The steed turned from North to East! | Aswamedha-Parva-Section-73 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 58)
பதிவின் சுருக்கம் : யாகக் குதிரையைப் பின்தொடர்ந்து வடக்குத் திசைக்குச் சென்று, கிழக்கில் திரும்பிய அர்ஜுனன்; அங்கே எதிர்த்த மன்னர்களை வென்றது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "{அவ்வேள்வித்} தொடக்கத்திற்கான வேளை வந்தபோது, குதிரை வேள்வியைக் கருத்தில் கொண்ட பெரும் ரித்விஜர்கள் அனைவரும், மன்னனை {யுதிஷ்டிரனை} முறையாக அதைத் தொடங்கச் செய்தனர் {யுதிஷ்டிரனுக்கு அஸ்வமேத யாகத்திற்கான தீக்ஷையை விதிப்படி செய்வித்தனர்}.(1) பாண்டுவின் மகனும், பெருஞ்சக்தி கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், வேள்வி விலங்குகளைக் கட்டும் சடங்குகளை நிறைவேற்றி {வேள்வியின்} தொடக்கம் {தொடக்கச் சடங்கு} முடிந்தவுடன் ரித்விஜர்களுடன் சேர்ந்து பெரும் காந்தியுடன் ஒளிர்ந்தான்.(2) குதிரை வேள்விக்காகக் கொண்டுவரப்பட்ட குதிரை சாத்திர விதிகளுக்கு ஏற்புடைய வகையில் அளவிலா சக்தி கொண்டவரும், பிரம்மதை ஓதுபவருமான வியாசரால் அவிழ்த்துவிடப்பட்டது.(3) ஓ! ஏகாதிபதி, கழுத்தைச் சுற்றிலும் தங்க மாலையால் அலங்கரிக்கப்பட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், {வேள்விக்கான} தன் தொடக்கத்திற்குப் பிறகு சுடர்மிக்க நெருப்பைப் போல அழகில் ஒளிர்ந்தான்.(4) கருப்பு மான்தோலை {கிருஷ்ணாஜினத்தை} மேலாடையாகக் கொண்டவனும், கையில் தண்டத்தைக் கொண்டவனும், வெண்பட்டு உடுத்தியவனுமான அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, வேள்விப்பீடத்தில் அமர்ந்திருக்கும் இரண்டாவது பிரஜாபதியைப் போல ஒளிர்ந்தான்.(5)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவனது ரித்விஜர்கள் அனைவரும் அதே போன்ற ஆடைகளையே உடுத்தியிருந்தனர். அர்ஜுனன் சுடர்மிக்க நெருப்பைப் போல ஒளிர்ந்தான்.(6) ஓ! மன்னா, வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தேரைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில், கருப்பு மானின் நிறத்தில் இருந்த அந்தக் குதிரையைப் பின்தொடர்வதற்கு முறையாகத் தயாரானான்.(7) ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, காண்டீவம் என்ற பெயரைக் கொண்ட தன் வில்லை மீண்டும் மீண்டும் இழுத்து, உடும்புத் தோலாலான தன் கையுறையைப் பூட்டி, உற்சாகமிக்க இதயத்துடன் அந்தக் குதிரையைப் பின்தொடர ஆயத்தமானான்.(8) ஓ! மன்னா, குழந்தைகள் உள்ளிட்ட ஹஸ்தினாபுரத்தோர் அனைவரும், குருக்களில் முதன்மையான தனஞ்சயனின் பயணத்தின் தொடக்கத்தில் அவனைக் காண விரும்பி அந்த இடத்திற்கு வந்தனர்.(9) குதிரையையும், அதைப் பின்தொடர்ந்து செல்லப்போகும் இளவரசனையும் {அர்ஜுனனையும்} காண வந்த பார்வையாளர்களின் உடல்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவால் நெருப்புண்டாகிவிடும் எனத் தோன்றும் அளவுக்கு அக்கூட்டம் அடர்த்தியாக இருந்தது.(10)
குந்தியின் மகனான தனஞ்சயனைக் {அர்ஜுனனைக்} காண அங்கே கூடியிருந்த மனிதக் கூட்டத்திலிருந்து எழுந்த உரத்தவொலி, திசைப்புள்ளிகள் அனைத்தையும், மொத்த ஆகாயத்தையும் நிறைப்பதாக இருந்தது.(11) அவர்கள், "குந்தியின் மகன் அதோ போகிறான், சுடர்மிக்க அழகுடன் கூடிய குதிரை அதோ இருக்கிறது. உண்மையில் அந்த வலிமைமிக்க வீரன் தன் சிறந்த வில்லைத் தரித்துக் கொண்டு அந்தக் குதிரையைப் பின்தொடர்ந்து செல்கிறான்" என்றனர்.(12) உன்னதமான நுண்ணறிவுடன் கூடிய ஜிஷ்ணு கேட்ட சொற்கள் இவையே. மேலும் அந்தக் குடிமக்கள், "அருள் உனதாகட்டும். ஓ! பாரதா, பாதுகாப்புடன் சென்று திரும்புவாயாக" என்று ஆசி கூறினர்.(13) ஓ! மனிதர்களின் தலைவா, வேறு சிலர், "அர்ஜுனனைக் காண முடியாத அளவுக்கு {கூட்ட} நெருக்கடி அதிகமாக இருக்கிறது. எனினும், அவனது வில் நமக்குத் தெரிகிறது.(14) பயங்கர நாணொலியைக் கொண்டதும் கொண்டாடப்படும் வில்லுமான காண்டீவம் அதுவே. {என்று சொல்லிவிட்டு, அர்ஜுனன் கேட்கும் வகையில்} நீ அருளப்பட்டிருப்பாயாக. உன் பாதையில் உள்ள ஆபத்துகள் அனைத்தும் தப்பி ஓடட்டும் {விலகிச் செல்லட்டும்}. எங்கும் உனக்கு அச்சம் ஏற்பட வேண்டாம் {என்று உரக்கச் சொல்லி, மீண்டும் தங்களுக்குள்}.(15) இவன் நிச்சயம் திரும்பிவருவான், அவ்வாறு திரும்பும்போது நான் இவனைக் காணலாம்" என்றனர்.
ஓ! பாரதர்களின் தலைவா {ஜனமேஜயா}, உயர் ஆன்ம அர்ஜுனன், ஆண்களும், பெண்களும் சொல்லும் இதே போன்ற சொற்களையே மீண்டும் மீண்டும் கேட்டான். வேள்விச் சடங்குகள் அனைத்தையும் நன்கறிந்தவனும், வேதங்களில் முழுத் தேர்ச்சி பெற்றவனுமான யாஜ்ஞவல்கியரின் சீடன் ஒருவன், பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குச்} சாதகமாக மங்கலச் சடங்குகளைச் செய்து கொண்டே அந்த வீரனுடன் {அர்ஜுனனுடன்} சென்றான். ஓ! மன்னா, நீதிமானான யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில், வேதங்களை நன்கறிந்த பிராமணர்கள் பலரும், க்ஷத்திரியர்கள் பலரும் அந்த உயர் ஆன்ம வீரனை {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(16-19) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களின் சக்தி மூலம் ஏற்கனவே வென்ற பூமியில் தான் விரும்பிய இடமெல்லாம் அந்தக் குதிரைச் சுற்றித் திரிந்தது.(20)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் குதிரை அவ்வாறு திரிந்து சென்ற போது, அர்ஜுனனுக்கும், மன்னர்கள் பலருக்கும் இடையில் அற்புதம் நிறைந்த பெரிய போர்கள் பல நேரிட்டன. அவற்றை நான் உனக்கு விளக்கிச் சொல்லப் போகிறேன்.(21) ஓ! மன்னா, அந்தக் குதிரை பூமி முழுவதும் சுற்றித் திரிந்தது. ஓ! ஏகாதிபதி, வடக்கிலிருந்து அது கிழக்கி நோக்கித் திரும்பியது என்பதை அறிவாயாக.(22) ஏகாதிபதிகள் பலரின் நாடுகளைக் கலங்கடித்தபடியே அந்தச் சிறந்த குதிரை திரிந்து கொண்டிருந்தது. வெண்குதிரைகளைக் கொண்ட பெருந்தேர்வீரனான அர்ஜுனனால் அது மெதுவாகப் பின்தொடரப்பட்டது.(23) ஓ! ஏகாதிபதி, குருக்ஷேத்திரக் களத்தில் தங்கள் உற்றார் உறவினரை இழந்திருந்தவர்களும், அந்தச் சந்தர்ப்பத்தில் அர்ஜுனனிடம் போரிட்ட {பதினாயிரக்கணக்கில் இருந்த} மன்னர் கூட்டமும், கணக்கற்றவர்களுமான அந்த க்ஷத்திரியர்கள் தங்கள் விதியைச் சந்தித்தனர்.(24)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, எண்ணற்ற கிராதர்களும், சிறந்த வில்லாளிகளான யவனர்களும், (குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் ஏற்கனவே பாண்டவர்களால்) வீழ்த்தப்பட்டவர்களான மிலேச்சர்களின் பல்வேறு இனக்குழுக்களும்,(25) பெரும் வேகம் கொண்ட படைவீரர்களையும், விலங்குகளையும் கொண்டவர்களும், போரில் தடுக்கப்பட முடியாதவர்களான ஆரிய {உன்னதமான} மன்னர்கள் பலரும், அந்தப் பாண்டு மகனுடன் போரிட்டனர்.(26) ஓ! ஏகாதிபதி, இவ்வாறு அர்ஜுனனுக்கும், அவனோடு மோத வந்த பல்வேறு நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் இடையில் பல்வேறு நாடுகளில் எண்ணற்ற போர்கள் நிகழ்ந்தன.(27) ஓ! பாவமற்ற மன்னா, அவன் போரிட்டவற்றுள் பெருஞ்சீற்றத்துடன் நடந்தவையும், முக்கியமான போர்களையும் மட்டுமே நான் உனக்குச் சொல்லப் போகிறேன்" {என்றார் வைசம்பாயனர்}.(28)
அஸ்வமேதபர்வம் பகுதி – 73ல் உள்ள சுலோகங்கள் : 28
ஆங்கிலத்தில் | In English |