Parikshit - The heir of Abhimanyu! | Aswamedha-Parva-Section-70 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 55)
பதிவின் சுருக்கம் : காரணத்துடன் குழந்தைக்குப் பெயர் சூட்டிய கிருஷ்ணன்; பொற்சுமையுடன் பாண்டவர்கள் வந்து கொண்டிருப்பதைக் கேட்டு வரவேற்கச் சென்ற கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கிருஷ்ணனால் பிரம்மாயுதம் விலக்கப்பட்ட {உபஸம்ஹாரம் செய்யப்பட்ட} அந்த நேரத்தில், உன் தந்தையின் {பரிக்ஷித்தின்} சக்தியால் அந்தப் பேற்றறை {பிரசவ அறை} ஒளி பொருந்திற்று.(1) (அங்கே வந்திருந்த) ராட்சசர்கள் அனைவரும் அந்த அறையைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களில் {ராட்சசர்களில்} பலர் அழிவையும் அடைந்தனர். ஆகாயத்தில் ஒரு குரல், "நன்று, ஓ! கேசவா, நன்று" என்று சொல்வது கேட்டது.(2) சுடர்மிக்க அந்தப் பிரம்மாயுதம் (உலகங்கள் அனைத்தின்) பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} திரும்பிச் சென்றது. ஓ! மன்னா, உன் தந்தை தன் உயிர்மூச்சைத் திரும்பப் பெற்றான்.(3)
அந்தக் குழந்தை தன் சக்தி மற்றும் வலிமைக்குத் தகுந்தபடி அசைந்தது. பாரதப் பெண்மணிகள் அனைவரும் இன்பத்தால் நிறைந்தனர்.(4) கோவிந்தனுடைய ஆணையின் பேரில், பிராமணர்கள் ஆசிகள் கூறினர் {ஸ்வஸ்திவாசனம் செய்தார்கள்}. இன்பத்தில் நிறைந்திருந்த பெண்கள் அனைவரும் ஜனார்த்தனனைப் புகழ்ந்தனர்.(5) உண்மையில், பாரதச் சிங்கங்களின் மனைவியரான குந்தி, துருபதன் மகள் {திரௌபதி}, சுபத்திரை, உத்தரை ஆகியோரும் மற்றும் மனிதர்களில் சிங்கங்களாகத் திழ்ந்தவர்களின் மனைவிமாரும், (உடைந்த கப்பலிலிருந்து) படகை அடைந்து, கரையை எட்டியவர்களைப் போலப் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.(6)
அப்போது மல்லர்கள் {மற்போர்புரிபவர்கள்}, நடிகர்கள் {நடர்கள்}, கணிகர்கள் {சோதிடர்கள்}, (இளவரசர்களின்) உறக்கத்தைக் குறித்து விசாரிப்பவர்கள்,(7) சூதர்கள், மாகதர்கள், துதிபாடிகள் ஆகியோர் அனைவரும், ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, குரு குலத்தின் புகழால் நிறைந்த நல்லாசிகளைக் கூறியபடியே ஜனார்த்தனனைப் {கிருஷ்ணனைப்} புகழ்ந்தனர்.(8) தன் கைகளில் தன் குழந்தையைச் சுமந்தபடி தகுந்த காலத்தில் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் எழுந்த உத்தரை, யதுகுலத்தைத் திளைக்கச் செய்பவனை {கிருஷ்ணனை} மதிப்புடன் வணங்கினாள்.(9)
பெரிதும் மகிழ்ச்சியடைந்த கிருஷ்ணன், மதிப்புமிக்க ரத்தினங்கள் பலவற்றைக் குழந்தைக்குப் பரிசாக வழங்கினான். விருஷ்ணி குலத்தைச் சேர்ந்த வேறு தலைவர்களும் அதையே செய்தனர். அப்போது, ஓ! ஏகாதிபதி, பலமிக்கவனும், வாய்மையை உறுதியாகக் கடைப்பிடிப்பவனுமான ஜனார்த்தனன், உன் தந்தையான அந்தக் குழந்தைக்கு ஒரு பெயரைச் சூட்டினான். {கிருஷ்ணன்}, "அபிமன்யுவின் குழந்தையான இவன், தன் குலம் கிட்டத்தட்ட அழிந்து போகும் நேரத்தில் பிறந்ததால்,(10,11) இவனது பெயர் பரிக்ஷித் என்றிருக்கட்டும்" என்றான்[1]. இதையே அவன் சொன்னான். பிறகு, ஓ! மன்னா, ஓ! பாரதா, உன் தந்தை வளரத் தொடங்கி,(12) மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தான்.
