You are the master! | Aswamedha-Parva-Section-71 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 56)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனை எதிர்கொண்டழைத்த கிருஷ்ணன்; அஸ்வமேத யாகம் செய்ய அனுமதித்த வியாசர்; கிருஷ்ணன் செய்யட்டும் என்று சொன்ன யுதிஷ்டிரன்; மறுத்து யுதிஷ்டிரனைச் செய்யச் சொன்ன கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பகைவரை அழிப்பவனான வாசுதேவன், பாண்டவர்கள் அருகில் வந்துவிட்டதாகக் கேள்விப்பட்டு, அவர்களைக் காணத் தன் அமைச்சர்களுடன் புறப்பட்டுச் சென்றான்.(1) அப்போது, ஓ! மன்னா, வழக்கமான நடைமுறைகளின்படி விருஷ்ணிகளுடன் சேர்ந்து யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} பாண்டவர்கள் நுழைந்தனர்.(2) குரல்களின் ஹுங்காரம், பெரும்படையின் தேர்களுடைய சடசடப்பொலி ஆகியவற்றுடன் கூடிய பூமி மற்றும் ஆகாயம் என்ற மொத்த வெளியே அவற்றால் {அவ்வொலிகளால்} மொத்தமாக நிறைந்தது.(3) மகிழ்ச்சிகரமான இதயங்களுடன் கூடிய பாண்டவர்கள், தங்கள் அதிகாரிகள் மற்றும் நண்பர்களின் துணையுடன், செல்வக்கருவூலத்தைத் தங்கள் முன்னணியில் வைத்துக் கொண்டு தலைநகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தனர்.(4)
வழக்கத்திற்கு ஏற்புடைய வகையில் அவர்கள் முதலில் மன்னன் திருதராஷ்டிரனிடம் சென்று, தங்களுடைய பெயர்களை அறிவித்துக் கொண்டு, அவனது பாதங்களை வழிபட்டனர்.(5) பிறகு, ஓ! மன்னர்களின் தலைவா, பாரதக் குலத்தில் முதன்மையான அவர்கள், சுபலனின் மகளான காந்தாரிக்கும், குந்திக்கும் தங்கள் மதிப்புமிக்க வணக்கங்களைச் செலுத்தினர்.(6) அடுத்ததாக (தங்கள் சிறிய தந்தையான) விதுரரை வழிபட்டு, திருதராஷ்டிரனுடைய வைசிய மனைவியின் மகனான யுயுத்சுவைச் சந்தித்தனர். அப்போது, ஓ! மன்னா, அவர்கள் பிறரால் வழிபடப்பட்டு அழகுடன் பிரகாசித்தனர்.(7) அதன்பிறகு, ஓ! பாரதா, அந்த வீரர்கள், அற்புதம் நிறைந்தவையும், ஆச்சரிகரமானவையும், மகிழ்ச்சியைக் கொண்டு வந்தவையுமான உன் தந்தை {பரிக்ஷித்} குறித்த செய்திகளைக் கேட்டனர்.(8) பெரும் நுண்ணறிவைக் கொண்ட வாசுதேவனின் சாதனையைக் கேட்ட அவர்கள் அனைவரும், தேவகியை மகிழ்ச்சியடையச் செய்பவனும், அனைத்து வகை வழிபாட்டிற்கும் தகுந்தவனுமான கிருஷ்ணனை வழிபட்டனர்.(9)
அதன்பிறகு, சிறிது நாள் கழித்து, பெருஞ்சக்தி கொண்டவரும், சத்தியவதியின் மகனுமான வியாசர், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} வந்தார்.(10) குரு குலத்தைத் தழைக்கச் செய்பவர்கள், வழக்கமான நடைமுறையின்படி அந்தப் பெரும் முனிவரை வழிபட்டனர். உண்மையில், விருஷ்ணி மற்றும் அந்தகக் குலங்களின் முதன்மையான இளவரசர்களான அந்த வீரர்கள், தங்கள் துதிகளை அத்தவசிக்குச் செலுத்தினர்.(11) பல்வேறு காரியங்கள் குறித்துப் பேசிய பிறகு, தர்மனின் மகனான யுதிஷ்டிரன், வியாசரிடம்,(12) "ஓ! புனிதமானவரே, உம் அருளால் இங்கே கொண்டுவரப்பட்ட இந்தப் பொக்கிஷத்தைக் குதிரை வேள்வி {அஸ்வமேதயாகம்} என்ற பெயரால் அழைக்கப்படும் பெரும் வேள்விக்கு அர்ப்பணிக்க நான் விரும்புகிறேன்.(13) ஓ! தவசிகளில் சிறந்தவரே, உமது அனுமதியைப் பெற நான் விரும்புகிறேன். ஓ! முனிவரே, உமக்கும், உயர் ஆன்ம கிருஷ்ணனுக்கும் நாங்கள் அனைவரும் வசப்பட்டவர்கள்" என்றான்.