Gandiva felldown! | Aswamedha-Parva-Section-74 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 59)
பதிவின் சுருக்கம் : திரிகர்த்தர்களுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் மூண்ட போர்; இளைஞனான திருதவர்மனின் போர்த்திறனைக் கண்டு வியந்த அர்ஜுனன்; காண்டீவம் நுழுவியது; மூர்க்கத்துடன் போரிட்ட அர்ஜுனன்; அடிபணிந்த திரிகர்த்தர்கள்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஏற்கனவே பாண்டவர்களுடன் பகை பூண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களாக நன்கறியப்பட்டவர்களுமான திரிகர்த்தர்களின் மகன்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கும் கிரீடம் தரித்தவனுக்கும் (அர்ஜுனனுக்கும்) இடையில் ஒரு போர் நடந்தது.(1) வேள்விக்காக அனுப்பப்பட்ட முதன்மையான குதிரை தங்கள் ஆட்சிப்பகுதிக்குள் வந்ததை அறிந்த அவ்வீரர்கள் {திரிகர்த்தர்கள்}, கவசம்பூண்டவர்களாக அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டனர்.(2) ஓ! மன்னா, நன்கு அலங்கரிக்கப்பட்ட சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட தேர்களில் ஏறி, தங்கள் முதுகுகளில் அம்பறாத்தூணியுடன் கூடிய அவர்கள் அந்தக் குதிரையைச் சூழ்ந்து கொண்டு, அதைக் கைப்பற்ற முயற்சித்தனர்.(3) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, கிரீடம் தரித்தவனான அர்ஜுனன், அவர்களுடைய முயற்சிகளை எண்ணிப் பார்த்து, சமாதானப் பேச்சுகளின் மூலம் அந்த வீரர்களைத் தடுத்தான்.(4) அர்ஜுனனின் செய்தியை அலட்சியம் செய்த அவர்கள் தங்கள் கணைகளைக் கொண்டு அவனைத் தாக்கினர். கிரீடம் தரித்தவனான அர்ஜுனன், இருள் மற்றும் ஆசையின் {தமஸ் மற்றும் ரஜஸ் குணங்களின்) ஆதிக்கத்தில் இருந்த அந்தப் போர்வீரர்களைத் தடுத்தான்.(5)
ஜிஷ்ணு {அர்ஜுனன்} புன்னகைத்தபடியே, "அறமற்றவர்களே, விலகுவீராக. உயிரானது (வீசியெறியப்படக்கூடாத) நன்மையான ஒன்றாகும்" என்றான். அவன் புறப்பட்ட வேளையில், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் ஏற்கனவே உறவினர்கள் கொல்லப்பட்டவர்களான க்ஷத்திரியர்களைக் கொல்ல வேண்டாம் எனத் தடையாணை விதித்திருந்தான்.(7) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனுடைய இந்த ஆணைகளை நினைவுகூர்ந்த அர்ஜுனன், திரிகர்த்தர்களைத் திரும்புமாறு கேட்டான். ஆனால் அவர்கள் அர்ஜுனனின் தடையாணையை அலட்சியம் செய்தனர்.(8) அதன்பிறகு அர்ஜுனன், அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே திரிகர்த்த மன்னன் சூரியவர்மன் மீது எண்ணற்ற கணைகளை ஏவி அவனை வென்றான்.(9) எனினும், தேர்கள் மற்றும் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் பத்து புள்ளிகளையும் நிறைத்தபடியே தனஞ்சயனை நோக்கித் திரிகர்த்தப் போர்வீரர்கள் விரைந்தனர்.(10)