[1] கும்பகோணம் பதிப்பில், "மஹாராஜரே, பிறகு, வ்ருஷ்ணிகளுள் சிறந்தவரும், பிரபுவும், ஸத்யஸந்தருமான கிருஷ்ணர், ஸந்தோஷமடைந்து, அந்த உத்தரைக்கு மிகுதியான ரத்தினங்களைக் கொடுத்து, அப்பொழுது உம்முடைய தகப்பனாருக்கு, ’இந்த அபிமன்யுவின் புத்திரன், குலமானது பரிக்ஷீணமான பொழுது பிறந்ததால் இவனுக்குப் பெயர் "பரிக்ஷித்"’ என்று சொல்லிப் பெயரிட்டார்" என்றிருக்கிறது.
ஓ! வீரா {ஜனமேஜயா}, உன் தந்தை {பரிக்ஷித்} ஒரு மாதக் குழந்தையாக இருந்தபோது, அபரிமிதமான செல்வத்துடன் பாண்டவர்கள் தங்கள் தலைநகருக்கு {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பி வந்தனர். பாண்டவர்கள் அருகில் வந்துவிட்டனர் என்பதைக் கேள்விப்பட்ட விருஷ்ணி குலத்தில் முதன்மையானவர்கள் வெளியே புறப்பட்டுச் சென்றனர்.(14) குடிமக்கள், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்தை {ஹஸ்தினாபுரத்தைப்} பெரும் எண்ணிக்கையிலான மலர்மாலைகளாலும், அழகிய கொடிகளாலும், பல்வேறு வகையான கொடிக்கம்பங்களாலும் அலங்கரித்தனர்.(15)
ஓ! மன்னா, அந்தக் குடிமக்கள் தங்கள்தங்களுக்குரிய மாளிகைகளையும் அலங்கரித்தனர். பாண்டு மகன்களுக்கு நன்மையைச் செய்ய விரும்பிய விதுரன், கோவில்களில் நிறுவப்பட்டிருந்த அந்தந்த {கோவில்} தெய்வங்களுக்குப் பல்வேறு வகையான வழிபாடுகளைச் செய்யும்படி ஆணையிட்டான். நகரத்தின் முக்கிய வீதிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டன.(16,17) உண்மையில், தொலைவில் உள்ள கடல் அலைகளின் மென்முழக்கங்களுக்கு ஒப்பான ஆயிரங்குரல்களின் ஹுங்காரத்தால் அந்த நகரம் {ஹஸ்தினாபுரம்} நிறைந்திருந்தது. தங்கள் தங்கள் தொழில்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆடற்கலைஞர்கள் மற்றும் பாடகர்களின் குரலுடன் கூடியதாக இருந்த அந்த (குரு) நகரம்},(18) அப்போது வைஸ்ரவணனின் {குபேரனின்} மாளிகைக்கு ஒப்பானதாக இருந்தது[2].
[2] "வைஸ்ரவணனின் வசிப்பிடம் அளகை என்று அழைக்கப்படுகிறது. வைஸ்ரவணன் என்பவன், கருவூலங்களின் தலைவனும், மஹாதேவனின் நண்பனும், யக்ஷர்களின் தலைவனுமான குபேரன் ஆவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, அழகிய பெண்களுடன் கூடிய வந்திகள் மற்றும் துதிபாடிகள்,(19) அந்த நகரத்தின் பல்வேறு இடங்களை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்த கொடிகள், அடிவானத்தின் தெற்கு மற்றும் வடக்குத் திசைப்புள்ளிகளைக் காண்பிப்பதைப் போல, காற்றால் இனிமையான மிதக்கச் செய்யப்பட்டன. அரசு அலுவலர்கள் அனைவரும், ரத்தினர்கள் மற்றும் பிற மதிப்பு மிக்கப் பொருட்களைக் கொண்டு வரும் பணியில் வெற்றியடைந்ததன் குறியீடாக மொத்த நாட்டுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய நாளாக அது விளங்குவதாக உரக்க அறிவித்தனர் {பறையறிவித்தனர்}" {என்றார் வைசம்பாயனர்}.(20,21)
அஸ்வமேதபர்வம் பகுதி – 70ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |