Uttara's prayer to Krishna! | Aswamedha-Parva-Section-68 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 53)
பதிவின் சுருக்கம் : குழந்தையை உயிர்ப்பிக்குமாறு கிருஷ்ணனிடம் வேண்டிய உத்தரை...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா, (தங்கையாலும், பிறராலும்) இவ்வாறு சொல்லப்பட்டதும், கேசியைக் கொன்றவனான அவன் {கிருஷ்ணன்}, பெருந்துயரில் பீடிக்கப்பட்டவனாக, "அப்படியே ஆகட்டும்" என்றான். போதுமான உரப்புடன் சொல்லப்பட்ட இந்தச் சொற்கள், அரண்மனையின் அந்தப்புரத்தில் இருந்தோர் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தது.(1) பலமிக்கவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான கிருஷ்ணன், வியர்வையால் பீடிக்கப்பட்டவன் மீது குளிர்ந்த நீரை ஊற்றுவதைப் போல இந்தச் சொற்களைச் சொன்னதன் மூலம், அங்கே இருந்தோர் அனைவரையும் மகிழ்ச்சியடைச் செய்தான்.(2) பிறகு அவன் {கிருஷ்ணன்}, உன் தந்தை {பரிக்ஷித்} பிறந்த அந்தப் பேற்றறைக்குள் {பிரசவ அறைக்குள்} விரைவாக நுழைந்தான். ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, வெண்மலர் மாலைகள் பலவற்றால்;(3) அனைத்துப் பக்கங்களிலும் முழுவதும் நிறைந்த பல நீர்க்குடங்கள்; ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நெய்யில் ஊறிய திந்துக மரக்கரி மற்றும் கடுகு;(4) அனைத்துப் பக்கங்களிலும் உரிய முறையில் அடுக்கப்பட்ட ஒளிரும் ஆயுதங்கள் மற்றும் பல நெருப்புகள் ஆகியவற்றால் அது {அந்தப் பிரசவ அறை} புனிதப்பட்டிருந்தது. (உன் பாட்டிக்கு {உத்தரைக்குப்} பணிவிடை செய்வதற்காக அழைக்கப்பட்டிருந்த இனிய மூதன்னைகள் பலர் அங்கே இருந்தனர்.(5)
ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவனே, நன்கு திறம்பெற்ற புத்திசாலி மருத்துவர்களால் அது சூழப்பட்டிருந்தது. பெருஞ்சக்தியுடன் கூடிய அவன், ராட்சசர்களை அறிந்த மனிதர்களால் அவர்களுக்கு அழிவை ஏற்படுத்தக் கூடிய பொருட்கள் அனைத்தும் அங்கே வைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். உன் தந்தை பிறந்த பேற்றறை இவ்வாறு ஆயத்தமாக இருப்பதைக் கண்ட ரிஷிகேசன், மிகவும் மகிழ்ச்சியடைந்து, "நன்று, நன்று" என்று சொன்னான்.(6,7)
விருஷ்ணிகுலத்தோன் இவ்வாறு சொல்லி, மகிழ்ச்சிநிறைந்த தன் முகத்தைக் காட்டிய போது, அங்கே பெரும் வேகத்துடன் வந்த திரௌபதி, விராடன் மகளிடம் {உத்தரையிடம்},(8) "ஓ! அருளப்பட்ட பெண்ணே, உன் கணவனின் தாய்மாமனும், சிந்தனைக்கு எட்டாத ஆன்மா கொண்ட புராதன முனிவனும், வெல்லப்பட முடியாதவனுமான மதுசூதனன் {கிருஷ்ணன்} வந்திருக்கிறான்" என்றாள்.(9)