அப்போது, பெரும் கரநளினத்தை வெளிப்படுத்திய சூரியவர்மன், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, நூற்றுக்கணக்கான நேரான கணைகளால் தனஞ்சயனைத் துளைத்தான்.(11) மன்னனைப் பின்தொடர்ந்து வந்தவர்களும், தனஞ்சயனுக்கு அழிவை ஏற்படுத்த விரும்பியவர்களுமான பிற பெரிய வில்லாளிகள் அனைவரும் அவன் மீது கணைமாரியைப் பொழிந்தனர்.(12) ஓ! மன்னா, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் வில்லின் நாணிலிருந்து எண்ணற்ற கணைகளை ஏவி அந்தக் கணைமேகத்தை வெட்டி வீழ்த்தினான்.(13) சூரியவர்மனின் தம்பியும், இளமையின் சீற்றத்தைக் கொண்டவனும், பெரும் சக்தி கொண்டவனுமான கேதுவர்மன், பெரும் புகழ் கொண்ட பாண்டு மகனை {அர்ஜுனனைத்} தன் அண்ணனுக்காக எதிர்த்தான்.(14) போரில் தன்னை நோக்கி வரும் கேதுவர்மனைக் கண்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, கூர்முனை கொண்ட கணைகள் பலவற்றால் அவனைக் {கேதுவர்மனைக்} கொன்றான்.(15)
கேதுவர்மன் வீழ்ந்தபிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனான திருதவர்மன், தன் தேரில் ஏறி அர்ஜுனனை நோக்கி வரைந்து சென்று, அவன் மீது சரியாகக் கணைமாரியைப் பொழிந்தான்.(16) இளைஞனான திருதவர்மனின் கரநளினத்தைக் கண்டவனும், வலிமை, சக்தி மற்றும் பேராற்றலைக் கொண்டவனுமான குடாகேசன் {அர்ஜுனன்}, அவனிடம் பெரும் நிறைவையடைந்தான்.(17) அந்த இளம் போர்வீரன் எப்போது தன் கணைகளை எடுத்தான், எப்போது வில்லின் நாணில் அவற்றைப் பொருத்தித் தன் மீது குறி பார்த்தான் என்பதை இந்திரனின் மகனால் {அர்ஜுனனால்} காண முடியவில்லை. அவன் காற்றில் பறந்து வரும் கணைமாரியை மட்டுமே கண்டான்.(18) குறுகிய காலம் வரை {ஒரு முகூர்த்த காலம்} அர்ஜுனன் தன் எதிரிக்கு மகிழ்ச்சியை அளித்து, அவனுடைய வீரத்தையும் திறனையும் கண்டு வியந்தான்.(19) சிரித்துக் கொண்டே இருந்த அந்தக் குருவீரன் {அர்ஜுனன்}, கோபம்நிறைந்த பாம்புக்கு ஒப்பான அந்த இளைஞனுடன் போரிட்டுக் கொண்டிருந்தான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} திருதவர்மனின் வீரத்தைக் கண்டு மகிழ்ந்ததால் அவனது உயிரை எடுக்காதிருந்தான்.(20)
எனினும், அளவற்ற சக்தியைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, திருதவர்மனின் உயிரை எடுக்க விரும்பாது அவனுடன் மென்மையாகப் போரிட்டுக் கொண்டிருக்கும்போதே அவன் சுடர் மிக்கக் கணையொன்றை அவன் மீது ஏவினான்.(21) அக்கணையால் ஆழத்துளைக்கப்பட்ட விஜயன் {அர்ஜுனன்} திகைப்படைந்தான், அவனது வில்லான காண்டீவம் திடமான பிடியில் இருந்து நழுவி பூமியில் விழுந்தது.(22) ஓ! மன்னா, அர்ஜுனனின் பிடியில் இருந்து விழுந்த போது அந்த வில்லின் வடிவம் (மழைக்குப் பின் ஆகாயத்தில் தோன்றும்} இந்திரனின் வில்லுக்கு {வானவில்லுக்கு} ஒப்பானதாகத் தெரிந்தது.(23) ஓ! ஏகாதிபதி, தெய்வீகமானதும், பெரியதுமான அந்த வீல் போரில் கீழே விழுந்தபோது திருதவர்மன் உரக்க நகைத்தான்.(24) இதனால் சினம் தூண்டப்பட்டவனான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, தன் கரத்தில் இருந்த குருதியைத் துடைத்துவிட்டு, மீண்டும் தன் வில்லை எடுத்துக் கொண்டு சரியான கணைமாரியைப் பொழிந்தான்.(25)
