The horse for sacrifice! | Aswamedha-Parva-Section-72 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 57)
பதிவின் சுருக்கம் : யாகக் குதிரையைச் சுற்றவிடும்படி யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; குதிரையைக் காக்க அர்ஜுனனை நியமித்த யுதிஷ்டிரன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், பெரும் நுண்ணறிவுமிக்கவனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன், வியாசரை வணங்கி இச்சொற்களைச் சொன்னான்:(1) "நீர் உண்மையில் அறிந்தவாறு சடங்குக்கு உரிய நேரத்தில் என்னைத் தொடங்கச் செய்வீராக. என்னுடைய இவ்வேள்வி முழுமையாக உம்மைச் சார்ந்தது" {என்றான்}.(2)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! குந்தியின் மகனே, நான், பைலன், யாஜ்ஞவல்கியன் ஆகியோர் ஒவ்வொரு சடங்கையும் அதனதனுக்குரிய நேரத்தில் நிச்சயம் செய்வோம்.(3) {வேள்வியைச் செய்வதற்குரிய} உனக்கான தொடக்கச் சடங்கு, சைத்ர மாதத்தின் முழுநிலவு நாளில் {சித்ராபௌர்ணமியில்} செய்யப்படும்[1]. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, வேள்விக்குத் தேவையான அனைத்தையும் தயாராக இருக்கட்டும்.(4) குதிரை அறிவியலை நன்கறிந்த சூதர்கள், அதை அறிந்த பிராமணர்கள் ஆகியோர், ஆய்வு செய்த பிறகு, உன் வேள்வி நிறைவடைவதற்குரிய தகுந்த குதிரையைத் தேர்வு செய்யட்டும்.(5) ஓ! மன்னா, சாத்திரத் தீர்மானங்களின்படி அவிழ்த்துவிடப்படும் அவ்விலங்கு, சுடர்மிக்க உன் மகிமையை வெளிப்படுத்தும் வகையில் கடல்களையே கச்சையாகக் கொண்ட மொத்த பூமியில் அது சுற்றித் திரியட்டும்" என்றார் {வியாசர்}".(7)
[1] கும்பகோணம் பதிப்பில், "சித்திராபூர்ணிமைத் தினத்தில் உனக்குத் தீக்ஷை நடக்கும்" என்றிருக்கிறது.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "(அம்முனிவரால்) இவ்வாறு சொல்லப்பட்டவனும், பாண்டுவின் மகனும், பூமியின் தலைவனுமான யுதிஷ்டிரன், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு, அந்தப் பிரம்மம் ஓதுபவர் சொன்ன அனைத்தையும் செய்தான்.(7) ஓ! மன்னா, வேள்விக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் முறையாகத் திரட்டப்பட்டன.(8) அளவற்ற ஆன்மா கொண்ட தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, தேவையானவை அனைத்தையும் திரட்டிவிட்டு, தீவில் பிறந்த கிருஷ்ணரிடம் {வியாசரிடம்} அது குறித்துச்ச ஒன்னான்.(9)
அப்போது பெரும் சக்தி கொண்டவரான வியாசர், தர்மனின் அரச மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, "எங்களைப் பொறுத்தவரையில், வேள்வியின் நோக்கில் உன்னைத் தொடங்கச் செய்ய நாங்கள் அனைவரும் ஆயத்தமாகவுள்ளோம். ஓ! குரு குலத்தோனே, ஸ்பியம் {கத்தி}, கூர்ச்சம் ஆகியனவும், உன் வேள்விக்குத் தேவையான வேறு பொருட்கள் அனைத்தும் பொன்னால் செயப்படட்டும்[2].(11) சாத்திர விதிகளுக்கு ஏற்ப இன்று அந்தக் குதிரை பூமியில் சுற்றித்திரிய அவிழ்த்து விடப்படட்டும். அந்த விலங்கு, முறையாகப் பாதுகாக்கப்பட்டுப் பூமியில் திரியட்டும்" என்றார் {வியாசர்}.(12)
[2] "ஸ்ப்யம் என்பது வேள்வி விலங்கைக் கொல்வதற்குப் பயன்படும் மரக் கத்தியாகும். கூர்ச்சம் என்பது கைப்பிடியளவு குசப்புல்லாகும். இவை அனைத்தும் பொன்னால் செய்யப்பட வேண்டும் என வியாசர் சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே, இந்தக் குதிரையை அதன் விருப்பப்படி பூமியின் மீது அலைந்து திரிவதற்கு ஏதுவாக இதை அவிழ்த்துவிடுவதற்குரிய ஏற்பாடுகள் உம்மால் செய்யப்படட்டும்.(13) ஓ! தவசியே, இந்தக் குதிரை பூமியில் தன் விருப்பப்படி சுதந்திரமாகத் திரியும்போது அதை எவன் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான்".