(14)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, நான் உனக்கு அனுமதியளிக்கிறேன். எது முதலில் செய்யப்பட வேண்டுமோ, அதைச் செய்வாயாக. அபரிமிதமான கொடைகளுடன் கூடிய குதிரைவேள்வியைச் செய்வதன் மூலம் நீ முறையாகத் தேவர்களை வழிபடுவாயாக.(15) ஓ! மன்னா, குதிரை வேள்வி அனைத்துப் பாவங்களையும் தூய்மைப்படுத்தும். அந்த வேள்வியின் மூலம்தேவர்களை வழிபடுவதால் அனைத்துப் பாவங்களும் நிச்சயம் தூய்மையடையும் என்பதில் ஐயமில்லை" என்றார்".(16)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிட} தொடர்ந்தார், "ஓ! ஏகாதிபதி, இவ்வாறு சொல்லப்பட்டவனும், நீதிமிக்க ஆன்மா கொண்டவனுமான குரு மன்னன் யுதிஷ்டிரன், குதிரை வேள்விக்கு {அஸ்வமேத யாகத்துக்குத்} தேவையான ஆயத்தங்களைச் செய்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(17) பெரும் நாநயமிக்க அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, இவை யாவற்றையும் தீவில் பிறந்த கிருஷ்ணரிடம் {வியாசரிடம்} சொல்லிவிட்டு, வாசுதேவனை {கிருஷ்ணனை} அணுகி,(18) "ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, உன்னால் தேவகிதேவி, தாய்மார்களில் பெரும் பேறு பெற்றவளெனக் கருதப்படுகிறாள். ஓ! மங்கா மகிமை கொண்டவனே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நான் உனக்குச் சொல்லப் போவதைச் செய்வாயாக.(19) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, நாங்கள் அனுபவிக்கும் பல்வேறு இன்பங்கள் யாவும் உன் பலத்தின் மூலமே அடையப்பட்டன. உன் ஆற்றல் மற்றும் புத்தியின் மூலமே மொத்த பூமியும் வெல்லப்பட்டது.(20) எனவே, தொடக்கச் சடங்குகளை நீயே செய்வாயாக {உன்னை தீக்ஷையுள்ளவனாகச் செய்வாயாக}. எங்களது உயர்ந்த ஆசானும், குருவும் நீயே. ஓ! தசார்ஹ குலத்தோனே, இவ்வேள்வியை நீ செய்தால், நான் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைவேன்.(21) வேள்வியானவன் நீயே. அழிவற்றவன் நீயே. இவை யாவுமாக இருப்பவன் நீயே. அறம் நீயே. பிரஜாபதி நீயே. அனைத்து உயிரினங்களின் இலக்கும் {கதியும்} நீயே. இதுவே என் நிச்சயத் தீர்மானமாகும்" என்றான்.(22)
வாசுதேவன் {கிருஷ்ணன்}, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! பகைவரைத் தண்டிப்பவரே, இவ்வாறு சொல்ல {செய்ய} நீரே தகுந்தவர். நீரே அனைத்து உயிரினங்களின் இலக்காயிருக்கிறீர் {அறமெனும் கதியாயிருக்கிறீர்}. இதுவே என் நிச்சயத் தீர்மானமாகும்.(23) குரு குல வீரர்களுக்கு மத்தியில், உமது அறத்தின் விளைவால் நீர் இன்று பெரும் மகிமையில் ஒளிர்கிறீர். ஓ! மன்னா, அவர்கள் யாவரின் மீதும் நீர் உமது நிழலை விழச் செய்தீர். நீரே எங்கள் மன்னன், நீரே எங்களுக்குப் பெரியவர்.(24) தாராளமாக வழங்கப்படும் என் அனுமதியுடன், இவ்வேள்வி பரிந்துரைக்கும் தேவர்களைத் வணங்குவீராக. ஓ! பாரதரே, நீர் விரும்பும் பணிகளில் எங்களை நியமிப்பீராக. உண்மையில், ஓ! பாவமற்றவரே, நிறைவேற்றச் சொல்லி நீர் இடும் ஆணைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என நான் உறுதியளிக்கிறேன்.(25) இவ்வேள்வியை நீர் செய்யும்போதே, பீமசேனர், அர்ஜுனன் மற்றும் மாத்ரியின் மகன்கள் {நகுல சகாதேவன்} இருவரும் செய்தவர்களாவார்கள்" என்றான் {கிருஷ்ணன்}".(26)
அஸ்வமேதபர்வம் பகுதி – 71ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |