Krishna revived the child! | Aswamedha-Parva-Section-69 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 54)
பதிவின் சுருக்கம் : குழந்தையைப் பார்த்து ஒப்பாரியிட்ட உத்தரை; குழந்தையின் உயிர் மீட்ட கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஆதரவற்றவளான உத்தரை, தன் குழந்தையைத் திரும்பப் பெற விரும்பி, இந்தப் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டு அறிவற்ற ஓர் உயிரினத்தை {பயித்தியம் பிடித்தவளைப்} போலத் துன்பத்துடன் பூமியில் விழுந்தாள்.(1) தன் மகனை இழந்த அந்த இளவரசி {உத்தரை}, மறைக்கப்படாத உடலுடன் பூமியில் கிடப்பதைக் கண்ட குந்தியும், பாரதப் பெண்மணிகள் (பிறர்) அனைவரும் ஆழ்ந்த துயரத்தில் உரக்க அழத் தொடங்கினர்.(2) ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒப்பாரிக் குரலை எதிரொலித்துக் கொண்டிருந்த பாண்டவர்களின் மாளிகை, விரையில் எவரும் இருக்க முடியாத துக்கமாளிகையானது[1].(3)
[1] கும்பகோணம் பதிப்பில், "புத்திரனையும், பந்துக்களையும் இழந்தவளும், (பூமியில்) விழுந்திருப்பவளுமான அந்த உத்தரையை (பார்த்துத்) துக்கத்தால் பீடிக்கப்பட்ட குந்தியும் எல்லாப் பரதஸ்திரீகளும் அழுதார்கள். அழுகை சத்தத்தால் ஒலியுள்ளதாகச் செய்யப்பட்ட பாண்டவர்களின் வீடானது ஒரு முகூர்த்த காலம் பார்க்ககூடாததாக இருந்தது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இறந்த மகனுடன் கூடிய அவள், ஆடை கலைந்தவளாகக் கீழே விழுந்து கிடப்பதைக் கண்ட குந்தியும், வேறு பாரதப் பெண்மணிகள் அனைவரும் துயரத்தால் பீடிக்கப்பட்டு ஓலமிட்டனர். ஓ! மன்னா, குறுகிய காலத்தில் பாண்டவர்களின் அந்த வசிப்பிடம் காணத்தகாததானது. அஃது ஒப்பாரியொலிகளை எதிரொலித்துக் கொண்டிருந்தது" என்றிருக்கிறது.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, மகனின் இழப்பால் துன்பத்தில் மிகவும் பீடிக்கப்பட்ட விராடனின் மகள் {உத்தரை}, துக்கத்தாலும், மனவாட்டத்தினாலும் மூர்ச்சையடைந்தவளாகத் தெரிந்தாள்.(4) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, நனவு மீண்ட உத்தரை தன் குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டு, இந்த வார்த்தைகளில்,(5) "அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரின் {அபிமன்யுவின்} குழந்தை நீ. விருஷ்ணி குலத்தில் முதன்மையானவரான இவரைக் கண்டும் நீ வணங்காமல் இருப்பதால் பாவத்தை இழைக்கிறாய் என்ற உணர்வு உனக்கில்லையா?(6)
ஓ! மகனே {பரீக்ஷிதே}, உன் தந்தையிடம் {அபிமன்யுவிடம்} சென்று, "என் கணவரான உம்மை இழந்தும், இப்போது என் குழந்தையை இழந்தும், மங்கலமான மற்றும் மதிப்புமிக்க ஏதும் இல்லாத நான் சாகாமல் வாழ்ந்திருப்பதால், உயிரினங்கள் தங்கள் வேளை வருவதற்கு முன் இறப்பது கடினமானதே.(7,8) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரின் அனுமதியுடன் நான் ஏதேனும் கடும்நஞ்சை விழுங்கப் போகிறேன், அல்லது சுடர்மிக்க நெருப்பில் என்னை விடப்போகிறேன்.(9) ஓ! ஐயா, கணவரையும், குழந்தையையும் இழந்திருந்தாலும் என் இதயம் ஆயிரம் துண்டுகளாகப் பிளக்காமல் இருப்பதால் என் இதயம் அழிவடைவது கடினமே" என்று நான் சொன்னதாக அவரிடம் சொல்வாயாக.(10)
ஓ! மகனே, எழுவாயாக, உன் பூட்டி {உன் தந்தையின் பாட்டியான குந்தி} துயருறுவதைக் காண்பாயாக. கண்ணீரில் குளித்து ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் அவள், பெரும் மனவாட்டம் கொண்டவளாகச் சோகக் கடலில் மூழ்கியிருக்கிறாள்.(11) மதிப்புக்குரிய பாஞ்சால இளவரசியையும் {திரௌபதியையும்}, ஆதரவற்ற சாத்வத குல இளவரசியையும் {சுபத்திரையையும்} காண்பாயாக. வேடனால் துளைக்கப்பட்ட மானுக்கு ஒப்பாகத் துன்பத்தில் மிகவும் பீடிக்கப்பட்டிருக்கும் என்னைக் காண்பாயாக.(12) ஓ! குழந்தாய், எழுவாயாக, பெரும் ஞானம் கொண்டவரும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவரும், ஓய்வற்ற பார்வை கொண்ட உன் தந்தைக்கு {அபிமன்யுவுக்கு} ஒப்பானவருமான இந்த உலகங்களின் தலைவருடைய {கிருஷ்ணரின்} முகத்தைக் காண்பாயாக" என்றாள் {உத்தரை}.(13)
இவ்வாறு ஒப்பாரியில் ஈடுபட்டுப் பூமியில் விழுந்த உத்தரையைக் கண்ட அந்தப் பெண்கள் அனைவரும் அவளை உயர்த்தி அமரச் செய்தனர்.(14) மத்யர்களின் மன்னனுடைய {விராடனின்} மகளான அவள், எழுந்து அமர்ந்ததும், பொறுமையை வரவழைத்துக் கொண்டு, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட கேசவனை {கிருஷ்ணனை} வணங்குவதற்காக, மதிப்புடன் கரங்களைக் கூப்பிக் கொண்டு, தன் தலையால் பூமியைத் தீண்டினாள்.(15) இதயம் பிளக்கும் அவளுடைய ஒப்பாரிகளைக் கேட்ட அந்த முதன்மையானவன் {கிருஷ்ணன்}, நீரைத் தீண்டி {ஆஸமனஞ்செய்து}, அந்தப் பிரம்மாயுதத்தை (அதன் சக்தியை} திரும்பப் பெற்றான் {விலக்கினான் / உபஸம்ஹாரம் செய்தான்}[2].(16)
[2] "இந்துக்கள், எந்தச் சடங்கையோ, முக்கியச் செயலையோ செய்வதற்கு முன்னர், ஆஸமனம் என்றழைக்கப்படும் நீரைத் தீண்டும் செயலைச் செய்ய வேண்டும். வலது கையின் உள்ளங்கையில் சிறிதளவு நீரை எடுத்துக் கொண்டு, உதடுகள், மூக்கின் துளைகள், காதுகள் மற்றும் கண்களைத் தீண்டுவதே ஆஸமனம் என்றழைக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தசார்ஹ குலத்தைச் சேர்ந்த மங்கா மகிமை கொண்ட அந்த வீரன் {கிருஷ்ணன்}, அந்தக் குழந்தைக்குத் தன் உயிரைக் கொடுப்பதாக உறுதியளித்தான். அதன் பிறகு, தூய ஆன்மா கொண்ட அவன் மொத்த அண்டமே கேட்கும் வகையில் இந்தச் சொற்களைச் சொன்னான்.(17) {கிருஷ்ணன்}, "ஓ! உத்தரா, ஒருபோதும் நான் பொய் சொல்லேன். என் சொற்கள் உண்மையாகும். அனைத்து உயிரினங்களின் முன்னிலையிலும் நான் இக்குழந்தையின் உயிரை மீட்பேன்.(18) இதற்கு முன் எப்போதும் கேலிக்காகக் கூடப் பொய் பேசியவனல்லன். போரில் ஒருபோதும் புறமுதுகிட்டவனல்லன். (அந்தச் செயல்களின் தகுதியின் {புண்ணியத்தின்} மூலம்) இந்தக் குழந்தையின் உயிர் மீளட்டும்.(19) அறம் எனதன்புக்குரியதாக இருப்பதைப் போல {இருப்பது உண்மையானால்}, பிராமணர்கள் பேரன்புக்குரியவர்களாக இருப்பதைப் போல {இருப்பது உண்மையானால்}, இறந்தே பிறந்த இந்த அபிமன்யு மகனின் உயிர் (என்னுடைய அந்த மனநிலையின் தகுதியால் {புண்ணியத்தால்}) மீளட்டும்.(20)
எனக்கும், என் நண்பனான விஜயனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் ஒருபோதும் கருத்துவேறுபாடு எழுந்ததில்லை. இறந்த இக்குழந்தையின் உயிர் அந்த உண்மையின் மூலம் மீளட்டும்.(21) வாய்மையும், அறமும் எப்போதும் என்னில் நிறுவப்பட்டிருப்பதைப் போல {நிறுவப்பட்டிருப்பது உண்மையானால்} அபிமன்யுவின் இந்த இறந்த குழந்தையுடைய உயிர் (அந்தத் தகுதிகளால் {புண்ணியங்களால்}) மீளட்டும்.(22) கம்சனும், கேசியும் என்னால் அறம்சார்ந்து கொல்லப்பட்டதைப் போல {அறம் சார்ந்து கொல்லப்பட்டது உண்மையானால்}, அந்த உண்மையினால் இன்று இந்தக் குழந்தையின் உயிர் மீளட்டும்" என்றான் {கிருஷ்ணன்}.(23)
ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, ஓ! ஏகாதிபதி, வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இந்தச் சொற்கள் சொல்லப்பட்ட பிறகு, அந்தக் குழந்தை {பரீக்ஷித்} உயிரூட்டம் பெற்றுப் படிப்படியாக {மெல்ல மெல்ல} அசையத் தொடங்கினான்" என்றார் {வைசம்பாயனர்}[3].(24)
[3] கும்பகோணம் பதிப்பில் இதன்பிறகு, "தாமரைக் கண்ணரான வாஸூதேவர் இவ்விதம் சொல்லிவிட்டு, பிறகு, தாமரை மலர் போலப் பிரகாசிக்கின்றதும், பிரம்மாவினாலும், ருத்திரராலும் பூஜிக்கப்பட்டதுமான பாதத்தால் அக்குழந்தையைக் கால் முதல் தலைவரையில் தடவினார். பரத ஸ்ரேஷ்டரே, மஹாராஜரே, கிருஷ்ணர் தொட்டவுடன், அந்தக் குழந்தை மெள்ள மெள்ளப் பிரஜ்ஞை அடைந்தது. மஹாராஜரே, பிரஜ்ஞையை அடைந்து மெள்ள மெள்ள அசைந்தது" என்றிருக்கிறது. ஆனால், கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் கிருஷ்ணன் தன் பாதத்தால் குழந்தையைத் தடவிப் பிழைக்கச் செய்த செய்தியேதும் இல்லை.
அஸ்வமேதபர்வம் பகுதி – 69ல் உள்ள சுலோகங்கள் : 24
ஆங்கிலத்தில் | In English |