையும் (யுதிஷ்டிரனையும்), பீமன், பல்குனன் {அர்ஜுனன்}, நகுலன், தடுக்கப்பட முடியாதவனான சகாதேவன் ஆகியோரையும் நீயே காக்க வேண்டும்.(18,19) பாண்டவர்களின் உயிர்மூசும் மற்றும் என் உயிமூச்சும் இந்தக் குழந்தையிலேயே பிணைந்திருக்கின்றன. ஓ! தாசார்ஹ குலத்தோனே, நீ அருளப்பட்டிருப்பாயாக, {என் கணவரான} பாண்டு, என் மாமனார் {விசித்திரவீரியன்} ஆகியோரின் ஈமப்பிண்டமும்,(20) உனக்கு மிகப் பிடித்தவனான உன் அன்புக்குரிய மருமகன் அபிமன்யுவின் ஈமப்பிண்டமும் இவனையே சார்ந்திருக்கிறது. இவர்கள் அனைவருக்கும் நன்மையானதை நீ இன்று செய்வாயாக. ஓ! ஜனார்த்தனா, நான் உன்னை உள்ளார்வத்துடன் தூண்டுகிறேன்.(21)
ஓ! பகைவரைக் கொல்பவனே, உத்தரை தன்னிடம் அபிமன்யு சொன்ன சொற்களையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஓ! கிருஷ்ணா, அந்தச் சொற்கள் அவளுக்கு நிச்சயம் மிக இனிமையானவை.(22) ஓ! தாசார்ஹ குலத்தோனே {கிருஷ்ணா}, அர்ஜுனனின் மகன் {அபிமன்யு}, விராடனின் மகளிடம் {உத்தரையிடம்}, "ஓ! அருளப்பட்ட பெண்ணே {கல்யாணி}, உன் மகன், என் தாய்மாமன்களிடம் செல்லப் போகிறான்.(23) விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் வசிப்பிடத்திற்குச் செல்லும் அவன், அங்கே ஆயுத அறிவியலையும் {தனுர் வேதத்தையும்}, உண்மையில் அற்புதம் நிறைந்த ஆயுதங்களையும் {விசித்திரமான அஸ்திரங்களையும்}, அரசியல் மற்றும் அறநெறிகள் குறித்த மொத்த அறிவியலையும் {நீதி சாஸ்திரங்களையும்} அடைவான்" என்று சொல்லியிருக்கிறான்.(24)
ஓ! மகனே, பகைவீரர்களைக் கொல்பவனும், தடுக்கப்பட முடியாத வீரனுமான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, உத்தரையிடம் கொண்ட அன்பினால் இந்தச் சொற்களை அவளிடம் சொல்லியிருக்கிறான்.(25) ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, அபிமன்யுவின் அந்தச் சொற்கள் உண்மையாக நாங்கள் உன்னை வேண்டி வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். காலத்தைக் கருத்தில் கொண்டு உயர்ந்த நன்மையை நீ செய்வாயாக" என்றாள் {குந்தி}.(26)
அகன்ற கண்களைக் கொண்ட குந்தி, விருஷ்ணி குல வீரனிடம் {கிருஷ்ணனிடம்} இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, மற்ற பெண்களுடன் சேர்ந்து தன் இரு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தியவாறு பூமியில் விழுந்தாள்.(27)
கண்ணீரால் கலங்கிய கண்களுடன் கூடிய அவர்கள் {அந்தப் பெண்கள்} அனைவரும், "ஐயோ, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} மருமகன் இறந்தே பிறந்தான்" என்று மீண்டும் மீண்டும் சொன்னார்கள்.(28)
குந்தி இவ்வாறு சொன்னதும், அவளைத் தன் கரங்களில் பற்றி, பூமியில் இருந்து மெல்ல உயர்த்தி, பின்வருமாறு அவளைத் தேற்றினான்" {என்றார் வைசம்பாயனர்}.(29)
அஸ்வமேதபர்வம் பகுதி – 66ல் உள்ள சுலோகங்கள் : 29
ஆங்கிலத்தில் | In English |