Subhadra's prayer to Krishna! | Aswamedha-Parva-Section-67 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 52)
பதிவின் சுருக்கம் : குழந்தையை உயிர்ப்பிக்குமாறு கிருஷ்ணனிடம் வேண்டிய சுபத்திரை...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குந்தி அமர்ந்த பிறகு, தன் தமையனைக் {கிருஷ்ணனைக்} கண்ட சுபத்திரை பெருந்துயரத்தால் பீடிக்கப்பட்டு உரக்க அழத் தொடங்கி,(1) "ஓ! தாமரைக் கண்ணா, பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான அர்ஜுனரின் பேரனைப் பார். ஐயோ, இளைத்தவனும், இறந்தவனுமான ஒரு குழந்தையால் குரு குலம் நசிந்திருக்கிறது.(2) பீமசேனருக்கு அழிவை ஏற்படுத்த துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} உயர்த்தப்பட்ட (பெருந்திறன் கொண்ட ஆயுதத்தால் ஈர்க்கப்பட்டிருந்த) புல் {இஷீகாஸ்திரம்}, உத்தரையின் மீதும், விஜயர் {அர்ஜுனர்} மீதும், என் மீதும் விழுந்தது[1].(3) ஐயோ, ஓ! கேசவா, அந்தப் புல் என் இதயத்தைத் துளைத்த பிறகும், ஓ! தடுக்கப்பட முடியாத வீரா, என் மகனுடன் சேர்த்து இந்தப் பிள்ளையையும் நான் காணாமல் இருப்பதால், அஃது (இன்னும் பிடுங்கப்படாமல்) என்னிலேயே இருக்கிறது.(4)
[1] "இங்கே விஜயன் என்பவன் அர்ஜுனன் ஆவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நீதிமானும், அற ஆன்மாவுமான மன்னர் யுதிஷ்டிரர் என்ன சொல்வார்? பீமசேனர், அர்ஜுனர் மற்றும் மத்ராவதியின் இரு மகன்களும் என்ன சொல்வார்கள்?(5) ஓ! விருஷ்ணி குலத்தோனே, அபிமன்யுவின் மகன் பிறந்து இறந்தான் என்பதைப் பாண்டவர்கள் கேட்டால், அஸ்வத்தாமனால் வஞ்சிக்கப்பட்டவர்களாகத் தங்களைக் கருதுவார்கள்.(6) ஓ! கிருஷ்ணா, அபிமன்யு நிச்சயம் பாண்டவச் சகோதர்கள் அனைவருக்கும் பிடித்தமானவன். துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} ஆயுதத்தால் வெல்லப்பட்டோம் என்ற செய்தியை அறிந்தால் அந்த வீரர்கள் என்ன சொல்வார்கள்?(7) ஓ! ஜனார்த்தனா, அபிமன்யுவின் மகன் பிறந்து, இறந்தான் என்பதைவிடப் பெரிய துயரம் வேறென்ன இருக்க முடியும்?(8)
ஓ! கிருஷ்ணா, உன்னை நிறைவடையச் செய்ய நான் இன்று உனக்குத் தலை வணங்குகிறேன். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இங்கே நிற்கும் பிருதை {குந்தி}, திரௌபதி ஆகிய இருவரையும் பார்.(9) ஓ மாதவா, ஓ பகைவரைக் கலங்கடிப்பவனே, பாண்டவர்களுடைய பெண்களின் கருவறைகளில் உள்ள கருக்களையும் அழிக்கத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} முயன்றபோது, நீ கோபத்துடன் அந்தத் துரோணர் மகனிடம் (இந்தச் சொற்களில்),(10) "ஓ! பிராமணர்களில் இழிந்தவரே, ஓ! மனிதர்களில் தீயவரே, உமது விருப்பத்தை நான் நிறைவேறாமல் செய்வேன். நான் கிரீடியின் {அர்ஜுனனின்} மகனுடைய மகனைக் காப்பேன்" என்று சொன்னாய்[2].(11)
[2] கிருஷ்ணன் அஸ்வத்தாமனைச் சபித்தது சௌப்திக பர்வம் பகுதி – 16ல் வருகிறது.
ஓ! தடுக்கப்பட முடியாத வீரா, உன்னுடைய இந்தச் சொற்களைக் கேட்டவளும், உன் பலத்தை நன்கறிந்தவளுமான நான் உன்னை நிறைவடையச் செய்ய முனைகிறேன். அபிமன்யுவின் மகன் உயிர் மீளட்டும்.(12) ஏற்கனவே உறுதிமொழி ஏற்ற நீ மங்கலமான இந்நோன்பை நிறைவேற்றாமல் போனால், ஓ! விருஷ்ணி குலத் தலைவா, நிச்சயம் என் உயிரை நான் விடுவேன் என்பதை அறிவாயாக.(13) ஓ! வீரா, ஓ! தடுக்கப்பட முடியாதவனே, நீ உயிரோடு அருகில் இருக்கும்போது, அபிமன்யுவின் மகனான இவன் {பரிக்ஷித்} உயிர் மீளாமல் போனால், உன்னால் எனக்கு வேறு என்ன பயன் இருக்க முடியும்?(14) எனவே, ஓ! தடுக்கப்பட முடியாதவனே, (களத்தில் உள்ள) உயிரற்ற பயிருக்கு உயிரூட்டும் மழை நிறைந்த மேகத்தைப் போலவே அபிமன்யுவைப் போன்றே கண்களைக் கொண்டவனும், அவனது மகனுமான இவனை நீ மீட்பாயாக.(15) ஓ! கேசவா, அற ஆன்மா கொண்ட நீ, வாய்மை நிறைந்தவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமாவாய். ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, உன் சொற்களை உண்மையாக்குவதே உனக்குத் தகும்.(16)
மூவுலகங்கள் (மூவுலகங்களில் இருப்போர்) இறந்தாலும், நீ விரும்பினால் உன்னால் உயிர்மீட்க முடியும். எனில், பிறந்தும் இறந்த உன் தங்கை மகனின் அன்புக்குரிய இந்தக் குழந்தையைக் குறித்துச் சொல்லவும் வேண்டுமா?(17) ஓ! கிருஷ்ணா, நான் உன் பலத்தை அறிந்தே உன்னை வேண்டுகிறேன். பாண்டவர்களுக்கு நீ இந்தப் பெருஞ்சலுகையைச் செய்து காட்டுவாயாக.(18) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, தன் மகனை இழந்த ஒரு தாய் என்றோ, உன் பாதுகாப்பில் தன்னை நிறுத்திக் கொண்டவள் என்றோ நினைத்து உத்தரைக்கோ, உன் தங்கையான எனக்கோ இரக்கம் காட்டுவதே உனக்குத் தகும்" என்றாள் {சுபத்திரை}".(17)
அஸ்வமேதபர்வம் பகுதி – 67ல் உள்ள சுலோகங்கள் : 17
ஆங்கிலத்தில் | In English |