தன் கண்ணீரை அடக்கிக் கொண்ட விராடன் மகள் {உத்தரை}, துயரால் அடைபட்ட குரலில் இந்தச் சொற்களைச் சொன்னாள். அந்த இளவரசி, முறையாகத் தன்னை மறைத்துக் கொண்டு, கிருஷ்ணனுக்காக மதிப்புடன் காத்திருக்கும் தேவர்களைப் போலவே காத்திருந்தாள்.(10) துயரில் கலங்கிய இதயத்துடன் இருந்த ஆதரவற்றவளான அந்தப் பெண், கோவிந்தன் வருவதைக் கொண்டு இவ்வாறு ஒப்பாரி வைத்தாள்.(11) அவள், "ஓ! தாமரைக் கண்ணரே, பிள்ளையை இழந்த எங்கள் இருவரையும் பாரும். ஓ! ஜனார்த்தனரே, {என் கணவர்} அபிமன்யுவும், நானும் ஒன்றாகக் கொல்லப்பட்டோம்.(12) ஓ! விருஷ்ணிகுலத்தவரே, ஓ! மதுசூதனரே, ஓ! வீரரே, உமக்குத் தலைவணங்கி உம்மை நிறைவடையச் செய்ய முனைகிறேன். துரோணர் மகனின் ஆயுதத்தால் எரிக்கப்பட்ட என்னுடைய இந்தக் குழந்தையை மீட்பீராக.(13)
ஓ! தாமரைக் கண்ணரே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரோ, பீமசேனரோ, நீரோ அந்தச் சந்தர்ப்பத்தில்,(14) "(அஸ்வத்தாமனால் பிரம்ம ஆயுதமாக ஈர்க்கப்பட்ட) இந்தப் புல், தன்னினைவற்ற தாயை அழிக்கட்டும்" என்று சொல்லியிருந்தால், ஓ! பலமிக்கவரே, நான் அழிந்திருப்பேன், இந்த (துயர நிகழ்வும்) நடந்திருக்காது.(15)
ஐயோ, துரோணரின் மகன், தன் பிரம்மாயுதத்தால், கருவறையில் உள்ள குழந்தையை அழிக்கும் இந்தக் கொடுஞ்செயலைச் செய்ததன் மூலம் அறுவடை செய்த நன்மையென்ன?(16) ஓ! பகைவரைக் கொல்பவரே, அதே தாயான நான் இப்போது தலைவணங்குவதன் மூலம் உம்மை நிறைவடையச் செய்ய முனைகிறேன். ஓ! கோவிந்தரே, இந்தக் குழந்தையை மீட்க முடியாமல் போனால் நிச்சயம் நான் என் உயிர்மூச்சைக் கைவிடுவேன்.(17) ஓ! அறம் சார்ந்தவரே, பல எதிர்பார்ப்புகளை நான் அவனில் வைத்திருந்தேன். ஐயோ, ஓ! கேசவரே, துரோணர் மகனால் அவை கெடுக்கப்பட்ட போது, எனக்கு உயிரின் சுமையைச் சுமக்கும் தேவையென்ன இருக்கிறது?(18)
ஓ! கிருஷ்ணரே, ஓ! ஜனார்த்தனரே, மடியில் குழந்தையுடன் நான் உம்மை மதிப்புடன் வணங்குவேன் என்ற நம்பிக்கையை நான் வளர்த்திருந்தேன். ஐயோ, ஓ! கேசவரே, அந்த நம்பிக்கை அழிந்தது.(19) ஓ! அனைத்திலும் முதன்மையானவரே, ஓய்வற்ற கண்களைக் கொண்ட அபிமன்யுவின் வாரிசான இவன் இறந்ததும், என் நெஞ்சில் இருந்த நம்பிக்கைகள் அனைத்தும் அழிந்தன.(20) ஓ! மதுசூதனரே, ஓய்வற்ற கண்களைக் கொண்ட அபிமன்யும் உமது பெரும் அன்புக்குரியவராக இருந்தார். அவருடைய {அபிமன்யுவினுடைய} மகனான இவன் பிரம்மாயுதத்தால் கொல்லப்பட்டதைப் பாரும்.(21)
பாண்டவர்களின் செழிப்பையும், செல்வாக்கையும் அலட்சியம் செய்து யமலோகம் சென்றதன் மூலம் இந்தக் குழந்தையும் அவனது தந்தையைப் போலவே நன்றியற்றவனாகவும், இதயமற்றவனாகவும் இருக்கிறான்.(22) ஓ! கேசவரே, ஓ! வீரரே, போர்க்களத்தில் அபிமன்யு வீழ்ந்தால், தாமதமில்லாமல் நானும் அவரைப் பின்தொடர்வேன் என்று நான் உறுதிமொழியேற்றிருந்தேன்.(23) எனினும், உயிர் மீது அன்பு கொண்ட கொடுமைக்காரியான நான், என் உறுதிமொழியைக் காக்கவில்லை. இப்போது நான் அந்தப் பல்குனர் மகனிடம் {அர்ஜுனர் மகனான அபிமன்யுவிடம்} சென்றால், உண்மையில் அவர் என்ன சொல்வாரோ?" என்று கேட்டாள் {உத்தரை}".(24)
அஸ்வமேதபர்வம் பகுதி – 68ல் உள்ள சுலோகங்கள் : 24
ஆங்கிலத்தில் | In English |