(14)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, (மன்னன் யுதிஷ்டிரனால்) இவ்வாறு சொல்லப்பட்ட தீவில் பிறந்த கிருஷ்ணர் {வியாசர்}, "பீமசேனனுக்குப் பின் பிறந்தவனும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனும்,(15) ஜிஷ்ணு என்றழைக்கப்படுபவனும், பெரும்பொறுமை கொண்டவனும், தடைகள் அனைத்தையும் கடக்கவல்லவனும் எவனோ, அவனே இந்தக் குதிரையைப் பாதுகாப்பான். நிவாதகவசர்களை அழிந்தவனான அவனே மொத்த பூமியையும் வெல்லத்தகுந்தவன் ஆவான்.(16) தெய்வீக ஆயுதங்கள் அனைத்தும் அவனிடம் உள்ளன. அவனுடைய உடல், தாங்கும் சக்தியில் ஒரு தேவனுடைய உடலைப் போன்றதாகும். அவனுடைய வில்லும், அம்பறாதூணியும் தெய்வீகமானவை. அவனே இந்தக் குதிரையைப் பின்தொடரட்டும்.(17) அறம், பொருள் ஆகிய இரண்டையும் அவன் நன்கறிந்தவன். அறிவியல்கள் அனைத்திலும் அவன் தேர்ச்சிபெற்றவன். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, அவன் சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில், அந்தக் குதிரையைச் சுதந்திரமாக மேயவும், திரியவும் வைக்கட்டும்.(18)
கரிய நிறம் மற்றும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட இந்த இளவரசன் {அர்ஜுனன்}, தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவனாக இருக்கிறான். அபிமன்யுவின் தந்தையான இந்த வீரன் குதிரையைப் பாதுகாப்பான்.(19) பீமசேனனும் பெருஞ்சக்தி கொண்டவனே. குந்தியின் மைந்தனான அவன் அளவற்ற வலிமையைக் கொண்டவனாவான். ஓ! ஏகாதிபதி, நகுலனின் துணையுடன் அவன் {பீமன்} நாட்டைப் பாதுகாக்கத் தகுந்தவனாவான்.(20) ஓ! குரு குலத்தோனே, பெரும் நுண்ணறிவையும், புகழையும் கொண்ட சகாதேவன், உன் தலைநகருக்கு அழைக்கப்பட்டிருக்கும் உறவினர்கள் அனைவரையும் முறையாகக் கவனிப்பான்" என்றார் {வியாசர்}.(21) அந்த முனிவரால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனுமான யுதிஷ்டிரன், ஒவ்வொரு ஆணையையும் முறையாக நிறைவேற்றி, குதிரையைக் கவனிக்கப் பல்குனனை {அர்ஜுனனை} நியமித்தான்.(22)
யுதிஷ்டிரன், "ஓ! அர்ஜுனா, ஓ! வீரா, வருவாயாக, இந்தக் குதிரை உன்னால் பாதுகாக்கப்படட்டும். இதைப் பாதுகாக்க நீ மட்டுமே தகுந்தவன்; வேறு எவனும் அல்ல.(23) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா, ஓ! பாவமற்றவனே, உன்னுடன் மோத முன் வரும் மன்னர்களிடம் போரைத் தவிர்க்க உன்னால் முடிந்தவரை முயற்சிப்பாயாக.(24) மேலும் நீ அவர்களை என்னுடைய வேள்விக்கு அழைக்கவும் வேண்டும். உண்மையில், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அவர்களுடன் நட்புறவை நிறுவ முயற்சிப்பாயாக[3]" என்றான்".(25)
[3] கும்பகோணம் பதிப்பில், "உன்னை எதிர்த்து வரும் மன்னர்களுடன் யுத்தமுண்டாகாமலிருக்கும்படி நீ செய்ய வேண்டும். சிறந்த கைகளுள்ளவனே, நீ என்னுடைய இந்த யாகத்தை எல்லா மன்னர்களுக்கும் தெரிவித்து "காலத்தில் வரவேண்டும்" என்று சொல்" என்றிருக்கிறது.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "நீதிமிக்க ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பியான சவ்யசாச்சினிடம் {அர்ஜுனனிடம்} இவ்வாறு சொல்லிவிட்டு, பீமன் மற்றும் நகுலனிடம் நகரத்தைப் பாதுகாக்க ஆணையிட்டான்.(26) மன்னன் திருதராஷ்டிரனின் அனுமதியுடன் அவன், போர்வீரர்களில் முதன்மையான சகாதேவனை, அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அனைவரையும் கவனிக்கும் காரியத்தில் நிறுவினான்" {என்றார் வைசம்பாயனர்}.(27)
அஸ்வமேதபர்வம் பகுதி – 72ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English |