அப்போது, தனஞ்சயனின் அந்தச் சாதனையை மெச்சிய பல்வேறு உயிரினங்களின் குழப்பான {கல கலவென்ற} உரத்த ஒலி, ஆகாயத்தை நிறைத்து, சொர்க்கங்களையே தொட்டது.(26) சினத்தில் தூண்டப்பட்டு, யுகத்தின் முடிவில் தோன்றும் யமனைப் போலத் தெரிந்த ஜிஷ்ணுவைக் கண்ட திரிகர்த்த போர்வீரர்கள், திருதவர்மனைக் காக்கும் விருப்பத்தில் தங்கள் நிலைகளில் இருந்து விரைந்த வந்து வேகமாக அவனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர். தன் பகைவர்களால் சூழப்பட்டவனாகத் தன்னைக் கண்ட அர்ஜுனன் முன்பைவிட அதிகக் கோபம் கொண்டான்.(27,28) அவன் விரைவில், பெரும் இந்திரனின் கணைகளுக்கு ஒப்பானவையும், வாரப்பிரும்பாலானவையுமான கணைகள் பலவற்றால் அவர்களில் முதன்மையான போர்வீரர்களான பதினெட்டு பேரை விரைவாகக் கொன்றான்.(29) அப்போது திரிகர்த்தப் போர்வீரர்கள் தப்பி ஓடத் தொடங்கினர். அவர்கள் பின்வாங்குவதைக் கண்ட தனஞ்சயன், கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகள் பலவற்றைப் பெரு வேகத்துடன் அவர்கள் மீது ஏவி உரக்கச் சிரித்தான்.(30)
தனஞ்சயனின் கணைகளால் பெரிதும் பீடிக்கப்பட்ட திரிகர்த்தர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், உற்சாகமிழந்த இதயத்துடன் திசைகள் அனைத்திலும் தப்பி ஓடினர்.(31) அப்போது அவர்கள், (குருக்ஷேத்ரப் போர்க்களத்தில்) சம்சப்தகக் கூட்டத்தைக் கொன்ற அந்த மனிதர்களில் புலியிடம் {அர்ஜுனனிடம்}, "நாங்கள் உமது அடிமைகள். நாங்கள் உமது வசப்படுகிறோம்[1].(32) ஓ! பார்த்தரே, எங்களுக்கு ஆணையிடுவீராக. மிக அடக்கமான உமது பணியாட்களைப் போல நாங்கள் இங்கே காத்திருக்கிறோம் பாரும். ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, நாங்கள் உமது ஆணைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்" என்றனர்.(33) அடிபணிவதை வெளிப்படுத்தும் இச்சொற்களைக் கேட்ட தனஞ்சயன், அவர்களிடம், "ஓ! மன்னர்களே, உங்கள் உயிரைக் காத்துக் கொண்டு, என் ஆட்சிப்பகுதியை ஏற்றுக் கொள்வீராக" என்றான்".(34)
[1] "குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அர்ஜுனனுடன் பலநாட்கள் போரிட்ட சம்சப்தகக் கூட்டம், மன்னன் சுசர்மன் தலைமையிலான திரிகர்த்த வீரர்களை உள்ளடக்கியதாகும் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது. சம்சப்தகர் என்றால் உறுதிமொழியேற்றவர் என்று பொருள். வெற்றி அல்லது மரணம் என்ற உறுதிமொழியை ஏற்ற போர்வீரர்கள் அப்பெயரில் அழைக்கப்பட்டனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அஸ்வமேதபர்வம் பகுதி – 74ல் உள்ள சுலோகங்கள் : 34
ஆங்கிலத்தில் | In English |